search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலை பருப்பு"

    • நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
    • இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் கடலை பருப்பு முதன்மையானது.

    மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல், நுகர்வோருக்கு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்கும் மத்திய அரசின் முயற்சியாக 'பாரத் தால்' (Bharat Dal) என்ற பெயரில் மானிய விலையில் கடலை பருப்பை, ஒரு கிலோ பாக்கெட் ரூ.60க்கும், 30 கிலோ மூட்டை கிலோ ஒன்றுக்கு ரூ.55 எனும் விலையிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.

    தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (NAFED) சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இந்த பருப்பு தற்போது டெல்லி-தேசிய தலைநகர சாலையில் (National Capital Road) விற்கப்படுகிறது.

    இது தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF), கேந்திரிய பந்தர் மற்றும் மதர் டெய்ரியின் 'சஃபல்' ஆகிய சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும்.

    இந்த நடவடிக்கையானது, உயர்ந்து வரும் விலைவாசியினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசாங்கத்திடம் உள்ள பருப்பு வகைகளின் கையிருப்பிலிருந்து நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

    NAFED மற்றும் டெல்லி-NCRல் உள்ள அதன் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும், NCCF, கேந்திரிய பந்தர் மற்றும் சஃபல் ஆகியவற்றின் விற்பனை நிலையங்கள் மூலமாகவும் கடலை பருப்பு கொள்முதல் செய்து, பேக்கேஜிங் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

    இந்த ஏற்பாட்டின் கீழ், கடலை பருப்பு, மாநில அரசுகளுக்கு அவர்களின் நலத்திட்டங்கள், காவல்துறை, சிறைகள் மற்றும் அவர்களின் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்கவும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் கடலை பருப்பு முதன்மையானது. இதை நாடு முழுவதும் பல வடிவங்களில் மக்கள் சாப்பிடுகின்றனர். ஊற வைத்தும், வறுத்தும் பல வகைகளில் இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இனிப்பு மற்றும் கார வகைகளின் தயாரிப்பில் மிக முக்கியமான பொருளாகவும் இது உபயோகிக்கப்படுகிறது.

    கடலை பருப்பில் மனித உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ரத்த சோகை மற்றும் நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தவும், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும், மன ஆரோக்கியத்திற்கும் தேவையான நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி, செலினியம், பீட்டா கரோட்டின் மற்றும் கோலின் ஆகியவை அதிகளவில் நிறைந்திருப்பதால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×