search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "supervisor attack"

    சுசீந்திரத்தில் நள்ளிரவு டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ.2½ லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.ஜி.ஓ. காலனி:

    சுசீந்திரத்தை அடுத்த அக்கரை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.

    புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 49) என்பவர் டாஸ்மாக் கடை சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார். அவருடன் இங்கு 2 விற்பனையாளர்களும் உள்ளனர். அவர்கள் தினமும் இரவு 10 மணிக்கு கடை மூடிய பின்பு வசூலான பணத்தை எண்ணி வீட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கம்.

    நேற்றும் இதுபோல கடை மூடியதும், வசூல் பணம் முழுவதையும் எண்ணி பதிவேட்டில் குறிப்பிட்டனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 30 பணம் வசூலாகி இருந்தது.

    வசூலான பணம் ரூ.2½ லட்சத்தையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு மூவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். சூப்பர் வைசர் முருகன், பணத்துடன் தனது மோட்டார் சைக்கிள் அருகே சென்றார். விற்பனையாளர்கள் இருவரும் கடையின் ‌ஷட்டரை அடைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது டாஸ்மாக் கடை அருகே மூடிக்கிடந்த பாருக்குள் இருந்து முனங்கல் சத்தம் கேட்டது. உடனே சூப்பர் வைசர் முருகன் அங்கு சென்று பார்த்தார். உள்ளே 4 மர்ம நபர்கள் இருந்தனர். கைகளில் அரிவாள், உருட்டுக்கட்டையுடன் இருந்த அவர்கள், முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

    முருகனின் அலறல் சத்தம் கேட்டு விற்பனையாளர்கள் இருவரும் ஓடி வந்தனர். அவர்களையும் மர்மநபர்கள் மடக்கிப்பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் மூவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து விரட்டி அடித்தனர். அதன் பிறகு மர்மநபர்கள் 4 பேரும் டாஸ்மாக் கடையில் வசூலான மொத்த பணம் ரூ.2½ லட்சத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகினர்.

    இந்த கொள்ளை சம்பவம் பற்றி சூப்பர் வைசர் முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து டாஸ்மாக் கடை ஊழியர்களை தாக்கி பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த டாஸ்மாக் கடை அருகே உள்ள கட்டிடங்களில் கண்காணிப்பு கேமிரா உள்ளதா? என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளையரின் உருவப் படங்கள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் 4 வழிச்சாலை உள்ளது. டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளை அடித்த மர்மநபர்கள் அந்த வழியாகத்தான் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை அருகில்தான் சுசீந்திரம் போலீஸ் நிலையம் உள்ளது. அதன் அருகேயே துணிகர கொள்ளை நடந்தி ருப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது.

    ×