search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Accident"

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நள்ளிரவில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கோவில்பட்டி:

    மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஹரி(44). இவர் அங்குள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

    இவர் பணியாற்றும் நிறுவனம் மதுரை மற்றும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை இயக்கி வருகிறார்.

    இந்நிலையில் ஹரி நேற்றிரவு தனது நண்பர்கள் முருகன் (54), ரகுநாதன் (39) மற்றும் கோபால் (40) ஆகியோருடன் அம்பையில் இயங்கி வரும், தான் பணிபுரியும் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை மேற்பார்வையிடுவதற்காக ஒரு காரில் சென்றார்.

    கார் நள்ளிரவு 12.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைச்செவல் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது திடீரென தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் அதிவேகமாக மோதியது.

    இதில் கார் அப்பளமாக நொறுங்கியது மட்டுமின்றி, மின்கம்பமும் முற்றிலுமாக சரிந்து கிழே விழுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று காரில் இருந்தவர்கள் மீட்க முயற்சி செய்தனர். கார் மீது மின் வயர்கள் விழுந்து கிடந்ததால் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் அப்பகுதியில் மின்சாரத்தினை தடை செய்து பின்னர் வயர்களை அகற்றினர்.

    இதையெடுத்து காரில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் காருக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் கோபால், முருகன் ஆகிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

    காயமடைந்த ஹரி, ரகுநாதன் ஆகிய 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் அதிவேகமாக வந்தது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே லாரி மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சிறுவனின் உடல் டயரில் சிக்கி சுமார் 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது.
    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலஅரசரடியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி பெருமாள் அம்மாள் (32). இவர்களுக்கு ஒரு மகளும், ஆதிஷ்வரன் (5) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஆதிஷ்வரன் விளையாடிக் கொண்டிருந்தான். இரவு 7 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு ராமநாதபுரத்திற்கு சென்ற லாரி ஆதிஷ்வரன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தலை நசுங்கி ஆதிஷ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தான். சிறுவனின் உடல் டயரில் சிக்கி சுமார் 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

    இதையறிந்த அப்பகுதியினர் அங்கு திரண்டனர். உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பலியான சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர்.

    ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிஷ்வரனின் பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஏராளமான கனரக உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே நீண்ட நாட்களாகவே வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே உடனடியாக வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது பேசிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், உடனடியாக வேகத்தடை அமைக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் இரவு 9½ மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் 2½ மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    திருச்செந்தூர் அருகே இன்று காலை அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயம் அடைந்தனர்.
    திருச்செந்தூர்:

    நெல்லையில் இருந்து உடன்குடி நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

    இந்த பஸ் மெஞ்ஞானபுரம் அருகே எழுவரை முக்கி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த பள்ளி வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது பஸ் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்கள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தபோது அலறி துடித்தனர்.

    சத்தம்கேட்டு அக்கம்- பக்கத்தினர் ஓடிவந்து கவிழ்ந்த பஸ்சில் இருந்து பயணிகளை மீட்டனர். இதில் 10 பேர் காயம் அடைந்து இருந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த பஸ் மீட்கும் பணி நடைபெற்றது. 
    தூத்துக்குடியில் இன்று அதிகாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி தடுப்பு சுவற்றில் மோதி ரோட்டில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நெல்லையில் உள்ள தனியார் முந்திரி தொழிற்சாலைக்கு முந்திரி கொட்டை ஏற்றி கொண்டு சரக்கு பெட்டக லாரி ஒன்று இன்று அதிகாலை தூத்துக்குடி நெல்லை நான்கு வழிச்சாலையில் சென்றது. லாரியை நெல்லை மாவட்டம் சிவகிரி சங்குபுரத்தை சேர்ந்த வெற்றிவேல்(வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். லாரி வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து டோல்கேட் தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்தது.

    இதை தொடர்ந்து லாரி தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதில் டிரைவர் பலத்த காயமடைந்தார். அவரை டோல்கேட் ஊழியர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டை எரிந்து நாசமானது. இது குறித்து புதுக்கோட்டைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Tamilnews
    ×