search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள லாரி"

    • விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல் குவாரிகளில் இருந்து தினமும் கேரளாவிற்கு கனிம வளங்கள் கனரக லாரிகளில் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதற்கு தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய கனரக லாரிகளுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என கூறியிருந்த நிலையில் இரவு நேரங்களில் புளியரை சோதனை சாவடி வழியாக ஆலங்குளம் வரையில் பிரம்மாண்ட லாரிகள் மின்னல் வேகத்தில் படையெடுத்து வருகின்றன.

    இதற்கு அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக கூறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது கனிமவள லாரிகளை சிறை பிடித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவில் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் இருந்து கேரளாவிற்கு எம்.சான்ட் ஏற்றி சென்ற லாரியின் தொட்டியில் இருந்த துவாரம் வழியாக எம். சாண்ட் மணல் சாலையில் கொட்டி கொண்டே சென்றதால் அதன் பின்னால் சென்ற வாகன ஓட்டிகளின் கண்களை எம்.சாண்ட் மண் பதம் பார்த்தது. உடனடியாக சில சமூக ஆர்வலர்கள் அந்த கனரக லாரியை பாவூர்சத்திரம் அடுத்து உள்ள கல்லூரணி விலக்கு அருகே வைத்து சிறை பிடித்தனர். மேலும் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், கேரளாவிற்கு தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதாகவும், விதிமுறைக்கு புறம்பாக கூடுதல் கனிம வளங்களை ஏற்றி செல்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×