search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம் பருவத்திலே கர்ப்பம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இளம் பருவத்திலேயே பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து இருப்பதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் திருமண வயதை எட்டும் முன்னரே தவறான பழக்க வழக்கத்தால் இளம்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரியவந்தது.

    இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் 8742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் பேரில் போக்சோ சட்டமும் பாய்ந்துள்ளது.

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இளம் பருவத்தில் பெண்கள் கர்ப்பமாவது அதிகரித்து இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3429 பெண்கள் இளம் பருவத்திலேயே கர்ப்பம் ஆகி உள்ளனர்.

    இதன் மூலம் இந்த வேதனை பட்டியலில் தர்மபுரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர் மாவட்டத்தில் 1057 இளம்பெண்களும், வேலூரில் 921 பேரும் கர்ப்பம் தரித்துள்ளனர்.

    சிவகங்கையில் 439 பேர், திருச்சியில் 349 பெண்கள், நெல்லையில் 347 பேர், மதுரையில் 260 பேர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

    தூத்துக்குடியில் 162 பெண்களும், தேனியில் 104 பேரும், திருவள்ளூரில் 79 பேரும், கன்னியாகுமரியில் 73 பெண்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் 3 ஆண்டில் 72 பெண்களும், தஞ்சாவூரில் 70 பெண்களும், புதுக்கோட்டையில் 33 பெண்களும் இளம் வயதிலேயே கர்ப்பமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.



    சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தகவல் மூலமாக 905 இளம்பெண்கள் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்திருப்பது போல கஸ்தூரிபா ஆஸ்பத்திரி அளித்த தகவலில் 230 பேரும், தாய்-சேய் மருத்துவமனை தகவலில் 92 பேரும் கர்ப்பம் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் சென்னையில் 3 ஆண்டில் அறியா பருவத்தில் கர்ப்பமான இளம்பெண்களின் எண்ணிக்கை 1317 ஆக உள்ளது. இதன்மூலம் இந்த பாதிப்புகள் பட்டியலில் தர்மபுரிக்கு அடுத்து 2-வது இடத்தில் சென்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையும் மீறி வாலிபர்களுடன் பழகி கர்ப்பமாகும் இளம்பெண்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இப்படி அறியா பருவத்தில் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கும் வாலிபர்கள் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் இதுபோன்ற இளம் வயது கர்ப்பங்களை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×