search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் மனைவி உயிரிழப்பு"

    • அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.
    • வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்களாபட்டி பெரியார்காலனியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 34). இவர் பெரியகுளம் நகராட்சி கழிவுநீர் நீருந்து பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹேமாவதி (30). இவர்களுக்கு லக்ஷன் (3) என்ற மகனும், ஜெயஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.

    அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். நேற்று இப்பகுதியில் பலத்த மழை பெய்தநிலையில் வயல் பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும் வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் ஹேமாவதி வயலில் தேங்கிய தண்ணீரை அகற்ற சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

    இதை பார்த்த அவரது கணவர் தனது மனைவியை காப்பாற்ற சென்றார். இதனால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. படுகாயம் அடைந்து கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் ஜனார்த்தனன் சுற்றுலா வந்தார்.
    • கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 27), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் ஜனார்த்தனன் சுற்றுலா வந்தார். அவருடன் நண்பர் ஒருவரும் குடும்பத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்ததாக தெரிகிறது.

    பூலாம்பட்டி கதவணை பகுதியில் குடும்பத்துடன் சுற்றி பார்த்த ஜனார்த்தனன், விசைப்படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தார். மேலும் படகு சவாரியின் போது 'செல்பி'யும் எடுத்து கொண்டனர். பின்னர் அங்குள்ள மோளப்பாறை பகுதிக்கு சென்ற ஜனார்த்தனன், குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்து விட்டு மனைவியுடன் காவிரி ஆற்றில் குளிக்க இறங்கினார்.

    கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களது அபய குரல் கேட்டு குழந்தைகள் இருவரும் கரையில் இருந்து ஆற்றை பார்த்து அழுதனர்.

    குழந்தைகளின் அழுகுரலும், அந்த தம்பதியின் அபய குரலும் கேட்டு சிறிது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கணவன்-மனைவியை மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். அதற்குள் ஜனார்த்தனனும், அவருடைய மனைவியும் தண்ணீரில் மூழ்கினர்.

    ஆற்றுக்குள் இறங்கிய மீனவர்கள் கணவன்-மனைவி இருவரையும் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்டனர். பெற்றோரின் உடல்களை பார்த்து குழந்தைகள் இருவரும் பரிதவித்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் மூழ்கிய தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    கொடுங்கையூர்:

    சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல் (வயது 44). இவருடைய மனைவி துலுக்கானம் (35). இவர்கள் இருவரும் சென்னை மாநகராட்சி 128-வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வந்தனர்.

    இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் இருவரும் மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக இவர்களது வீடு பூட்டியே கிடந்தது. இருவரும் வெளியே எங்கும் சென்றிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கருதினர். நேற்று காலை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சக்திவேல் தூக்கில் தொங்கிய நிலையிலும், துலுக்கானம் கட்டிலில் படுத்த நிலையிலும் பிணமாக கிடந்தனர். அவர்கள் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என் தெரிகிறது. இதனால் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது.

    போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் கடந்த 25-ந் தேதி இரவு வீட்டுக்குள் சென்ற கணவன்-மனைவி இருவரும் அதன்பிறகு வெளியே வரவில்லை என தெரியவந்தது. எனவே அன்றே அவர்கள் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் திட்டமிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கணவன்-மனைவி தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அந்த விரக்தியில் சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×