என் மலர்
வழிபாடு

கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.
காயல்பட்டினத்தில்அபூர்வ துஆ பிரார்த்தனை திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
- இன்று நேர்ச்சை வினியோகம் செய்யப்பட உள்ளது.
- பல மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த புகாரி ஷெரிபு சபையின் 96-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று காலை 11 மணி அளவில் சபை வளாகத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையை தூத்துக்குடி முத்து கதீஜா மஸ்ஜித் பள்ளிவாசல் கத்திபு எஸ்.எம்.ரஹ்மத்துல்லா ஆலிம் நிகழ்த்தினார்.
உலக அமைதிக்காகவும், நல்ல மழை வேண்டியும் இந்த பிரார்த்தனை நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து மாலையில் சன்மார்க்க சபையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (வியாழக்கிழமை) காலை நேர்ச்சை வினியோகம் செய்யப்பட உள்ளது. அபூர்வ துஆ பிரார்த்தனையில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி செயலாளர் பத்ஹூர் ரப்பானி, காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் தலைவர் செய்யது அப்துர் ரகுமான், செயலாளர் வாவு முஹ்தஸிம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் இளவரசு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் வாவு சம்சுதீன், முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் மீரா சாஹிப், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு நிர்வாகி என்.ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புகாரி ஷரிபு சபை தலைவர் அகமது அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள், வைபவ கமிட்டி நிர்வாகிகள் செய்யது முகமது சாஹிப், ஜகுபர் சாதிக், முகமது தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.






