search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை மகள் பாதிப்பு"

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டல் தினசரி மதியம் 1 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) இந்த ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். அவற்றை தன்னுடைய தாய் நதியா (37), தம்பி கவுசிக் ஆதி (18), தாத்தா சண்முகம் (67), பாட்டி பார்வதி (63), சித்தி பிரேமா (35) மற்றும் இவரது இரு குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார்.

    இதில் சிக்கன் ரைஸ் உணவை சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. உணவு சாப்பிட்ட மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களில் 2 பேருக்கு மட்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனால் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே உணவின் மீதியை தடயவியல் நிபுணர்கள், மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததில் உணவில் விஷத்தன்மை இருப்பதை மருத்துவக்குழுவினர் உறுதி செய்துள்ளதால் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம், மாணவர் பகவதி ஆகியோரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சிக்கன்ரைஸ் சாப்பிட்டு 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் துரித உணவகம் மற்றும் அசைவ உணவு ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு இதேபோல் நாமக்கல்லில் உள்ள ஒரு துரித உணவகத்தில் மாணவி ஒருவர் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்ததும், 20-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ×