என் மலர்
நீங்கள் தேடியது "thiruvasagam"
- திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.
- அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார்.
மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், திருமோகூர் கோவிலை கடந்து, சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் எனும் திருத்தலத்தை அடையலாம். இந்த ஊரில்தான் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் 'திருவாதவூரார்' என்றும் அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே கல்வி, ஞானத்தில் சிறந்திருந்ததால், அவரை அமைச்சராக்கினார் பாண்டிய மன்னர்.
சோழநாட்டுத் துறைமுகங்களில் கப்பல்களில் வந்திருந்த குதிரைகளை வாங்கி வர திருவாதவூராரை பாண்டிய மன்னர் அனுப்பினார். அவர் புறப்பட்டு சென்றபோது, வழியில் திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தடியில் ஞானமே வடிவாய் அமர்ந்திருந்தவரை திருவாதவூரார் வணங்கி வழிபட்டார். அப்போது அங்கு அமர்ந்திருப்பது சிவன்தான் என உணர்ந்தார் திருவாதவூரார்.
அந்த சமயத்தில் வாதவூரார் பாடிய பாடல்களைக் கேட்ட சிவன், "உன் சொற்கள் மாணிக்கத்தை விட மதிப்புமிக்கவை. இனி நீதி மாணிக்கவாசகர் என்று அழைக்கப்படுவாய்" என்று சொல்லி மறைந்தார் சிவன். இதன் பின்னர் துறவியாக மாறினார் மாணிக்கவாசகர். வந்த வேலையை மறந்து, கொண்டு வந்த பொன் பொருட்களை திருப்பெருந்துறை ஆலய திருப்பணிகளுக்குச் செலவிட்டார்.
நாட்கள் கடந்தும் திரும்பாத மாணிக்க வாசகருக்கு மன்னர் ஓலை அனுப்ப, இறைவனைச் சரணடைந்தார் மாணிக்க வாசகர். அப்போது, "ஆடி மாதம் முடிவடைதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓலை அடி" என்ற அசரீரி எழ, அவ்வாறே செய்தார் மாணிக்கவாசகர். ஆடி மாதமாகியும் குதிரைகள் எதுவும் மதுரைக்கு வராததால், சந்தேகம் கொண்ட மன்னரும் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தார்.
வனத்தில் இருந்து நரிகளைக் குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பினார் சிவன். மாணிக்கவாசகரை விடுதலை செய்தார் மன்னார். அன்றிரவே குதிரைகள் நரிகளாக மாறி ஊளையிட்டன. இதை கண்ட பாண்டிய மன்னர் தன்னை மாணிக்கவாசகர் ஏமாற்றி விட்டார் என்று கடும் கோபம் கொண்டார். மாணிக்க வாசகரை வைகை நதியின்சுடு மணலில் நிறுத்தி மரணத்தண்டனை அளிக்க உத்தரவிட்டார். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
தவறை உணர்ந்த மன்னர் மாணிக்க வாசகரை அமைச்சர் பதவியில் மீண்டும் நியமித்தார். ஆனால் மாணிக்க வாசகர் அதை நிராகரித்து விட்டு சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கு தங்கி இறைவனை எண்ணி பாடல்கள் பாடினார். அதை ஒருவர் ஓலையில் எழுதினார். பின்னர் அவர் 'திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்' என்று எழுதி ஓலைகளைக் கீழ் வைத்து மறைந்தார்.
இதன் மூலம் அந்தப் பாடல்களை சிவபெருமானே விரும்பி எழுதி கொடுத்தது என்பது உறுதியானது. இந்த பாடல்கள்தான் திருவாசகம் என்று அழைக்கப்படுகிறது.
திருவாசகப் பாடல்கள் நிகரற்றவை- புண்ணியம் தருபவை.
எந்த ஒரு சிவன் கோவிலுக்கு சென்றாலும் நம் அனைவருக்கும் நினைவில் வரும் பாடல், "நமச்சிவாய வாழ்க...நாதன் தாழ் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்ற திருவாசகப் பாடல் தான். கேட்கும் போதும் படிக்கும் போதும் பக்தர்களின் மனங்களை மட்டுமின்றி, இறைவனின் உள்ளத்தையே உருக வைக்கும் இந்த திருவாசகம் பாடலை நமக்கு அருளியவர் மாணிக்க வாசகர்.
திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பார்கள். மாணிக்கவாசகர் சொல்ல சிவ பெருமானே தன்னுடைய கைப்பட எழுதிய பாடல் என்றால் அது எப்படிப்பட்ட அற்புதமான வரிகளாக இருக்க முடியும்?
திருவாசகம், வெறும் பாடல்கள் தொகுப்பு அல்ல; அது ஒரு பக்தனின் ஆழ்ந்த பக்தி உணர்வுகளின் வெளிப்பாடு. ஒவ்வொரு வரியும் சிவபெருமான் மீதான அன்பு, ஏக்கம், சரணாகதி, மற்றும் தத்துவ ஞானத்தை வெளிப்படுத்தும்.
இந்தத் தொகுப்பு சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துக்களை எளிமையாகவும், உருக்கமாகவும் எடுத்துரைக்கிறது. இறைவனை ஒரு நண்பனாக, குருவாக, காதலனாக, ஏன் ஒரு தாயாகக் கூடப் பாவித்து மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார்.
திருவாசகத்தின் தனிச்சிறப்பே அதன் ஆழ்ந்த அனுபவ வெளிப்பாடுதான். வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமின்றி, ஆன்மாவின் தேடலையும், இறைவனுடன் கலக்கும் அனுபவத்தையும் இது விவரிக்கிறது. சிவபெருமானின் கருணையையும், பக்தன் படும் பாட்டையும், இறுதியில் அடையும் பேரானந்தத்தையும் திருவாசகம் அழகாகச் சித்தரிக்கிறது. இதனால்தான் மாணிக்கவாசகரை வழிபட சொல்கிறார்கள்.
மற்ற நாயன்மார்களைப் போலன்றி, மாணிக்கவாசகரின் வாழ்க்கை சிவபெருமானுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. சிவபெருமான் குருவாக வந்து அவருக்கு உபதேசம் செய்தது, நரிகளைக் குதிரைகளாக்கியது, இறுதியில் திருவாசகத்தை எழுதி வாங்கிக்கொண்டு மறைந்தது என அவரது வாழ்க்கை முழுவதும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் மாணிக்கவாசகரின் சிறப்பம்சங்களாகும்.
திருவாசகத்திற்கு பொருள் என்ன என்று கேட்டதற்கு மாணிக்கவாசகர் அளித்த பதில், நடராஜரா என்பது தான். மாணிக்கவாசகர், சிவபெருமானுடன் சிதம்பரத்தில் ஜோதியாக ஐக்கியமானது ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் என புராணங்களில் சொல்லப்படுகிறது. இந்த நாளையே மாணிக்கவாசகர் குருபூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாணிக்கவாசகர் குருபூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சிவன் கோவில்களில் நடக்கும் மாணிக்கவாசகர் குருபூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். அல்லது சிவ தரிசனம் செய்யலாம். திருநீறு பை, ருத்ராட்சம், திருவாசகர் புத்தகம் ஆகியன வாங்கி தானம் செய்யலாம்.
மாணிக்கவாசகர் குருபூஜையின் அன்று சிவ வழிபாட்டுப் பொருட்களை தானம் செய்வது, சிவ பக்தியைப் பரப்புவதற்கும், ஆன்மீக அறிவைப் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களையும், நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வரும். இது இறைவனுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அதிகப்படுத்தும் செயலாகும்.
அதுவும் சிவ பெருமானுக்கு விருப்பமான, சிவ அம்சமாக கருதப்படும் பொருட்களை தானமாக அளிப்பது சிவ பெருமானின் மனதை மகிழ்வித்து, அவரது அருளை விரைவாக பெற்றுத் தரும்.
மாணிக்கவாசகர் குருபூஜை அன்று முடிந்தவர்கள் திருவாசகத்தை முழுவதுமாக படிக்கலாம். அன்று முடியாவிட்டாலும் வாழ்நாளில் ஒருமுறையாவது திருவாசகத்தை முழுமையாக படிக்க வேண்டும். சிவனின் மீது பக்தியுடன் படித்தால் நிச்சயம் அதற்கான அர்த்தம் புரியும்.
அப்படி அர்த்தம் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்தால் சிவ பெருமானே நிச்சயம் நமக்கு அதற்கான அர்த்தத்தை புரிய வைப்பார். அவரே எழுதிய வரிகள் என்பதால், சிவனே குருவாக இருந்து நமக்கு திருவாசகத்திற்கு பொருள் சொல்வார்கள். சிவனுக்கு அருகிலேயே இருக்கும் உணர்வையும். நமக்குள் சிவன் இருக்கும் உணர்வையும் பெற வேண்டும் என்பவர்கள் நாளை மாணிக்கவாசகர் குருபூஜை நாளில் திருவாசகம் படிப்பது மிகவும் சிறப்பானதாகும். இது அளவற்ற புண்ணியத்தைத் தேடித் தரும்.
பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் எட்டாம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஆனி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் சிதம்பரம் தலத்தில் இறைவனோடு கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் மாணிக்கவாசகரின் குரு பூஜை நடைபெறுகிறது.
திருவாதவூர் மாணிக்க வாசகர் கோவில் 92-ம் ஆண்டு ஆனி மகவிழா நாளை (29.6.2025) காலை 9 மணிக்கு நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. திருவாதவூர் வேதநாயகி சமேத திருமறைநாதர் கோவிலில் இருந்து மாணிக்கவாசக பெருமான் புறப்பாடாகி அவர் பிறந்த வீட்டிற்கு எழுந்தருகிறார். தொடர்ந்து மாணிக்கவாசக பெருமானுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறும்.
மதுரையில் இருந்து திருவாதவூர் செல்ல பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து எண்: 66 பி, எச், ஜே. எம் ஆகிய பேருந்துகளும், மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக திருப்புவனம் செல்லும் பேருந்திலும் (7, 7 ஏ, 7 சி) பயணிக்கலாம். ஒத்தக்கடையில் இருந்து மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது.
- லண்டன் தேவாலய நியாய சபையில் போப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- தங்கள் மதத்தைப் பரப்ப இந்தியா சென்ற போப் அங்கிருந்த சைவ மதக் கருத்துகளை இங்கே வந்து பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.
18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிருஸ்தவ மதத்தைப் பரப்ப இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் ஜி.யூ.போப். இவருக்கு தமிழர்கள் அதிகம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். 600 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த தமிழ் மொழியை உலகறியச் செய்த பெருமகன் அவர் தான். பைபிள் உட்பட பல தத்துவ நூல்களோடு தமிழகம் வந்த போப் மதப் பரப்புரையில் ஈடுபட்டார். தமிழ் மொழியையும் இலக்கணங்களையும் கற்றுத் தெளிந்தார்.
தமிழ் கற்றபின் முழுதாக அவர் படித்த முதல் புத்தகம் திருக்குறள். "இந்த புத்தகத்தில் அறம் பொருள் இன்பம் மட்டுமே உள்ளது. சொர்க்கத்திற்குரிய வீடுபேறு குறித்து எந்த தகவலும் இல்லையே'' எனச் சொன்னார். அப்போது ஒரு புலவர் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்தார்.
போப் அவர்களை திருவாசகம் உலுக்கிவிட்டது. லண்டன் திரும்பிய போப் தன் தலைமை கார்டினலிடம் "நம் மேற்கத்திய தத்துவப் புத்தகங்களை ஒரு தட்டிலும் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வரியை மற்றொரு தட்டிலும் வைத்தால் அது சரியாக இருக்கும்'' என்றார்.
கார்டினல் "அப்படியா.. அந்த வரியைச் சொல்லுங்கள் கேட்கிறேன்'' என்றார். "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க'' என்ற வரியை போப் குறிப்பிட்டார். கார்டினல் வியந்து போற்றிவிட்டு மொத்த திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொன்னார். 1900 வது வருடம் மொழிபெயர்ப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
லண்டன் தேவாலய நியாய சபையில் போப் மீது குற்றம் சாட்டப்பட்டது. தங்கள் மதத்தைப் பரப்ப இந்தியா சென்ற போப் அங்கிருந்த சைவ மதக் கருத்துகளை இங்கே வந்து பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.
நீதிபதி [கிருஸ்தவ மதத் தலைவர்] முன்பு போப் நிறுத்தப்பட்டார். விசாரித்த நீதிபதி "அவர் மொழிபெயர்த்த புத்தகத்தைப் படித்துவிட்டு தீர்ப்பு சொல்கிறேன்'' என போப்பிடம் ஒரு பிரிதியைப் பெற்றுக் கொண்டு சென்றார்.
ஒருவாரம் ஒரு வரி விடாமல் படித்த நீதிபதி தேவாலயம் வந்தார். அங்கே போப் நின்றிருந்தார். தொப்பென நீதிபதி, போப்பின் கால்களில் விழுந்துவிட்டார். பின்பு தன் இருக்கையில் அமர்ந்த நீதிபதி "போப் அவர்கள் தான் உண்மையான கிருஸ்தவர்.. அவர் இந்த மதத்திற்கு எதிராக எந்த தவறும் செய்யவில்லை. மிக அருமையான புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பை படித்தாலே பிரம்மிப்பாக இருக்கிறதே.. அதன் மூலமாக தமிழ் மொழியிலே திருவாசகத்தைப் படித்த போப் ஒரு பாக்யவான்.. அவரை இந்த குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்'' என்றார்.
-சதீஸ் காரட் தமிழன்
- மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.
- இதை தினமும் படித்து வந்தால் இம்மை, மறுமை பலன்கள் கிடைக்கும்.
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.
இதை தினமும் படித்து வந்தால் இம்மை, மறுமை பலன்கள் கிடைக்கும்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமனிதன்தாள் வாழ்க!
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்கு விவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்க!
சிரங்கு விவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க!
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி!
தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி!
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி!
சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி!
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை
மகிழச் சிவபுராணந்தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓயவுரைப்பன்யான்
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயராய்க் கணங்களாய்
வல் அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத் தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்ய விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா பெனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம் விமலா
பொய்யா யின வெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற - மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழுப்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற்போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி
புறந்தோல் போர்த் தெங்கும் புழுஅமுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைனந்துன் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்
நலந்தானில்லாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப்பாரிக்கும் சூரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா வமுதே அளவிலாப் பெருமானே
ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே
நீராயுருகியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந்துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமைனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நாக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப என்று
ஆற்றேன் எம்ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற்பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிகீழ்ப்
பல்லோரு ஏத்தப்பணிந்து.
“ஐயா! வணக்கம். நான் இந்த ஊரை சேர்ந்தவன். உங்களுடைய பாடல்களை பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அவற்றை பாராயணம் செய்ய விரும்புவதால், எழுதிக் கொள்ள வேண்டி தங்களை தேடினேன். நீங்கள் இங்கே இருப்பதாக அறிந்து வந்தேன். பாடல்களை தாங்கள் சொன்னால், நான் எழுதி கொள்கிறேன்..” குரல் வந்த திசை நோக்கி திருவாதவூரார் திரும்புகிறார்.
வந்தவர் களையான முகமும், ஒளி பொருந்திய கண்களுமாக இருந்தார். பார்த்தவுடன் அனைவரை யும் கவரும் முகம் கொண்ட அவரால், உள்ளன்புடன் வைக்கப்பட்ட கோரிக்கையை, மாணிக்கவாசகரால் தவிர்க்க இயலவில்லை. தன்னை அறியாமல் அதற்கு சம்மதம் தெரிவித்து பாடல்களை சொல்ல தயாரானார். அதை எழுத அடியவர் வடிவில் வந்த இறைவனும் ஆயத்தமானார்.
தன்னைத் தேடி வந்திருப்பவர், அடியார்களிடம் திருவிளையாடல் நடத்துவதில் பேரின்பம் கொண்ட ஈசன்தான் என்பதை திருவாதவூரார் உணரவில்லை. தன்னிலை மறந்து அவர் பாடல்களை சொல்லிய வேகத்திலேயே, அவை சுவடியில் எழுதப்பட்ட அதிசயம் அங்கே நிறைவேறி முடிந்தது.
‘திருவாசகம்’ முழுவதும் எழுதியாகி விட்டது. அதன் பின்னர், திருச்சிற்றம்பலத்தின் மேல் திருக்கோவை பதிகம் ஒன்று வேண்டும் என்று அடியவர் வேண்டுகிறார். தன்னை அறியாத நிலையில் மாணிக்கவாசகர் அதையும் பாடி முடிக்கிறார்.
எல்லாம் நடந்து முடிந்த பின்னர், சற்றே தன்னிலை வரப்பெற்ற நிலையில் மாணிக்கவாசகர் நடந்தவற்றின் பின்னணியில் இறைவன் இருப்பதை உணர் கிறார். பாடலை எழுதியவரை நேருக்கு நேராக காண நிமிர்ந்து பார்க்கிறார். உடனடியாக, பாடல்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை நூலால் கட்டிக்கொண்டு, அடியவர் வடிவில் உள்ள இறைவன் மறைந்து விட்டார்.
கண்களில் நீர் பெருக, ஆலயம் முழுவதும் தேடியும் அந்த அடியவர் கண்ணில் படவேயில்லை. தம்மை ஆட்கொண்ட இறைவன், நமது முன்னால் இருந்தும் அதை உணர இயலாமல் போய்விட்டதை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தார், திருவாதவூரார். அந்த நேரத்தில் இறைவன், ஓலைச் சுவடிகளை சிற்றம்பலத்தின் கருவறை வாசல்படியில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்.
மறுநாள் காலை சிதம்பரம் நடராஜருக்கான அன்றாட பூஜைகளை செய்ய வந்த அர்ச்சகர், நுழைவு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடியை பார்த்தார். அதை கைகளில் எடுத்து கவனித்தபோது, அதை எழுதியவர் ‘அழகிய சிற்றம்பலமுடையோன்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அர்ச்சகர் ஒரு கணம் திகைத்தார். ‘பூட்டப்பட்ட கோவிலின் கருவறை வாசலில் இந்த ஓலைச் சுவடியை வைத்தது யார்?’ என்று குழம்பினார். அவரால் எவ்வித முடிவுக்கும் வர இயலாமல், மேற்கொண்டு விவரங்களை அறிய, தில்லை வாழ் மூவாயிரமவர் சபையில் ஓலைச் சுவடியை சமர்ப்பித்தார்.
சபையினருக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன. ‘ஓலைச் சுவடியை வைத்தது யார்? இறைவனா அல்லது வேறு யாராவதா? கையெழுத்தாக அழகிய சிற்றம்பலமுடையான் என்று இருப்பதால் சிவபெருமானே இதை வைத்ததாக எடுத்துக்கொள்ளலாமா?’
இறுதியாக சபையின் தலைவர் இறைவனை பிரார்த்தித்துவிட்டு, ஓலைச்சுவடியை பிரித்து படிக்கத் தொடங்கினார். அதில் ‘திருவாசகம்’ மற்றும் சிவபெருமானை பாட்டுடை தலைவனாகக் கொண்ட ‘திருக்கோவை பதிகம்’ ஆகியவை இருந்தன. பாடலின் மூலம் எழுந்த உணர்வுகள், அனைவரது மனதையும் உருக்கி விட்ட அதிசயம் அங்கே நிறைவேறியது. அதன் காரணமாக, பாடல்களுக்கான மூல விளக்கத்தை அறிந்து கொள்ள அனைவரும் விரும்பினர்.
பாடல்களின் அடியில் ‘திருவாதவூரார் சொல்லச்சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தில்லை இறைவன் திருவாதவூரார் மூலமாக ஏதோ ஒரு செய்தியை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறார் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இதுபற்றி திருவாதவூராரையே சந்தித்து கேட்பது என்று முடிவானது.
தன்னைத் தேடி வந்திருக்கும் தில்லைவாழ் மூவாயிரவர் சபையினரிடம், “இந்த அடியவனை நாடி அனைவரும் வந்துள்ள காரணம் என்ன?” என்றார் திருவாதவூரார்.
கோவில் கருவறை முன்பு ஓலைச்சுவடி இருந்தது முதல், அதைப் படித்தது வரை கூறி சபையின் தலைவர், “பாடலின் நயம் புரிந்தது. ஆனால் முழுவதுமாக அர்த்தம் விளங்கவில்லை. சுவடியின் அடியில் திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது என்ற குறிப்பும் உள்ளது. ஆகையால் தான் தங்களை சந்தித்து தக்க விளக்கம் பெற வந்துள்ளோம்” என்றார்.
திருவாதவூராரின் உடல் முழுவதும் ஒரு கணம் அதிர்ந்தது. சுதாரித்துக்கொண்ட அவர், “அந்த ஓலைச்சுவடியை நான் பார்க்கலாமா..”
பணிவுடன் கேட்ட அவரது கைகளில் தரப்பட்ட ஓலைச்சுவடியை கண்டதும், கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. பிறந்த குழந்தையை கையில் தாங்கும் அன்னையைப் போல, பரவசத்துடன் ஓலைச்சுவடியை கைகளில் தாங்கினார். உள்ளம் நிறைய அதனை தடவியபடி ஒவ்வொரு சுவடியாக பார்த்தார். பாடலின் அடியில் இருந்த ‘அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்ற வார்த்தையை கண்டு கண்ணீர் பெருக்கு இன்னும் அதிகமானது. அதை மீண்டும் மீண்டும் கண்களில் ஒற்றியவாறே இறைவனின் திருவிளையாடலை எண்ணி உள்ளம் பூரித்து நின்றார்.
சிவபெருமானின் கரங்களால் எழுதப்பட்ட தமிழை படிக்க, அவரது இரண்டு கண்கள் போதவில்லை. “இறைவா.. உன்னை எப்படி போற்றுவேன். இந்த அடியவன் சொன்னதை உனது திருக்கரங்களால் எழுதக் கூடிய பாக்கியம் பெற, எந்த பிறவியில் தவம் செய்தேனோ; இப்பிறவியில் அது வாய்த்தது” என்று பலவாறாக உணர்வுகளை வெளிப்படுத்திய திருவாதவூராரை, கூடியிருந்த அனைவரும் ஆச்சரி யத்துடன் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திருவாதவூராரின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒளியில் தோன்றிய இறைவன், “திருவாதவூராரே! நீ என்னுடைய பாதத்தை அடையும் காலம் வந்துவிட்டது. சிற்றம்பலம் நோக்கி வந்து எனது பாதத்தில் புகுவீராக..” என்று கூறி மறைந்தார்.
தன்னிலை மறந்து நின்றவர், நினைவு வந்தவராக சபையினரைப் பார்த்துச் சொன்னார், “ஐயா.. இந்த பாடல்களுக்கான அர்த்தத்தை நான் சிற்றம்பலத்தின் சன்னிதியில் தெரிவிக்கலாமா?”
அனைவரும் அதை ஆமோதித்து ஏற்றுக்கொண்டனர். திருவாதவூரார் முன்னே செல்ல, மூவாயிரமவர் சபை அவரை பின் தொடர்ந்தது.
தில்லை சிற்றம்பலத்திற்கு சென்று நின்ற திருவாதவூரார் கருவறையை சுட்டிக் காட்டி, “அதோ அங்கே மந்தகாச புன்முறுவலுடன் அடியாருக்கு அடியாராக, அனைவருக்கும் அபயம் தந்து, மூன்று உலகத்தையும் படைத்து, காத்து, மறைக்கும் செயல் புரியும் பொன்னம்பலத்தானே இந்த அனைத்து பாட்டுகளுக்கும் பொருள் ஆவான்” என்று கூறியவாறே, இறைவனின் பாதத்தை நோக்கி சென்று ஒளி வடிவமாக கலந்து விட்டார்.
அதன் பிறகே, திருவாசக ஓலைச்சுவடியை சிதம்பர இறைவனின் பாதத்தில் வைத்து தினமும் ஆறு கால பூஜையில் பாராயணம் செய்யப்பட்டது. ‘திருவாசகத்துக்கு உருகாதவர் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பெருமை கொண்ட திருவாசகத்தை பாராயணம் செய்பவர்களுக்கு, இறையருள் என்பது சாத்தியமான ஒன்றாகும்.






