search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்திரகோசமங்கை"

    திருச்சிற்றம்பலம்

    சீரார் பவளங்கால் முத்தம் கயிறுஆக

    ஏர்ஆரும் பொற்பலகை ஏறி இனிதுஅமர்ந்து

    நாராயணன் அறியா நாண்மலர்த்தான் நாய்அடியேற்கு

    ஊர்ஆகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

    ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்

    போரார் வேற்கண்மடவீர் பொன்ஊசல் ஆடாமோ.

    மூன்றங்கு இலங்கு நயனத்தன் மூவாத

    வான்தங்கு தேவர்களும் காணா மலர்அடிகள்

    தேன்தங்கித் தித்தித்து அமுதுஊறித் தான் தெளிந்துஅங்கு

    ஊன்தங்கி நின்றுஊருக்கும் உத்தர கோசமங்கைக்

    கோன்தங்கு இடைமருதுபாடிக் குலமஞ்ஞை

    போன்றுஅங்கு அனநடையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்

    பல்நூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்

    தன்நீறு எனக்கு அருளித் தன்கருணை வெள்ளத்து

    மன்ஊற மன்னும்மணி உத்தர கோசமங்கை

    மின்ஏறும் மாட வியன்மாளிகைபாடிப்

    பொன்ஏறு பூண்முலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    நஞ்சுஅமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்

    மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை

    அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்

    நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணைசெய்து

    துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ்பாடிப்

    புஞ்சம்ஆர் வெள்வளையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    ஆ« ணா அலியோ அரிவையோ என்றுஇருவர்

    காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்

    நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சுதனை

    ஊண்ஆக உண்டருளும் உத்தர கோசமங்கைக்

    கோண்ஆர் பிறைச்சென்னிக் கூத்ஙதன் குணம்பரைவிப்

    பூண்ஆர் வனமுலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    மாதுஆடுபாகத்தன் உத்தர கோசமங்கைத்

    தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்

    கோதாட்டி நாயேனைஆட்கொண்டு என் தொல்பிறவித்

    தீதுஓடா வண்ணம் திகழப் பிறப்பு அறுப்பான்

    காதாடு குண்டலங்கள்பாடிக் கசிந்துஅன்பால்

    போதாடு பூண்முலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    உன்னதற்கு அரியதிரு உத்தர கோசமங்கை

    மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே

    பன்னிப் பணிந்துஇறைஞ்சப்பாவங்கள் பற்றுஅறுப்பான்

    அன்னத்தின் மேல்ஏறி ஆடும் அணிமயில்போல்

    என்¢அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்

    பொன்ஒத்த பூண்முலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்

    சால அமுதுஉண்டு தாழ்கடலின் மீது எழுந்து

    ஞாலம் மிகப்பரிமேற் கொண்டு நமைஆண்டான்

    சீலம் திகழும் திருஉத்தர கோசமங்கை

    மாலுக்கு அரியானை வாயார நாம்பாடிப்

    பூலித்து அகம்குழைந்து பொன்ஊசல் ஆடாமோ.

    தெங்குஉலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை

    தங்குஉலவு சோதித் தனிஉருவம் வந்தருளி

    எங்கள் பிறப்புஅறுத்திட்டு எம்தரமும் ஆட்கொள்வான்

    பங்குஉலவு கோதையும் தானும் பணிகொண்ட

    கொங்குஉலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்

    பொங்குஉலவு பூண்முலையீர் பொன்ஊசல் ஆடாமோ.

    • ஆடல் அரசன் சிவபெருமானால் பரதநாட்டிய கலை தோற்றி வைக்கப்பட்டது.
    • பரதநாட்டிய பழமைகளை பேணிக்காப்பதுடன் பல்வேறு புதுமைகளையும் புகுத்தியுள்ளார்.

    பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் போன்ற முனிவர்களை மகிழ்விக்கும் பொருட்டு முதல் முதலில் சிவபெருமான், பரதநாட்டிய ஆடிய திருத்தலம் உத்தகோசமங்கையாகும்.

    பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தையும், பரத சாஸ்திர நூல்களை எழுதியுள்ளார்.

    இந்த இரு முனிவர்களும் உத்தரகோசமங்கையில் திருவாதிரை தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தைக் காண்பதற்கு தவம் இருந்தனர்.

    அவர்களின் பக்திக்கு பணிந்த ஈசன் உத்திரகோசமங்கையில் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் தனது பரத நடனத்தை காட்டிய கருணையினாலும் உலக ஜனங்களுக்கு சிவன் முதல் முதலில் பரதநாட்டியத்தை இத்திருத்தலத்தில் தான் அறிமுகப்படுத்தினார்.

    பரத சாஸ்திரம் நூல்களை சிவன் கற்றுக்கொண்டு இதற்கு அடிப்படை பாவம், ராகம் தாளம் என்ற சொற்களில் உள்ள முதல் எழுத்துக்களை எடுத்து ஒன்று சேர்த்து உருவாக்கி பரத நாட்டியம் என்று வெளியிட்டார்.

    மரபு ரீதியில் வகுக்கப்பட்ட மூன்று இயல்புகளும் ஒன்றாக பொருந்தி, மனதில் உள்ள சுவையையும், அனுபவத்தையும், மெய்ப்பாடுகளில் அபிநயித்து ஆடுவதே பரத நாட்டியத்தின் உயிர்ப்பு என்று சிவன் பெயரிடுகின்றார்.

    சிவபெருமான் பரத நாட்டியத்திற்கென்று பிரத்யேக உடைகளை ஆடலுக்கு ஏற்றது போல உலக ஜனங்களுக்கு காட்டியருளினார்.

    நிற்பது, இருப்பது, தட்டுவது, மடக்குவது, நடப்பது, குதிப்பது,பாய்வது, வளைவது, சுற்றி வருவது என்று கால்களுக்கு சிறப்பு இடத்தையும் விதவிதமாக விரல்களை விரிப்பது, குவிப்பது இணைப்பது, பிரிப்பது, நெளிப்பது ஆகியவற்றுடன் நின்று கொண்டே கரங்கள் மூலம் குறிப்புகளை உணர்த்துவதும் பரத நாட்டியத்தின் தனிச்சிறப்பாகும் என சிவபெருமான் எடுத்துரைத்துள்ளார்.

    அத்துடன் புருவங்களின் ஏற்ற, இறக்கம், இமைகளின் சிறகடிப்பு, சுழலும் கருவிழி, விழி வீச்சின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துதல், புன்னகை மூலம் மலர்ச்சியை தெரிவிப்பது, வேதனையில் கண்கள் துடிப்பது, உதடுகளைச் சுழிப்பதன் மூலம், உள்ளத்தில் உள்ள வெட்கம், வேதனை, கோபம், கிண்டல் போன்ற உணர்வுகளை வெளிக்காட்டுதல் என்று அனைத்தையும் ஆழ்மனதில் இருந்து கொண்டு வருவது பரத நாட்டியத்தின் தனிச்சிறப்பாக சிவபெருமான் காட்டி அருளியுள்ளார்.

    பரதநாட்டிய பழமைகளை பேணிக்காப்பதுடன் பல்வேறு புதுமைகளையும் புகுத்தியுள்ளார்.

    அதன்படி பழமையான ஒரு கலை பராம்பரியம், பண்பாடு மாறாமல் பல புதுமைகளுக்கும் இடம் கொடுக்கிறது என்பதுதான் பரத நாட்டியத்தின் தனிச்சிறப்பாகும்.

    அந்த வகையில் பரதநாட்டியர் கலை முதல் முதலில் உத்தரகோமங்கையில் தான் தோன்றியது என்பது இத்தலத்துக்கு மிகவும் சிறப்புக்குரியதாகவும் பெருமைப்படத்தக்கதாகவும் உள்ளது.

    ஆடல் அரசன் சிவபெருமானால் பரதநாட்டிய கலை தோற்றி வைக்கப்பட்டது.

    • இதனால் பளபளவென்று பச்சை நிறத்தில் மின்னியபடி மிக அழகாக கல் கிடந்தது.
    • ஒருநாள் மன்னர் இரவில் உறங்கும்போது ஈசன் கனவில் தோன்றினார்.

    ராமேசுவரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மரைக்காயர் என்ற மீனவர் பாய்மரப்படகு வைத்து மீன் பிடித்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார்.

    ஒருநாள் அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும் போது கடலில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

    அலைகள் சூறாவளியாக உருவெடுத்து தாக்கு பிடிக்க முடியாதபடி புயல் காற்று வீசியது.

    பயங்கர இடி மின்னலுடன் பேய் மழை பெய்தது. அதனால் மரைக்காயரின்பாய்மர படகு திசை மாறிச் சென்றது.

    படகு எங்கு செல்லுகிறது என்று தெரியாமல் கடல் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டது.

    கடல் நடுப்பகுதிக்கு படகு சென்று விட்டது.

    அப்போது திடீரென்று கடல்பாசி படிந்த பச்சை நிறத்துடன் கல்பாறையில்பாய்மரப் படகு மோதியது.

    படகு மோதிய வேகத்தில் அந்தபாறை மடமடவென்று படகின் மேலே விழுந்தது.

    மற்றும் இரண்டுபாறை கல் துண்டுகளும் விழுந்தன.

    அந்த நேரத்தில் புயல் காற்றும் பேய்மழையும், உடனே நின்று விட்டது.

    இதையறிந்த மரைக்காயர் தன் உயிரைக் காப்பாற்றியது இந்த பாறைக்கல்தான் என்று நினைத்தார்.

    எப்படியும் அந்த பச்சை கல்லையும், 2 கல் துண்டுகளையும் ஊர் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

    அதன்படி பச்சை நிறக்கல் மற்றும் 2 கல் துண்டுகளுடன் படகை ஓட்டிக் கொண்டு மண்டபம் வந்து சேர்ந்தார்.

    காணாமல் போன மரைக்காயரைக் கண்டு அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    மரைக்காயர் தான் கொண்டு வந்தபாசிபடிந்த பாறைக்கல்லை தன் வீட்டுக்கு முன் வாசல் படிக்கல்லாக போட்டு விட்டார்.

    இந்த வாசல் படிக்கல்லின் மேல் நடக்க நடக்க நாளடைவில் கல்லில் படிந்திருந்த கடல்பாசிகள் முழுவதும் போய்விட்டது.

    இதனால் பளபளவென்று பச்சை நிறத்தில் மின்னியபடி மிக அழகாக கல் கிடந்தது.

    இதைக் கண்ட மரைக்காயர் குடும்பத்தினர் பச்சை நிறக் கல்லின் அழகைக் கண்டு இந்த கல்லை மன்னருக்கு கொடுத்தால் நமக்கு ஏதாவது பொருள் கொடுப்பார் என்று நினைத்து மன்னருக்கு தெரிவித்தனர்.

    பாண்டிய மன்னன் தனது ஆட்களை மண்டபத்திலுள்ள மரைக்காயர் வீட்டுக்கு அனுப்பி பச்சை நிறக்கல்லை அரண்மனைக்கு எடுத்து வரும்படி உத்தரவிட்டார்.

    பணியாட்கள் மரைக்காயர் வீட்டில் உள்ள பச்சை நிறக்கல்லை அரண்மனையில் சேர்த்தார்கள்.

    அந்த கல்லைக் கண்ட மன்னன் விலைமதிக்க முடியாத மரகத கல்லைக்கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த பச்சை மரகத கல்லைக் கொண்டு உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஆருத்ரா தரிசனம் நடராஜருக்கு ஊத்துவதாண்டவம் நடனத்தை அப்படியே நாட்டியம் ஆடும்படி சிலை வடிக்க வேண்டும் என்று தீர்மானித்தார் மன்னர்.

    நடராஜர் சிலையை வடிக்க தலைசிறந்த சிற்பியைத் தேடிக்கொண்டு வரும்படி ஒற்றர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஒற்றர்கள் தனித்தனியாக பல நாடுகளுக்கு அதாவதுபாண்டியநாடு, சேரநாடு, சோழநாடு, நாஞ்சில்நாடு போன்ற நாடுகளில் மூலை முடுக்கெல்லாம் தேடியும் சிலை வடிக்கும் சிற்பி கிடைக்கவில்லை.

    இதனால் மன்னன் மிகுந்த கவலை கொண்டு இருந்தார்.

    ஒருநாள் மன்னர் இரவில் உறங்கும்போது ஈசன் கனவில் தோன்றினார்.

    இலங்கை வேந்தன் முதலாம் கயவாகு என்பவரின் அரண்மனையில் சிவபக்தனான ரத்தினசபாபதி என்ற தலைசிறந்த சிற்பி இருப்பதாக தெரிவித்தார்.

    உடனேபாண்டிய மன்னன் இலங்கை வேந்தன் முதலாம் கயவாகுவை தொடர்பு கொண்டு, சிற்பியை அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தார்.

    அதன்படி ரத்தினசபாபதி என்ற சிற்பியை உத்தரகோசமங்கை திருத்தலத்துக்கு அழைத்து வந்து சேர்த்தார்கள்.

    அவர்தான் பச்சை கல் நடராஜர் சிலையை வடித்தார்.

    • உத்திரகோசமங்கை திருத்தலத்தில் பல டன் எடை கொண்ட மிகப்பெரிய மணி ஒன்று உள்ளது.
    • அதன் சத்தம் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும்

    உத்திரகோசமங்கை திருத்தலத்தில் பல டன் எடை கொண்ட மிகப்பெரிய மணி ஒன்று உள்ளது.

    அதன் சத்தம் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும் எனவே மணி ஓசை கேட்கும் எல்லை வரை சிவதலமாகும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    எனவே உத்திரகோசமங்கை மற்றும் சுற்று வட்டார ஊர்களிலுள்ள ஆண்கள் உழைத்து, தான் ஈட்டிய பொருள்களை அவர் அவர் மனைவி கையில் கொடுத்து வாங்கினால்தான் குடும்பம் முன்னேற்றமடையும் என்பது ஐதீகமாகும்.

    • சிற்பி பச்சை மரகதகல்லில் நடராஜர் சிலையை செதுக்க ஆரம்பித்தார்.
    • மற்றொரு துண்டை மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடிப்பீடத்தில் வைத்தார்.

    இலங்கை நாட்டைச் சேர்ந்த சிலை வடிக்கும் தலைசிறந்த சிற்பியான ரத்தின சபாபதி என்பவரிடம் பாண்டிய மன்னன் சிலை வடிக்க வேண்டிய வரைபடங்களையும், ஆருத்ரா தரிசனம் ஊத்துவதாண்டவம் நடராஜன் ஆடிய நடனத்தையும் தெளிவுபட விளக்கினார்.

    சிற்பி பச்சை மரகதகல்லில் நடராஜர் சிலையை செதுக்க ஆரம்பித்தார்.

    முதலில் இரண்டு துண்டுகளாக இருந்த பச்சை மரகதகல்லை மிக அழகான வடிவம் அமைத்து இரண்டு துண்டுகளையும் மன்னரிடம் ஒப்படைத்தார் சிற்பி.

    மன்னர் ஒருதுண்டு பச்சை மரகத கல்லை பழனி முருகன் கோவிலின் அடிப்பீடத்தில் வைத்தார்.

    மற்றொரு துண்டை மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடிப்பீடத்தில் வைத்தார்.

    சிற்பி பச்சை மரகத கல்லில் 5 அடி உயரம் சிலையும், 1 அடி உயரம் பீடமும் சேர்த்த ஏழு அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலையாக வடித்தார்.

    அந்த சிலை நடராஜர் உருவத்தில் பரதநாட்டிய கலையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சிலையாக இருந்தது.

    இந்த நடராஜர் சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

    இந்த சிலை ஒளி வெள்ளத்தில் உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும்.

    அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பது போல் தத்ரூபமாக வடித்துள்ளார்.

    நடராஜர் சிலையை நாம் நேரில் பார்க்கும்போது அச்சு அசலாக பரதநாட்டியம் ஆடுவது போன்று காட்சியளிக்கும்.

    இந்த சிலையை நேரில் கண்டவர்கள் கண்ணைக் கவரவும்,பார்த்தவர்கள் பரவசம் அடையவும், சிலை வடித்தவுடன் மக்கள் மற்றும் பக்தர்களின்பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பச்சை மரதக கல்லினால் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலையின் மேல் சூரிய ஒளிபட்டு கோவிலே இரண்டாக பிளந்துள்ளது.

    சிலையைப்பார்க்க வந்த பக்தர்கள் ஏற்படுத்திய பேச்சு சலசலப்பு சத்தமும், மேளத்தாள இசைகள், ஒலி, ஒளி முதலிய பேரொளிகள் நடராஜன் சிலை மேலேபட்டு அதிர்வுகள் ஏற்படுத்தின.

    இதை அறிந்த சிற்பி, எப்படி இந்த விக்கிரகத்தை காப்பாற்றுவது என்று நினைத்து மிக வேதனைப்பட்டு குழம்பிய நிலையில் ஈசன் காலடியில் மன்றாடி வழிமுறைகளைக் கேட்டார். உடனே ஒரு அசரீரி தோன்றியது.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் பார்வதி விட்ட சாபத்தால் எனது உருவம் பொறிக்கப்பட்ட விக்கிரகம் பச்சை மரகத கல்லால் ஆனது. இந்த பச்சை மரகத கல் மேளதாளம் இசை, ஒலி, ஒளி சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    மத்தளம் முழங்க, மரகதம் உடையும் என்ற சொல்லுக்கேற்ப எனது உருவச்சிலையை ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பால் பூசியவடியும் என்று கூறினார்.

    பிறகு மார்கழி மாதம் பவுர்ணமி அன்று சந்தனத்தைக் கலைத்து ஒரு நாள் மட்டும் எனது முழு உருவத்தை பக்தர்கள் பார்க்கலாம் என்று கூறினார்.

    எனது அனுமதி இல்லாமல் என் விக்கிரகத்தை மன்னரோ, மந்திரியோ, மக்களோ, திருடனோ, அரசியல்வாதிகளோ எடுத்துச் செல்ல முடியாது என்றும், அப்படி எடுக்க நினைப்பவர்களுக்கு உடனே கிறுக்கு(பித்து) பிடித்து விடும் என்றார்.

    அன்னியர்கள், யாத்ரீகர்கள் உத்தரகோசமங்கை மண்ணில் உட்கார்ந்து எழும்பும்போது கையை அசைத்துப் பின்புறமாக மண்ணை தட்டிச் செல்ல வேண்டும்.

    அப்படி தட்டிச் செல்லாதவர்களுக்கு சிவன் உத்தரகோச மங்கையில் ஒருதுளி மண்ணை எடுக்க கூட சம்மதிக்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.

    • கண்ணாங்குடியைச் சேர்ந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுவனால் கண்ணுக்குத் தென்பட்டது சிலை.
    • குளத்தின் தண்ணீருக்கு மேல் ஆகாயத்தில் நின்றது சிலை.

    உத்திரகோசமங்கை திருத்தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வேண்டி மரகத சிலை போன்று ஒரு மாதிரி ஐம்பொன் நடராஜர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்து அமைத்துள்ளனர்.

    பல நூற்றாண்டுகளாக பல முஸ்லிம் மன்னர்கள், அண்டை நாட்டு மன்னர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் கொள்ளையடிக்க முயற்சித்தும், மரகத சிலையை எடுக்க முடியவில்லை.

    நெருங்கவும் முடியவில்லை.

    1970ம் ஆண்டு ஐம்பது பேர்கள் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று உத்திரகோசமங்கை கோவிலின் மேற்குப்புற வாசல் வழியாக வந்து மரகத நடராஜர் சன்னதி பூட்டை உடைத்து, உடைக்க முடியாமல் வெல்டிங் மிஷின் வைத்தபோது வெல்டிங் வைத்தவனுடைய இடது கை பூட்டாக மாறியதால் தன் கையை வெல்டிங் வைத்து எடுக்கவும், கை இரண்டு துண்டாக விழுந்தவுடன் உணர்வு வந்தது.

    உடனே கொள்ளை கும்பல் பயந்து அருகில் இருந்த ஐம்பொன் நடராஜர் சிலையை எடுத்தக் கொண்டு காரில் தப்பித்து ஒருகல் தொலைவில் போகும்போது கொள்ளையர்களுக்கு கண் தெரியாமல் போய் விட்டது.

    உடனே ரோட்டுக்கு அருகிலுள்ள கண்ணாங்குடி கிராமத்துக்குச் சொந்தமான தண்ணீர் உள்ள குளத்தில் சிலையை போட்டு விட்டனர்.

    அதன் பிறகே கொள்ளையர்களுக்கு கண் தெரிந்தது. உடனே தப்பி விட்டார்கள்.

    நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்ட விபரம் மக்களுக்கு காட்டுத்தீ போல் பரவியது.

    மக்கள் சிலையைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

    கண்ணாங்குடியைச் சேர்ந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுவனால் கண்ணுக்குத் தென்பட்டது சிலை.

    குளத்தின் தண்ணீருக்கு மேல் ஆகாயத்தில் நின்றது சிலை.

    இந்த சிலையை கண்ட மக்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்கள்.

    பின்பு சிலை ராமநாதபுரம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    • நடராஜர் சன்னதி வழிபாடு முடிந்தபிறகு முன் மண்டபம் செல்லலாம்.
    • 3 ஆயிரம் ஆண்டு பழமையான தலமரம் இருப்பதை அங்கு காணலாம்.

    நாள்தோறும் உச்சிக்காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம், தரிசனங்களை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    நடராஜர் சன்னதி வழிபாடு முடிந்தபிறகு முன் மண்டபம் செல்லலாம்.

    அங்குள்ள சிறிய மேடையில் தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர்.

    அதைத் தரிசிக்கும்போதே வலப்பக்கச் சாளரத்தின் வழியே கைக்கூப்பிய நிலையில் உள்ள மாணிக்க வாசகரையும் இடப்பக்கம் சாளரம் வழியாக திரும்பி உமா மகேஸ்வரையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.

    உமாமகேஷ்வரர் சன்னதிக்கு படிகளேறிச் சென்று தரிசித்து விட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கி பிராகர வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளதைபார்க்கலாம்.

    குருந்த மர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம்.

    கல்லில் குருந்த மரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க எதிரிர் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாகவுள்ளது.

    இதையடுத்து மாணிக்க வாசகர் சன்னதி கண்டு வழிபடலாம். கோஷ்டமூர்த்தம் "ஏகபாத திரிமூர்த்தி" அருமையானது.

    நடராஜர் கோவிலுக்கு பக்கத்தில் தனியே சகஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோவில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன.

    3 ஆயிரம் ஆண்டு பழமையான தலமரம் இருப்பதை அங்கு காணலாம்.

    வியாசரும் காகபுஜண்டரும் இங்கு தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலவிருட்சமான இலந்தை மரம் உள்ளது.

    இந்த சகஸ்ரலிங்கக் கோவில் எழுந்ததற்கான வரலாறு, நடராசர் கோவிலில் முன் மண்டபத்தில் மேற்புறத்தில் வண்ண ஓவியமாக எழுதப்பட்டுள்ளது.

    ஆயிரம் சிவ வேதியர்களின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே சிவலிங்கமான சகஸ்ரலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு கடைசியாக மாணிக்கவாசகரை தரிசனம் செய்தல் வேண்டும்.

    அதன்பிறகு வடக்குவாசல் வழியாக செல்ல வேண்டும்.

    இப்படி முறையாக உத்தரகோச மங்கை தலத்தில் வழிபாடு செய்தால் மனிதர்களுக்கு பிடிக்கப்பட்ட தோஷங்கள்,பாவங்கள், கிரகங்கள், மனச்சஞ்சலங்கள், பிணிகள் அனைத்தையும் பனித்துளி போல ஈசன், ஈஸ்வரி நீக்கிவிடுவார்கள் என்பது ஐதீகம் ஆகும்.

    • பிரகார அழகு ராமேஸ்வரத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தை நினைவூட்டுகிறது.
    • சுற்றிலும் அகழி அமைப்பு உள்ளது. சன்னதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்தலத்தில் உள்ள எல்லா பிரகாரங்களும் அழகுமிக கற்தூண்களுடன் அமைந்துள்ளன.

    பிரகார அழகு ராமேஸ்வரத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தை நினைவூட்டுகிறது.

    தூண்களில் பிட்சாடனார், ஊர்த்தவர் சிற்பங்கள் உள்ளன.

    உலா வருவதற்குரிய நடராஜத்திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.

    வெளிச்சுற்றில் வல்லப விநாயகரைத் தரிசிக்கலாம்.

    ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோவிலை அடுத்து காணலாம்.

    நடராஜப் பெருமானுக்குத் தனிக்கோவில், கோவிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது.

    பலிபீடம், கொடிமரம், நந்தியை தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சி அளிக்கின்றனர்.

    சுற்றிலும் அகழி அமைப்பு உள்ளது. எனவே சன்னதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் தற்போது படியில் ஏறி இறங்காமல் செல்ல வழிசெய்துள்ளனர்.

    கருவறை தெற்கு நோக்கிய சன்னதியாக உள்ளது.

    இங்கு அக்கினி மத்தியில் நடராஜப் பெருமான் ஆடுவதாக சொல்லப்படுகிறது. அம்பிகைக்கான அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையம்பலத்தில் ஆடினார்.

    இங்குள்ள கூத்தப்பிரான் நடராஜர் அதி அற்புதமானவர்.

    ஐந்தரை அடி உயரம் முழுவதும் மரகதத்திருமேனி, விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இப்பெருமான் வெளியே உலா வருவதில்லை.

    பெருமான் திருமேனியை உள்வைத்தே சன்னதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியே வெளியே கொண்டுவர இயலாது.

    மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

    இதைச் செய்பவர்கள் திருப்பத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர்.

    அன்று ஒருநாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அற்புதமாக நடைபெறும்.

    வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.

    அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும்.

    அக்காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை பெருமான் ஆண்டு முழுவதும் காட்சித் தருவார்.

    மார்கழித் திருவாதிரை நாளில், வாய்ப்பும் திருவருள் பெற்றவர்களும் அவசியம் சென்று ஆடல் வல்லானைத் தரிசித்து ஆனந்தம் பெறவேண்டும்.

    • உத்தரகோசமங்கை ஆலய அமைப்பு மிக சிறப்பானதாகும்.
    • இடது பக்கம் அம்பிகை சன்னதிக்கு எதிரில் சிவசக்தி என்ற பெயரில் ஐந்து நிலைகளோடு ஒரு கோபுரம் உள்ளது.

    உத்தரகோசமங்கை ஆலய அமைப்பு மிக சிறப்பானதாகும்.

    இந்த கோவில் முன் பகுதி மிகவும் விஸ்தாரமாக உள்ளது.

    வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை இங்கு நிறுத்தவும், ஓய்வு எடுக்கவும் தாராளமான இடவசதி உள்ளது.

    கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.

    இடது பக்கம் அம்பிகை சன்னதிக்கு எதிரில் சிவசக்தி என்ற பெயரில் ஐந்து நிலைகளோடு ஒரு கோபுரம் உள்ளது.

    வலது பக்கம் ஈசன் சன்னதிக்கு எதிரில் உள்ள ராஜகோபுரமும் மிகப்பழமை வாய்ந்து ஏழு நிலைகளோடு உள்ளது.

    அந்த இரு கோபுரங்களும் நம்மை ஒருங்கே வரவேற்கும் அழகு மனதுக்கு உற்சாகத்தை தரும்.

    இரு வெளிக்கோபுரங்கட்கும் உள் கோபுரங்களும் உள்ளன. வலது பக்க உள்கோபுரம் ஐந்து நிலைகள்.

    இடது பக்க உள்கோபுரம் மூன்று நிலைகள்.

    வலது பக்கம் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் தரிசனம் பெறலாம்.

    உட்புறம் வலப்பக்கம் குளம்.

    உள்கோபுரம் கண்டு தொழுது பிறகு உள்ளே செல்லலாம்.

    இடது பக்க பிரகாரத்தில் வாகனங்கள் வாயிலைத் தாண்டி திரும்பினால் தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவராத முத்திரைகளுடன் ஒரு கையை உயர்த்தி ஒரு கையை தாழ்த்தி அமர்ந்து காட்சி தருவதை காணலாம். சிவலிங்கபாணமும் நாகப் பிரதிஷ்டையும் பக்கத்தில் உள்ளன.

    விநாயகரைத் தொழுது பலிபீடம் கொடிமரம், நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி சென்றால் பெரிய மண்டபத்தை அடையலாம்.

    முதல் தூணில் குவிந்த கைகளுடன் ராமநாதபுரம் சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சி அளிக்கின்றனர்.

    இந்த கோவிலில் பல டன் எடையுள்ள பெரிய கோவில் மணி உள்ளது. இதன் ஓசை 5 மைல் தொலை வரை கேட்கும்.

    பிரகாரச்சுவரில் திருவாசகப் பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் பதிகங்கள் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டு உள்ளன.

    தொடர்வது அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகளின் தரிசனம், சப்த மாதாக்கள், முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர்.

    வலம் முடித்து துவாரபாலகர்களை தொழுது, உட்சென்றால் மூலவரின் அருமையான தரிசனம். எதிரில் நந்திதேவர், நீர்கட்டும் அமைப்பில் அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப்பார்த்தால் மங்களேசுவரர் மங்களமாகக் காட்சி அளிக்கிறார் சதுர ஆவுடையார்.

    அடுத்த தரிசனம் மங்களாம்பிகை.

    நான்கு கரங்களுடன்-அபயம் ஒரு கரம், ஒரு கரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையில் ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகின்றாள். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

    நடராஜாருக்குரிய ஆறு அபிஷேக காலங்களிலும் இச்சன்னத்தியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.


    • வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது.
    • இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

    பொதுவாக, ஒரு கோவிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு உடனேயே திரும்பி விடுகிறோம்.

    ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் இது.

    வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது.

    மார்கழி திருவாதிரை அன்று மட்டும் இதற்கு பூஜை உண்டு. மற்ற நாட்களில் சந்தனக் காப்பு சார்த்தப்பட்டிருக்கும்.

    ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும்தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பான செய்தி.

    ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா, இத்தலத்தில் வணங்கி சாப விமோசனம் பெற்றார்.

    இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

    சித்திரை மாதம் திருக்கல்யாண விழா 12 நாட்கள், மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாடக்ள் நடக்கின்றன.

    அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும்.

    சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினைபாவங்கள் நீங்கும்.

    மதியம் வணங்கினால் இப்பிறவிபாவங்கள் தீரும். மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன் தொழில் மேன்மையும், பொருள் பெருக்கமும் ஏற்படும்.

    வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    • உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோவில் பழம்பெருமை மிக்கது.
    • மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்க வடிவம் தந்து கவுரவித்தார்.

    உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோவில் பழம்பெருமை மிக்கது.

    ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

    உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள்.

    ஈசனைத் தியானித்தாள். சிவபெருமான் தான்பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து,

    "நான் மண்டோதரிக்கு காட்சிதரச் செல்கிறேன். திரும்பி வரும்வரை இதைப்பாதுகாப்பாக வைத்திருங்கள்" எனக் கூறிச் சென்றார்.

    சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார்.

    அப்போது ராவணன் அந்த குழந்தை சிவன் என்பதைப் புரிந்து கொண்டான்.

    சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி ராவணனை சோதித்தார்.

    உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.

    சிவன் முனிவர்களிடம் விட்டுச் சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது.

    முனிவர்கள் அதைக் காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர்.

    அது "அக்னி தீர்த்தம்" எனப் பெயர் பெற்றது.

    அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலைக் காப்பாற்றினார்.

    பிறகு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

    மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்க வடிவம் தந்து கவுரவித்தார்.

    இப்போதும் இத்தலத்தில் மாணிக்க வாசகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    • மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.
    • இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

    01. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300 ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    02. இத்தலத்தில் தினமும் முதல் அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்கு அன்னதானம் கொடுக்கலாம்.

    03. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.

    04. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

    05. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    06. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால் இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

    07. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

    08. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

    09. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    10. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் சிவ உற்சவம், ஐப்பதி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் ஆகும்.

    11. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

    12. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    13. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம்.

    14. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.

    15. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

    16. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.

    17. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

    18. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.

    19. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

    20. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

    21. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

    22. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

    23. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

    24. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

    25. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா.

    26. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

    27. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

    28. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.

    29. உத்தரகோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

    30. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், உன்னதமாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    ×