search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதுமை மாவு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் சோதனைமுறையில் செய்த விற்பனை வெற்றி பெற்றதால், முறைப்படி விற்பனையை தொடங்கி உள்ளோம்.
    • தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விலை உயர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கோதுமை மாவு விலை அதிகரித்துள்ளது. தரம் மற்றும் ஊருக்கு ஏற்ப கிலோ ரூ.36 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.

    அதனால், கடந்த பிப்ரவரி மாதம், பொதுமக்களுக்கு சோதனை முறையில் மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியது. 'பாரத் ஆட்டா' என்ற பெயரில், கிலோ ரூ.29.50 விலையில் மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக 18 ஆயிரம் டன் கோதுமை மாவு விற்பனை செய்தது.

    இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தநிலையில், 'பாரத் ஆட்டா' கோதுமை விற்பனையை மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மானியவிலையில் கிலோ ரூ.27.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகளான 'நபெட்', 'என்சிசிஎப்', கேந்திரிய பண்டார் ஆகியவற்றின் 2 ஆயிரம் கடைகள் மற்றும் 800 நடமாடும் வேன்கள் மூலம் 'பாரத் ஆட்டா' கோதுமை மாவு விற்கப்படும்.

    டெல்லியில் கடமை பாதையில் நடந்த நிகழ்ச்சியில், 'பாரத் ஆட்டா' ஏற்றப்பட்ட 100 நடமாடும் வேன்களை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியுஷ் கோயல், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு மாவு பாக்கெட்டை வழங்கி, விற்பனையை தொடங்கி வைத்தார்.

    அப்போது, அவர் பேசியதாவது:-

    நாங்கள் சோதனைமுறையில் செய்த விற்பனை வெற்றி பெற்றதால், முறைப்படி விற்பனையை தொடங்கி உள்ளோம். அப்போது குறைவான மாவு விற்கப்பட்டது. தற்போது, 800 வேன்கள், 2 ஆயிரம் கடைகள் மூலம் நாடு முழுவதும் அதிக அளவில் விற்கப்பட உள்ளது.

    இதற்காக, மத்திய அரசின் இந்திய உணவு கழகத்தில் இருந்து கிலோ ரூ.21.50 என்ற விலையில், 3 கூட்டுறவு அமைப்புகளுக்கும் மொத்தம் 2½ லட்சம் டன் கோதுமை ஒதுக்கப்படும். அவற்றை மாவாக மாற்றி, கூட்டுறவு அமைப்புகள் விற்பனை செய்யும்.

    இதனால் கோதுமை மாவு புழக்கம் அதிகரித்து, அதன் விலை குறையும். தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விலை உயர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×