search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மதுபான கொள்கை முறைகேடு"

    • மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதால் விரைவில் கவிதாவும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    • கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மதுபான விற்பனை தொடர்பான கொள்கை 2020-2022-ம் ஆண்டு திருத்தப்பட்டது.

    இதில் பெரும் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தனியார் துறையினருக்கு உரிமங்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன. இதற்காக சவுத் குரூப் என்ற நிறுவனத்தை சேர்ந்த தொழில் அதிபர் அருண் ராமச்சந்திரன், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்காக அக்கட்சியை சேர்ந்த விஜய் நாயர் என்பவரிடம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.

    இந்த சவுத் குரூப்பில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மகுண்ட சீனிவாசலு ரெட்டி, தொழில் அதிபர் சரத்ரெட்டி உள்பட பல்வேறு பிரபலங்கள் அங்கம் வகிப்பது தெரிய வந்தது.

    இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு டெல்லி கவர்னர் உத்தரவிட்டார். மேலும் மதுபான கொள்கைகளையும் ரத்து செய்தார். இதையடுத்து இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை நடத்தியது. அவரது முன்னாள் ஆடிட்டரையும் கைது செய்தது.

    இந்த ஊழலில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சவுத் குரூப்பை சேர்ந்த தொழில் அதிபர் அருண் ராமச்சந்திரனை கடந்த 6-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

    இந்த வழக்கில் கவிதாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அவர் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகம் முன்பாக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அருண் ராமச்சந்திரனை தற்போது அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரித்து வருகிறது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் கவிதா விடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்ய அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    அருண் ராமச்சந்திரனின் அமலாக்கத்துறை காலம் வருகிற 12-ந் தேதி முடிவடைகிறது. அவர் 13-ந் தேதி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார். எனவே அவரது அமலாக்கத்துறை காவல் முடிவதற்கு முன்பாகவே கவிதாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இது தொடர்பாக கவிதா கூறுகையில், 'அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்' பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி 10-ந் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன். எனவே அமலாக்கத்துறை விசாரணைக்கு எப்போது ஆஜராவது என்பது குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவேன்' என்றார்.

    கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகவில்லை. அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அவர் அவகாசம் கேட்டுள்ளார்.

    இந்த நிலையில் கவிதா வருகிற 11-ந் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக இருப்பதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதால் விரைவில் கவிதாவும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் நாளை (10-ந் தேதி) முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • அருண் ராமச்சந்திர பிள்ளை கவிதாவின் பினாமியாக உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.
    • அமலாக்க துறை அதிகாரிகள் கோர்ட்டில் பல குற்றச்சாட்டுகளை அறிக்கையாக முன் வைத்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா. இவர் தற்போது எம்எல்சியாக உள்ளார்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்க பிரிவு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்கிய சவுத் குரூப் இன்டோஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் எம்எல்சி கவிதா சார்பில் அருண் பங்குதாரராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மதுபான கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த வருமானம் ரூ.296 கோடியாக இருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதில் சில தொகை அருண் ராமச்சந்திர பிள்ளையின் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    டெல்லியில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் அருண் ராமச்சந்திர பிள்ளையிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தி இரவில் அவரை கைது செய்தனர்.

    நேற்று சிபிஐ அதிகாரிகள் அவரை டெல்லியின் ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அருண் ராமச்சந்திர பிள்ளை கவிதாவின் பினாமியாக உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

    மேலும் கோர்ட்டு அவரை ஒரு வாரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

    இந்த விசாரணையின்போது அமலாக்க துறை அதிகாரிகள் கோர்ட்டில் பல குற்றச்சாட்டுகளை அறிக்கையாக முன் வைத்தனர்.

    டெல்லி மதுபான வழக்கில் சரத்சந்திர ரெட்டி, மகுண்ட சீனிவாசலு ரெட்டி, மகுண்ட ராகவ், எம்.எல்.சி. கே. அருண் ராமச்சந்திர பிள்ளை, எம்.எல்.சி. கவிதா ஆகியோர் முக்கிய நபர்கள் என தெரிவித்துள்ளனர்.

    அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயின்பள்ளி, புச்சிபாபு ஆகியோர் வெளியில் புரோக்கர்களாக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    மதுபான முறைகேடு வழக்கில் அருணுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கும் இடையே அரசியல் ஒப்பந்தம் ஏற்படுத்த அருண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நபர்களுடன் இணைந்து பணியாற்றி எல்-1 உரிமம் பெற்ற இன்டோ ஸ்பிரிட்சில் அருண் பிள்ளை 32.5 சதவீதமும், பிரேம் ராகுலு 32.5 சதவீதம் மற்றும் இன்டோ ஸ்பிரிட் டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெடில் 35 சத பங்குகளை வைத்ததாக கோர்ட்டில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கவிதா டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நாளை மறுதினம் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×