search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலநிலை மாற்றம்"

    • மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.
    • காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்ற பயிலரங்கம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. இப்பயிலரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட காலநிலை மாற்றத்தை குறித்தும், இந்த ஆண்டிற்கான மழைப்பொழிவின் மாறுதலை பற்றியும், மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.

    இதில் பல்வேறு துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டதால் காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. இப்பயிலரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் துணை இயக்குநர் மணிஷ் மீனா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் சங்கீதா கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு-2.0 திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட அளவிலான வழிநடத்துதல் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.

    நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு என்பது இந்திய - ஜெர்மன் இருதரப்பு திட்டம் ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் (GIZ) இந்திய அரசாங்கத்தின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MORD) மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (MOJS) ஆகியவற்றுடன் இணைந்து நியமிக்கப்பட்ட ஒரு இருதரப்பு திட்டமாகும்.

    இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புவியியல் தகவல் அமைப்பு (GIS) மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கான நீர்வள மேலாண்மை மற்றும் செறிவூட்டல் திட்டத்தினை தயாரித்து, இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2019-2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது.

    இப்போது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் (வாஸ்கா-2) 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இது 17 மாநிலங்களை உள்ளடக்கிய 15 வேளாண் காலநிலை மண்டலங்களில் நிலையான இயற்கை வள மேலாண்மை மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

    அவற்றில் கிழக்கு கடற்கரை சமவெளி மற்றும் மலை மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

    தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மற்றும் இதர ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு வாஸ்கா திட்டச் சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறை (புவியியல் தகவல் அமைப்பு) முன்மொழியப்படும்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, வன அலுவலர் அப்பல நாயுடு, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சக தொழிற்நுட்ப ஆலோசகர் ராதா பிரியா, சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ரங்கலட்சுமி மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக சட்டம் நிறைவேற்றம்.
    • சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், "காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது" என்பது குறித்து ஆராய்வதற்கு, ஒப்புதல் அளித்திருக்கிறது.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகம், சூரிய புவி-பொறியியல் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், புவி வெப்பமடைதலை விரைவுபடுத்துவது சூரியக் கதிர்கள்தான் என்பதால், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய புவி பொறியியல் ஆராய்ச்சி குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக 2022ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்தகைய ஆராய்ச்சிகள் குறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பூமியின் சிக்கலான அமைப்புகள் குறித்து வளர்ந்து வரும் புரிதலின் அடிப்படையில், இவற்றினால் ஏற்படப்போகும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள ஒரு ஆராய்ச்சிக்கான தேவை இருக்கிறது. சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல், சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வகையில் கடல் மேகங்களை பிரகாசமாக்குதல், சிரஸ் மேக ஆய்வு போன்ற வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.

    இந்த ஆராய்ச்சியானது, தொழில்நுட்பங்களை காட்டிலும், 'சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள்' (Solar Radiation Modification) ஏற்படுத்தப்போகும் தாக்கங்களைப் பற்றிய ஒரு புரிதலை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதன் பெரும்பகுதி அடிப்படை காலநிலை செயல்முறைகள் மற்றும் "மனித கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள்" (Human Greenhouse Gas Emissions) ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்தும், காலநிலைக் கொள்கையின் ஒரு அங்கமாக சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள் விளைவிக்கக் கூடிய அபாயங்கள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றை குறித்தும் சிறந்த முடிவுகளை செயல்படுத்த வழிவகுக்கும்.

    வரும் காலங்களில், பொது அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த வழிமுறை (SRM) பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்காவை தயார்படுத்தவும் உதவும். இதன் மூலம் சில வருட காலங்களுக்கு நமது கிரகமான பூமியை கணிசமாக குளிர்விக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.

    • உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன.
    • இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    சென்னை:

    உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

    இதன் தொடக்க விழா தி.நகர் பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன. இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மக்கள் பாதிக்க கூடிய சூழல் உள்ளது.

    தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சுற்று சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதை தீவிரப்படுத்த வேண்டும்.

    இதை தனிமனிதரால், சாத்தியப்படுத்த முடியாது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப் பாளர் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் மாநில செயலாளர் அருள், இணை செயலாளர்கள் எஸ்.கே.சங்கர், சத்ரிய சேகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, முத்துக்குமார், அடையார் வடிவேல், சவுமியா அன்பு மணியின் மகள் சுஞ்சத்ரா சவுமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும்.
    • இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு கால நிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மெய்யநாதன், பழனிவேல் தியாகராஜன், செந்தில் பாலாஜி, சிவசங்கர் பங்கேற்றனர்.

    தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மின் துறை, தொழில்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    காலநிலை அபாயங்களை அதிக அளவில் எதிர் கொள்ளக் கூடிய உலகின் ஐம்பது இடங்களின் பட்டியலில் இந்தியாவில் மட்டும் 9 இடங்கள் இருக்கின்றன என்று தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாடு 36-வது இடத்தில் இருக்கிறது என்கிறது இந்தத் தரவு. இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டு உணர்த்தும் என்று நான் நம்புகிறேன். பிப்ரவரியில் இந்த தரவுகள் வெளியாவதற்கு முன்பே அதாவது கடந்த டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் சென்னையைக் கடந்து கொண்டிருந்த வேளையில்தான் நான் தமிழ்நாட்டின் "காலநிலை இயக்கத்தையும்" காலநிலை உச்சி மாநாட்டையும் தொடங்கி வைத்தேன்.

    நான் ஏன் இந்த நிகழ்வுகளை குறிப்பிடுகிறேன் என்றால், இந்த நிர்வாகக் குழுவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மட்டுமல்ல, இந்த அரசு வருமுன் காக்கக்கூடிய அரசாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு அறியத் தருவதற்கும்தான்.

    அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி, உறை கிணறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை எனத் தன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப 47 வகையான நீர் நிலைகள் இருந்த வளமான அறிவுச் சமூகம்தான் தொன்மையான தமிழ்ச் சமூகம்.

    இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் இந்த அரசு, காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், தகவமைத்துக்கொள்ளவும், விரைவாகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுகாடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் துவக்கிவைத்தேன். இதுவரை சுமார் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு, கார்பனை உள்வாங்கவும் பயன்படும்.

    ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலையை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கார்பன் சமநிலையை அடையவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்கான திட்டம் இன்று துவக்கப்படுகிறது. கால நிலை மாற்றம் குறித்து பள்ளி-கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க "காலநிலை அறிவு இயக்கத்தை" செயல்படுத்தப் போகிறோம்.

    அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தைப் பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம்தான் இருந்தது. அதை நாங்கள் 13-ஆக உயர்த்தியுள்ளோம். இதைத் தவிர, அருகிவரும் உயிரினங்களான கடற்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாக்க சரணாலயங்களை ஏற்படுத்தி உள்ளோம்.

    மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்கான குறியீடாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தாத, ஏன், ஒன்றிய அரசுகூட உருவாக்காத "காலநிலை மாற்ற நிர்வாகக் குழு" எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுதான் தமிழ்நாடு எப்போது கார்பன் சமநிலையை அடையவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகிறது.

    வளர்ச்சி ஒரு கண் என்றால்-காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண். ஆகவே இந்த இரு கண்களும் மாநிலத்தின் முன்னேற்றத் திற்கு தேவை. அதற்கான பாதையை இந்தக் குழு வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இனிமேல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று துறை அமைச்சர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை கையாளுவது போல், நாம் வெப்ப அலைகளையும், புதிய புதிய நோய்களையும் கையாளத் தயாராக வேண்டும். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை அறிவியல்பூர்வமாக வெளியிட உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் வெப்பநிலை மற்றும் மழை உட்பட அனைத்து காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலக வங்கியானது தெற்காசிய ஹாட்ஸ்பாட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெப்பநிலை உயர்வு மற்றும் பருவக்காலங்களில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கை தரத்தை பாதிக்குமா என்பதை அறிய எடுக்கப்பட்ட இந்த அறிக்கையில் 2050 ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள பாதி பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறையும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

    பருவநிலை மாறுவதால் விவசாயம் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பே வாழ்க்கை தரம் குறைவதற்கு காரணம். குறிப்பாக மத்திய, வட மற்றும் வடமேற்கு இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும். மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வாழ்க்கை தரம் 9 சதவீதம் குறையும். இந்த மாற்றத்தால் சுமார் 600 மில்லியன் மக்கள் பாதிப்படையலாம். இதனால் தெற்காசியாவில் சீரற்றநிலை மற்றும் வறுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


    ஆய்வறிக்கையின் படி இந்தியாவின் வெப்பநிலை 2050-ம் ஆண்டிற்குள் 1-2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×