search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVS Motors Chairman"

    விளம்பரமின்றி எண்ணற்ற குடும்பங்களை வாழவைக்கும் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். #Vaiko #TVSChairman #IdolMissingCase
    சென்னை:

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மீது திருவரங்கம் கோவில் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் கேட்டிருப்பதாகவும் செய்தி அறிந்து திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.



    இந்தியாவிலேயே புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழுமம், இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளித்துள்ளது. வேணு சீனிவாசன் தமிழ்நாட்டில் நான்காயிரம் கிராமங்களில் முப்பது இலட்சம் மக்களுக்கு புதுவாழ்வு தந்துள்ளார். அண்டை மாநிலங்களில் ஆயிரம் கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் அங்குள்ள பெண்களுக்கு கூடை முடைதல், பாய் பின்னுதல், நெசவுநெய்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற தொழில்கள் சுய வேலைகளுக்கு நிதி உதவி தந்து, ஒரு இலட்சத்து 68 ஆயிரம் மகளிர் வருடத்திற்கு 680 கோடி ரூபாய் வருமானம் பெற வழிவகுத்தார் என்ற செய்தியை கிராமங்களில் உள்ள மக்கள் மூலம் நான் அறிந்தபோது, ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று மனம் நெகிழ்ந்தேன். இதுகுறித்து அந்தப் பெருந்தகை எந்தவிதத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை.

    தமிழகத்திலும், கர்நாடகா, கேரளத்திலும் உள்ள நூறு ஆலயங்களுக்கு தனது சொந்த அறக்கட்டளை பணத்திலிருந்து செலவழித்து திருப்பணி செய்திருக்கிறார். திருவரங்கம் கோவிலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் வேணு சீனிவாசன் பெயரைச் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏர்வாடி பகுதியில் உள்ள இசுலாமியப் பெருமக்களும், சாயர்புரம் பகுதியில் உள்ள கிறித்தவப் பெருமக்களும் பண்பாளர் வேணு சீனிவாசனை உச்சிமேல் வைத்து மெச்சுவதை நான் நன்கு அறிவேன். அனைத்துச் சமயங்கள், சாதிகள் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்தே அந்தந்த ஊர்களில் மகளிர் சுயஉதவி நிதி, கண்மாய்கள் சீரமைப்பு ஆகியவற்றை தனது சொந்த அறக்கட்டளை நிதியிலிருந்து செய்து வரும் கொடைச் செயலை எவ்விதத்திலும் அவர் விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.

    தமிழ் மொழியின்பால் பற்றும், தமிழ் இலக்கியங்கள்பால் உயர்ந்த ஈர்ப்பும் கொண்டுள்ள நெறியாளர் வேணு சீனிவாசன்  மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தமிழக அரசு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.  #Vaiko #TVSChairman #IdolMissingCase
    ஸ்ரீரங்கம் கோயில் சிலை திருட்டு தொடர்பான வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய மாட்டோம் என சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. #IdolMissingCase #TVSMotorsChairman
    சென்னை:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யயும்படி உத்தரவிட்டனர்.

    சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை தொடங்க உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும் டிவிஎஸ் நிறுவன தலைவருமான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய மாட்டோம் என சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு பதில் மனு தாக்கல் செய்தது.

    சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் வேணு சீனிவாசனை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IdolMissingCase #TVSMotorsChairman
    ×