search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vennaaru River"

    தஞ்சை வெண்ணாறில் 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் குளித்து கொண்டிருந்த சிறுமி நீரில் அடித்து சென்றபோது அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வெண்ணாறில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரின் அதிக வேகத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை உயிருடன் மீட்ட நிலையில் மற்றொரு சிறுமியின் உடலை தேடி வருகிறார்கள்.

    தஞ்சை அருகே உள்ள கூடலூர் நந்தவனத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் வசந்தகுமாரி (வயது 15). அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகள் தர்ஷினி (13).

    அய்யம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வசந்த குமாரி 9-ம் வகுப்பும், தர்ஷினி 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நேற்று சுதந்திர தின விடுமுறை என்பதால் நண்பர்களான இருவரும் மதியம் வெண்ணாற்றில் குளித்து கொண்டிருந்தனர்.

    வெண்ணாற்றில் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் இருவரையும் இழுத்து சென்றது. இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

    இதைப்பார்த்த அப்பகுதியில் உள்ள வாலிபர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி மாணவி தர்ஷினியை உயிருடன் மீட்டனர். ஆனால் வசந்தகுமாரியை காணவில்லை.

    பின்னர் இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வசந்தகுமாரியை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். பிறகு இரவு நேரமாகி விட்டதால் வசந்தகுமாரியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வெண்ணாற்றில் மாணவியின் உடலை தேடி வருகின்றனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    ×