search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workshop employee murder"

    இளநீர் விற்ற பணத்தை பங்கு வைக்கும் தகராறில் ஒர்க்ஷாப் தொழிலாளியை கொலை செய்தோம் என்று கைதான நண்பர்கள் 3 பேர் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (30). இவர் கருமத்தம் பட்டியில் உள்ள ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 25-ந் தேதி மங்கலம் அருகே உள்ள கல்லப்பாளையம் காட்டு பகுதியில் மகேந்திரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சரோஜினி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மகேந்திரனை அவரது நண்பர்கள் குமார் (31), செந்தில் குமார் (28)பாண்டியன் (28) ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.


    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    நாங்கள் 4 பேரும் அடிக்கடி மது குடிப்போம். இதற்கு பணம் தேவைப்பட்டால் மங்கலத்தில் உள்ள குளத்தில் மீன் பிடித்து அதனை விற்பனை செய்து மது அருந்துவோம்.

    மேலும் இரவு நேரங்களில் மங்கலம் பகுதிகளில் உள்ள தென்னை மரத்தில் இளநீர்களை திருடி பகலில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் மது குடித்து வந்தோம்.

    நாங்கள் 3 பேரும் தென்னை மரத்தில் ஏறி இளநீர் வெட்டுவோம். அதனை மகேந்திரன் தான் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் பணத்தை பிரிப்பதில் எங்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

    மகேந்திரன் அதிக பணத்தை எடுத்து விடுவார். இதனை பல முறை அவரிடம் கேட்டு வந்தோம். சம்பவத்தன்று இரவு இளநீர் திருட சென்றோம். அப்போது மது அருந்தினோம். அந்த சமயத்தில் மகேந்திரனிடம் நீ மட்டும் பணத்தை அதிகமாக எடுத்து கொள்கிறாயே? என கேட்டோம்.

    அதற்கு அவர் நீங்கள் இளநீரை பறித்து மட்டும் தான் கொடுக்கிறீர்கள். நான் தான் ஊர்? ஊராக சென்று விற்று வருகிறேன். அதனால் தான் அதிக பணத்தை எடுத்து கொள்கிறேன் என்றார்.

    இதில் எங்களுக்குள் தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த நாங்கள் இளநீர் வெட்டும் அரிவாளால் மகேந்திரனை துரத்தி சென்று வெட்டி கொன்றோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    ×