search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜீவானந்தம்"

    • நாளை 117-வது பிறந்த தினம்
    • பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து 10 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.

    நாகர்கோவில் ;

    நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்னும் கிராமத்தில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதியினருக்கு 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி மகனாக பிறந்தார் ஜீவா. அவரது பெற்றோர் தங்கள் கிராம தெய்வமான சொரிமுத்து அய்யனாரின் பெயரையே சொரிமுத்து என மகனுக்கு சூட்டினர். பின்னர் அவர் பொதுவுடமை தலைவர் ஜீவானந்தமாக வாழ்க்கை தொடங்கினார்.

    9-ம் வகுப்பு படிக்கும் போதே காந்தியையும், கதரையும் மையப்படுத்தி ஜீவா கவிதை எழுதியுள்ளார். ஒரு கட்டத்தில் காந்தி யடிகளால் "நீங்கள்தான் இந்தியாவின் சொத்து" எனப் பாராட்டப்பட்டவர். இளமை காலத்திலேயே வெள்ளையர்களை எதிர்த்துக் குரல் எழுப்பிய இவர், தந்தை பெரியாரின் பாசறையிலும் வளர்ந்தவர். காலப்போக்கில் கம்யூனிசக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு முழுநேரக் கம்யூனிசவாதியாக மாறிய ஜீவாதான், தமிழக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி.

    நாகர்கோவிலில் பிறந்த இவர் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் பகுதியை தமிழகத்துடன் இணைக்கப் போராடியதிலும் இவரது பங்களிப்பு பெரியது.

    காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் காந்தி ஆசிரமத்தைத் தோற்றுவித்தது, உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றது என காலத்தால் மறக்கமுடியாத வரலாறு களையும் தனதாக்கியவர். பகத்சிங்கின் 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற நூலைத் தமிழாக்கம் செய்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா, பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து 10 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.

    இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியா குமரியில் பிறந்தாலும் 1952-ல் சென்னை வண்ணா ரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஊக்க மளிக்காத தொழிற்சங்கங்க ளும், அவர் கலந்துகொள்ளாத தொழிலாளர் போராட்டங்க ளும் இல்லை. இப்படி பல்வேறு போராட்டங்களில் ஜீவா கலந்து கொண்டு பொதுவுடமை வாரியாக திகழ்ந்தார்.

    பின்னர் அவர் 1963-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ஜீவா மறைந்தார். அவரது நினைவாக நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் சர்.சி.பி. ராமசாமி நினைவு பூங்காவில் ரூ. 12.98 லட்சம் மதிப்பில் பொதுவுடமை ஜீவா மணி மண்டபம் அமைத்துள்ளது தமிழக அரசு.

    1998-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழ மை, அப்போதைய முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த மண்டபத்தில், ஜீவாவின் மார்பளவு சிலையும், அவரது புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. மணிமண்டபத்தின் முகப்பில் ஜீவாவின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள், அவரது செயல்பாடுகள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த மணி மண்டபமானது பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஜீவானந்தத்தின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்படுகிறது. மேலும் அரசியல் கட்சி சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. ஜீவானந்தம் மணி மண்ட பத்திற்கு அனைத்து பொது மக்களும் வந்து செல்வதற்கு ஏற்றார்போல் தினமும் காலை 10 மணி முதல் 5.30 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. மணி மண்டபத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். ஜீவானந்தத்தின் 117-வது பிறந்தநாள் வருகிற 21-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜீவனந்தத்தின் மணிமண்டபம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் மேல் ஆகிறது. இதனால் அதனை புதுப்பித்து கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி மணி மண்டபத்தை புதுப்பித்து கட்ட முடிவு செய்யப்பட் டுள்ளது.

    • நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
    • குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நாகர்கோவில்:

    பொதுவுடமை வீரர் ஜீவானந்தம் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மாநில போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் சிவ பிரபு, செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன் தலைமையில் அகமது உசேன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • ஜீவா தன் கையாலேயே நூற்று வைத்திருந்த பத்தாயிரம் கெஜம் நூலை காந்திக்கு வழங்கினார்.
    • தினமும் ஒரு போராட்டம் அதைத்தொடர்ந்து சிறைவாசம் என்பது ஜீவாவின் அன்றாட வழக்கமாகிவிட்டது.

    இன்று (ஜனவரி 18-ந்தேதி) ஜீவாவின் நினைவு நாள்.

    தமிழக கம்யூனிஸ்டு இயக்கத்தின் மாபெரும் தலைவர் ஜீவானந்தம்.

    தமிழகத்தின் தலைசிறந்த விடுதலை வீரர்களில் ஒருவராகவும் பாட்டாளி வர்க்க மக்களின் பாதுகாவலராகவும் விளங்கியவர்.

    மூடத்தனத்தை, வறட்டுத்தனத்தை, அடக்குமுறையை, அதர்மத்தை, சுரண்டலை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் தீரத்துடன் போராடியவர்.

    எரிமலை வெடித்தது, கடல்மடை திறந்தது என்ற வார்த்தைக்கு உயிர் வடிவம் கொடுப்பதை போன்று இவரது மேடை பேச்சு அமைந்திருக்கும்.

    அரசியல் மேடைகளை கலை மேடையாக்கும் அற்புதத் திறனாளி.

    இவருடைய பேச்சைக்கேட்க இளைஞர்கள் பட்டாளம் அணி திரண்டு வரும். புதிய தலைமுறையை உருவாக்கும் ஜீவாவின் வீராவேசமான அனல் கக்கும் உரை வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்க வைத்தது.

    1907-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி கன்னியாகுமரி அருகில் உள்ள பூதப்பாண்டியில் ஜீவா பிறந்தார்.

    தந்தையார் பட்டத்து பிள்ளை. தாயார் உமையம்மை. ஜீவாவின் இயற்பெயர் சொரிமுத்து.

    நாகர்கோவில் கோட்டார் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். சிறுவயதிலேயே அவருக்கு கவி பாடும் திறன் அமைந்து இருந்தது. இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட ஜீவா, அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

    பள்ளியில் படிக்கும் போதே தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தார். பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம் மற்றும் சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்று தீண்டாமைக்கு எதிராக போராடினார்.

    பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஜீவா புயலென பொங்கி எழுந்தார். பகத்சிங் சிறையில் இருந்து தன் தந்தைக்கு எழுதிய நான் ஏன் நாத்திகனானேன் என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தார்.

    பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவா கைது செய்யப்பட்டார். அவரது கை கால்கள் விலங்கிடப்பட்டு, வீதி வீதியாக இழுத்துச்சென்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் ஜீவா கம்யூனிஸ்டு கொள்கையால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    தொழிலாளர்கள் நலனுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டார். கோவை மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்டு தொழிலாளர்கள் படும் அவதியை பாடலாக எழுதி தன் உளக்கிடக்கையை பிரதிபலித்தார்.

    ''காலுக்கு செருப்பும் இல்லை கால்வயிற்றுக்கு கூழும் இல்லை பாலுக்கு உழைத்தோமடா பசையற்று போனோமடா''

    இந்தப்பாடல் கேட்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து அவர்கள் உணர்வுகளைத் தூண்டி அழச்செய்து விடும்.

    ஜீவாவுக்கு சங்க இலக்கியமும் தெரியும் சமகால இலக்கியமும் தெரியும். பாரதி, வள்ளுவர், இளங்கோ கவிதைகளை மேடைக்கு மேடை பாடுவார். பொது வாழ்க்கையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு பத்து ஆண்டுகள் சிறையில் கழித்தார்.

    நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று ஆகியவற்றை மூச்சாக கொண்ட ஜீவா திருவள்ளுவர், கம்பன், இளங்கோ, பாரதி ஆகியோரை கொண்டாடி மகிழ்ந்தார்.

    இவருடைய பேச்சு இளைஞர்களை கவர்ந்தது.

    தமிழ்நாட்டில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது தாம்பரத்தில் ஒரு பள்ளி திறப்பு விழா நடந்தது. அதில் பங்கேற்கச் சென்ற அவர் அப்போது தாம்பரத்தில் குடியிருந்த ஜீவாவையும் அழைத்துச்செல்ல விரும்பினார்.

    ஜீவாவின் வீட்டுக்கு சென்ற அவர் அவரது குடிசை வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ஜீவா குளித்து விட்டு மாற்றுடை இன்றி வேட்டியை உலர்த்தி கொண்டு இருப்பதை பார்த்து பதறி போனார். உடனே காமராஜர், ஜீவாவிடம், உங்களுக்கு நான் நல்ல வீடு ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார். அதற்கு ஜீவா ''இந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் நீங்கள் புது வீடு கட்டி தந்தால் நானும் வாங்கிக்கொள்கிறேன் இல்லாவிட்டால் வேண்டாம்'' என்று கூறி மறுத்து விட்டார்.

    1927-ம் ஆண்டு மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். காரைக்குடியில் தங்கியிருந்த அவரை ஜீவா சந்தித்து, சிராவயலில் காந்திஜி பெயரில் தாம் நடத்தி வரும் ஆசிரமத்துக்கு வருகை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று காந்தி சிராவயல் ஆசிரமத்திற்கு சென்றார். அப்போது ஜீவா தன் கையாலேயே நூற்று வைத்திருந்த பத்தாயிரம் கெஜம் நூலை காந்திக்கு வழங்கினார். காந்திஜி ஜீவாவை பார்த்து 'உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது'' என்று கேட்டார்.

    இந்தியா தான் என் சொத்து என்று பதில் கூறினார் ஜீவா.

    அதைக் கேட்டு நெகிழ்ந்து போன காந்திஜி இல்லை... இல்லை... நீங்கள் தான் இந்தியாவின் சொத்து'' என்று கூறி ஜீவாவின் தேசபக்தியை பாராட்டினார்.

    ஜீவா சிறுவனாக இருந்தபோது தனது வயதை ஒத்த சிறுவர்களுடன் மார்கழி மாத பஜனை கோஷ்டியில் சேர்ந்து பாடுவார். தேவாரம், திருவாய் மொழி ஆகிய பாசுரங்களை போல தனியாக பாடல்கள் எழுதி பாடுவார். அவை தேச பக்தி உணர்வை ஊட்டுகின்ற பாடலாக அமைந்திருக்கும்.

    'சொல்லு நா நமச்சிவாயமே-' தேவாரம்

    சொல்லு நா சுயராஜ்யமே-புது பாடல்

    நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-திருவாய்மொழி

    நான் கண்டு கொண்டேன் சுதந்திரம் எனும் நாமம்-புதுமொழி

    ஜீவாவுக்கு தேசப்பற்று, தமிழ் மொழி பற்று தான் முக்கியம் உற்றார் உறவினர்களை எல்லாம் அடுத்தபட்சமாக தான் கருதினார்.

    தினமும் ஒரு போராட்டம் அதைத்தொடர்ந்து சிறைவாசம் என்பது ஜீவாவின் அன்றாட வழக்கமாகிவிட்டது.

    இந்த சூழ்நிலையில் ஜீவா கடலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குலசேகர தாஸ் மகள் கண்ணம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் குமுதா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்த சில நாட்களிலேயே மரணம் அடைந்தார்.

    அதன்பின் உறவுகளை மறந்து கட்சி பணியில் ஈடுபட்டு ஊர் ஊராக தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட ஜீவாவுக்கு தனது பெண் குழந்தையை கவனிக்க முடியாமல் போய் விட்டது. இதற்கிடையிவ் ஜீவா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

    ஜீவாவின் முதல் மனைவி கண்ணம்மாவுக்கு பிறந்த பெண் குழந்தை குமுதா. இவள் பிறந்த சில நாட்களிலேயே கண்ணம்மா மறைந்து விட, பிறந்தநாள் முதலாக தாயை இழந்து, தந்தை முகம் பாராமல் அவரது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தாள். குமுதா தனக்கு பிறந்த குழந்தை என்ன ஆனது என்று கவனிக்கவே ஜீவாவுக்கு நேரமில்லை காலம் ஓடியது.

    இந்தச் சூழ்நிலையில் ஜீவா 17 ஆண்டுகளுக்கு பிறகு தன் மகள் குமுதாவை முதல் முறையாக சந்திக்கும் சம்பவம் நடந்தது. அது உள்ளத்தை உருக வைக்கும் சம்பவம்.

    அப்போது குமுதா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். தாயின் மறைவுக்கு பின்னர் பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தார் குமுதா. 17 வருடங்களுக்குப் பிறகு, நண்பர்கள் உறவினர்கள் மூலம் பொதுவுடைமைகட்சி தலைவர் ஜீவா தான் தன் தந்தை என்பது தெரியவந்தது. தந்தையை நேரில் காண வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஒரு நாள் தன் தந்தையை நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார்.

    தனியாக செல்வதற்கு தயக்கமாக இருந்ததால் தன் தோழி ஒருவரை அழைத்துக் கொண்டு தந்தை ஆசிரியராக இருக்கும் ஜனசக்தி பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றார்.

    வரவேற்பு அறையில் அமர்ந்து கொண்டு அங்குள்ள உதவியாளரிடம் ஜீவாவை காண வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தார். சிறிது நேரத்தில் அவர்கள் இருந்த இடத்திற்கு ஜீவா வருகிறார். அவருக்கு குமுதா யார் என்று தெரியாது.

    தந்தையை நேரில் பார்த்து விட்ட மகிழ்ச்சியில், கரம் கூப்பி, கண்கள் பனிக்க நிற்கிறார் குமுதா.

    குமுதாவின் தோழியிடம் நீங்கள் யாரம்மா உங்களுக்கு என்ன வேண்டும் என்று கம்பீர குரலில் கேட்கிறார் ஜீவா.

    அதற்கு அந்தப்பெண் குமுதாவை காட்டி, இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வருவதாகவும் உங்களை பார்க்கவேண்டும் என்று விரும்பியதால் அழைத்து வந்திருப்பதாகவும் கூறினார்.

    மீண்டும் ஜீவா குமுதாவிடம், நீ யாரம்மா எங்கிருந்து வருகிறாய் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் ஜீவாவின் முகத்தைப் பார்த்தவாறு அழத்தொடங்கி விடுகிறார்.

    அதைப் பார்த்து ஜீவா திகைத்துப் போய் நிற்கிறார். என்ன பிரச்சினை ஏன் அழுகிறாய் என்று ஜீவா கேட்கிறார். ஒருவாறு தன்னை திடப்படுத்திக்கொண்ட குமுதா எனது தாத்தா பெயர் குலசேகர தாஸ். என் அம்மா பெயர் கண்ணம்மாள். நான் உங்களின் மகள் என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி அதை ஜீவாவிடம் கொடுத்தார். அதை வாங்கி படித்த ஜீவா துடிதுடித்து விட்டார். உணர்ச்சிப் பிழம்பாக மாறி கண்களில் நீர் வழிய குமுதாவையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரால் பேச முடியவில்லை குமுதா கொடுத்த அதே துண்டு சீட்டில் என் மகள் என்று எழுதுகிறார். பின்னர் தந்தையும் மகளும் தனியே அமர்ந்து பேசுகின்றனர்.

    1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜீவா மரணம் அடைந்தார். மத்திய அரசு ஜீவாவை கவுரவிக்கும் வகையில் அவரது தபால் தலையை வெளியிட்டது. ஜீவாவின் நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து கவரவித்தது

    ×