search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்த பட்ச கூலி"

    • ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், தினமும் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும்.
    • தினசரி சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த திடக்கழிவிற்கான அளவை உரிய பதிவேட்டில், தினமும் பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சிகளில், தனியார் நிறுவனத்தினர் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் (சி.ஐ.டி.யு.,) சங்கத்தின் சார்பில், அதன் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

    அதனடிப்படையில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:-

    மாநகராட்சி, நகராட்சிகளில் தனியார் வாயிலாக மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகளில், சில நகர்ப்புற உள்ளாட்சிகளில் சட்ட விதிப்படி பணி மேற்கொள்ளப்படுவதில்லை.ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கூலி பிரதிமாதம் வழங்கப்படுவதில்லை என்ற புகார் வந்த வண்ணம் உள்ளது.

    ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், தினமும் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். பஸ் நிலையம், சந்தை, சாலை மற்றும் வீதிகளில் தேங்கும் குப்பை, கழிவுநீர், கால்வாயில் தேங்கும் கசடு, மண் உள்ளிட்டவற்றை சேகரித்து மக்கும், மக்காத கழிவுகளை தனியாக பிரித்து நுண் உர மைய கூடம், உலர்க்கழிவு சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய குப்பைகளை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும்.

    தினமும் சேகரிக்கப்படும் குப்பையில் மக்கும் குப்பை, மக்காத மறு சுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய உலர் கழிவுகள், மக்காத எதற்கும் பயன்படாத பிற உலர் கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் டயர், நாப்கின், பயன்படுத்தப்படாத மருந்து, மருந்து அட்டைகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். தினசரி சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த திடக்கழிவிற்கான அளவை உரிய பதிவேட்டில், தினமும் பதிவு செய்ய வேண்டும்.

    நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வொரு பணிக்கும் செயல்திறன் கணக்கிட்டு அதன்படி தொகை கணக்கிட்டு நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட வேண்டும். வீடு, கடை, வணிக வளாகம், சந்தைகளின் எண்ணிக்கை, அங்கு சேகரிக்கும் திடக்கழிவின் எடை, மக்கும் மற்றும் மக்காத குப்பையின் எடை, பஸ் நிலையங்களில் தினசரி சுத்தம் செய்யப்படும் நேர விவரம் ஆகியவற்றை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

    பணியாளர்களுக்குரிய சம்பள தொகையை பிரதி மாதம், 5ந்தேதிக்குள் ஒப்பந்ததாரருக்கு நிர்வாகங்கள் வழங்க வேண்டும். பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட வேண்டிய பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பங்கு தொகையை பிடித்தம் செய்து, ஒப்பந்ததாரரின் பங்குத் தொகையுடன் சேர்த்து உரிய கணக்கில் செலுத்தி ரசீது பெற்ற பின் அதனை சரிபார்த்த பிறகே அந்தந்த மாதத்திற்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு விடுவிக்க வேண்டும்.

    திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அரசின் குறைந்தபட்ச கூலி சட்டம் 1948ன் படி வெளியிடப்பட்ட அரசாணை எண் 36ன் படி, குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும்.

    இவ்வாறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    ×