search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்துசமய அறநிலையத்துறை"

    • முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனி:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படும் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    இதேபோல் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற 207 மூத்த குடிமக்களும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனியில் சாமி தரிசனம் செய்த பக்தர்களை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இந்தக்குழு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய திருக்கோவில் தரிசனத்துக்கு பின் பழனியில் நிறைவடைகிறது. இந்த ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப்பைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர்.

    • மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
    • இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.

    இந்த நிலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் ரூ.400 வரை வசூலிக்கப்படும் எனவும் அதில் இருந்து ரூ.80, ரூ.160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அறநிலையத்துறையின் முடிவு வாபஸ் பெறப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செ.சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை வருகிற 20-ந்தேதிக்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் 28.2.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×