search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜியார்ஜியா மாநிலம்"

    • எல்லோரையும் போல் முதியவர் பாக்கெட்டை விரல்களால் திறக்க முயன்றார்
    • தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல் பராமரிப்பு பணியாளர்கள் செயல்பட்டனர்

    அமெரிக்காவின் தென்மேற்கில் உள்ளது ஜியார்ஜியா (Georgia) மாநிலம். இங்குள்ள நகரம், டால்டன் (Dalton).

    இங்கு வசித்து வந்த 75 வயது முதியவர் ஒருவர், உண்பதற்காக ஒரு சிப்ஸ் பாக்கெட்டை வாங்கினார். ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவர், எல்லோரையும் போல் அந்த பாக்கெட்டை தனது விரல்களால் திறக்க முயன்றார்.

    ஆனால், அவரால் அந்த பாக்கெட்டை திறக்க முடியவில்லை.

    சிறிது நேரம் போராடி பார்த்து பொறுமையிழந்த அவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டரை எடுத்து, அந்த பாக்கெட் ஓரத்தில் தீயை காட்டினார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உடலில் தீ பற்றி, மளமளவென அவரது உடல் எரிய தொடங்கியது.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த பராமரிப்பு பணியாளர்கள் சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் வரும் வரையில் காத்திருக்காமல், பராமரிப்பு பணியாளர்கள், ஒரு பெரிய நீர் குழாய் வழியாக, எரிந்து கொண்டிருந்த அந்த முதியவர் மீது நீரை பாய்ச்சி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதற்குள் தீயணைப்பு வீரர்களும், மருத்துவ அவசர சேவை பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர்.

    தொடர்ந்து, டென்னிசி மாநில சட்டனூகா (Chattanooga) பகுதியில் உள்ள எர்லாங்கர் பேரோனெஸ் மருத்துவமனையில் (Erlanger Baroness Hospital) அவர் சேர்க்கப்பட்டார்.

    தீ விபத்து காரணமாக அந்த முதியவருக்கு உடலில் 75 சதவீத காயங்கள் ஏற்பட்டிருப்பதாக, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மட்டுமே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.

    சிப்ஸ் பாக்கெட்டில் தீ பற்றி, அது அவர் மேல் பரவியதா அல்லது அவர் தன் உடல் மேல் கவனக்குறைவாக தீ வைத்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    ஆனால், சிப்ஸ் தயாரிப்பில் எண்ணெய் மற்றும் மாவு பயன்படுத்தப்படுவதால், அவை தீப்பற்ற கூடிய பொருட்கள்தான் என உணவு பொருள் தயாரிப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

    ×