search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூத்த குடிமக்கள்"

    • ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை?
    • இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது

    மோடியின் ஆட்சியில் ரயில்வேதுறை சுய விளம்பரத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. மோடியின் 3டி செல்ஃபி பாயின்ட்கள் மற்றும் வந்தே பாரத் நிகழ்வின் பச்சைக் கொடிகளை காட்டி வேண்டுமென்றே ரெயில்வே துறையை சீரழித்துள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ரயில்வே துறை பற்றிய 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    1. ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை? இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் இடஒதுக்கீடு பெறக்கூடிய SC, ST, OBC, EWS மக்களுக்கு பாஜக எதிரானதா?

    2. 2013-14 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரயில் பயணத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பயணியின் சராசரி விலை 0.32 பைசாவில் இருந்து 2023ல் 0.66 பைசாவாக இருமடங்காக உயர்ந்தது ஏன் ?

    3. 2017 மற்றும் 2021 க்கு இடையில் 1,00,000 க்கும் மேற்பட்ட ரயில் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 300 பேரின் விலைமதிப்பற்ற உயிரைப் பறித்த கொடிய ஒடிசா ரெயில் விபத்து (2023) இந்த பட்டியலில் இல்லை. ரெயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் தடுக்கக்கூடிய எதிர்ப்பு தொழில்நுட்பம் ரெயில்வே நெட்வொர்க்கில் 2.13% மட்டுமே உள்ளது என்பது உண்மையல்லவா?

    4. கொரோனா பொது முடக்கத்தான் போது , மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சலுகைகளை மோடி அரசு ஏன் திரும்பப் பெற்றது? இதன் மூலம் ஒரே ஆண்டில் ₹2242 கோடியை மோடி அரசு கொள்ளையடித்தது.

    5. CAG அறிக்கையின் படி, ₹58,459 கோடியில் 0.7% நிதி மட்டுமே ரெயில்வே பாதை புதுப்பித்தலுக்கு செலவிடப்பட்டது ஏன்? இதுவே, மோடி அரசாங்கத்தால் கூறப்படும் 180 கிமீ வேகத்திற்குப் பதிலாக, வந்தே பாரத் அதிவேக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. தான்.

    6. ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் உடன் இணைக்கும் நடவடிக்கை என்பது பின் வாசல் வழியாக அதன் நிதியை குறைப்பதற்கான ஒரு வழியாகும் என்பது உண்மையல்லவா ?

    7. இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது உண்மையல்லவா ? மோடி அரசின் தேசிய ரெயில்வே திட்டத்தின் (2021) படி, அனைத்து சரக்கு ரெயில்களும் 2031க்குள் தனியார்மயமாக்கப்படும் என்றும் 750 ரெயில் நிலையங்களில் 30 சதவீதம் தனியார்மயப்படுத்தப்படும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது.

    லாபம் ஈட்டும் அனைத்து ஏசி பெட்டிகளும் தனியார் மயமாக்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரெயில்கள் மட்டுமே ரயில்வேயிடம் விடப்படும். இன்னும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிர்நாடியாக ரயில்வே உள்ளது.

    ஆனால் மோடி அரசு ரெயில்வே துறையின் நிதி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையில் மக்கள் பயன்படுத்தும் வசதியை அழித்துவிட்டது.

    2012-13ல் 79% ஆக இருந்த மெயில் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 2018-19ல் 69.23% ஆக குறைந்ததில் ஆச்சரியமில்லை.

    காங்கிரஸ் கட்சி ரயில்வே துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது
    • 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்

    மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் இந்தியன் ரெயில்வே ₹5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது.

    அதில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை ரெயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது.

    இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

    ரயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    அதன்படி, கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரெயில் கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீத சலுகையும் ரெயில்வே வழங்கியது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், ஒன்பது கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கைகள் மொத்தமாக 13,287 கோடி பணம் செலுத்தி ரெயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.

    • முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனி:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படும் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    இதேபோல் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற 207 மூத்த குடிமக்களும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனியில் சாமி தரிசனம் செய்த பக்தர்களை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இந்தக்குழு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய திருக்கோவில் தரிசனத்துக்கு பின் பழனியில் நிறைவடைகிறது. இந்த ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப்பைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர்.

    • அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் நாளை பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்குகிறது.
    • திருச்செந்தூர், பழ முதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய கோவில்களில் தரிசனம் செய்த பின் பழனியில் நிறைவடைகிறது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் நாளை பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்குகிறது. பின்னர், திருச்செந்தூர், பழ முதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய கோவில்களில் தரிசனம் செய்த பின் பழனியில் நிறைவடைகிறது.

    இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது
    • இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது.

    அகமதாபாத்:

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது.

    இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது. ஆனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதமே ரெயில் சேவை முழுவதுமாக தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் "இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது. சேரும் இடத்துக்கான ரெயில் டிக்கெட் ரூ.100 என்றால், ரெயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது" என கூறினார்.

    • 2023 டிசம்பர் மாதம் வரை பயணம் செய்யத்தக்க வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
    • 40 மையங்களில் பயண அட்டை மற்றும் டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2023 டிசம்பர் மாதம் வரை பயணம் செய்யத்தக்க வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

    அடுத்த அரையாண்டிற்கு ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பே.நி, மத்திய பணிமனை, சென்ட்ரல் பேருந்து நிலையம், பிராட்வே உள்ளிட்ட 40 மையங்களில் வரும் 21.12.2023 முதல் 31.01.2024 வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், 01.02.2024 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

    சென்னைவாழ் மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை கொண்டு வர வேண்டும். சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று, தற்பொழுது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது அடையாள அட்டையுடன் தங்களின் தற்போதைய வண்ண பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 3 பொது பெட்டிகளை இணைக்க வேண்டும்.
    • மூத்த குடிமக்களுகக்கான ரெயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவிற்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு அதிகாலையில் புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் போல் பகல்நேர சேர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை புதிதாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்-அரியலூர், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, பட்டு க்கோட்டை-மன்னார்குடி, கும்பகோணம்-விருத்தா சலம் ரெயில் பாதை திட்டங்களுக்கு அதிகளவு பணம் ஒதுக்கி திட்டங்களை உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பூதலூரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தஞ்சையில் இருந்து திருப்பதிக்கும்,தூத்துக்குடிக்கும், திருவனந்தபுரத்திற்கும் புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தஞ்சையில் இருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 ரெயில் பெட்டிகள் உள்ள கோச் ஒன்றை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 3 பொது பெட்டிகளை இணைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் மாரியம்மன் கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்களை நிறுத்துவதற்கு மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

    காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுகக்கான ரெயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள அட்டையின் நோக்கமாகும்.
    • இ-சேவை மையத்துக்கு வருகை தருகின்ற மூத்தகுடி மக்களுக்கு வங்கி கணக்கு,ஏடிஎம் உள்ளிட்டவை இருப்பதில்லை.

    உடுமலை :

    நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள அட்டையின் நோக்கமாகும்.அதில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் பெயர்,முகவரி,பிற சுய குறிப்புகளும்,புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்பட்டது.அப்போது மேற்கொள்ளப்பட்ட பதிவில் ஒரு சில குறைபாடுகள் தவறுகள் இருந்ததால் அதை திருத்தம் செய்ய பொதுமக்கள் இன்றளவும் இ-சேவை மையத்தை நாடி வருகின்றனர். இந்த சூழலில் ஆதார் பதிவில் திருத்தங்கள் மேற்கொள்ள நேரடியாக பணத்த செலுத்தும் நடைமுறை மாறி ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்துமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.இதனால் திருத்தம் மேற்கொள்ள வருகின்ற மூத்த குடிமக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    ஆதார் எண் சேவையை வாக்காளர் அடையாள அட்டை, மின்கட்டணம், பான் கார்டு உள்ளிட்ட மற்ற சேவைகளுடன் சேர்க்கப்பட்டதால் இரட்டை பதிவு, போலிகள் கண்டறியப்பட்டது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் ஆதார் பதிவு முதன் முதலில் மேற்கொண்ட போது முகவரி, வயது, தாய் தந்தை, கணவர் பெயர், பிறந்த தேதி, செல்போன்எண் போன்றவை உள்ளீடு செய்ததில் குறைபாடுகள் இருந்து வருகிறது. அதை திருத்தம் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் சம்மந்தப்பட்ட தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்த சூழலில் ஆதார் பதிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு நேரடியாக பணம் பெற்ற சூழல் மாறி ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்துமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்வாறே வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இ-சேவை மையத்துக்கு வருகை தருகின்ற மூத்தகுடி மக்களுக்கு வங்கி கணக்கு,ஏடிஎம் உள்ளிட்டவை இருப்பதில்லை. ஒரு சிலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தால் கூட டிஜிட்டல் பணம் பரிமாற்றத்துக்கான வழிமுறைகள் விழிப்புணர்வு தெரிவதில்லை.இதனால் மூத்த குடிமக்கள் கட்டணம் செலுத்த இயலாமல் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். ஒரு சில மூத்த குடிமக்கள் அங்குள்ள வேறொருவரிடம் பணம் கொடுத்து அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றி வருகின்றனர்.அப்போது சம்பந்தப்பட்ட நபரின் இணையதளம்,வங்கிக் கணக்கு இயங்காமல் போய்விடுகிறது.இதன் காரணமாக பதிவை திருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட சேவையை தக்க தருணத்தில் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாக வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆதார் திருத்தம் மேற்கொள்ள ஆன்லைன் கட்டணம் செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளித்து முன்பு போல் நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • 2020-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.
    • மூத்த குடிமக்கள் பயணம் மூலம் கிடைக்கும் வருவாய் சீராக உயர்ந்து வருகிறது.

    புதுடெல்லி :

    60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரெயில்களில் 40 சதவீத கட்டண தள்ளுபடியும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு 50 சதவீத கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது.

    ரெயில்களில் பல்வேறு பிரிவினருக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளில் மூத்த குடிமக்களுக்கான சலுகை மட்டும் 80 சதவீத இடத்தை பிடித்தது.

    இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி, மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. ரெயில் சேவை முழுமையாக சீரடைந்த போதிலும், அந்த சலுகை இன்னும் வழங்கப்படவில்லை.

    மீண்டும் கட்டண சலுகை வழங்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில், மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள் பயணத்தால் கிடைத்த வருவாய் குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

    அதற்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. ரெயில்வே கூறியிருப்பதாவது:-

    மூத்த குடிமக்கள் பயணம் மூலம் கிடைக்கும் வருவாய் சீராக உயர்ந்து வருகிறது. 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை 7 கோடியே 31 லட்சம் மூத்த குடிமக்கள், ரெயிலில் பயணம் செய்தனர்.

    அவர்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 464 கோடி வருவாய் கிடைத்தது. கட்டண சலுகையை அளித்திருந்தால், ரூ.1,500 கோடி குறைவாகத்தான் கிடைத்திருக்கும். சலுகையை ரத்து செய்ததன் மூலம், ரூ.1,500 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது.

    அதுபோல், 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை ரெயில்களில் பயணித்த மூத்த குடிமக்கள் மூலம் ரூ.5 ஆயிரத்து 62 கோடி வருவாய் கிடைத்தது.

    இதில், கட்டண சலுகையை ரத்து செய்ததால் கிடைத்த ரூ.2 ஆயிரத்து 242 கோடி கூடுதல் வருவாயும் அடங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில்களில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது.
    • கொரோனா காலத்தில் அவர்களுக்கான ரெயில் கட்டணச் சலுகையை ரெயில்வே நிறுத்திவிட்டது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ரெயில்களில் பயணம் செய்வதற்கு மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் கொரோனா தொற்று காலத்தில் வைரஸ் தொற்றைத் தடுக்க மூத்த குடிமக்களின் பயணங்களைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கான ரெயில் கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டது.

    தற்போது கொரோனா தொற்றில் இருந்து நாடு மீண்டு வந்துவிட்ட நிலையில், மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று உரத்த குரல் எழுந்தது.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எம்.கே.பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அசனுதீன் அமானுல்லா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் கோர்ட்டு உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமாக இருக்காது. மூத்த குடிமக்களின் தேவைகளையும், நிதி விளைவுகளையும் கருத்தில் கொண்டு, அரசுதான் இதில் முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

    • பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
    • ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை அளிக்க வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    கொரோனா பரவலை தொடர்ந்து ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. சலுகையை மீண்டும் அளிக்குமாறு பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்தபோதிலும், ரெயில்வே இன்னும் சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசு ரூ.45 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறது. மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளித்தால் ரூ.1,600 கோடி மட்டுமே செலவாகும். இது, ஒரு பெரிய கடலில் சிறிய துளி போன்றது.

    இத்தொகையை செலவழிப்பதால், அரசு ஒன்றும் ஏழை ஆகிவிடாது. கட்டண சலுகையை நிறுத்தியதால், மூத்த குடிமக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற பிம்பம்தான் உருவாகும். மூத்த குடிமக்களின் ஆசி இல்லாமல், எந்த நாடும், தனிமனிதரும் முன்னேற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

    • ஜனவரி 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த டோக்கன்கள் வழங்கப்படும்.
    • பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 2022 (அரையாண்டிற்கு ஒருமுறை) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

    தற்பொழுது அடுத்த அரையாண்டிற்கு ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகிய பணிகள் இன்று தொடங்கியது.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) மூத்த குடிமக்கள் சென்னையில் உள்ள 27 மையங்களுக்கு சென்று பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்க டோக்கன்களை பெற்றுக்கொண்டனர்.

    அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பஸ் நிலையம், மத்திய பணிமனை, சென்ட்ரல் பஸ் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி, பெரம்பூர் பஸ் நிலையம், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர் ஆகிய 27 மையங்களில் டோக்கன் வழங்கப்படுகிறது.

    ஜனவரி 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த டோக்கன்கள் வழங்கப்படும். அதன் பின்னர் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

    மூத்த குடிமக்கள், கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பித்தனர்.

    சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசல் சான்றிதழ்களை கையில் வைத்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    ×