search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரூர் கொள்ளை"

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே சிட்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக நரிப்பள்ளியை சேர்ந்த மகரஜோதி (44) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடையில் மதுபானங்கள் விற்பனையான வகையில் வசூலான 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சிட்லூர்- நரிப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மகரஜோதியை வழி மறித்தனர். அவரது மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர்.

    ஆனால் அவர் பணத்தை எடுக்க விடாமல் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரில் ஒருவன் கைத்துப்பாக்கியால் மகரஜோதியை சுட்டான். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மகரஜோதியிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு இருவரும் தப்பி சென்றனர்.

    துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த மகரஜோதி, முதலில் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து உடனடியாக ரோந்து போலீசாருக்கு கோட்டப்பட்டி போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது.

    நரிப்பள்ளி அருகே போலீசாரை கண்டதும் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் புதருக்குள் மறைந்திருந்த அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.

    பிடிபட்ட கொள்ளையர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன் (வயது28), நாகேஷ்வரா மகன் பரதன் (24) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து துப்பாக்கியும், கொள்ளையடித்த பணம் 1 லட்சத்து 50 ஆயிரமும் மீட்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் ஊழியர்கள் முருகன், ஆனந்தன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு 3 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×