search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்கலை கொள்ளை"

    தக்கலையில் இறைச்சி கடையில் நூதன முறையில் ரூ.38 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பத்மநாபபுரம்:

    தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி கரும்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜான் சத்தியராஜ் (வயது 46). இவர் தக்கலை பேட்டை சந்தை சாலையில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் காரில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்களில் ஒருவர் காரில் இருந்து இறங்கி இறைச்சி கடைக்கு சென்று, ‘நான் இத்தாலி நாட்டை சேர்ந்தவன்’ என ஆங்கிலத்தில் பேசினார். அத்துடன் ரூ.500-க்கு சில்லறைகளை கொடுத்து விட்டு 500 ரூபாய் நோட்டு கேட்டார். உடனே, ஜான்சத்தியராஜ் மேஜையை திறந்து அங்கு இருந்த பணத்தில் இருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார். இதை அந்த வாலிபர் நோட்டமிட்டு கொண்டிருந்தார்.

    தொடர்ந்து அந்த வாலிபர் ஒரு சிறிய கோழியை இறைச்சியாக வெட்டி கொடுக்கும்படி கேட்டார். அதன்படி ஜான்சத்தியராஜ் ஒரு சிறிய கோழியை எடைப்போட்டு இறைச்சியாக வெட்டத்தொடங்கினார்.

    இறைச்சியை வெட்டி முடித்த பின்பு திரும்பி பார்த்த போது அந்த வாலிபரை காணவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த ஜான் சத்தியராஜ் கடையில் இருந்த மேஜையை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.38 ஆயிரத்தையும் காணவில்லை. பணத்தை அந்த வாலிபர் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாலிபர் இறைச்சி கடையின் உள்ளே புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள். மேலும், அந்த வாலிபர் வெளிநாட்டை சேர்ந்தவரா? அல்லது வடமாநில நபரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கலை:

    தக்கலை அருகே பனங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷாகுமாரி (வயது 32).

    சம்பவத்தன்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றார். பின்னர் இரவு கோவிலில் இருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது.

    இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகுமார் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பீரோவில் இருந்து 4 பவுன் செயின் மற்றொரு பீரோவில் இருந்து ரூ.6,500 பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் உள்ளதா? கொள்ளையனின் உருவம் அதில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    இரணியலை அடுத்த கட்டிமாங்கோடு பகுதியில் கன்னிமார் அம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று கோவில் பூஜை முடிந்தபின்னர் பூசாரி நடையை சாத்திவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வழக்கமான பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு விரைந்து வந்தார். மேலும் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் விரைந்து வந்தனர். கோவிலின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.

    அப்போது கோவிலின் அறைக்கதவை உடைத்து உள்ளே இருந்த வெள்ளியால் ஆன சாமி முகம் 2, பித்தளை குத்து விளக்குகள் 4 மற்றும் சி.டி.பிளேயர் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலின் முன்பு இருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட இடம், கோவில் அறைக்கதவு ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக நின்ற நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோவில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    ×