search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை விற்பனை"

    • கடந்த வாரம் வீட்டை விட்டு சென்ற மனோஜ்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
    • சங்கீதா மற்றும் அவரது 2 மாத குழந்தையை நாமக்கல்லில் உள்ள அரசு காப்பகத்தில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 25). இவரது மனைவி சங்கீதா (22). இருவரும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்தனர். அப்போது சங்கீதா கர்ப்பமானார். உடன் இருந்து கவனிக்க உறவினர் யாரும் இல்லாததால் மனோஜ் குமார் தனது தாயாரிடம் கூறினார்.

    திருப்பூரிலிருந்து அழைத்து வந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்தார் .கடந்த 2 மாதத்திற்கு முன் சங்கீதாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் வீட்டை விட்டு சென்ற மனோஜ்குமார் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.

    இது குறித்து மனோஜ்குமாரின் தாயாரிடம் சங்கீதா கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை. மேலும் அவர் 2 மாத பெண் குழந்தையை புரோக்கர் மூலம் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை விசாரிக்க மறுத்துவிட்டனர். இதனால் சங்கீதா நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்று இரவு புகார் அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், குழந்தை பிறந்தது முதல் மனோஜ்குமார் வீட்டில் சண்டை போட்டு வந்தார். ஒரு கட்டத்தில் எனக்கும், கணவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதற்கு பெண் குழந்தை தான் காரணம் என நினைத்து அந்த குழந்தையை எனது மாமியார் ரகசியமாக விறக்க முயன்றார் என தெரிவித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சங்கீதாவின் மாமியாரிடம், நீங்கள் பேரம் பேசிய புரோக்கர் யார்? குழந்தையை யாருக்கு விற்க நினைத்தீர்கள்? என துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    சங்கீதா மற்றும் அவரது 2 மாத குழந்தையை நாமக்கல்லில் உள்ள அரசு காப்பகத்தில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

    • லதா, தனது தோழி வளர்மதியிடம் குழந்தை இருந்தால் விலைக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
    • கைதான தம்பதி மதியழகன்-வளர்மதி, புரோக்கர் லதா ஆகிய 3 பேரையும் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குச்சிப்பாளையம் தேக்கவாடியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 38). இவரது மனைவி வளர்மதி (25). இவர்களது நண்பர் ஈரோடு சாஸ்திரி சாலை அணைக்கட்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் லதா (வயது 35).

    இவர்கள் சேலத்தில் உள்ள ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்காக பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சேலம் கொண்டு வந்தனர். அவர்கள் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நின்ற ஒரு பெண்ணிடம் குழந்தையை துணியில் சுற்றி கொடுத்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீசார், டவுண் போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்து குழந்தையை மீட்டனர். பச்சிளம் குழந்தையை உடனடியாக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    கைதான மதியழகன், வளர்மதி, லதா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 25). இவரது கணவர் ராமராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான கஸ்தூரி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் அடித்து கொடுமைபடுத்தியுள்ளார். இதையடுத்து 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, திருச்செங்கோட்டில் வசிக்கும் சகோதரி காயத்ரி வீட்டிற்கு வந்து விட்டார்.

    காயத்ரி, பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் இயங்கி வரும் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த வளர்மதியுடன் காயத்ரிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அதே நேரத்தில் வளர்மதியும், லதாவும் சேர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை செய்துள்ளனர். இதை அறிந்த சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த விவசாயி அன்பு என்பவர் லதாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. விரைவில் ஒரு குழந்தையை கொடுங்கள். ரூ.5 லட்சம் கொடுக்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு லதா சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லதா, தனது தோழி வளர்மதியிடம் குழந்தை இருந்தால் விலைக்கு கொடுக்குமாறு கேட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கஸ்தூரிக்கு குழந்தை பிறந்த தகவலை வளர்மதி, லதாவிடம் தெரிவித்துள்ளார்.

    அந்த குழந்தையின் புகைப்படத்தை பெற்ற லதா, விவசாயி அன்பு வாட்ஸ் அப்புக்கு அனுப்பினார். படத்தை பார்த்த அன்பு, உடனடியாக குழந்தையுடன் சேலம் வாருங்கள், ரூ.5 லட்சம் ரொக்கமாக தருகிறேன் என கூறியுள்ளார்.

    இந்த நிலையில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 3-வதாக பிறந்த பெண் குழந்தையை தாய் கஸ்தூரி விற்க முடிவு செய்து, அந்த குழந்தையை தனது சகோதரி காயத்திரி, வளர்மதியிடம் கொடுத்தார். இதையடுத்து அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வளர்மதி மற்றும் இவரது கணவர் மதியழகன், லதா ஆகியோர் சேலம் வந்தனர். அப்போது இது பற்றி வாலிபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர் என்பது தெரியவந்தது.

    கைதான தம்பதி மதியழகன்-வளர்மதி, புரோக்கர் லதா ஆகிய 3 பேரையும் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதியழகன் சேலம் மத்திய ஜெயிலிலும், வளர்மதி, லதா ஆகியோர் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலிலும் போலீசார் அடைத்தனர்.

    சட்டவிரோதமாக பேரம் பேசி குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற எடப்பாடியை சேர்ந்த அன்பு தலைமறைவாகி விட்டார். அன்பு என்பவருக்கு உண்மையிலேயே திருமணம் ஆகிவிட்டதா? அவருக்கு குழந்தைகள் இருக்கா? இல்லையா? அவர் வேண்டும் என்றே திட்டமிட்டு 3 பேரையும் போலீசில் மாட்டி விட்டாரா? இந்த குழந்தை விற்பனை சம்பவத்தில் மேலும் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது பற்றி அன்பு பிடிபட்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இதனால் அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அவர் பிடிபடும் பட்சத்தில் மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும்.

    • மதுரையை சேர்ந்த தம்பதிக்கு குழந்தையை பல லட்சம் ரூபாய்க்கு விற்றதாக பெண் தெரிவித்துள்ளார்.
    • இதைத்தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியை வரவழைத்து விசாரணை நடத்தியபின் பெண் குழந்தையை மீட்டனர்.

    மதுரை:

    மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கணவரை இழந்த அந்த பெண் தனது மகன், மகள்களை வேலைக்கு சென்று வளர்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதில் அந்த பெண் கர்ப்பமடைந்தார்.

    இந்த விஷயம் மகன், மகள்களுக்கு தெரியவந்தால் அவமானமாகி விடும் என கருதிய அந்த பெண் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி சமாளித்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

    ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த அந்த பெண் பின்னர் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆனார். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை இல்லை.

    இதுகுறித்து கேட்டபோது உறவினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து தடுப்பூசி போட சுகாதார நிலையத்திற்கு குழந்தையுடன் கட்டாயம் வர வேண்டுமென செவிலியர்கள் அந்த பெண்ணிடம் கூறிவிட்டுச் சென்றனர். அதன்படி சுகாதார நிலையத்திற்கு அந்த பெண் மட்டும் சென்றுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் குழந்தை மாயமானது குறித்து அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஏ.டி.எஸ்.பி. சந்திரமவுலி தலைமையில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது மதுரையை சேர்ந்த தம்பதிக்கு அந்த குழந்தையை பல லட்சம் ரூபாய்க்கு விற்றதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியை வரவழைத்து விசாரணை நடத்தியபின் பெண் குழந்தையை மீட்டனர்.

    இந்து பெண்ணிற்கு பிறந்த குழந்தையை வேறு மதத்தினருக்கு தத்துக்கொடுக்கும் போது அதற்கான பிரத்யேக சட்டமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி பெண் குழந்தை பல லட்சத்துக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தத்தெடுத்த முஸ்லிம் தம்பதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை உறவினர்களை அழைத்து விமரிசையாக நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×