search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Struggle"

    மாணவி லேகேஸ்வரி மரணத்துக்கு நீதி கிடைக்காவிட்டால் மாணவர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார்.
    கோவை:

    கோவையில் உள்ள கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி பலியான சம்பவம் குறித்து இந்திய மாணவர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது-

    இது போன்று பல்வேறு கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லூரியை விளம்பரப்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் இது போன்று தேவையற்ற பயிற்சியை கல்லூரி நிர்வாகம் அளித்து வருகிறது.

    தற்போது கோவையில் பயிற்சி அளித்த ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மையில் உரிய பயிற்சி பெற்றாரா? என்பது தெரியவில்லை. அவர் யார் சொல்லி இங்கு பயிற்சி அளிக்க வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    பயிற்சியாளர் ஆறுமுகம் உண்மையிலே தேசிய பேரிடர் மேலாண்மையில் வேலை பார்த்து வருகிறாரா? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்.

    மாணவி லேகேஸ்வரி மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இதில் அரசு தரப்பும், கல்லூரி நிர்வாகமும் உரிய பதில் அளிக்க வேண்டும். மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்காவிட்டால் மாணவர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் கல்லூரியில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பான வகுப்பறை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பான வகுப்பறை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பகத், பாலகுமாரன், தீபக், ஜெனிபர், பிரகாஷ்ராஜ் ஆகிய 5 பேரை நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை அறிந்த கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று 2-வது நாளாக மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இடைநீக்கம் செய்யப்பட்ட 5 மாணவர்களின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் கல்லூரியில் கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக வந்திருந்த பெற்றோர் கல்லூரி முதல்வர் பூங்கோதையிடம் சென்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் குறித்து முறையீட்டு வேதனை தெரிவித்தனர்.

    இதனால் கல்லூரி முதல்வர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சென்று இதுபோல் நீங்கள் நடந்து கொள்வதால் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே வகுப்புகளுக்கு திரும்பி செல்லுங்கள் என்று அறிவுரை கூறினார்.

    ஆனால் மாணவர்கள் அதனை ஏற்காமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணமலை மாவட்டத்தில் பசுமை சாலைக்கு எதிராக பெரியளவில் போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளதால் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு எதிராக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.

    போலீஸ் படையுடன் வந்த நில எடுப்பு அதிகாரிகளின் காலில் விழுந்தும், கைகூப்பி கொஞ்சியும் விவசாயிகள் விழுந்து கதறி அழுதனர். விவசாயிகள் கிணற்றில் குதித்தும், தீக்குளிக்கவும் முயற்சித்தனர். விவசாயிகளின் தற்கொலை முயற்சியை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து குறியீடு கற்களை நட்டனர்.

    செங்கம் கட்டமடுவு மற்றும் சி.நம்மியந்தல் கிராமங்களில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் விடுபட்ட விளை நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இன்று தொடர்ந்தனர். இதற்கு விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் விவசாயிகளை மிரட்டி, அவர்களின் சொந்த நிலத்தில் இருந்தே குண்டு கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். அதிகாரிகள் நிலத்தை அளவிட்டு கற்களை நட்டு விட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல், செய்யாறு சிறு கிளாம்பாடி, தென்னகரம் ஆகிய கிராமங்களிலும் விடுபட்ட அளவீடு பணியை அதிகாரிகள் தொடர்ந்தனர். மீண்டும் போராட்டம் செய்த விவசாயிகளை போலீசார் விரட்டியடித்தனர்.

    கலசப்பாக்கம் அருகே உள்ள சாலையனூர் மற்றும் பத்தியவாடி, காம்பட்டு, பால் நகர் ஆகிய கிராமங்களில் நிலத்தை அளவிடும் பணி நடந்தது. விவசாயிகள் கதறி அழுதனர். விவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு அதிகாரிகள் நிலத்தை அளந்து கற்களை நட்டனர்.

    இந்த நிலையில், காட்டை அழித்து மரத்தை வெட்டி ரோடு போடுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் திட்டமாக பசுமை சாலையை பார்ப்பதாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமூக வலை தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் நேற்று (ஜூலை 1-ந் தேதி) திருவண்ணாமலையில் கூடி போராட்டம் நடத்த வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து சிலர் பதவிட்டனர். அதை பலர் பகிர்ந்தனர். இது தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த 3 பேர் உள்பட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பசுமை சாலைக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என போலீசார் மிரட்டினர். கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    இந்த நிலையில், போலீசாரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    அந்தந்த கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இளைஞர்களும் விவசாயிகளை திரட்டி தங்கள் கிராமங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ஜல்லிக்கட்டு மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை போல் பசுமை சாலைக்கு எதிராகவும் போராட்டத்தை கையில் எடுக்க மாணவர்கள், இளைஞர்கள் திட்டமிட்டுள்ளதால் அந்த போராட்டத்தை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அந்தந்த கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் கூடும் இடங்களை தீவிரமாகவும் கண்காணித்து வருகின்றனர். #Greenwayroad
    ×