search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தட்டுப்பாடு அபாயம்"

    • நேற்றும் பகலில் கடுமையான வெயில் வாட்டிய நிலையில், மதியத்திற்கு பிறகு திடீரென வானில் மேகமூட்டங்கள் ஏற்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 103 அடியாக இருந்தது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடையை மிஞ்சும் அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெயிலில் இருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும் கடந்த சில வாரங்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிப்பதால், பெண்கள் குடை பிடித்தபடி சாலைகளில் செல்வதை காண முடிகிறது.

    நேற்றும் பகலில் கடுமையான வெயில் வாட்டிய நிலையில், மதியத்திற்கு பிறகு திடீரென வானில் மேகமூட்டங்கள் ஏற்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. மாலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சந்திப்பு, டவுன், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் சுமார் அரைமணி நேரம் கனமழை கொட்டியது.

    இதனால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. சந்திப்பு பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது. அதில் பஸ்கள் ஊர்ந்தபடி சென்றன. பேட்டை பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நெல்லையில் 20.6 மில்லிமீட்டரும், பாளையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அரைமணி நேரம் பெய்த மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சந்திப்பு பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து பகுதிகளிலும் நேற்று மாலையில் திடீரென மழை பெய்தது. நாலுமுக்கில் அதிகபட்சமாக 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. ஊத்து எஸ்டேட்டில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 103 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் 50 அடிக்கும் கீழாக தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையில் 48.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 15 அடி வரை சேறும், சகதியும் மட்டுமே இருக்கும் என்பதால் நீர்மட்டம் 30 அடி வரையில் மட்டுமே நீர் உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதேபோல் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 41.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 62.43 அடியும், நம்பியாறு அணையில் 12.49 அடியும் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 2 மாதங்கள் இருப்பதாலும் குடிநீர் தேவையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது லேசான காற்று வீசி வரும் நிலையில், நேற்று ஒரு சில இடங்களில் மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன.

    அதனை தொடர்ந்து திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. கடம்பூரில் சுமார் 1 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டியிலும் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லிமீட்டரும், கோவில்பட்டியில் 16.8 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

    ×