search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாம்"

    • நோன்புப் பெருநாள் தர்மம் என்பது ஒரு நபருக்கு ஒரு ஸா அளவு வீதம் வழங்கிடவேண்டும்.
    • ஒரு ஸா என்பது 2¼ முதல் 2½ வரை நிறுத்தல் அளவாகும்.

    இஸ்லாத்தில் பொருளாதாரக் கடமையும் உண்டு. நாம் சம்பாதித்த பொருளாதாரத்தில் நாமே முழு அதிகாரமும், சுதந்திரமும் உடையவர்கள். இதில் மாற்றுக்கருத்துக் கிடையாது. எனினும், பொருளாதாரக் குவியல் ஒரு சார்பு உடையதாக, ஒரு பக்கமாக மட்டுமே சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக இஸ்லாம் பொருளாதார பரவல் கொள்கையை முன் வைக்கிறது.

    'பல்வேறு ஊராரிடமிருந்து எதை தனது தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்விற்கும், இத்தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்கு உள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது)'. (திருக்குர்ஆன் 59:7)

    பொருளாதாரத்தை இஸ்லாம் பரவலாக்கிட முன் வைத்த யோசனைதான் 'ஸதகா' எனும் தர்ம நிதி வழங்கலும், 'ஜகாத்' எனும் கட்டாய ஏழைவரி செலுத்துதலும் ஆகும். இதுபோக பல்வேறு தர்மநிதி வழங்கல் ஆலோசனைகளை வழங்குகிறது. 'ஸதகா ஜாரியா' எனும் நிலையான தர்மம் வழங்கல் குறித்து இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது.

    காலாகாலத்திற்கும் நிலைபெற்று இருக்கக்கூடிய தர்மம் என்னவெனில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஒரு கிணற்றை, அல்லது ஒரு குடிநீர் தொட்டியை ஏற்படுத்திக் கொடுப்பது, அல்லது ஒரு கல்வி சாலையை நிறுவுவது, அல்லது உயிர்காக்கும் உயரிய மருத்துவமனையை கட்டித் தருவது போன்றவை நிலையான தர்மத்தின் வகைகளில் வருகிறது. நீண்ட கால சேவை மனப்பான்மையுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும் அனைத்துமே நிலையான தர்மம் தான்.

    'ஸதகா' எனும் 'தர்மநிதி' ஆண்டாண்டு காலம் செய்யப்படுவது. 'ஜகாத்' எனும் 'கட்டாய ஏழைவரி' ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படுவது. 'ஸதகா ஜாரியா' எனும் 'நிலையான தர்மம்' நீண்டநெடிய காலத்திற்காக செய்யப்படுவது.

    இதுபோக, 'ஜகாதுல் பித்ர்' எனும் நோன்புப் பெருநாள் அன்று வழங்கப்படும் தானிய தர்மமும் உண்டு. இது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.

    'நபி (ஸல்) அவர்கள் ஒரு 'ஸாவு' அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாவு அளவு தீட்டிய கோதுமையைக் கொடுத்தார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    'சிறியவர் - பெரியவர், சுதந்திரமானவர் - அடிமை, அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம் பழமோ அல்லது தீட்டாத கோதுமையையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாகக் (கொடுப்பதை) நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்'. (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    'நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையும், உலர்ந்த திராட்சையும், பாலாடைக்கட்டியும், பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தது'. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரி (ரலி), நூல்: புகாரி)

    'நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    'பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் இந்த தர்மத்தைக் கொடுத்து வந்தார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    இந்த தர்மத்தை இஸ்லாம் கடமையாக்கியதற்கு இரண்டு காரணங்களாகும். 1) ஒரு நோன்பாளி நோன்பு சமயத்தில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து அவரை இந்த தர்மம் தூய்மைப்படுத்துகிறது. 2) அதை வாங்கி சாப்பிடுவதினால் ஏழைகளின் பசியும் பறந்து விடுகிறது.

    பசியில்லாத உலகை கட்டமைக்கவும், பசியில்லா பெருநாளை அனைவரும் சமமாக கொண்டாடவும் இத்தகைய தர்ம சிந்தனையை இஸ்லாம் விதைக்கிறது. நோன்புப் பெருநாள் தொழுகையை இஸ்லாம் தாமதமாக வைத்ததே, பெருநாள் தர்மத்தை ஏழைகளுக்கு வழங்கிட சிறிய அவகாசத்தை எடுத்துக் கொள்வதற்காகத்தான்.

    மேலும், குர்பானி பெருநாள் தொழுகையை இஸ்லாம் சீக்கிரமாக வைத்ததே, குர்பானி இறைச்சிகளை ஏழைகளுக்கு சீக்கிரமாக வழங்கிட வேண்டிதான். இரு பெருநாள் தொழுகைகளின் நேரங்களும் ஏழைகளின் வசதிக்காகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    நோன்புப் பெருநாள் தர்மம் என்பது ஒரு நபருக்கு ஒரு ஸா அளவு வீதம் வழங்கிடவேண்டும். ஒரு ஸா என்பது 2¼ முதல் 2½ வரை நிறுத்தல் அளவாகும். ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் உண்டோ அதற்கு தகுந்தாற்போல் கணக்கிட்டு ஏழைகளுக்கு பெருநாள் தொழுகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே வழங்கிட வேண்டும்.

    'தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்'. (திருக்குர்ஆன் 87:14,15)

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    • சிலநேரங்களில் நம் வாழ்வில் சில சோதனைகள் வருவதுண்டு.
    • நோன்பு நோற்பதால் மருத்துவ ரீதியாக நற்பலன்கள் பல இருக்கின்றன.

    புனிதம் நிறைந்த ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்து திருக்குர்ஆனும், நபி மொழிகளும் விரிவாக தெரிவித்துள்ளன. பாவ மன்னிப்பு வழங்குவதுடன் மனித நேயத்தையும், இறையச்சத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ரமலான் நோன்பு அமைகின்றது.

    'நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகுவீர்கள்', என்று திருக்குர்ஆன் (2:183) நோன்பின் சிறப்பு குறித்து விளக்குகிறது.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: 'எவர் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு வைக்கிறாரோ அவரது கடந்த காலப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நூல்: புகாரி, முஸ்லிம்)

    நபிகள் நாயகத்தின் இன்னொரு அறிவிப்பில் இப்படி வந்திருக்கிறது: 'நோன்பாளிக்கு இரண்டு சந்தோஷங்கள் இருக்கின்றன. ஒன்று- நோன்பு திறக்கின்ற நேரம், மற்றொன்று- மரணத்திற்குப் பின் தன் இறைவனை சந்திக்கின்ற நேரம். (நூல்: முஸ்லிம்)

    நோன்பைக் குறித்து இன்னும் சற்று விரிவாக இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான் இப்படி:

    'ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ முடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம் உங்கள் மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும். (திருக்குர்ஆன் 2:185)

    புனித ரமலான் மாதத்தில் தான் மனித குலத்துக்கு நேர்வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பெற்றது என்றால் அந்த மாதம் எவ்வளவு மகத்துவமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்: "நோன்பும், குர்ஆனும் மறுமை நாளில் இந்த அடியானுக்காக (அவன் சரியாக பயன்படுத்தியிருந்தால்) பரிந்துரை செய்யும்". (நூல்: திர்மிதி).

    ஆக, குர்ஆனுக்கும் நோன்புக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு, இறைநெருக்கத்தை இந்த இரண்டின் மூலம் தான் நாம் பெற்றுக்கொள்ள முடியும், எனவே அவற்றிலிருந்து விலகிச்செல்லாமல் நெருக்கமாக இருக்க வேண்டும். ஒருவன் இறைநெருக்கத்தைப் பெற்று விட்டால் அதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

    நோன்பு என்பது இறைவன் தரும் இனிய சோதனையல்ல... அவன் நமக்கு அருளிய அருட்கொடைகளுக்காக நாம் செய்ய வேண்டிய நன்றிக் கடன் தான் இந்த நோன்பு. இதனால் தான் 'இதை நாம் உங்களை சிரமப்படுத்துவதற்காக கடமையாக்கவில்லை' என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான், நம்மை சிரமப் படுத்திப் பார்க்க வேண்டும் என்ற தேவையும் அவனுக்கு அறவே இல்லை. சிலநேரங்களில் நம் வாழ்வில் சில சோதனைகள் வருவதுண்டு. ஆனால் இந்த நோன்பு அப்படிப்பட்டதல்ல. அப்படி நினைக்க வும் கூடாது, அப்படி நினைப்பது நல்லடியார்களின் நற்பண்புமல்ல.

    நோன்பு நோற்பதால் மருத்துவ ரீதியாக நற்பலன்கள் பல இருக்கின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்று. இன்றைய நவீன மருத்துவ உலகம் 'பசித்திரு, பசித்த பின் புசி' என்று சொல்கிறது.

    ஒரு மாத காலம் கடைபிடிக்கப்படும் நோன்பு மனித உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் பலரும் உணவுக்கட்டுப்பாட்டை வலியுறுத்திக் கூறுகின்றனர். கட்டுப்பாடற்ற உணவும், பசிக்காமல் புசிப்பதும் தான் அனைத்து நோய்களுக்கும் அடிப்படை என்கின்றனர். இதை அவரவர் சுயமாக கடைபிடிப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. இதனால் தான் என்னவோ எல்லா மதங்களும், மாா்க்கங்களும், சமயங்களும் ஏதோ ஒரு வடிவத்தில் நோன்பை கடமையாக்கி இருக்கின்றன என்றால் அதுமிகையல்ல.

    ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளைத் தாண்டியும் பழமைமாறாத பழந்தமிழ் மறையான திருக்குறளிலும் 'நோன்பு' என்ற சொல் இடம் பெற்றிருப்பது அதிசயிக்கத்தக்கது; ஆச்சரியப்படத்தக்கது. ஆக பசித்திருத்தல் என்பது எல்லாச் சமூகங்களிலும் இடம் பெற்றிருப்பது நன்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று.

    இறையச்சத்துடன் நோன்பு நோற்றிடுவோம், இறையருளுடன் நன்மைகளை பெற்றிடுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

    • ரமலானில் நாம் அதிகமாக தொழுகையில் ஈடுபடுவோம், திருக்குர்ஆன் வசனங்களை ஓதுவோம்.
    • இறைவனை நினைவு கூர்வதிலும், நல்ல அமல்கள் செய்வதிலும் அதிகமாக ஈடுபடுவோம்.

    இஸ்லாமிய மாதங்களில் மிகவும் சிறப்புக்குரியது ரமலான் மாதம். மற்ற மாதங்களை விட இந்த மாதம் கண்ணியம் மிக்கது. அடியார்களுக்கு அருள் வழங்கக் கூடியது. பாவங்களை எரித்து சொர்க்கத்தை அளிக்கக்கூடியது. ஆயிரம் இரவுகளை விட புனிதமான லைலத்துல் கத்ர் என்ற புனிதமான இரவைக்கொண்டது.

    உலக மக்களின் நேர்வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்டதும் இந்த ரமலான் மாதத்தில் தான். பொறுமையின் மாதமான இந்த ரமலானில் நாம் செய்யும் நற்செயல்கள், வணக்க வழிபாடுகள், தான தர்மங்கள் ஆகியவற்றுக்கு இறைவனிடம் இருந்து நேரடியாக பல மடங்கு நன்மை பெறக்கூடிய மாதம் இது.

    அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: 'நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    இந்த நபி மொழியின் மூலம் ரமலான் நோன்பின் சிறப்பையும், அதற்கு இறைவன் நேரடியாக வழங்கும் நற்கூலியையும் நாம் அறியலாம். அதுவும் ஒரு நற்செயலுக்கு 700 மடங்கு நன்மை. இது குறித்து இந்த நபிமொழி கூறுவதை பாருங்கள்:

    அல்லாஹ் கூறுகின்றான்: 'ஒவ்வொரு நன்மையும் அதுபோன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ).

    அதுபோல, 'யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்பது நபிமொழியாகும். இந்த நபிமொழியை அபூஹுரைரா (ரலி), அறிவித்துள்ளதாக புகாரி நூலிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரமலான் மாதத்திலேயே நாம் செய்யும் நற்செயல்கள் மூலம் நமக்கு கிடைக்க இருப்பது `ரய்யான்' எனப்படும் சிறப்புமிக்க சொர்க்கம் ஆகும். எட்டுவகையான சொர்க்கங்களில் 'ரய்யான்' எனப்படும் இந்த சொர்க்கம் மட்டும் நோன்பாளிகளுக்கு உரியது. நோன்பாளிகள் மட்டுமே இதில் நுழைய முடியும்.

    அதுபோல இரவு நேரத்தில் நாம் தொழக்கூடிய தராவீஹ் மற்றும் கூடுதலான இரவு வணக்கங்கள் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதுபற்றி இந்த நபிமொழிகள் கூறுவதைப் பாருங்கள்:

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்: "ஒரு நாள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருகை தந்து... "முஹம்மது (ஸல்) அவர்களே! நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் ஒரு நாள் இறந்து விடுவீர்கள். நீங்கள் விரும்பியவாறு அமல் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் அமல் செய்த அளவிற்கு அல்லாஹ்விடம் கூலி கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களின் மீது நேசம் கொள்ளுங்கள்! ஏனெனில், ஒரு நாள் நிச்சயம் அவர்களை விட்டும் நீங்கள் பிரிந்து விடுவீர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களே! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்! ஓர் இறை நம்பிக்கையாளனின் சிறப்பு என்பது இரவிலே நின்று வணங்குவதின் மூலம் தான் கிடைக்கிறது. ஓர் இறை நம்பிக்கையாளனின் கண்ணியம் என்பது பிற மனிதர்களிடம் இருந்தும் தேவையற்றவனாக வாழ்ந்திடும் போது தான் வழங்கப்படுகின்றது". (நூல்: தபரானீ).

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "இரவில் நின்று வணங்குவதை நீங்கள் கடைபிடித்து வாருங்கள்! ஏனெனில், அது உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லோர்கள் பலரின் சிறந்த நடைமுறையாகும். அதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தையும், பாவங்களுக்குப் பரிகாரத்தையும், தீய செயல்கள் செய்வதிலிருந்து பாதுகாப்பையும் பெறுவீர்கள்". (நூல்: இப்னு ஃகுஸைமா).

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: "எவர் இரவில் தொழுகையில் ஈடுபட்டு பத்து ஆயத்துகள் ஓதுவாரோ, அவர் அவ்விரவில் (அல்லாஹ்வை மறந்த) மறதியாளர்களில் எழுதப்படமாட்டார். எவர் நூறு ஆயத்துகளை ஓதுவாரோ, அவர் வணக்கசாலிகளின் பட்டியலில் இடம் பெறுவார். எவர் ஆயிரம் ஆயத்துகளை ஓதுவாரோ அவர் (கின்தார் - நற்செயல்களின் நன்மைகள்) குவியலுக்குச் சமமான நன்மையைப் பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவார்". (நூல்: இப்னுஃகுஸைமா)

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "சுலைமான் (அலை) அவர்களின் தாயார் தம் மகனார் சுலைமான் (அலை) அவர்களுக்கு உபதேசம் செய்கிற போது "மகனே! இரவில் அதிக நேரம் உறங்காதே! இறைவழிபாட்டில் ஈடுபடாமல் நீ உறங்குவது நாளை மறுமையில் அனைவரின் முன்பாக உன்னை வறியவனாக ஆக்கிவிடும்".

    இதுபோல எண்ணற்ற சிறப்புகள் நிறைந்த ரமலானில் நாம் அதிகமாக தொழுகையில் ஈடுபடுவோம், திருக்குர்ஆன் வசனங்களை ஓதுவோம். இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்றதை வாரிவழங்குவோம், உறவுகளையும், நட்புகளையும் பேணிப்பாதுகாப்போம். இறைவனை நினைவு கூர்வதிலும், நல்ல அமல்கள் செய்வதிலும் அதிகமாக ஈடுபடுவோம். அல்லாஹ்வின் அருளையும், மன்னிப்பையும், நரக விடுதலையையும் பெறுவோம்.

    மவுலவி, வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

    • புனித ரமலானில் ஏழை நோன்பாளிகளுக்கு ஸஹர் உணவு, இப்தார் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
    • ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.

    'தர்மத்தில் சிறந்தது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

    புனித ரமலான் மாதம், மாதங்களில் சிறந்ததாக அமைந்ததைப் போன்று அதில் நிறைவேற்றப்படும் அனைத்து நற்காரியங்களும் சிறந்ததாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக, அதில் வழங்கப்படும் தர்மமும் மற்ற மாதங்களில் வழங்கப்படும் தர்மத்தை விட சிறந்ததாக அமைந்து விடுகிறது.

    இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் தமது கொடைத்தன்மையை விரிவுபடுத்தியதுடன் அதிகப்படுத்தியும் செய்துள்ளார்கள்.

    "நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப்பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமலான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மிகஅதிகமாக வாரி வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றைவிட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்". (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்களின் சொல்படியும், அவர்களின் செயல்படியும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தானதர்மம் செய்தது நமது கவனத்தை ஈர்க்கிறது.

    ஒரு தடவை முஆவியா (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு 1180 வெள்ளிக்காசுகளை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். அன்று அன்னையார் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு நோற்ற நிலையில் தமக்கு அன்பளிப்பாகக் கிடைத்த அனைத்து வெள்ளிக்காசுகளையும் மக்களிடையே பங்கு வைத்து வாரி வழங்கிவிட்டார்கள். நோன்பு திறக்கும் இப்தார் நேரம் வந்ததும் தமது பணிப்பெண்ணிடம் நோன்பு திறக்க இப்தார் உணவை கொண்டு வரும்படி வேண்டினார்கள்.

    பணிப்பெண் ரொட்டியையும், ஆலிவ் எண்ணையையும் கொண்டு வந்து, 'தாங்கள் இன்று பங்கீடு செய்த வெள்ளிக்காசுகளிலிருந்து நோன்பு திறக்க இப்தார் உணவுக்காக இறைச்சி வாங்கி வரக்கூட ஒரு காசையும் மிச்சம் வைக்காமல் ஏன் அனைத்தையும் வாரி வழங்கினீர்கள்?' என்று இவ்வாறு கேட்டாள்.

    அதற்கு அன்னை ஆயிஷா (ரலி), 'இந்த விஷயத்தை முன்னே நீ எனக்கு ஞாபகப்படுத்தியிருந்தால், நான் அவ்வாறு செய்திருப்பேனே' என்று கூறினார்கள். 'தனக்குப் போக தானம்' என்பதையும் தாண்டி, தனக்கே ஒன்று கூட வைக்காமல் பிறருக்கே அனைத்தையும் வாரி வழங்கிய கொடை வள்ளல் தான் அன்னை ஆயிஷா (ரலி) ஆவார்.

    நபி (ஸல்) அவர்களைப் போன்று நபித்தோழர்களும் ரமலானில் அதிகமாக கொடையளித்து வந்துள்ளனர்.

    இப்னு உமர் (ரலி) அவர்கள், ரமலான் வந்துவிட்டால் ஏழைகள் இல்லாமல் நோன்பு திறக்க மாட்டார்கள். அவர்கள் நோன்பு நோற்க நாடி உணவு உண்ண ஆரம்பிக்கும் போது யாசகர் யாராவது வந்து உணவு கேட்டால், அவர் தம் உணவின் பங்கை வழங்கிடுவார். வந்து பார்த்தால் மீதி உணவை அவரின் குடும்பத்தினர் உண்டு முடித்து விடுவார்கள். இவ்வாறே அவர் ஸஹர் உணவை சாப்பிடாமல் நோன்பு நோற்பார். இந்த நல்லசெயல் அவரிடம் தொடர்ந்து நடக்கும்.

    'எவர் ஒருவர் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு வழங்குகிறாரோ அவருக்கு நோன்பாளிக்கு வழங்கப்படும் நன்மை போன்று கிடைக்கும். இதனால் நோன்பாளியின் நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் காலித் ஜூஹ்னீ (ரலி), நூல்: திர்மிதி)

    இந்த சமுதாயத்தில் வாழ்ந்து சென்ற முன்னோர்களில் நல்லவர்கள் அன்னதானம் வழங்குவதின் மீதும், நோன்பாளிகள் நோன்பு திறக்க இப்தார் உணவு வழங்குவதின் மீதும் பேராசை கொண்டிருந்தனர். மற்ற வணக்க வழிபாடுகளை விட இந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிலை வழங்கி வந்தனர். இப்னு உமர் (ரலி), இமாம் அஹமத் (ரஹ்), இமாம் தாவூத் தாயீ (ரஹ்), மாலிக் பின் தீனார் (ரஹ்) ஆகியோர் தாங்கள் நோன்பு நோற்ற நிலையில் இப்தார் உணவை பிறருக்கு வழங்குவதில் தங்களைவிட பிறரை முற்படுத்தினர்.

    ஹஸன் பஸரீ (ரஹ்), அப்துல்லாஹ்பின் முபாரக் (ரஹ்) ஆகியோர் தாங்கள் நோன்பு நோற்ற நிலையில் தமது சகோதரர்களுக்கு உணவு வழங்கி அவர்களை அமரவைத்து, அவர்களுக்கு பணிவிடை செய்து, அவர்களின் உள்ளங்களை ஆறுதல்படுத்துவார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். நாமும் புனித ரமலானில் ஏழை நோன்பாளிகளுக்கு ஸஹர் உணவு, இப்தார் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேலும், புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    • பொய் என்பதே பாவங்களின் அடிப்படையாக உருவெடுத்து விடுகிறது.
    • பொய் பேசுவதினால் உள்ளம் கலக்கம் அடைய ஆரம்பித்து விடுகிறது.

    பொய் பேசுவது என்பது தீமைகளின் அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. பொய் என்பதே பாவங்களின் அடிப்படையாக உருவெடுத்து விடுகிறது.

    பொய் பேசுவதின் விளைவாக அதை பேசுபவரின் உள்ளம் இருளடைந்து விடுகிறது. அவரின் உள்ளம் கடினமாகவும் மாறிவிடுகிறது. அவரின் நெஞ்சம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. பொய் பேசுவதினால் உள்ளம் கலக்கம் அடைய ஆரம்பித்து விடுகிறது.

    உள்ளத்தில் தோன்றிய பொய், நாவின் வழியே வெளியாகி, நாவை பாழாக்கி விடுவதுடன் நாவில் இருந்து உடலின் பிற உறுப்புகளுடன் பயணித்து ஒட்டுமொத்த உறுப்புகளையும், அதன் வழியே வெளிப்படும் செயல்பாடுகளையும் பாழாக்கி, அவன் சொற்களையும், செயல்களையும், நிலைகளையும், பழக்க வழக்கங்களையும் பாவமயமாக மாற்றி விடுகிறது.

    ஒரு மனிதனிடத்தில் இருக்கும் மோசமான ஆயுதம் என்னவெனில், தமது இரு தாடைகளுக்கு மத்தியில் அவன் மறைத்து வைத்திருக்கும் பொய் பேசும் நாவு தான்.

    பொய் என்பது ஒரு கொடிய வியாதி. அது இல்லாததை உருவாக்கும்; இருப்பதை இல்லாமல் ஆக்கும். அது சத்தியத்தை அசத்தியமாக காட்டும்; அசத்தியத்தை சத்தியமாக நிலைநாட்டும். நன்மையை தீமையாக மாற்றும்; தீமையை நன்மையாக மாற்றும்.

    ஒட்டு மொத்தத்தில் அது கொடிய நரகத்தின் வழிகாட்டி. நரகத்தை கண் முன் காட்டும் நாள்காட்டி. நரகத்தில் தள்ளும் ஆள்காட்டி.

    'பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிகாட்டும்; தீமை நரகத்திற்கு வழிகாட்டும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

    'நான்கு விஷயங்கள் கோபத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தும். அவை: தற்பெருமை, பொறாமை, கோள் சொல்லுதல், பொய் ஆகும்'.

    ஒரு பொய்யன் தனது வாழ்நாளிலேயே கேவலத்தை எதிர்கொள்வான். அல்லது மரணத்திற்கு பிறகு கேவலத்தை சந்திப்பான். இப்படிப்பட்ட கேவலமே அவன் பொய்யன் என்பதற்கு சாட்சியாகும்.

    பொய் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது.

    'நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்யுரைப்பான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி ஒப்படைத்தால் மோசடி செய்வான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    பொய் சாட்சியம் கூறுவது, பொய் பேசுவது சாதாரண பாவம் இல்லை. அது பெரும்பாவமாக பார்க்கப்படுகிறது.

    'பெரும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என நபி (ஸல்) கேட்டுவிட்டு, 'அதுதான் 'பொய் பேசுவது' அல்லது 'பொய் சாட்சியம் கூறுவது' என்றார்கள்'. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

    'யார் பொய் சத்தியம் செய்து ஒரு இறைநம்பிக்கையாளரின் உரிமையை அபகரித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்கு தடை செய்து விட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரலி), நூல்: முஸ்லிம்)

    'மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேச மாட்டான். 1) செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன், 2) பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவன், 3) தமது கீழங்கியை (கணுக்காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவன் என நபி (ஸல்) கூறினார்கள்'.

    'ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டு யார் பொய் சத்தியம் செய்கிறாரோ அவர் (மறுமையில்) தம் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பார் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்).

    பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சாட்சி கூறுவது, பொய் கூறி வியாபாரம் செய்வது போன்றவை பெரும் பாவங்களாகும். மேலும், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும். பொய் பேசவே கூடாது. அதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

    ஒருவேளை பொய் பேசுவதாக இருந்தால் பின்வரும் மூன்று காரணங்களுக்கு மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கிறது. அதாவது: 'மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர. 1) போர் தந்திரத்திற்காக சொல்லப்படும் பொய், 2) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்து வதற்காகச் சொல்லப்படும் பொய், 3) குடும்ப ஒற்றுமைக்காக கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: உம்மு குல்சும் (ரலி), நூல்: முஸ்லிம்)'

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    • இனிய தருணங்களில் இரு தரப்பினரின் பிரார்த்தனைகளும் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.
    • மருந்துகளுக்குள்ள ஆற்றலை விட மந்திரச் சொற்களுக்குரிய ஆற்றல் அபாரமானவை; அதீத சக்தி கொண்டவை.

    முஸ்லிம் ஒருவர் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யவேண்டிய ஆறு முக்கியமான கடமைகளில் 'நோயாளிகளை சந்திப்பது' என்பதும் ஒன்று.

    "நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் நோயாளிகளை சந்தித்தால் அவரது உயிர் விஷயத்தில் ஆறுதலான சொற்களை சொல்லுங்கள், அதனால் அவரது மனம் ஆறுதல் பெறும்". (நூல்: இப்னு மாஜா)

    "நீங்கள் நோயாளிகளை சந்திக்கச் சென்றால் அமர்வதை குறைத்துக்கொள்வதும், வீண் பேச்சை சுருக்கிக்கொள்வதும் நபிவழி ஆகும்" என இப்னு அப்பாஸ் ரலி கூறியுள்ளார்கள்.

    "விரைவாக எழுவதுதான் உடல் நல விசாரிப்பில் சிறந்தது" என நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்: பைஹகி)

    அதாவது நீண்ட நேரம் பேசாமல் விரைவாக எழுந்து வந்து விடவேண்டும் என்பதைத் தான் நபிகள் நாயகம் தனது நடைமுறையாக கடைபிடித்து வந்திருக்கிறார்கள் என்று இதன் மூலம் நாம் அறியமுடிகிறது.

    "நபிகள் நாயகம் கூறினார்கள்: நாளை மறுமையில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் கேட்பானாம்... ஆதமின் மகனே, நான் உடல் நலமில்லாமல் இருந்தேனே... ஏன் நீ என்னை சந்திக்க வரவில்லை...?". "இறைவா... நீயே இந்த அகில உலகின் அதிபதியாக இருக்கிறாய்... உன்னை நான் எப்படி உடல் நலம் விசாரிக்க வர முடியும்?" என்று கேட்க, அப்போது அல்லாஹ் சொல்வானாம்: "இன்ன அடியான் உடல் நலமில்லாமல் இருந்தானே... அன்று அவனை நீ சந்தித்திருந்தால் அங்கு என்னை நீ சந்தித்திருப்பாய்..." என்று. (நூல்: முஸ்லிம்)

    ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல ஒரு நோயாளியின் உடல்நல விசாரிப்பிலும் கூட இறைவனைக் காணமுடியும் என்று இந்த நபிமொழி மூலம் நாம் அறிய முடிகிறது. இப்படி இறைவனை நாம் காண்பதற்கு காரணமாக இருப்பதால் தான் 'காய்ச்சலை திட்டாதீர்கள்' என்று நபிகள் நாயகம் சொன்னார்களோ என்னவோ...?.

    ஏனெனில், காய்ச்சல் என்பது நமது உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை முதலில் முன்னறிவிப்பு செய்யும் செயல்களில் ஒன்று தான் அது. எனவே அதை திட்டுவது என்பது ஒரு அறிவாளியின் அழகிய செயலல்ல, என்பதைத் தான் நபிகள் நாயகம் நமக்கு நன்கு உணர்த்திக் காட்டுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் தான் நோயாளி என்பதல்ல... சாதாரண கண் வலி ஏற்பட்டவரும் கூட நோயாளி தான்.

    "எனக்கு கண் வலி ஏற்பட்டிருந்தது, என்னை நலம் விசாரிப்பதற்காக நபிகள் நாயகம் வந்தார்கள்" என்று ஜய்து இப்னு அர்கம் என்ற நபித்தோழர் கூறியுள்ளார்கள்.

    ஆக நோய் என்பதில் கூடுதல் குறைவு இருந்தாலும் அதற்கான விசாரிப்பில் நாம் வேறுபாடு காட்டக்கூடாது என்பதைத் தான் நபிகள் நாயகம் நமக்கு காட்டித் தருகிறார்கள்.

    "சகோதரர் ஒருவர் மற்றொரு சகோதரரை நலம் விசாரிக்கச் சென்றால் அவர் திரும்பி வரும் வரை சுவனப்பூஞ்சோலையில் இருக்கிறார்" என்று நபிகள் நாயகம் கூறினார்கள் (நூல்: முஸ்லிம்)

    ஆனால் இன்றைக்கு நாம் நமது சுகநல விசாரிப்புகளை எப்படியெல்லாம் மாற்றி வைத்திருக்கிறோம் என்பது ஒருகணம் சிந்திக்கத்தக்கது. நமக்கு வேண்டியவர்கள், பணம் படைத்தவர்கள், தேவைப்படுபவர்கள், போகாவிட்டால் தவறாக எடுத்துக் கொள்பவர்கள் என நமக்குள் ஒரு பெரும்பட்டியலே போட்டு வைத்திருக்கிறோம்.

    ஆனால் நபிகள் நாயகம் எந்த ஒரு நோயாளியையும் பட்டியல் போட்டு பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை.

    தனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல் நலமற்றிருந்த போது நபிகள் நாயகம் அவனது வீட்டுக்குப் போய் நலம் விசாரித்தார்கள் என்பது மறக்க முடியாத வரலாறு. (நூல்: புகாரி)

    எனவே நோயாளிகளை உடல் நலம் விசாரிக்கும் முறையில் நாம் பாகுபாடு பார்க்கக்கூடாது. நபிகள் நாயகமும் தம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பின்வரும் நிகழ்வுகளின் மூலம் அறியலாம்.

    "அன்னை ஆயிஷா அறிவிக்கிறார்கள்: 'உடல் வலிக்கிறது' என்று சொல்லிக்கொண்டு யாராவது நபியிடம் வந்தால் அவரை தமது வலது கரத்தால் தடவிக்கொடுத்து இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள்: "மக்களின் இறைவனே, இவரது சிரமத்தை நீக்கு. நீ தான் குணமளிப்பவன், இவருக்கு குணமளி. நீ அளிக்கும் குணம் தான் நோய் நொடியில்லாத சிறப்பான குணமாகும்". (நூல்: புகாரி, முஸ்லிம்)

    அவ்வாறே அந்த நோயாளிகள் அந்த கடினமான நேரத்தில் நமக்காகச் செய்யும் பிரார்த்தனையும் உடனடியாக ஏற்கத்தக்கதாகும்.

    "நபிகள் நாயகம் கூறினார்கள்: நீ நோயாளியை சந்தித்தால் உனக்காக அவரிடம் துஆ செய்யச் சொல், ஏனெனில் அவரது பிரார்த்தனை வானவர்களின் பிரார்த்தனையைப் போன்றதாகும்". (நூல்: இப்னு மாஜா)

    ஆக, நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்லும் போது அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வதைப் போல் நாமும் அவர்களிடமிருந்து அவர்களின் துஆவை பெற்றுக் கொள்ளவும் வேண்டும். ஏனெனில், கடினமான காலங்களில் அவர்கள் அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருக்கிறார்கள்,

    இப்படிப்பட்ட இனிய தருணங்களில் இரு தரப்பினரின் பிரார்த்தனைகளும் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. மருந்துகளுக்குள்ள ஆற்றலை விட மந்திரச் சொற்களுக்குரிய ஆற்றல் அபாரமானவை; அதீத சக்தி கொண்டவை.

    வாருங்கள்... நோயாளிகளிடம் பாரபட்சம் இன்றி உடல் நலம் விசாரிப்போம்...! சமூகத்துக்கு பலம் சேர்ப்போம்...!!

    மவுலவி எஸ். என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

    • இன்று நேர்ச்சை வினியோகம் செய்யப்பட உள்ளது.
    • பல மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த புகாரி ஷெரிபு சபையின் 96-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று காலை 11 மணி அளவில் சபை வளாகத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையை தூத்துக்குடி முத்து கதீஜா மஸ்ஜித் பள்ளிவாசல் கத்திபு எஸ்.எம்.ரஹ்மத்துல்லா ஆலிம் நிகழ்த்தினார்.

    உலக அமைதிக்காகவும், நல்ல மழை வேண்டியும் இந்த பிரார்த்தனை நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தொடர்ந்து மாலையில் சன்மார்க்க சபையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (வியாழக்கிழமை) காலை நேர்ச்சை வினியோகம் செய்யப்பட உள்ளது. அபூர்வ துஆ பிரார்த்தனையில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி, காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் தலைவர் செய்யது அப்துர் ரகுமான், செயலாளர் வாவு முஹ்தஸிம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் இளவரசு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் வாவு சம்சுதீன், முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் மீரா சாஹிப், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு நிர்வாகி என்.ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புகாரி ஷரிபு சபை தலைவர் அகமது அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள், வைபவ கமிட்டி நிர்வாகிகள் செய்யது முகமது சாஹிப், ஜகுபர் சாதிக், முகமது தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    • நிம்மதியான வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகிறோம்.
    • நிம்மதியைத்தேடி நாம் எங்கும் அலையவேண்டியதில்லை.

    மனித வாழ்க்கை விசித்திரமானது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது படைத்த ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்குள் அந்த மனிதன் போடும் திட்டங்களும், ஆடம்பர வாழ்க்கையும், ஆணவச்செயல்களும் கணக்கில் அடங்காதவை.

    இந்த நிமிடம் இருக்கும் மகிழ்ச்சி அடுத்த விநாடியே மாறிப்போகும் நிலையை நம்மில் பலர் அனுபவித்து இருக்கலாம். இந்த நொடியில் காணப்படும் துன்பம், வலி. வேதனைகள் இறைவனின் அருளால் அடுத்த விநாடியே மாறி சுகம் கிடைத்ததையும் பலர் அறிந்திருக்கலாம்.

    இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே நம் வாழ்வும், வளமும், நலமும் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை. அந்த நிம்மதியான வாழ்வு கிடைக்க நாம் நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது. கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை முறையும் நமக்கு படிப்பினைகளை கற்றுத்தருகிறது.

    நிம்மதியான வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அதற்கு தடையாக நமது பேராசைகள், ஆணவம், உறவுகளையும், நண்பர்களையும் ஒதுக்கி வைத்து வாழ்வது போன்ற தீய குணங்கள் உள்ளன.

    'கடப்பாரையை சாப்பிட்டு விட்டு சுக்கு கஷாயம் சாப்பிட்டால் எப்படி ஜீரணமாகும்?' என்று கிராமத்தில் பழமொழி உண்டு. அதுபோல மலையளவு பாவங்களையும், பாவச்செயல்களையும் செய்துவிட்டு, இறைவன் காட்டிய வழியில் வாழாமல் மனம்போன போக்கில் வாழ்ந்து விட்டு மன நிம்மதியைத்தேடினால் அது எப்படி கிடைக்கும்?.

    பணம், அழகிய வீடு, அழகான மனைவி-மக்கள், உயர்ந்த பதவி போன்றவை இருந்தால் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்பது பலரது எண்ணம். ஆனால் இதுவெல்லாம் இருந்தால் மட்டும் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. இவை இருந்தால் இறைவனின் அருளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் மிகப்பெரிய தவறு.

    நமது தேடல்களும், எண்ணங்களும், ஆசைகளும் தான் நமது வாழ்வின் மகிழ்ச்சியை நிர்ணயம் செய்கின்றது. நிம்மதியைத்தேடி நாம் எங்கும் அலையவேண்டியதில்லை. அது நம்மிடம், நம் வாழ்க்கை முறையிலேயே உள்ளது. இறைவனின் நெருக்கம் தான் நமது வாழ்வை முழுமையாக்குகின்றது.

    இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    "உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் உங்களை நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாக்கி வைக்கக்கூடியவை அல்ல; ஆயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களைத் தவிர. அத்தகையவர்களுக்கே, அவர்கள் செய்த செயல்களின் கூலி இரு மடங்கு இருக்கிறது. மேலும், அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியோடு இருப்பார்கள்". (திருக்குர்ஆன் 34:37).

    உயர்ந்த மாளிகைகளில் வாழும் வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கையல்ல. நாம் செய்யும் இறைவணக்கம், நற்செயல்கள் போன்றவற்றின் மூலம் இறைவனின் நெருக்கத்தையும், அன்பையும் பெறும் போது கிடைக்கும் நிம்மதி தான் மிகவும் சிறந்தது என்பதை இந்த வசனம் வலியுறுத்துகிறது.

    யார் அல்லாஹ்வின் மீதும், அவன் அருளிய திருக்குர்ஆன் வசனங்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தார்களோ அவர்கள் வாழ்வு நிம்மதி நிறைந்ததாக இருக்கும். இதையே கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனம் இவ்வாறு விளக்குகிறது:

    "இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் 'ஸகீனத்' (நிம்மதியை) அல்லாஹ் தான் இறக்கியருளினான்; அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் யாவும் அல்லாஹ்வின் வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிகவும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்". (திருக்குர்ஆன் 48:4).

    அன்பு சகோதரர்களே, இந்த திருக்குர்ஆன் வசனம் கூறும் பொருளை நாம் அனைவரும் மிகவும் கவனமுடன் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்தால், அவன் அருளால் நமக்கு நிம்மதியைத் தருவான். இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் மிகச்சிறந்த சொர்க்க வாழ்வைத்தருவான். இதுபற்றி தனது திருமறையிலே அல்லாஹ் நமக்கு இவ்வாறு உறுதி அளிக்கின்றான்:

    "அல்லாஹ், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். அவர்களின் பாவச்சுமையையும், அவர்களிலிருந்தும் நீக்கி விடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கின்றது". (திருக்குர்ஆன் 48:5).

    அல்லாஹ்விடத்தில் நாம் மகத்தான வெற்றியைப்பெற வேண்டுமா?. இந்த கணம் முதல் இறைவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறையச்சத்துடன் வாழ்ந்து இறைவன் காட்டிய வழியில் நமது வணக்க வழிபாடுகளை, வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொண்டு நிம்மதி பெறுவோம், பாவங்களை களைந்து சுவனத்தை நோக்கி நடைபோடுவோம்.

    பேராசிரியர் அ. முகம்மது அப்துல்காதர், சென்னை.

    • சுஹைல் தனது 60 -ம் வயதில் நபிகளாரின் கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
    • சுஹைல் (ரலி) நபிகளாரின் மீது பேரன்பு கொண்டவராகவே விளங்கினார்.

    ஏக இறைவன் அல்லாஹ்வின் இறைத்தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் வசித்த காலம் அது. அப்போது வாழ்ந்த மக்கள் தவறான வழிகளில் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரையும் ஓரிறைக்கொள்கையின் பக்கம் சேர்க்க நபிகளார் பிரசாரம் செய்துகொண்டு இருந்தார்.

    அப்போது, சுஹையில் இப்னு அம்ர் மக்காவின் குரைசியர் இன மக்களிடம் செல்வாக்கு மிக்கவராகவும், நாவன்மைமிக்க பேச்சாளராகவும் விளங்கினார். அபூயசீத் என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.

    இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு இவர் நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையினை மிகக் கடுமையாக எதிர்த்து நின்றவர். பத்ர் போரில் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக போரிட்டவர். பின்னர் அந்தப்போரில் இவர் போர்க்கைதியாகவும் பிடிக்கப்பட்டார்.

    கைதியாக இருந்த சுஹைலைக் கண்ட நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் "இஸ்லாத்திற்கு எதிராக துஷ்பிரச்சாரம் செய்த சுஹைலின் முன்பற்களை உடைத்து விடவேண்டும்" என நபிகளாரிடம் அனுமதி கேட்டார்கள்.

    ஆனால் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்ட நபிகளார், "உமரே! சுஹைலை விட்டு விடும். நான் எவரையும் சித்திரவதை செய்ய அனுமதிக்க மாட்டேன். ஒருகாலம் வரும் அப்போது சுஹைல் உங்கள் எல்லோரின் உள்ளங்களும் குளிரும்படியாக நடந்து கொள்வார்" என்று ஒரு முன்னறிவிப்புச் செய்தார்கள்.

    புத்திக் கூர்மையும், சாதுரியமான சொல்லாற்றலும் வாய்ந்த சுஹைல் இஸ்லாத்தை ஏற்றிட வேண்டும் என்று நபிகளார் விரும்பினார்கள் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

    ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது குரைசிகளின் சார்பாக நபிகளாரிடம் பேச்சுவார்த்தை நடத்திட புதைல், உர்வா பின் மஸ்வூத் என சிலர் வந்தனர். ஆனால் அவர்களால் உடன்படிக்கையை நிறைவு செய்ய முடியவில்லை. அதனைத்தொடர்ந்து சுஹைல் பேச்சுவார்த்தைக்கு குரைசிகளால் அனுப்பி வைக்கப்பட்டார். தனது சாதுரியமான பேச்சுவார்த்தையினால் நபிகளாருடனான உடன்படிக்கையை நிறைவு செய்தார்.

    அந்த உடன்படிக்கை குரைசிகளுக்கு சாதகமாகவும், முஸ்லிம்களுக்கு பாதகமாகவுமே அமைந்திருந்தது. இருந்தபோதிலும், சமூக நல்லிணக்கத்திற்காக நபிகளார் பெரிதும் விட்டுக்கொடுத்தே அந்த உடன்படிக்கையை ஏற்று அதன்படி நடந்து கொண்டார்கள்.

    குரைசிகள் சார்பாக அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டவரும் இந்த சுஹைல் இப்னு அம்ர் தான். விட்டுக்கொடுத்து நபிகளார் செய்த இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையே, பிற்காலத்தில் இறையருளால் இஸ்லாத்தின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக அமைந்தது.

    மக்காவின் வெற்றிக்குப் பின்னர் ஏகத்துவத்திற்கு எதிராக மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட குரைசிகளிடம் நபிகளார், "குரைசிகளே, நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று வினவியபோது, அதற்கு பதில் தந்தவரும் இந்த சுஹைல் தான்.

    "எங்களை நீங்கள் நல்லவிதமாக நடத்த வேண்டும். ஏனென்றால் நீங்கள் கண்ணியமான எங்களது சகோதரரின் மகன்" என்று நபிகளாரின் உள்ளத்தை தொடும்படியாக பேசினார். சகிக்க முடியாத கொடுமைகள் புரிந்த அந்த நிராகரிப்பாளர்களை தண்டிக்கும் வாய்ப்பு இருந்தும் கருணைக்கடலான நபிகளார் அவர்களை மன்னித்தார். அப்போது, "யூசுப் நபி தன் சகோதரர்களை மன்னித்ததை போன்று நானும் இன்று உங்களை மன்னித்து விட்டேன்" என்றார்கள்.

    இது உலகச் சரித்திரத்தில் மன்னிப்பின் மாண்பினை மனித குலத்திற்கு பறைசாற்றிடும் நபிகளாரின் வைர வரி வார்த்தைகளாகும். மேலும், இந்த வாசகம் "மன்னிப்பைக் கொண்டே இந்த உலகம் அமைதி அடையமுடியும்" என்பதை நமக்கு நினைவுபடுத்தித் தருவதாகவும் அமைந்துள்ளது.

    மக்காவின் வெற்றிக்கு பின் ஏற்கனவே இஸ்லாத்தை தழுவியிருந்த தனது மகன்களான அப்துல்லாஹ் மற்றும் அபூஜந்தல் ஆகியோரின் உதவியுடன் நபிகளாரை அணுகி சுஹைல் தனது 60 -ம் வயதில் நபிகளாரின் கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

    குறுகிய காலமே நபிகளாருடன் இணைந்து செயல்பட்டாலும் சுஹைல் (ரலி) நபிகளாரின் மீது பேரன்பு கொண்டவராகவே விளங்கினார்.

    நபிகளாரின் மறைவுக்குப் பின் மக்காவில் பலர் இஸ்லாத்தில் இருந்து வெளியேற முயன்ற போது அதனைத் தடுத்து நிறுத்தி, சுஹைல் (ரலி) அவர்கள் ஆற்றிய உரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மதம் மாற எண்ணம் கொண்டிருந்த மக்களிடையே அவர் இவ்வாறு பேசினார்:

    "இஸ்லாம் மார்க்கம் நபியின் மறைவுடன் ஓய்ந்து நின்று போய் விடவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அம்மார்க்கம் சந்திரனும் சூரியனும் தோன்றி, போகும் இடமெல்லாம் நீடித்து சென்றடையும் சத்திய மார்க்கமாகும்".

    இவ்வாறு அவர் உறுதியாகப்பேசி அந்த மக்களின் இதயங்களில் இஸ்லாத்தின் மீது ஈர்ப்பையும், உறுதியையும் ஏற்படுத்தினார்.

    இது, நபிகளார் உமர் ரலியிடம் சுஹைல் (ரலி) பற்றி முன்னதாகச்சொன்ன முன்னறிவிப்பினை உண்மைப்படுத்துவதாக அமைந்தது.

    சொல்லாற்றல் வாய்ந்த நபித்தோழர் சுஹைல் இப்னுஅம்ர் (ரலி), இறுதிவரை தன்னை இறைவழியில் அர்ப்பணிப்புடன் தியாகம் செய்து மறைந்தார்.

    மு.முகம்மது சலாகுதீன், நெல்லை ஏர்வாடி.

    • நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.
    • இறைவனை நம்பி இருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இருப்பதோ மிக மேலானதும் நிலையானதுமாகும்.

    அரூப உலகில் இறைவனிடமிருந்து தொடங்கிய மனிதன் மீண்டும் தன்னைப் படைத்த இறைவனை நோக்கிப் பயணிப்பதே உலக வாழ்வாகும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நம்முடைய திரும்புதலும் (மீட்சியும்) அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது". (திருக்குர்ஆன் 2:156)

    கருவில் அமைவதற்கு முன் மனிதன் இன்னப்பொருள் என்று கூற முடியாத ஒரு அம்சமாகவே இருந்தான். வானுலகில் இறைவனிடம் அடைக்கலப் பொருளாக இருந்த மனிதன் இறையருளால் அரூப உலகில் நின்றும் சொரூப உலகிற்கு வருவதற்காக இறை நாட்டப்படி பல்வேறு நிலைகளை கடந்து இறுதியில் தாயின் கருவறையில் வந்து குடிபுகுந்தான். கருவறையில் அவனுக்கு வேண்டியதை வேண்டியபடி இறைவன் கொடுத்து வந்தான். இறைவனைத் தவிர அவனுக்கு அங்கு வேறு எந்த உறவுகளும் கிடையாது.

    உரிய காலம் கனிந்தவுடன் மனிதன் உலகில் வந்து பிறக்கின்றான். அப்படி பிறக்கும் மனிதன் சிசுவில் மிக பலகீனமானவனாகவே காணப்பட்டான். கண் உண்டு, ஆனால் பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரியாது. வாய் உண்டு, ஆனால் அவனால் பேச முடியாது. காது உண்டு, ஆனால் அவனுக்கு கேள்வியின் ஞானம் கிடையாது. அழுகை ஒன்றே அவனது தேவைகளை பூர்த்தி செய்கின்ற ஒரே ஆயுதமாக இருந்தது.

    அல்லாஹ் என்ற ஏகப் பரம்பொருள் அன்னையின் மனதில் அளப்பரிய அன்பினை ஏற்படுத்தி மனிதனை அரவணைத்து காத்து வளர்த்தான். உலகில் வந்ததும் அவனுக்கு தாய், தந்தை, சகோதரர்கள் போன்ற உறவுகள் ஏற்படுகிறது. இந்த உறவுகள் வளர வளர தனது பூர்வீகமான இறைவனை மனிதன் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்குகிறான். அவனது ஐம்புலன்களின் ஆற்றலும் வலுவடைந்ததும் ஒரு புது உலகத்தையே அவன் காண்கின்றான்.

    அவ்வாறு கண்ட அந்த உலகம் தன்னுடன் எப்போதும் நிலையாக இருக்கப்போவதாக எண்ணி அதன் மாய வலையில் சிக்குகின்றான். அதனால் நீண்ட நெடிய மறுஉலக வாழ்க்கையை மறந்தவனாக வாழ்கின்றான்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு இயம்புகிறது: "இங்கு உங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் நிலையற்ற இவ்வுலக வாழ்வின் அற்ப இன்பங்களே. நம்பிக்கை கொண்டு இறைவனை நம்பி இருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் இருப்பதோ மிக மேலானதும் நிலையானதுமாகும்". (திருக்குர்ஆன் 42:36).

    மதிகெட்ட மனிதன் திருந்துவதற்காக, இறைவன் வேதங்களை தந்து தனது உறவை அவனுக்கு நினைவூட்டிக் காட்டினான். ஆனால் உலகம் மனிதனை மிக இறுக்கமாக பிடித்து ஏமாற்றவே முயல்கிறது. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தன்னைப் படைத்த இறைவனை என்றும் மறக்காமல் இந்த உலகில் வாழ்பவர்கள் பாக்கியவான்களே.

    மு. முகம்மது சலாகுதீன், நெல்லை ஏர்வாடி.

    • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைந்த வெற்றி என்பது மகத்தான ஒன்றாகும்.
    • நபிகளார், மக்கள் மத்தியிலே சிறந்த முறையில் வாழ்ந்து காட்டினார்கள்.

    எத்தனையோ கோடி மனிதர்களை இந்த உலகம் கண்டுள்ளது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடைந்த வெற்றி என்பது மகத்தான ஒன்றாகும். நபிகளார் மனிதாபிமானம் மிக்கவராவும், திடமான சித்தம் கொண்டவராவும் இருந்தார்கள்.

    மனித குலத்தில் உதித்த ஒரு மாமனிதராகவே இந்த உலகில் வாழ்ந்து காட்டியவர்கள் நபிகளார். அரபு உலகின் மக்காவில் பிறந்தாலும், தனது இறையியல் கொள்கை மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

    மனித சமுதாயத்தை சமத்துவம் மிக்கதாக மாற்றி அமைப்பதில் மகத்தான வெற்றியும் கண்டார்கள். தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையையும், தனது 6 வயதில் தாயையும் இழந்தார். பெற்றோரை இழந்த அனாதைகளின் உணர்வும், வலியும் எத்தகையது என்பதை நன்கு உணர்ந்ததால், அவர்கள் தன் வாழ்நாள் எல்லாம் அனாதைகள், ஏழைகளிடம் பேரன்புடனும் பரிவுடனும் நடந்து கொண்டார்கள்.

    இளம் வயது முதலே மற்ற குழந்தைகளை போல வீண் விளையாட்டில் நபிகளார் ஈடுபடவில்லை. 'நான் இந்த உலகிற்கு விளையாட்டுக்காக வரவில்லை' என்றார்கள். இறைத்தேடலும், ஆழமான சிந்தனையும் கொண்ட நபிகளார், மக்கள் மத்தியிலே சிறந்த முறையில் வாழ்ந்து காட்டினார்கள்.

    நபிகளாரின் இயல்பான குணமே பிறருக்கு உதவுவது தான். அதனால் தன்னிடம் கேட்பவர்களுக்கு, 'இல்லை' என்று சொல்லாமல், இருப்பதை கொடுக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

    அன்றைய மக்கள், நபிகளாரை 'அல் அமீன்' (நம்பிக்கைக்கு பாத்திரமானவர்), 'அஸ்ஸாதிக்' (சத்தியம் தவறாத உண்மையாளர்) என்றே போற்றினார்கள். 40 வது வயதில் தொடங்கி, நபிகளாருக்கு திருக்குர்ஆன் வேதம் படிப்படியாக இறக்கி அருளப்பட்டது. 'அல்லாஹ்' என்ற ஏகப் பரம்பொருள் குறித்து மக்கள் மத்தியிலே சன்மார்க்கப் பிரசாரம் செய்ததோடு, தன்னை இறைவனின் தூதர் என்றும் நபிகளார் பிரகடனப்படுத்தினார்கள்.

    'மனிதர்கள் எல்லோரும் ஆதமுடைய மக்களே' என்றார்கள். இனத்தாலும், நிறத்தாலும், குலத்தாலும், வேற்றுமை பாராட்டும் தீண்டாமை போக்கிற்கு எதிராக போரிட்டு சமத்துவத்தை நிலை நாட்டினார்கள்.

    ஆண்டியாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற உயரியக் கோட்பாட்டை உலகில் நடைமுறை படுத்திக்காட்டினார்கள். பரிசுத்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்ட பல இன்னல்களையும், துயரங்களையும் தாங்கி, சகித்துக் கொண்டு, சவால்களை பொறுமையுடன் எதிர்கொண்டு, அதில் இறையருளால் வெற்றி கண்டார்கள்.

    எழுதப்படிக்கத் தெரியாத நபிகளார், நன்றாக படித்த பண்டிதர்களும் கூற முடியாத பல பேருண்மைகளை எல்லாம் உலகிற்கு எடுத்துக்கூறினார்கள். மக்கா, மதீனாவின் மன்னராக இருந்த போதும் எளிமையாக வாழ்ந்தார்கள்.

    தனது 63-வது வயதில் இந்த உலகை விட்டு நபிகளார் மறைந்தாலும், அவர்களது சொல்லும், செயலும், நடைமுறைகளும், உலகெங்கும் அவர்களை பின்பற்றும் மனிதர்களின் மனங்களில் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது.

    இத்தகைய இவர்களது உயர்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

    "(நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?. மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம். (அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது. மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்". (திருக்குர்ஆன் 94:1-4)

    மு.முகம்மது சலாகுதீன், நெல்லை ஏர்வாடி.

    • பாவச் செயல்களில் பொறுமை காட்ட வேண்டும்.
    • நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

    உலக மக்களுக்கு சாந்தியும், சமாதானத்தையும் கற்றுத்தரும் மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. மனித சமுதாயத்திற்கு நற்பண்புகளை கற்றுத்தரும் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்புகள் குறித்து தங்களது தோழர்களிடமும், தங்களை சந்திக்க வருபவர்களிடம் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி எடுத்துரைப்பதுண்டு.

    'பிறரிடம் சொல்லாலும், செயலாலும் அழகிய நற்பண்புகளை பொழிய வேண்டும். நாவின் மூலம் பிறருக்கு நோவினை செய்பவன் முஸ்லிமில்லை' என்பது நபிகளார் அடிக்கடி தங்களது தோழர்களிடம் கூறும் நற்செய்தியாகும்.

    அதுபோல பொறுமை குறித்தும் நபிகளார் அடிக்கடி வலியுறுத்தி கூறி உள்ளார்கள். இதுபற்றி நபிகளார் கூறி இருப்பதாவது:

    பொறுமை என்றால் மூன்று நிலைகளில் இருக்க வேண்டும். அதில் முதலாவது இறைவனை வணங்குவதில் என்ன சிரமங்கள் இருப்பினும் அதை செய்து முடிக்க வேண்டும். வேலைப்பளு, சோம்பேறித்தனம் போன்றவற்றால் பொறுமை இழந்து இறை வணக்கத்தை விட்டுவிடக் கூடாது.

    "நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்", என்பது திருக்குர்ஆன் (2:153) வசனமாகும்.

    அடுத்தது, பாவச் செயல்களில் பொறுமை காட்ட வேண்டும். அதாவது, எவ்வளவு தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அது பாவமான காரியம் என்றால், அதை செய்யாமல் பொறுமை காக்க வேண்டும். பொறுமையிழந்து அதை செய்து விட்டால், கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். பின்னர் அந்த அவப்பெயரை நீக்குவது கஷ்டமாகி விடும். நல்லவராக வேண்டும் என்றால் கடினமான உழைப்பு தேவை. ஆனால், தீயவனாக வேண்டும் என்றால் சிறு தவறு செய்தால் போதும். எனவே பாவங்களைச் செய்யாமல் பொறுமை காக்க வேண்டும்.

    "பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் பாவச்சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" என்று திருக்குர்ஆன் (6:164) எச்சரிக்கின்றது.

    மூன்றாவதாக, மனிதர்கள் தங்களுக்கு சோதனை ஏற்படும் காலங்களில் பொறுமை காக்க வேண்டும். நம் வாழ்வில் எத்தனை கஷ்டம் வந்தாலும், 'என்னைப் படைத்தவன் என்னை எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணி இருக்கிறானோ அப்படியே நடக்கும்' என்ற உறுதியான எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் சோதனையிலும் சாதனை படைக்க முடியும்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

    "பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூருவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்" (திருக்குர்ஆன் 11:114).

    "நபியே! எந்நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்". (திருக்குர்ஆன் 11:115).

    "இறையச்சத்துடன் யார் நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்" (திருக்குர்ஆன் 22:23).

    இம்மையிலும் மறுமையிலும் ஒருமனிதன் உயர்ந்த நிலையை பெற வேண்டும் என்றால் அதற்கு உதவும் நற்பண்புகள் எவை? என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். அந்த நல்வழியில் நாம் நடந்தால் இறைவனின் திருப்பொருத்தத்தை பெறமுடியும்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை

    ×