search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் விநாயகர்"

    • உலகின் பெரும்பாலான நாடுகளில் விநாயகர் வழிபாடு இன்றும் உள்ளது.
    • விநாயகரின் உருவ அமைப்பு மற்ற கடவுள்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறது.

    இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் உள்ள போதிலும் எல்லாரது மனதிலும் `பளிச்' என்று நிற்கும் சிறப்புக்குரியவர், விநாயகர். மற்ற இந்து கடவுள்களுக்கும் இவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

    பொதுவாக கடவுள்களிடம் மக்கள் மிகுந்த பயபக்தியுடன் இருப்பார்கள். ஆனால் விநாயகரை மட்டும் பக்தர்கள் மிகுந்த செல்லமாகவும், பாசமாகவும் அணுகுவார்கள்.

    விநாயகரின் உருவ அமைப்பும் மற்ற கடவுள்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறது. சூறைத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம் போடுவது, தலையில் குட்டிக் கொள்வது என்று விநாயகருக்கான வழிபாடுகளும் முற்றிலும் மாறுபட்டவை.

    உலகின் பெரும்பாலான நாடுகளில் விநாயகர் வழிபாடு இன்றும் உள்ளது. எந்த மதத்தின் கடவுளும், விநாயகர் அளவுக்கு உலகம் முழுவதும் பரவி வியாபித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியாளர்களுக்கே இது விடை கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

    இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் விநாயகர் வழிபாடு அதிக அளவில் உள்ளது. அதுவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் விநாயகர் நீக்கமற முழுமையாக நிறைந்துள்ளார்.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் விநாயகர் சிலை இல்லாத ஊரே இல்லை என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் விநாயருக்குத்தான் அதிக தனி ஆலயங்கள் இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு சொல்கிறது.

    தமிழக, புதுச்சேரி மக்கள் விநாயகருடன் இரண்டற கலந்து விட்டதையே இது காட்டுகிறது. தமிழர்கள் அளவுக்கு விநாயகருக்கு விதம், விதமாக பெயர் சூட்டியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

    சந்தி பிள்ளையார், வேடிக்கை விநாயகர், தையல் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், கள்ள விநாயகர், மாடி விநாயகர், மருந்து விநாயகர்.... என்று என்ன பெயர் மனதில் தோன்றுகிறதோ, அதை விநாயகருக்கு சூட்டி விடுவார்கள். அது போல அந்தந்த சீசனுக்கு ஏற்பவும் விநாயகருக்கு பெயர் சூட்டப்படுவதுண்டு.

    அது போல இந்த இடம் என்று இல்லாமல், எந்த இடத்தில் வேண்டுமானாலும் விநாயகரை பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். அரச மரம், ஆற்றங்கரை, முச்சந்திகளில் நிச்சயம் விநாயகர் இருப்பார்.

    விநாயகரின் கருணை உள்ளம் எல்லாரையும் கவர்ந்து இழுத்து விடும். பக்தர்களின் குறைகளை தவறாமல் தீர்த்து வைக்கிறார்.

    அவரை நினைக்காமல் எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க முடியாது. அவரை பூஜிக்காமல் தொடங்கப்படும் எந்த செயலுக்கும் இடையூறு வந்து விடும். அவரது வடிவங்கள் அளவிட முடியாதது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள்.

    சானியாக இருந்தாலும், சந்தனமாக இருந்தாலும் ஒரு பிடி, பிடித்து வைத்து விட்டால் அவர் பிள்ளையாராகி விடுவார். அந்த அளவுக்கு `எடுப்பார் கைப்பிள்ளை' போன்று விநாயகர் உள்ளார். விநாயகரை வழிபாடு செய்வது என்பது மிக, மிக எளிதானது.

    இதனால்தான் நாம் விநாயகரை `முதன்மை தெய்வம்' என்றும், `முழு முதற் கடவுள்' என்றும் சொல்கிறோம்.

    நாம் மேற்கொள்ளும் ஒரு செயல் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் விநாயகர் அருள் வேண்டும். அந்த அருளை நாம் ஒவ்வொருவரும் எளிதாகப் பெற முடியும்.

    தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் விநாயகர் வழிபாடு 6-ம் நூற்றாண்டுக்குப் பிறகே உருவானதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முந்தைய நாட்டுப்புறப்பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் உள்ளதால், விநாயகர் வழிபாடு காலம், காலமாக இருந்து வருவதை உணரலாம்.

    பல ஊர்களில் விநாயகர் எப்படி அந்த தலத்தில் தோன்றினார் என்பதற்கான வரலாறு எதுவும் இருப்பதில்லை. மற்ற கடவுள் அவதாரம் போல விநாயகரை அத்தகைய எந்த தல வரலாறுகளுக்குள்ளும் அடக்க முடிவதில்லை.

    அந்த அளவுக்கு ஆதியும், அந்தமும் இல்லாமல் விநாயகர் உள்ளார். அத்தகைய சிறப்பான தலங்களில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலும் ஒன்றாகும்.

    மணக்குள விநாயகருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். இவர் அருள்பெற தினம், தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதுச்சேரி வந்து செல்கிறார்கள்.

    மணக்குள விநாயகரை நேரில் தரிசனம் செய்து விட்டால் மனதில் உள்ள பாரம் எல்லாம் குறைந்து விட்டது போல உணர்கிறார்கள்.

    மணக்குள நாயகனின் மலரடியை எப்போதும் மனதில் பதித்துக் கொண்டால், நம் வாழ்வு மேன்மை பெறும் என்பது நிதர்சனமான உண்மை.

    ×