search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா பள்ளி"

    • ஒடிசாவின் பாலசோரில் 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
    • விபத்தில் சிக்கியிருந்த உடல்கள் பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டன.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    ரெயில் பெட்டிகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்புப் படையினர் அகற்றியதும், அந்த உடல்கள் விசாரணைக்காக பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளியின் 3 அறைகளில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பள்ளி அறை ஒன்றிலேயே பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் 2 நாட்கள் அங்கேயே இருந்தன. பிறகுதான் அவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பல உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தற்போது அந்தப் பள்ளியில் சிறப்பு பரிகார பூஜை கள் நடந்து வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட உடல்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அறை களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. புனித குளங்களில் இருந்து நீர் எடுத்து வந்து தெளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வரும் 16-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் அவர்களது கெட்ட ஆவி சுற்றுமோ என்று பயப்படுகிறார்கள். இது மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து அந்தப் பள்ளியின் நிர்வாகக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. பெரும்பாலான பெற்றோர்கள் கூறுகையில், ரெயில் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் கொண்ட கட்டிடத்தையே இடித்து விடலாம் என தெரிவித்தனர். பள்ளி நிர்வாகக் குழுவும் அதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானம் பாலசோர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் உயரதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் வழங்கினர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கின. முதல் கட்டமாக மேற்கூரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    ×