search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால் முறிந்தது"

    • 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
    • எல்லைமீறி செயல்படும் ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் 3 வாலிபர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தாங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் அடித்து நொறுக்கினர்.

    இதில் ஒரு கார், 16 ஆட்டோ, 10 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 27 வாகனங்கள் சேதம் அடைந்தன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றி உதவி கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது குடிபோதையில் எல்லை மீறி ரகளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான விஜய் என்ற ஜாக்கி, லாரன்ஸ் மற்றும் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் என்பது தெரியவந்தது. விஜய்க்கு 22 வயதும், லாரன்சுக்கு 23 வயதும் ஆகிறது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விஜய் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 12 வழக்குகளும், லாரன்ஸ் மீது கொலை மிரட்டல் உள்பட 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ஒருவனை அழைத்துக்கொண்டு அவனுக்கும் மது வாங்கி கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். லாரன்ஸ், விக்கி இருவரும் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியபோது தவறி விழுந்தனர். இதில் இருவருக்கும் வலது கை மற்றும் இடது கால் முறிவு ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    லாரன்ஸ், விஜய் இருவருக்கும் கை மற்றும் கால் பெரிய கட்டு போடப்பட்டு உள்ளது. இதனால் நடக்க முடியாத நிலையில் இருவரும் வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். போதையில் மோட்டார்சைக்கிள்களை அடித்து நொறுக்கிய 3 பேரும், அப்பகுதியில் குடியிருப்பு பகுதியில் மது அருந்தியதை சுரேஷ் என்பவர் தட்டிக் கேட்டதால் ரகளையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

    இதுபற்றி போலீசார் விஜயிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதலியை தன்னுடன் பேச விடாமல் பெண் வீட்டார் வீட்டில் அடைத்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மதுபோதையில் வாகனங்களை சேதப்படுத்தினேன் என்றும் விஜய் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, "ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தனர். எனவே எல்லைமீறி செயல்படும் ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

    ×