search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Underground Sewer Systems"

    • தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி கலவை உரக்கிடங்கில் இன்று மரக்கன்றுகள் மற்றும் கால்நடை தீவனம் நடும் விழா நடைபெற்றது.
    • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அதிகப்படியான புரதச்சத்தும், குறைந்த அளவு கழிவுகளை உடைய கோ.எப்.எஸ். 29 என்ற ரக மாட்டுத்தீவனம் விதைக்கப்படவுள்ளது.

    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி கலவை உரக்கிடங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.93 லட்சம் செலவில் 60 ஏக்கர் பரப்பளவில் 66 ஆயிரம் பலன் தரும் மரக்கன்றுகள் மற்றும் கால்நடை தீவனம் நடும் விழா நடைபெற்றது.

    தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மரக்கன்று நட்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி நகரின் தூய்மை சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றின் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைத்து பராமரித்தல், மாநக ராட்சிக்கு சொந்தமான இடங்களை சுத்தம் செய்து வேலி அமைத்து அடர் காடுகள் முறையில் அதிகப்படியான மரங்களை நடுதல், நகரின் பிரதான சாலை சந்திப்புகளில் நீரூற்றுகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    நகரின் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்புகள் அமைக்கப்பட்டு சேகரிக்கப்படும் கழிவு நீர் தருவைகுளம் கலவை உரக்கிடங்கில் அமையப்பெற்ற சுமார் 28 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நீரினை திறம்பட பயன்படுத்தும் விதமாகவும், இயற்கைச் சூழலை மேம்படுத்தும் விதமாகவும் அதிகப்படியான மரங்களை நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டதன் அடிப் படையில் இதுவரையிலும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளது.

    தற்போது, கூடுதலாக 60 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலைய ஆணையரகம் இணைந்து விமான நிலைய ஆணையரகத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.93 லட்சம் செலவில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை மியாவாக்கி என்ற அடர் காடுகள் முறையில் நடும் நிகழ்ச்சி, மேலும் மாநகராட்சி சார்பாக பலன் தரும் மரங்களை நடுவதற்கு உத்தேசித்து ஒரு ஏக்கர் பரப்பளவில் இனிப்பு புளி, நாட்டுப்புளி, சிவப்பு புளி, குடம்புளி, கொடுக்காப்புளி போன்ற பல்வேறு வகையான புளிய மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது.

    மேலும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் பறவைகளுக்கு பயன்படும் வகையில் ஆல மரங்களும், கால்நடைகளுக்கு ஏற்படும் தீவன பற்றாக்குறையை போக்கி தரமான தீவனங்கள் கிடைக்க வழிவகை செய்யும் விதத்திலும், பொதுமக்களுக்கு நல்ல சத்தான பால் கிடைக்கும் வகையிலும் மாட்டுத்தீவனம் உற்பத்தி செய்து நியாயமான விலையில் விற்பனை செய்யவும் சோதனை முயற்சியாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகப்படியான புரதச்சத்தும், குறைந்த அளவு கழிவுகளை உடைய கோ.எப்.எஸ். 29 என்ற ரக மாட்டுத்தீவனம் விதைக்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்,மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், காமராஜர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×