search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா கவர்னர்"

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் கழுத்தில் காவி சால்வை அணிந்து கொண்டு சட்டசபைக்குள் நுழைந்தனர்.
    • வருகிற 23-ந் தேதி வரை 10 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்றார். கவர்னர் தாவர்சந்த் கெலாட் காலை 11 மணிக்கு சட்டசபைக்கு வந்ததும் சபாநாயகர் பசவராஜ ஹொரட்டி, முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி எச்.கே.பட்டீல் வரவேற்பு அளித்தனர்.

    கூட்டத்தொடர் தொடங்கியதும் அரசின் சாதனைகள் குறித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். முன்னதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் கழுத்தில் காவி சால்வை அணிந்து கொண்டு சட்டசபைக்குள் நுழைந்தனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கவர்னர் உரையின் மீது விவாதம் நடைபெற உள்ளது. மேலும் வருகிற 16-ந் தேதி நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா 2024-25-ம் நிதி ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மாநிலத்தில் 5 இலவச திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால், நிதிச்சுமை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி காங்கிரஸ் அரசை இக்கட்டில் சிக்க வைக்க கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீர்மானித்துள்ளது. குறிப்பாக 40 சதவீத கமிஷன் விவகாரத்தை கையில் எடுத்து பேச பா.ஜனதா தீர்மானித்துள்ளது.

    மேலும் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தாமதம், மின் தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சனை, 40 சதவீத கமிஷன், உத்தரவாத திட்டங்களால் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் இருப்பது, எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், சட்டசபையில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக போராடவும் முடிவு செய்துள்ளது.

    வருகிற 23-ந் தேதி வரை 10 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 

    ×