search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கார் குண்டு வெடிப்பு"

    • தமிழகம் முழுவதும் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.
    • கைதாகி உள்ள 3 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரங்களை சேகரிக்கும் பணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதும், அதில் அவனே சிக்கி இறந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாரூதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்சேபகரமான மற்றும் மத ரீதியான அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் கொண்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் மேற்கொண்டனர். இதுவரை 50க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    மேலும் தமிழகம் முழுவதும் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனையும் நடத்தப்பட்டது.

    கார் குண்டு வெடிப்பில் இறந்த முபின் மற்றும் கைதானவர்களின் நண்பர்களையும் கண்காணித்து வந்தனர். குறிப்பாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் 3 பேரை போலீசார் தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து தீவிரமாக கண்காணித்தனர்.

    இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபிக்(25), பெரோஸ்கான்(28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உமர் பாரூக்(39) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஜமேசா முபினுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதில் ஆட்டோ டிரைவான உமர்பாரூக் கடந்த 3 மாதத்திற்கு முன்பு உக்கடத்திற்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் இறந்த ஜமேஷா முபின் மற்றும் தற்போது கைதாகி உள்ள பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகியோர் குன்னூரில் உள்ள உமர் பாரூக்கின் வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது வெடிகுண்டு சதி திட்டம் தீட்டுவதற்கு ரகசிய கூட்டமும் நடத்தி உள்ளனர்.

    அப்போது அவர்கள் முக்கிய இடங்களில் குண்டு வெடிக்க வைக்க சதி திட்டம் தீட்டியிருக்க வாய்ப்பிருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதனால் அவர்கள் ரகசிய கூட்டத்தில் என்னென்ன பேசினார்கள். எங்கெல்லாம் குண்டு வைக்க திட்டமிட்டார்கள், கோவை கார் குண்டுவெடிப்பு குறித்து முபின் இவர்களிடம் தெரிவித்தாரா? என்பது குறித்தும் தீவிரமாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

    இதேபோல் கைதாகி உள்ள முகமது தவுபீக் சில தீவிரவாத செயல்கள் தொடர்பான புத்தகங்களை படித்துள்ளார். அவரது வீட்டில் வெடி பொருட்கள், வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம் குறித்தும் சில குறிப்பு கையேடுகளும் இருந்துள்ளது. இதனை கைப்பற்றியுள்ளனர்.

    தொடர்ந்து 3 பேருக்கும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    மேலும் கைதாகி உள்ள 3 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரங்களையும் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு உயிரிழந்த ஜமேஷா முபின் வீடு, சம்பவம் நடந்த இடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    • வழக்கில் கைதான 6 பேரின் வீடுகள் மற்றும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.

    கோவை:

    கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காருக்குள் இருந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.

    இதுதொடர்பாக முதலில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தி அங்கு இருந்த 75 கிலோ வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் (28), மற்றும் முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) பாய்ந்தது.

    இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

    அவர்கள், இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 6 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு உயிரிழந்த ஜமேஷா முபின் வீடு, சம்பவம் நடந்த இடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இந்த வழக்கில் கைதான 6 பேரின் வீடுகள் மற்றும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் செல்போன், மடிக்கணினி உள்பட சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் யார்? இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 6 பேரின் நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சந்தேக நபர்கள் உள்பட பலரின் செல்போன், இணையதளம் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.

    இந்தநிலையில், கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபீக் (25), பெரோஸ்கான் (28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான உமர் பாரூக் (39) ஆகிய 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முகமது தவுபீக், பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகிய 3 பேரும் ஜமேஷா முபினுக்கு உதவியாக இருந்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த கைது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு ஜமேஷா முபின் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ள பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகியோர் குன்னூரில் உள்ள உமர் பாரூக் வீட்டில் சந்தித்து சதி திட்டம் தீட்ட கூட்டம் நடத்தி உள்ளனர். அத்துடன் இந்த 2 பேரும் ஜமேஷா முபின் செய்யும் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து உள்ளனர்.

    அதுபோன்று முகமது தவ்பீக் மதவாதம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை வைத்து இருந்ததுடன், வெடிபொருட்கள் தயாரிப்பது குறித்த குறிப்புகளையும் வைத்து இருந்தார். தற்போது அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கிஷோர் கே.சாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
    • கோவை வழக்கில் வருகிற 12-ந் தேதி வரை கிஷோர் கே.சாமிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

    கோவை:

    சென்னையை சேர்ந்த வலதுசாரி ஆதரவாளர் கிஷோர் கே.சாமி.

    இவர் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக கிஷோர் கே.சாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார்.

    இதனை அறிந்த கோவை போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று அவரை கோவை 4-வது குற்றவியில் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்பாக இன்று ஆஜர்படுத்தினர்.

    இதனையடுத்து கோவை வழக்கில் வருகிற 12-ந் தேதி வரை கிஷோர் கே.சாமிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

    மேலும் மாநகர சைபர் கிரைம் போலீசார் 2 மணி நேரம் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதனைதொடர்ந்து கிஷோர் கே சாமி தரப்பில் ஜாமீன் கேட்டு 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன்0 மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

    • கோவை பெரியகடைவீதி இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான போலீசார் முகமது ஹசன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
    • முபின் நட்பு வட்டாரத்தில் இருந்த மேலும் 2 பேரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

    கோவை:

    கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.

    இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

    மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாரூதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் கடந்த சில தினங்களாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தெற்கு உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த துணிக்கடை ஊழியரான முகமதுஹசன்(வயது29) உள்பட 3 பேர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கோவை பெரியகடைவீதி இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான போலீசார் முகமது ஹசன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையானது சில மணி நேரங்கள் நீடித்தது. சோதனையின்போது, முகமது ஹசனிடமும் போலீசார் விசாரித்தனர்.

    இவருக்கும், ஜமேஷா முபின் வெடிமருந்து பொருட்கள் வாங்கிய விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா? என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    முபின் நட்பு வட்டாரத்தில் இருந்த மேலும் 2 பேரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் செல்லும் இடங்கள், அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் இவர்கள் 2 பேர் முகவரியை கண்டுபிடித்து, அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • ஏற்கனவே கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி கார் வெடித்து முபின் என்பவர் பலியானார்.

    கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கோவையில் பயங்கர நாசவேலைக்கு சதி செய்த அவர் அதே சதியில் சிக்கி பலியானார்.

    இந்த சம்பவம் தொடர்பாக முபின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பலியான முபின் மற்றும் கைதான 6 பேருக்கு யாராவது பண உதவி, பொருள் உதவி செய்து இருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    இதற்காக முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருக்கத்தில் இருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஐ.எஸ். ஆதரவு எண்ணம் கொண்டவர்களையும் அவர்கள் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். நேற்றுமுன்தினம் சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் செல்போன், லேப்-டாப் உள்ளிட்ட ஐ.எஸ். தொடர்புடைய சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    அதன் அடிப்படையில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் செயல்படும் என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு கோவையைச் சேர்ந்த 5 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்களுக்கும், கார் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வர்.

    இதற்கிடையே ஏற்கனவே கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஜமேஷா முபின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்.
    • சம்பவத்தன்று காரில் பயங்கர வெடிபொருட்களை நிரப்பி கொண்டு மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிக்கு சென்று வெடிக்க வைக்க முபின் திட்டமிட்டார்.

    கோவை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாசவேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    தொடர்ந்து இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முபின் ஐ.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு அதன் ஆதரவாளராக இருந்து வந்தது அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உறுதியானது.

    இந்த சம்பவத்தை இவர்கள் அரங்கேற்றுவதற்கு பின்னால் மிகப்பெரிய கும்பலே செயல்பட்டு வந்ததும், முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலக்காட்டில் சதி திட்டம் தீட்டியதும், அதற்காக ஆயுத பயிற்சி மேற்கொண்ட தகவலும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியலை தயாரித்தனர்.

    இந்த பட்டியலின் அடிப்படையில் நேற்று கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோவையில் நடந்தது கார் குண்டு வெடிப்பு என்றும், முபின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கர தகவலும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார்.

    அதன்படி முதலில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஜமேஷா முபின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கு அவரது கூட்டாளிகள் 6 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து தான் ஜமேஷா முபின் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்துவதற்காக ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார்.

    பின்னர் சம்பவத்தன்று காரில் பயங்கர வெடிபொருட்களை நிரப்பி கொண்டு மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிக்கு சென்று வெடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து, அதில் அவரே சிக்கி இறந்துள்ளார்.

    இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் நிஜாமுதீன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிஜாமுதீனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கோவையில் நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தான்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் இறந்த முபினின் அடையாளம் தெரியாததால் அவர் வந்த கார் குறித்து விசாரணை நடத்தினர்.

    கார் பதிவெண்ணை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அது சென்னை பதிவெண்ணாக இருந்தது. தொடர்ந்து இந்த கார் யாருடையது, முபின் யாரிடம் இருந்து காரை வாங்கினார்? என விசாரித்தனர்.

    அப்போது இந்த கார் பொள்ளாச்சியை சேர்ந்தவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் சென்று விசாரித்தனர்.

    அதற்கு அவர், நான் இந்த காரை விற்று பல வருடங்களாகி விட்டது என்ற தகவலை தெரிவித்தார். மேலும் இந்த கார் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் கைமாறிய தகவலும் தெரியவந்தது. இதனால் முபினுக்கு காரை கொடுத்தது யார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோவையில் வெடித்த கார் சென்னையில் வாங்கப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

    சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் நிஜாமுதீன். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கோவையில் வெடித்த கார் இவரிடம் இருந்தும் கைமாறி உள்ளது.

    இதுதொடர்பாக இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை புதுப்பேட்டையில் நிஜாமுதீன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் நிஜாமுதீனை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் வெடித்த காரை யாரிடம் இருந்து நீங்கள் வாங்கினீர்கள். முபின் உங்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு காரை வாங்கினாரா அல்லது வேறு நபர்களின் மூலம் இந்த கார் அவருக்கு விற்கப்பட்டதா? எத்தனை நாட்களுக்கு முன்பு காரை வாங்கினார்? என பல்வேறு கேள்விகளை கேட்டு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் சில முக்கிய தகவல்களை நிஜாமுதீன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

    • கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினின் தங்கை கணவர் ஆவார்.
    • சோதனையின் நடுவிலேயே முகமது யூசுப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இன்று தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    திருப்பூரில் திருப்பூர்-காங்கயம் ரோட்டில் வெங்கடேஸ்வரா 6-வது வீதியில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இவர் கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினின் தங்கை கணவர் ஆவார். இவருக்கு கார் வெடிப்பு குறித்து தெரிந்திருக்கலாம் என என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    சந்தேகத்தின் பேரில், சோதனையின் நடுவிலேயே முகமது யூசுப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு வைத்து அவரிடம் கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? முபின் இது குறித்து உங்களிடம் ஏதாவது பேசினாரா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனையொட்டி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
    • கோவையின் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். விசாரணையில் முபின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து கார் வெடிப்பு நடந்த இடம், கார் இருந்த நிலை, வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட கோவிலின் முன்புறம் உள்ளிட்ட இடங்கள், காரின் உதிரி பாகங்கள், சிலிண்டர்கள் கிடந்த இடம், முபின் உயிரிழந்து கிடந்த இடம், கோவில் வளாகம், சுற்றுப்புற பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    என்.ஐ. அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து கோவையில் முகாமிட்டு இந்த வழக்கு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் உள்ள 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    • முபின் உடல் முழுவதும் 2 இன்ச் அளவுள்ள ஏராளமான ஆணிகள் குத்தியிருந்தன.
    • முபின் உடல் முற்றிலும் கருகாமல் இருந்துள்ளது. இதனால் காரை வெடிக்கச் செய்து அவர் தப்பிக்க முயன்று இருக்கலாம்.

    கோவை:

    கோவையில் பயங்கர நாசவேலைக்கு திட்டமிட்ட முபின் என்ற வாலிபர் கார் வெடித்து சிதறி பலியானார். தீபாவளிக்கு முந்தைய நாள் நிகழ்ந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முபின் பலியான கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அன்றைய தினமே தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஏராளமான ஆணிகள், கோலிக்குண்டுகள், பால்ரஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதேபோல முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் கிலோ கணக்கில் வெடி பொருட்களும், ஆணிகளும் சிக்கின.

    கியாஸ் சிலிண்டர்கள், ஆணிகள், கோலிக்குண்டுகளை பயன்படுத்தி காரை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே முபினின் திட்டமாக இருந்துள்ளது. தற்போது முபினின் உடல் பிரேத பரிசோதனை விவரங்களும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    முபின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது முபின் உடல் முழுவதும் 2 இன்ச் அளவுள்ள ஏராளமான ஆணிகள் குத்தியிருந்தன. அதில் ஒரு ஆணி இடதுபக்க மார்பில் பாய்ந்திருந்தது. அந்த ஆணி முபினின் இதயத்தை துளைத்திருந்தது. இதனாலேயே முபின் உடனடியாக அந்த இடத்திலேயே பலியாகி இருக்கிறார் என்ற விவரங்கள் பிரேத பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது.

    முபின் உடல் முற்றிலும் கருகாமல் இருந்துள்ளது. இதனால் காரை வெடிக்கச் செய்து அவர் தப்பிக்க முயன்று இருக்கலாம். ஆனால் காரில் அவர் வைத்திருந்த ஆணிகள் வெடித்து சிதறி அவருக்கே எமனாகி அவர் உடலையும், மார்பையும் துளைத்துள்ளது. இதில் தான் முபின் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது.

    கார் அதிகாலை 4.03 மணிக்கு வெடித்துள்ளது. உடனடியாக கோவை தெற்கு தீயணைப்புத்துறைக்கு 4.06 மணிக்கு தகவல் சென்றுள்ளது. 4.08 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். 4.20 மணிக்குள் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. அப்போது முபின் பிணமாகத்தான் அங்கிருந்து மீட்கப்பட்டார்.

    முபின் தற்கொலைப்படையாக செயல்பட்டாரா அல்லது சதிச்செயலுக்கு திட்டமிட்டு அவரே அந்த சதியில் சிக்கி இறந்தாரா? என்பது பற்றி விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள பிரேத பரிசோதனை பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் நல்லூரை சேர்ந்த வாலிபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.
    • இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது முகமதுமசூத் சமூக வலைதளங்களில் குண்டுவெடிப்புக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

    திருப்பூர்:

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் (என்.ஐ.ஏ.) தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்கு உரியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் நல்லூரை சேர்ந்த வாலிபரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு சென்றனர். இந்தநிலையில் திருப்பூர் பெரிய கடைவீதியை சேர்ந்த முகமது மசூத் (வயது 42) என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.

    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது முகமதுமசூத் சமூக வலைதளங்களில் குண்டுவெடிப்புக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு இருந்தது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    தற்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தினர். இரவு வரை விசாரணை நடத்தி விட்டு அனுப்பி வைத்தனர்.

    • பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுடன் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக கோவையில் சிலரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அப்போது விசாரணை மேற்கொண்டனர். அதில் முபினும் ஒருவர். மேலும் 2 பேரை கைதும் செய்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு அவர்களை விட்டுவிட்டனர். இருப்பினும் அவர்களின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோவை கோட்டைமேட்டில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்ட முபின் திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் இந்த தாக்குதலை நடத்தியதும், அவர் அதில் இறந்து விட்டதும் தெரியவந்தது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் இறந்த முபின் மற்றும் அவரது கூட்டாளிகளான முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகியோரது வீடுகளில் அதிடி சோதனை மேற்கொண்டனர்.

    இறந்த முபினின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள், ஐ.எஸ். இயக்க வாசங்கள் அடங்கிய குறிப்புகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் முபின் ஐ.எஸ். இயக்க ஆதரவாளராக இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதேபோல் கோவை மாநகரில் ஏற்கனவே என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டவர்களின் வீடு, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது குனியமுத்தூரில் ஏற்கனவே என்.ஐ.ஏவால் விசாரிக்கப்பட்டவரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் போலீசாருக்கு ஒரு பென்டிரைவ் கிடைத்தது.

    அந்த பென் டிரைவில், 100க்கும் மேற்பட்ட ஐ.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. ஐ.எஸ். இயக்கத்தினர் மிக கொடூரமாக சிலரை கழுத்தை அறுத்து கொல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்று இருந்தன.

    ஐ.எஸ். இயக்கத்தின் பிரசார வீடியோக்கள், அவர்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த வீடியோக்களும் இருந்துள்ளன.

    இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளியான ஷக்ரான் ஹசீம் பேசிய வீடியோக்கள், 2019-ம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த தேவலாய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விளக்கங்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகள் போன்ற வீடியோக்களும் அதிகளவில் இருந்தன. இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் கடந்த 2015-ம் ஆண்டு தான் ஐ.எஸ் இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அதில் இருந்து விடுபட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இருப்பினும் அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏனென்றால் ஏற்கனவே என்.ஐ.ஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட முபின் அமைதியாக இருந்ததும், தற்போது கார் வெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் தொடர்ந்து அவரையும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

    பென்டிரைவை கைப்பற்றியுள்ள போலீசார் அந்த வீடியோக்கள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களை காவலில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கைதான 6 பேரையும் கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றவும் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

    ×