search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா பந்த்"

    • பந்த் மற்றும் வன்முறை தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
    • போராட்டத்தால் ஏற்பட்ட இழப்புகளை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க முடிவு

    திருவனந்தபுரம்:

    இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கேரளாவில் நேற்று இந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய முழு அடைப்பு போராட்டம் மாலை 6 மணி வரை நடந்தது.

    இதில் திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு உள்பட பல மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களின் மீது கல்வீசினர். பல இடங்களில் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.போலீசார் மீதும் தாக்குதல் நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும் கேரள அரசு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் ஐகோர்ட்டில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கேரளா முழுவதும் நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக 70 பஸ்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

    மேலும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் ரூ.45 லட்சம் இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கோர்ட்டின் உத்தரவு மீறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

    இதற்கிடையே போராட்டத்தால் ஏற்பட்ட இழப்புகளை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று கேரள போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்து உள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக 170 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×