search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை சாலைக்கு எதிராக மாணவர்கள் திரள திட்டம்
    X

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை சாலைக்கு எதிராக மாணவர்கள் திரள திட்டம்

    திருவண்ணமலை மாவட்டத்தில் பசுமை சாலைக்கு எதிராக பெரியளவில் போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளதால் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு எதிராக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.

    போலீஸ் படையுடன் வந்த நில எடுப்பு அதிகாரிகளின் காலில் விழுந்தும், கைகூப்பி கொஞ்சியும் விவசாயிகள் விழுந்து கதறி அழுதனர். விவசாயிகள் கிணற்றில் குதித்தும், தீக்குளிக்கவும் முயற்சித்தனர். விவசாயிகளின் தற்கொலை முயற்சியை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து குறியீடு கற்களை நட்டனர்.

    செங்கம் கட்டமடுவு மற்றும் சி.நம்மியந்தல் கிராமங்களில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் விடுபட்ட விளை நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் இன்று தொடர்ந்தனர். இதற்கு விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் விவசாயிகளை மிரட்டி, அவர்களின் சொந்த நிலத்தில் இருந்தே குண்டு கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். அதிகாரிகள் நிலத்தை அளவிட்டு கற்களை நட்டு விட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல், செய்யாறு சிறு கிளாம்பாடி, தென்னகரம் ஆகிய கிராமங்களிலும் விடுபட்ட அளவீடு பணியை அதிகாரிகள் தொடர்ந்தனர். மீண்டும் போராட்டம் செய்த விவசாயிகளை போலீசார் விரட்டியடித்தனர்.

    கலசப்பாக்கம் அருகே உள்ள சாலையனூர் மற்றும் பத்தியவாடி, காம்பட்டு, பால் நகர் ஆகிய கிராமங்களில் நிலத்தை அளவிடும் பணி நடந்தது. விவசாயிகள் கதறி அழுதனர். விவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு அதிகாரிகள் நிலத்தை அளந்து கற்களை நட்டனர்.

    இந்த நிலையில், காட்டை அழித்து மரத்தை வெட்டி ரோடு போடுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் திட்டமாக பசுமை சாலையை பார்ப்பதாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமூக வலை தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் நேற்று (ஜூலை 1-ந் தேதி) திருவண்ணாமலையில் கூடி போராட்டம் நடத்த வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து சிலர் பதவிட்டனர். அதை பலர் பகிர்ந்தனர். இது தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த 3 பேர் உள்பட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பசுமை சாலைக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என போலீசார் மிரட்டினர். கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    இந்த நிலையில், போலீசாரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் பசுமை வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    அந்தந்த கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இளைஞர்களும் விவசாயிகளை திரட்டி தங்கள் கிராமங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ஜல்லிக்கட்டு மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை போல் பசுமை சாலைக்கு எதிராகவும் போராட்டத்தை கையில் எடுக்க மாணவர்கள், இளைஞர்கள் திட்டமிட்டுள்ளதால் அந்த போராட்டத்தை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அந்தந்த கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் கூடும் இடங்களை தீவிரமாகவும் கண்காணித்து வருகின்றனர். #Greenwayroad
    Next Story
    ×