search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகாமி அம்மன் சிலை"

    • உலோக சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சோதனையின் பேரில் சிவகாமி அம்மன் உலோக சிலையை போலீசார் மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பழமையான உலோக சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் டாக்டர் ஜெயந்த் முரளி உத்தரவுப்படி காவல் துறைத் தலைவர் டாக்டர் தினகரன் வழிகாட்டுதலின் படி போலீஸ் சூப்பிரண்டு ரவி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தலைமை காவலர் கோபால், காவலர் பிரவீன் செல்வம் குமார் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சுவாமிமலை யாதவ தெருவில் அமைந்துள்ள சரவணன் என்பவரின் வீட்டில் சோதனை செய்த போது சுமார் 165 சென்டிமீட்டர் உயரமும் 45 சென்டிமீட்டர் அகலமும் உடைய பிரமாண்டமான சிவகாமி அம்மன் உலோக சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

    5 அடிக்கும் மேல் உயரம் கொண்ட சிலைகளை பொதுவாக வீட்டில் வைத்து வழிபாடும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்பதாலும் மேற்படி சிலையானது பார்ப்பதற்கு தொன்மையான தோற்றத்துடனும் இருந்ததாலும், ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிலையை வீட்டில் வைத்திருப்பதற்கான உரிய ஆவணம் கேட்டனர்.

    ஆனால் சரவணன் உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை.இதையடுத்து அந்த சிலையை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அதன் பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.‌

    அதில் மீட்கப்பட்ட சிலை கோவிலில் இருந்து திருடப்பட்டதா ? அல்லது வேறு எங்கிருந்து சிலை வந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×