search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student admission"

    தருமபுரி மாவட்டம் தோக்கம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 2 வருடமாக 2 மாணவர்கள், தலைமை ஆசிரியருடன் பள்ளி இயங்கி வருகிறது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தோக்கம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளி 1952-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுற்று வட்டார பகுதியான இந்திரா நகர், கற்கஞ்சிபுரம், அதியமான நகர், பெருமாள் கோவில் மேடு, தோக்கம்பட்டி ஆகிய 5 பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இதுவரை 1264 பேர் பள்ளியில் படித்துள்ளனர். இந்த பள்ளியில் படித்த நிறைய மாணவர்கள் அரசு வேலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய இந்த சிறப்பு வாய்ந்த பள்ளி கடந்த 4 வருடமாக 4 மாணவர்களும், 3 ஆசிரியர்களுடன் இயங்கி வந்தது. தற்போது கடந்த 2 வருடமாக 2 மாணவர்கள், ஒரு தலைமை ஆசிரியருடன் பள்ளி இயங்கி வருகிறது. தலைமை ஆசிரியரே வகுப்பு ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.

    மாணவர்களே இல்லாமல் கடந்த 2 வருடமாக 2 மாணவர்களுடனே செயல்பட்டு வருவதற்கு காரணம் மாவட்ட நிர்வாகம் தான் என்று அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    அரசு பள்ளியை படத்தில் காணலாம்.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    அனைத்து பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த தொடக்கப்பள்ளியில் தான் படித்து வந்தனர். தடங்கத்தில் புதியதாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதால் நிறைய மாணவர்கள் அந்த பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

    இந்த பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்குவதாலும், தரம் உயர்த்தப்படாமல் தொடக்கப் பள்ளியாகவே இருப்பதாலும் பெற்றோர்கள் மாணவர்களை இந்த பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். அதனால் இந்த பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் கான்கிரீட் கட்டிடம் அமைத்து தர வேண்டும். மாணவர்களுக்கு விடுதி வசதியுடன் அரசு அமைத்து கொடுத்தால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கண்டிப்பாக அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா? #Tamilnews
    ஒரு மாணவர் எத்தனை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க நினைத்தாலும் ஆன்லைன் மூலம் ஒரே விண்ணப்பத்தை சமர்பித்தால் போதுமானதாகும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு வரை தொழில்முறை கல்விக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் கலந்தாய்வு மூலமாகவும், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை பகுதிவாரியாக அமைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட சேர்க்கை முறை மூலமாகவும் நடந்தது.

    தற்போது அனைத்து தொழில்கல்வி பிரிவுகள், தொழில்கல்வி அல்லாத பாடப்பிரிவுகள், ஓட்டல் மேலாண்மை, பட்டய படிப்பு, நுண்கலை, 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை மற்றும் பகுதி நேர பட்டயப்படிப்பு போன்றவற்றிற்கு ஒரே விண்ணப்பம் மூலமாக ஆன்லைன் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரே குடையின் கீழ் இத்தகைய தனித்தன்மையுடைய சேர்க்கை இந்தியளவில் முதலாவதாகும். ஒரு மாணவர் எத்தனை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க நினைத்தாலும் ஆன்லைன் மூலம் ஒரே விண்ணப்பத்தை சமர்பித்தால் போதுமானதாகும்.

    ஒவ்வொரு கல்லூரிக்கும் வெவ்வேறு பாடப்பிரிவுகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை. அனைத்து கல்லூரிகளிலும் உள்ள பாடப்பிரிவு விவரங்கள், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் கல்லூரி வாரியான சேர்க்கை இடங்கள், இடஒதுக்கீடு, பாடப்பிரிவு வாரியாக கட்டணம், கல்லூரியில் சேர்வதற்கான தகுதி, தேர்வு செய்யும் முறை, தகுதி பட்டியல் தயாரிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய 2018-19-ம் ஆண்டுக்கான விரிவான மாணவர் சேர்க்கை தகவல் சிற்றேடு மற்றும் செய்தி அறிவிப்பு நாளை வெளியிடப்படுகிறது.

    இந்த தகவல் சிற்றேடு சென்டாக் இணைய தளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் பிரதிகள் அனைத்து கல்லூரிகளிலும் வைக்கப்படும். தேவையானவர்கள் ஒரு தொகுப்புக்கு ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கும், பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது தொடர்பாகவும் மாணவர்களுக்கு வழி காட்டவும் உதவி மையங்கள் அனைத்து கல்லூரிகள், உயர்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்ப ஆய்வு கட்டணம், ஆன்லைன் அல்லது டி.டி. மூலம் செலுத்தலாம். ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறுவதால் மற்ற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நேரத்தை சேமிப்பதுடன் போக்குவரத்து, தங்குமிட செலவு, உணவிற்கான செலவுகளையும் தவிர்க்கலாம்.

    இடஒதுக்கீடு, மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவைக்கப்படும். இதனால் முன்பு இருந்தது போல கலந்தாய்வு மையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    கடந்தகாலத்தில் பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்யும் வாய்ப்புகள் குறைவாக இருந்ததற்கு பதிலாக இம்முறையில் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள பாடப்பிரிவுகள் அவரவர் தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்ய வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.

    இத்தகைய நடைமுறை புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள அனைத்து பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

    இத்தகைய ஆன்லைன் மாணவர் சேர்க்கை எந்த கல்லூரியிலும் காலி இடங்கள் விடாமல் நிரப்பப்படுவதை உறுதி செய்யும். மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு முழுவதும் ஆன்லைனில் நடைபெறுவதால் மிக துரிதமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், தவறு இல்லாமலும் சேர்க்கை நடத்த உதவும்.

    இந்த கல்வியாண்டு முதல் புதுவை பொறியியல் கல்லூரியில் 4 பாடப்பிரிவுகள் கூடுதலாக தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம் 240 இடங்கள் கூடுதலாகி உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை அனைத்திந்திய அளவில் ஜே.இ.இ. தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், சுயநிதி அடிப்படையிலும் இருக்கும். புதுவையில் மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகள் 6, பொறியியல் கல்லூரி 17, கலை மற்றும் அறிவியல் கல்லூரி 11, வேளாண் கல்லூரி 1, மருத்துவம் சார்ந்த பிற படிப்புகள் 2, கல்வியியல் கல்லூரி 2, கால்நடைக்கல்லூரி 1, நுண்கலை கல்லூரி 1, சட்டக்கல்லூரி 1, செவிலியர் கல்லூரி 9, ஓட்டல் மேலாண்மை 1, பாலிடெக்னிக் கல்லூரி 6 என மொத்தம் 58 கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை ஒரே விண்ணப்பத்தில் நடத்தப்படும்.

    பட்ட மேற்படிப்பு, தொழில்சார் மற்றும் தொழில்சாராத பாடப்பிரிவுகளில் ஆயிரத்து 797 இடங்களும், இளநிலை தொழில்சார் மற்றும் தொழில்சாராத பாடப்பிரிவுகளில் 11ஆயிரத்து 281 இடங்களும், பட்டய பாடப்பிரிவுகளில் பகுதி நேரம் உட்பட ஆயிரத்து 985 இடங்களும் என மொத்தம் 15 ஆயிரத்து 63 இடங்கள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×