search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddhar"

    தென் திருவண்ணாமலை ஆலயத்தை ஒட்டியே, பெரியசாமி சித்தரின் சமாதியும் இருக்கிறது. மிகுந்த அருளாட்சி நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.
    கடந்த வாரம் பெரியசாமி சித்தரைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த வாரம் பார்க்கலாம். பெரியசாமி சித்தர் இரவு நேரத்தில் யாசகம் கேட்கச் சென்றபோது, சிலர் அவரை தீவெட்டி கொள்ளையர்கள் என்று நினைத்தனர். இதனால் அவரை ஓரிடத்தில் அசையவிடாமல் நிற்கவைத்து, அவரைச் சுற்றி காய்ந்த ஓலை கட்டுகளைப் போட்டு தீவைத்தனர்.

    தீ முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஆனால் தீக்குள் இருந்த பெரியசாமி சித்தருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஏற்றிய தீபம் அவரது தலையில் அப்படியே சுடர் விட்டு எரிந்துகொண்டு இருந்தது. தீக்குள் இருந்ததற்கான சுவடு கூட அவரது உடல் மேல் தென்படவில்லை. எப்படி ஆலயத்தை விட்டு புறப்பட்டாரோ அதேபோன்ற தூய்மையான உடலோடு இருந்தார். மக்கள் அனைவரும் திகைத்தனர்.

    இவர் கொள்ளையன் இல்லை. இவர் மிகப்பெரிய சித்தர் என்பதை உணர்ந்து அவரை வணங்கினர். பெரியசாமி சித்தரின் ஆலயம் எழுப்பும் பணிக்கு, பொன்னையும், பொருளையும் வழங்கினர்.

    சித்தர்கள் பலரும் இருக்கும் காலத்தில் செய்யும் நற்பலன்களை, பிற்காலத்திலும் செய்ய வேண்டும் என்பதற்காக, பூமிக்குள் சமாதி அடைவது வழக்கமான ஒன்று. அதே போல் பெரியசாமி சித்தரும் ஜீவ சமாதி அடையும் காலம் வந்தது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது.

    பெரியசாமி சித்தர் ஊர் மக்களை அழைத்தார். ‘நான் சமாதி அடையப்போகிறேன். நான் அணிந்திருக்கும் தங்கப் பூணுலையும், தங்க அரைஞான்கொடியையும் கழற்றாமல் அப்படியே என்னைச் சமாதி வைத்து விடுங்கள்’ என்றார்.

    அனைவருக்கும் ஆச்சரியம். ‘எதனால் சுவாமிகள் இப்படி சொல்கிறார். சாமிக்கோ வாரிசு கிடையாது. தனக்கு காணிக்கையாக வந்த பணத்தை எல்லாம், கோவிலுக்கு நிலபுலன்களை வாங்கி வைத்து விட்டார். தனக்காக எதையும் சேர்த்து வைக்காதவர், புதைக்கும்போது மட்டும் எதற்காக தங்கப் பூணுலையும், அரை ஞான்கொடியையும் போட்டு புதைக்கச் சொல்கிறார்’ என்று நினைத்தனர்.

    ஆனால் அவர் சொன்னதற்கு பின்னால், பெரிய வரலாறே இருக்கிறது என்பதை அப்போது யாரும் அறியவில்லை.

    பெரியசாமி சித்தர் கூறியபடியே, அவரைச் சமாதி நிலையில் வைத்து அதன் மேலே கல் படுகை அமைத்து விட்டனர். இதை அந்த ஊரைச் சேர்ந்த நாலு பேர் கவனித்துக் கொண்டே இருந்தனர். அவர் உடலில் உள்ள தங்கத்தை எப்படியாவது களவாடி விட வேண்டும் என்று திட்டமிட்டனர். ஒரு நாள் இரவு சமாதிக்கு வந்தனர். கல் படுக்கையை அகற்றினர். பின் அவர் மீதிருந்த பூணுலை அகற்றி விட்டு, அருணாக் கொடியை இழுத்தனர்; வரமறுத்தது. தொடர்ந்து சுவாமி வயிற்றில் காலை வைத்து அழுத்தி மிதித்துக்கொண்டு கொடியை இழுத்தனர்.

    அப்போது ‘யா...வ்....யா..வ்..’ என ஏப்பமிட்டார் பெரியசாமி சித்தர். திருட வந்த நாலுபேரும் அப்படியே அமர்ந்து விட்டனர். அவர்களின் கண்கள் இருண்டது. எங்கும் புகை மூட்டம். சமாதியையேச் சுற்றிக்கொண்டு இருந்தனர். அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று அவர்கள் மனம் துடித்தாலும், அவர்களால் அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

    இருள் விலகி, பொழுது புலர்ந்தது. பருத்தி காட்டுக்கு செல்ல மக்கள் அந்த வழியாக வந்தப் போது, சமாதியைச் சுற்றி 4 பேர் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு வந்தனர். அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது, அவர்கள் 4 பேரும் கண் பார்வையை இழந்திருந்தனர்.

    அப்போது சுவாமி சமாதியில் இருந்து எழுந்தார். ‘எனக்குப் பிறகு என்னைப் போலவே தலையில் தீபம் ஏற்றி வர, இவர்கள் சம்மதித்தால் அவர்களுக்கு கண் பார்வையைத் தருகிறேன்’ என்றார்.

    அதற்கு அந்த 4 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு கண் பார்வை வந்தது. இப்போதும் அவர்களது குடும்ப வாரிசுகளே தலையில் தீபத்தை ஏற்றி வருகிறார்கள்.

    அப்போது தான் மக்களுக்கு புரிந்தது. ஆகா.. சித்தர் தங்கப் பூணுலையும் தங்கக் கொடியையும் ஏன் போடச் சொன்னார். தன் கடமையை பிற்காலத்தில் செய்வதற்கு மக்கள் வேண்டும் என்று தான் இப்படிச் செய்தார் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். இதையடுத்து சித்தர் மீண்டும் சமாதி நிலையை அடைந்தார்.

    தென் திருவண்ணாமலை ஆலயத்தை ஒட்டியே, பெரியசாமி சித்தரின் சமாதியும் இருக்கிறது. மிகுந்த அருளாட்சி நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது. 60 குடும்பங்கள் இருந்த இந்த ஊரில் தற்போது, 600 குடும்பங்கள் பெருகி வாழ்கிறார்கள். மேலும் இங்குள்ள அனைவரும் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்குகிறார்கள். ஊர் மக்கள் ஒற்றுமையாகக் கார்த்திகை திருவிழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். திருக்கார்த்திகைக்கு திருவண்ணாமலையில் சிறப்பு தீபம் ஏற்றுவது போலவே, இங்கேயும் ஏற்றுகிறார்கள். கொடி நடுவது, திருவிழா நடைபெறுவது, மலை மீது தீபம் ஏற்றுவது எல்லாமே திருவண்ணாமலையை போலத்தான்.


    சித்தரின் நினைவாக தீபத்துடன் வலம் வரும் பக்தர், பெரியசாமி சித்தர்

    கார்த்திகை தீபம் தோறும் 2 கிலோமீட்டர் தொலைவில், 3000 அடி உயரத்தில் மிக கடினமானப் பாதையில் மக்கள் கூட்டமாக ஏறுவார்கள். சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜை செய்ய, பூஜை பொருட்கள், எண்ணெய் எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள். முள் என்றும் கல் என்றும் பாராமல் நடந்து செல்வார்கள். முதலில் சப்தக்கன்னிகளுக்கு பல வித அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்ட பின், 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள்.

    அந்த ஊரில் மலை மீது ஏற்றப்படும் தீபம் பல கிலோ மீட்டர் அப்பால் எங்கிருந்து பார்த்தாலும் சுடர் விட்டு பிரகாசிக்கும். பெரியசாமி சித்தர் காலத்தில் இருந்தே தீபம் ஏற்ற மலை ஏறி சென்றால், தன் வாழ்வில் கிடைக்காதப் பேரின்பம் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அது தற்போதும் தொடர்கிறது.

    இந்த கார்த்திகை திருநாளின் போது, தலையில் தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறுகிறது. தற்போது தலையில் தீபம் சுமப்பவரின் பெயரும் பெரியசாமியே. இவர் திருக்கார்த்திகை நாளில் தலையில் எரியும் தீபத்துடன் ஒவ்வொரு ெதருவாக வந்து அருளாசி வழங்குகிறார். விடிய விடியத் தீபத்துடனே அவர் ஊரைச் சுற்றி வருவார்.

    விளக்கில் ஊற்றப்பட்ட எண்ணெய் முகம், உடல் என எங்கும் வடிந்து நிற்க, தீயால் அவருக்கு தீங்கு நேராமல் இருப்பது இந்தக் கலியுகத்தில் பெரியசாமி சித்தர் அருளே என பக்தர்கள் நம்புகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவர் கோவிலுக்குள் வரும் வேளையில், விபூதி வாங்கினால் மக்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கிறது.

    மதியம் 1 மணி வரை அருள்வாக்கு கூறியபடியே பெரியசாமி சித்தர் பீடத்துக்குள் செல்வார். பீடத்தினை சுற்றி வலம் வருவார். அதன் பின் சித்தரின் ஜீவசமாதி முன் மண்டியிட்டு தனது தலையில் உள்ள சுடரை எடுத்து வைப்பார். தொடர்ந்து பெரியசாமி சித்தர் பீடத்தில் அந்தத் தீபம் எரிய தொடங்கிவிடும்.

    கார்த்திகை மாதத் திருவிழாவிற்கு பெரியசாமி சித்தரைக் காண ஓடோடி வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டும் வரத்தினை அள்ளி அள்ளி தருகிறார் பெரியசாமி சித்தர்.

    மக்களுக்காக வாழ்ந்த சித்தர்

    பெரியசாமி சித்தர், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கு சென்று நோய் தீர்க்கத் திருநீறு கொடுப்பார். அவர்களின் நோய் தீரும். இவரது செயல் சிலருக்கு பிடிக்கவில்லை. எனவே அவரை அங்கு செல்லவிடாமல் தடுக்க முடிவு செய்தனர்.

    பெரியசாமி சித்தர் சுடரை தலையில் ஏந்தி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடத்துக்கு சென்ற போது, அங்கு வந்த பலர் இவரைக் கேலி செய்ததுடன், அந்தப் பகுதிக்குப் போகக்கூடாது என்றும் தடுத்துள்ளனர். இதனால் சினம் கொண்ட சித்தர் வழியும் எண்ணெயைக் கையால் வழித்து, அவர்கள் மீது வீசினார். மறுநிமிடம் அவர்கள் உடல் முழுக்க முழுக்கக் கொப்புளமாக மாறிவிட்டது. அலறியபடி சித்தரின் காலில் விழுந்து வணங்கினர்.

    ‘சாதி என்று எதுவும் கிடையாது. இனிமேல் இதுபோல் நினைக்காதீர்கள்’ என்று கூறிய பெரியசாமி சித்தர், மீண்டும் தன்மேல் வழிந்த எண்ணெயை எடுத்து அவர்கள் மீது தெளித்தார். முதலில் சுட்டெரித்து கொப்புளங்களை உண்டாக்கிய அதே எண்ணெய், இப்போது குளிர்ச்சியாக மாறி அந்த கொப்புளங்களுக்கு மருந்தானது.

    திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் வன்னிக்கோனேந்தல் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் ‘மருக்காலங்குளம் விலக்கு’ என்ற இடத்தில் இருந்து பிரியும் சாலையில் 8 கி.மீ. மேற்கு நோக்கி பயணித்தால் அண்ணாமலைப்புதூர் என்னும் தென் திருவண்ணாமலையை அடையலாம்.
    திருவண்ணாமலையில் தான் பெரியசாமி சித்தராக உருமாறினார். பெரியசாமி சித்தரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள குக்கிராமத்தில் தான் பெரியசாமி என்ற சிறுவன் வசித்து வந்தான். அப்போது நம் நாட்டில் வெள்ளையர்கள் ஆதிக்கம் நடந்து கொண்டிருந்தது. பெரியசாமியைத் தவிர அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் வேறு ஒரு மதத்திற்கு மாறியிருந்தனர். ஏன் பெரியசாமியின் குடும்பத்தினரும் கூட மதம் மாறியிருந்தனர். அவனுடைய வீட்டில் மொத்தம் 7 பிள்ளைகள். அதில் பெரியசாமியின் எண்ணத்தில் மட்டும் ஈசன் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

    அனுதினமும் சிவனையே பூஜித்து வந்தான். ஆனால் அவனது வழிபட்டிற்கு வீட்டில் உள்ளவர்களாலேயே இடையூறு ஏற்பட்டதால், அந்தச் சிறுவன் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை சென்றான். அங்கு சிவனை வணங்கி அண்ணாமலையாரே கதி என்று கிடந்தான்.

    காலங்கள் பல கழிந்து விட்டன. அவனது வயதும் உயர்ந்து விட்டது. திருவண்ணாமலையில் தான் பெரியசாமி சித்தராக உருமாறினார். அதை அவரது கனவில் தோன்றி சிவபெருமான் உணர்த்தினார். ஒருநாள் இறைவழிபாட்டை முடித்து விட்டு, மடம் ஒன்றில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘என் புகழ் பரப்பி, எனக்கு உனது பிறப்பிடமான தென்தமிழகத்தில் கோவில் ஒன்றைத் எழுப்புவாயாக. அந்தக் கோவில் தென் திருவண்ணாமலை என திகழும்' என்றுரைத்தார்.

    விழித்தெழுந்தப் பெரியசாமி சித்தர் திகைத்தார். அவரது எண்ண ஓட்டம் பலவாறாக ஓடியது. ‘நமது ஊரோ வேறு ஒரு மதத்தை தழுவியிருக்கும் பகுதி. அங்கு எப்படி திருவண்ணாமலையை உருவாக்க முடியும்?’ என்று நினைத்தார்.

    ஆனால் இறைவனே சொல்லி விட்டார், இனி தடையில்லை என்று மனதை தைரியப்படுத்தினார். ஒரு கார்த்திகை திருநாள் அன்று, தீபம் ஏற்றும் வேளையில் திருவண்ணாமலையே களை கட்டியிருந்தது. அனைவரும் மலையை நோக்கி தீபம் ஏற்றக் கிளம்பினர். இவரும் மலை மீது ஏறி தீபமேற்றலாம் எனச் சென்றார். அப்போது ஒருவர் அவரை தடுத்தார்.

    கோபமடைந்த பெரியசாமி சித்தரோ.. ‘நீங்கள் அண்ணா மலையாரின் தீபத்தை மலையில் ஏற்றுகிறீர்கள். நான் தலையிலேயே ஏற்றுகிறேன்' என்று சபதமிட்டார்.

    அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கவில்லை. சிவபெருமானை நோக்கி, ‘பெருமானே! நீ கனவில் கூறியபடி தென்திருவண்ணாமலை அமைக்க என்னோடு வா..' என கூறி, அங்கிருந்து பிடிமண்ணை எடுத்துக்கொண்டார். பின் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கி வணங்கினார். ‘இறைவா என்னோடு வா. தென்னாட்டு மக்களுக்கு உன் அருளாசியைத் தா' என்று வேண்டியபடி, ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

    பல இடங்களில் உள்ள சிவ தலங்களை வணங்கியபடியே சங்கரன்கோவில் வந்தடைந்தார். சங்கர நாரயணரை மனதுருக வேண்டிக்கொண்டு, தான் பிறந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு, திருவண்ணாமலையில் இருந்து கொண்டு வந்த பிடி மண்ணை வைத்து சிவ பூஜை செய்யத் தொடங்கினார். அவரது வழிபாட்டிற்கு அவரது சகோதரர்கள் இடையூறு செய்தனர்.

    ‘இனி இங்கிருப்பது உகந்தது அல்ல’ என நினைத்து, அங்கிருந்து திருவண்ணாமலை பிடி மண்ணுடன் பனவடலி சத்திரம் என்ற ஊருக்கு வந்தார். அங்கேயும் அவரால் சிவ வழிபாட்டை சரியாகத் தொடர முடியவில்லை. அங்கிருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் அழகான மலையைக் கண்டார். ஆகா.. இது வல்லவோ.. தென் திருவண்ணாமலை என ஆனந்தக் கூத்தாடினார். அம் மலையின் அடிவாரம் அப்போது முத்து கிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்டது. முத்துகிருஷ்ணாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தார். அவ்விடத்தில் பிடி மண்ணை வைத்து வணங்க ஆரம்பித்தார்.

    இறைவனிடம் தான் இசைந்தது போலவே இவ்வூரை திருவண்ணாமலையாக்க வேண்டுமே, தன்னை மலை மீது ஏறக் கூடாது என தடுத்தவரிடம், தலையில் தீபம் ஏற்றுவேன் என்று சபதமிட்டோமே.. அதை நிறைவேற்ற வேண்டுமே.. முதலில் இவ்விடம் இறைவனுக்கு முழுவதும் சொந்தமான இடமாகவேண்டும் என்று நினைத்தார்.


    பெரியசாமி சித்தர்

    அதற்காக அந்த இடத்துக்குச் சொந்தக்காரனமான ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருத்தப்ப தேவரிடம் சென்றார். ‘சிவபெருமானுக்கு கோவில் கட்ட இடம் தரவேண்டும்’ எனக் கேட்டார்.

    அவரும் அதற்கு இணங்கி தற்போது கோவில் உள்ள இடத்தைத் தானமாக கொடுத்து விட்டார். அதுவரை முத்துகிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்ட அவ்வூர், அதன்பிறகு ‘அண்ணாமலை புதூர்’ என்று அழைக்கப்பட்டது.

    தீபத்தைத் தலையில் சுமக்க பெரியசாமி சித்தர், நாள் குறித்தார். திருக்கார்த்திகை தினத்தன்று, தனது தலையில் துளசி மாலையை, சும்மாடு போல் மடக்கிக் கட்டிக் கொண்டார். அதற்குள் மிகப்பெரிய திரியை தயார் செய்து, எண்ணெய் விட்டு தீபம் எரியச் செய்தார். இதை ஊரே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ‘வெறும் தலையில் சாமியார் தீபம் எரிய விடுகிறார். அத்தீபம் விடிய விடிய எரிகிறது’ என்ற செய்தி காட்டூத்தீ போல அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு பரவியது. இதனால் மக்கள் பெரியசாமி சித்தரை அதிசயத்துடன் காண ஓடோடி வந்தனர். அவருக்கு வேண்டிய உதவிகளை காணிக்கையாகக் கொடுத்தனர். அந்த காணிக்கையை சிவ தொண்டுக்கு சித்தர் பயன்படுத்தினார்.

    அவ்வூரில் அண்ணாமலையாருக்கு சிறியக் கோவில் ஒன்றை கட்டினார். அங்கே இறைவனின் ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார். அச்சிலை தற்போதும் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் சிலைக்கு வலப்புறத்தில் உள்ளது. மூலவராகக் கல்லால் ஆன சிவலிங்கமும் காணப்படுகிறது. திருவண்ணாமலையில் சிவனின் பின்புறத்தில் மேற்கு திசையில் மலை காணப்படும். தென் திருவண்ணாமலையான இங்கே சிவனின் முன் புறத்தில் கிழக்கு திசையில் மலை காணப்படுகிறது. இங்குள்ள மலைமீது சப்தக்கன்னிமார் கோவிலும் உள்ளது. தெப்பக்குளமும் இருக்கிறது.

    பெரியசாமி சித்தர், சுமார் 3 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலைக்கு தினமும் சென்று விடுவார். அங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடுவார். அதன் பின் அங்கிருந்து அபிஷேகம் செய்யக் குடத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி கோவிலுக்கு வருவார். தினந்தோறும் பெரியசாமி சித்தரின் வழிபாடு மலையில் உள்ள தெப்பக்குள நீரில் தான் நடந்துள்ளது.

    ஆரம்பக் காலக்கட்டத்தில் தனியொரு மனிதனாகவே மலைமீது ஏறி கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளார். மலை மீது தீபம் எரிவதைப் பார்த்த மக்களுக்கு பெரும் ஆச்சரியம். ‘திருவண்ணாமலையில் தீபம் எரிவதைப் போல, நம்மூர் பகுதியிலும் தீபம் எரிகின்றதே’ என்று சுற்றுவட்டார மக்கள் ஆச்சரியப்பட்டனர். மலை மீது தீபம் எரிவது வருடந்தோறும் திருக்கார்த்திகை நாளில் வழக்கமானது. ஒரு முறை மலை மீது எரியும் தீபத்தைப் பார்க்க மறுநாள் காலையில் பொதுமக்கள் சிலர் மலைக்குச் சென்றுள்ளனர். சென்றவர்களுக்கு பெருத்த ஆச்சரியம்.

    ஆம்.. தீபம் எரிந்தது மலை மீது அல்ல.. மலையில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்த பெரியசாமி சித்தரின் தலை மீது. இதைக் கண்டு மக்கள் அனைவரும் பெரியசாமி சித்தரை வணங்கத் தொடங்கினர். அதன்பிறகுதான் ஊரார் ஆதரவு கிடைத்தது.

    அடுத்து வந்த வருடங்களில் பெரியசாமி சித்தர், தலையில் ஏற்றிய தீபத்துடன் வீடு வீடாகச் சென்று அருளாசியும் வழங்கி உள்ளார். தீபம் அணைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் எண்ணெய் ஊற்ற ஆரம்பித்தனர். அப்படி எண்ணெய் ஊற்றினால், அவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் கிடைக்கிறது என நம்பிக்கை மக்களுக்கு பிறந்தது.


    தென் திருவண்ணாமலை

    கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக அவர் தேகமெல்லாம் வழிந்தோடினாலும், அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லையாம். சித்தர் மீது மிகவும் பாசம் கொண்ட பலர் தங்களது தேவைகளைக் கேட்டறிந்து, அது நிறைவேறியவுடன் அவருக்கு காணிக்கையையும் வழங்கி வந்தனர்.

    ஒரு நாள் இப்பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்தனர். பெரியசாமி சித்தரிடம் வந்து வாக்கு கோரினர். அவர், ‘4 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு வாருங்கள்' என்றார்.

    மக்களும் அதுபோலவே செய்தனர். அவர் அந்த வத்தலை சிவபெருமான் முன்பு பரப்பி வைத்தார். அதன் பின் விரதம் மேற்கொண்டு, வெறும் வயிற்றில் வத்தலை சாப்பிட ஆரம்பித்தார். அனைவரும் திகைத்தனர். வத்தலை வெறும் வயிற்றில் சாப்பிடுகிறாரே.? அய்யோ.. சுவாமிக்கு என்ன ஆச்சு என்று துடித்தனர்.

    பெரியசாமி சித்தர், அங்குள்ள ஓடக்கரையில், சூரியன் சுட்டெரிக்கும் மணலில் படுத்து உருண்டார். வத்தல் சாப்பிட்டதால் உடலுக்குள் எரிச்சல், சுட்டெரிக்கும் வெயிலால் உடலுக்கு வெளியிலும் எரிச்சல். சித்தரின் முரட்டுத் தனமான பக்தியின் தவத்தை மெச்சிய வருண பகவான், கண் திறந்தார்.

    சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்த பகல் பொழுது வானம், மழையை பொழிந்தது. பெரியசாமி சித்தரின் தேகம் குளிர்ந்தது. ஓடக்கரையில் தண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. அந்த பூமி மழையால் செழிக்க ஆரம்பித்தது. மக்கள் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர். பெரியசாமி சித்தரின் அருளாசியை நினைத்து பக்திப் பரவசம் கொண்டனர்.

    பெரியசாமி சித்தர், ஊர் ஊராக சென்று மக்களிடம் காணிக்கை பிரித்து, சுமார் 75 ஏக்கர் நிலம் வாங்கிக் கோவிலுக்கு எழுதி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் கோவிலுக்கு ஒரு கல் மண்டபமும் கட்டினார். தன்னுடைய சொந்த முயற்சியில் தெப்பக்குளம் வெட்டி, கோவிலுக்கு தெப்ப உற்சவமும் நடத்தினார்.

    கோவிலை மென்மேலும் உயர்த்த வேண்டும் என நினைத்த அவர், தீபத்தைத் தலையில் எரிய விட்டப் படியே இரவு நேரத்தில் பல ஊருக்கு சென்று காணிக்கை பிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    பக்கத்து கிராமத்தில் திருடர்கள் தொந்தரவு இருந்தக் காலம் கட்டம் அது. பல இடங்களில் இரவு தீ வெட்டி திருடர்கள் கூட்டமாக வந்து ஊரைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார்கள்.

    ஒருநாள் பெரியசாமி சித்தர், தலையில் தீபம் ஏற்றியபடி ஒரு கிராமத்துக்கு காணிக்கை பிரிக்கச் சென்றார். அப்போது அவருடன் அவர் மீது அதிக பக்தி கொண்டவர்கள் சிலரும் சென்றனர். வருவது தீவெட்டி திருடர்கள் என நினைத்து ஊர்மக்கள் தீடீரென்று இவர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து தாக்கவும் ஆரம்பித்து விட்டனர். உடன் வந்தவர்கள் எல்லாம் ஓடி விட்டனர். தலையில் சுடருடன் நின்ற பெரியசாமி சித்தரை, பொதுமக்கள் அனைவரும் திருடர்களின் தலைவன் என்று நினைத்தனர்.

    சித்தரை குறிப்பிட்ட ஓரிடத்தில் நிறுத்தினர். 10 கட்டு காய்ந்த ஓலையைக் கொண்டு வந்து, அவரைச் சுற்றிப் போட்டனர். பின்னர் தீயைக் கொளுத்தினர். சித்தர் தப்பித்து சென்று விடக்கூடாது என்று சுற்றி வளைத்து நின்று கொண்டனர். 10 கட்டு ஓலையும் எரிந்து சாம்பலானது.

    இப்போது சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரும் திகைப்பில் மூழ்கியிருந்தனர். சித்தருக்கு என்ன ஆனது? 
    அமாவாசை சித்தரால் தான் நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி திறக்கப்பட்டது என்பது ஆன்மிக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.
    நெல்லை மாநகரில் மிகவும் அற்புதமான தெய்வக் காரியத்தைக் குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் திறம்படச் செய்துள்ளார். இவர் நெல்லைக்கு அழைத்து வந்த சித்தரால் தான் நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி திறக்கப்பட்டது என்பது ஆன்மிக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.

    குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் நெல்லை நகரத்தில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் அரண்மனைக் கட்டி வசித்து வந்தவர். தற்போதும் அவர் வழி வந்த வாரிசுகள் அங்கு வசித்து வருகிறார்கள். தில்லைத் தாண்டவராயர், ஆன்மிகத்தில் மிகச்சிறந்தவராக விளங்கினார். இவர் தெய்வங்களை வித்தியாசமாக வணங்குவார்.

    தல யாத்திரை செல்லும் போது ஆங்காங்கே தெய்வங்களை வணங்க வேண்டுமே.. அதற்காக வித்தியாசமானக் கைத்தடிகளை உருவாக்கி எடுத்துச்செல்வார். அந்தக் கைத்தடியில் தலைப்பகுதியைத் திறந்தால் அங்கே விநாயகர், லட்சுமி உள்பட பல தெய்வங்கள் காட்சியளிப்பார்கள். இவர் ஸ்நானம் செய்யும் இடத்தில் கைத்தடி தெய்வங்களை வைத்து பூஜை செய்து வணங்கி வந்தார். அடிக்கடி காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    ஒரு முறை காசி சென்றபோதுதான் அமாவாசை சித்தரைச் சந்தித்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த சித்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, பிறகு துறவு வாழ்க்கைக்கு வந்தவர். தன் கால் போனப் போக்கில் நடந்து பல தலங்களுக்கு யாத்திரை செய்து இறுதியில் காசியை அடைந்திருந்தார்.

    இவரது ஆன்மிக வாழ்க்கைத் தில்லைத் தாண்டவராயரை மிகவும் கவர்ந்து விட்டது. எனவே அவரைக் காசியில் இருந்து நெல்லைக்கு அழைத்து வந்தார். அமாவாசை சித்தர் நெல்லை டவுனில் வெட்ட வெளியில் வெயிலில் சுருண்டுக் கிடப்பாராம். இரவில் நிலா ஒளி விழும் விதத்தில் திறந்த மார்புடன் கட்டாந்தரையில் படுத்துக் கிடப்பாராம். இது ஒரு வகையானத் தியானம் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இவருடைய செய்கை எல்லோருக்கும் வித்தியாசமாகத் தெரிந்துள்ளது.

    ஆனாலும் அமாவாசை சித்தரை எல்லோரும் மதித்து வந்துள்ளனர். இவர் பகல் வேளையில் கடை வெளியில் சுற்றி வருவார். வியாபாரிகள் தரும் உணவைச் சாப்பிடுவார். அமாவாசையில் மட்டும் தான் இவர் குளிப்பார். மற்ற நாட்களில் சூரியக் குளியலும், நிலாக் குளியலும் தான். எனவே தான் இவருக்கு ‘அமாவாசை சாமியார்’ எனப் பெயர்.

    அமாவாசை சாமியாரும், தில்லைத் தாண்டவராயரும் ஒரு நாள் நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றனர். முழுவதும் கண்ட ராம பாண்டியன் பிரதிஷ்டை செய்த நெல்லையப்பரை மனமுருக வேண்டி நின்றனர். பின் பிரகாரம் சுற்றி வந்தனர். அப்போது பிரகாரத்தில் உள்ள ஆறுமுகநயினார் கோவில் பூட்டிக் கிடந்தது. இதைக் கண்டு மனம் நொந்து போனார்கள். ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் வீட்டுக்கு வந்த பின்பும் உணவு உண்ண முடியாமல் தவித்தார். எப்போதும் ஆறுமுகநயினார் கோவில் நினைவாகவே இருந்தார். தில்லைத் தாண்டவராயர் மனமுடைந்து இருப்பதை அறிந்த அமாவாசை சாமியார், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நினைத்தார்.

    திருநெல்வேலியில் தாமிரபரணி கரையில் உள்ள கருப்பந்துறையில் ஒரு நந்தவனம் இருந்தது. கருப்பந்துறைக்கு பெயர் காரணமே ஆன்மிகம் சார்ந்தது தான். சிவனுக்கு மிகவும் பிடித்த மலர் குவளை. இந்தக் குவளைப் பூக்கள் கருநீல நிறமாகக் காட்சித் தரும். எனவே கருப்பு+பூ+துறை = கருப்பூந்துறை என்றானது. அதுவே காலப்போகில் ‘கருப்பந்துறை’யாக மாறிவிட்டது.


    அமாவாசை சித்தர் சமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம்

    கருப்பந்துறை நந்தவனத்துக்கு அடிக்கடி அமாவாசை சித்தர் வந்து செல்வது வழக்கம். காரணம் அங்குள்ள ஆசிரம நந்த வனத்தில் போகர் மாயாசித்தரும், வல்லநாட்டு சாது சிதம்பர சித்தரும் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் இருவரும் அமாவாசை சித்தரிடம் ஆன்மிகக் கருத்துகளைப் பேசி மகிழ்வார்கள்.

    இவர்கள் இருவர் இருக்கும் இடத்தில்தான், அமாவாசை சித்தரும் வந்து அமர்ந்திருப்பார். எனவே தான் ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்கக் குளத்தூர் ஜமீன்தார் நினைத்தவுடன், இவர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கருப்பந்துறை நந்தவனத்துக்கு ஓடோடி வந்தார் அமாவாசை சித்தர்.

    ஆறுமுகநயினார் சக்தி மிக்கவர். அவர் சிலையே அபூர்வமானது. ஆறுமுகம் கொண்ட அவர் முகத்தை எட்டு திசையில் எங்கிருந்து பார்த்தாலும் ஆறு முகத்தையும் தரிசிக்கலாம். அப்படியொரு வடிவமைப்பு, வேறு எந்தக் கோவிலிலும் யாரும் கண்டதில்லை. அண்டிவரும் பக்தர் களைக் காப்பாற்ற வல்லவர். அப்படிப்பட்ட சுவாமி சன்னிதி, சிலரது சதியால் பூட்டப்பட்டு விட்டது. இதுபற்றிதான் மற்ற இரு சித்தர்களுடனும், அமாவாசை சித்தர் ஆலோசித்தார்.

    ‘இதற்காக எவ்வளவு பெரிய யாகம் வேண்டுமானாலும் செய்யுங்கள். இதற்கு ஆகும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என குளத்தூர் ஜமீன்தார் உறுதி அளித்தார். சித்தர் பெருமக்கள் கூடினர். போகர் மாயா சித்தர் ஆசிரமத்தில் வைத்து ஸ்ரீசக்கரத்தை உருவாக்கினர். இச் சக்கரம் அன்னையின் அம்சம் கொண்டது. சக்கரம் இருக்கும் இடத்தில் எந்த வித தீயச் சக்தியும் ஒழிந்து போகும். குறிப்பிட்ட நாளில் ஸ்ரீசக்கரத்தை ஆறுமுகநயினார் சன்னிதியில் பிரதிஷ்டை செய்தார் அமாவாசை சித்தர்.

    தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. என்ன ஆச்சரியம். நம்பூதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட தடைகள் உடைத்தெறியப்பட்டது. கோவில் சன்னிதி திறக்கப்பட்டது. அதன்பின் ஆறுமுக நயினாருக்கு அபிஷேகம், ஆராதனை எல்லாமே மிகச்சிறப்பாக நடந்தது. பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இந்நாள் வரை இங்கு வந்து நன்மை அடைந்தப் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம்.

    காலங்கள் கடந்தது. தினமும் ஆறுமுகநயினார் சன்னிதியே கதி என கிடந்தார் அமாவாசை சித்தர். அவர் கூறும் வாக்குகள் பலித்தன. எனவே இவரைத் தேடிப் பக்தர்கள் அதிகம் கூட ஆரம்பித்தனர். இது சிலருக்குப் பிடிக்காமல் போனது. இதனால் அமாவாசை சித்தரை வெளியேற்ற முயற்சி செய்தனர்.

    ‘கோவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இனி நான் எங்கிருந்தால் என்ன?' என்று கோவிலை விட்டு வெளியே வந்து விட்டார் அமாவாசை சித்தர். சித்தன் போக்கே சிவன்போக்கு என்று கடைக் கடையாக அலைந்தார். அவர்கள் தரும் உணவை உண்டார். சில நேரம் ஜமீன்தார் வீட்டுக்கு வருவார். அங்கு அவருக்கு உணவு படைக்கப்படும். ஜமீன்தாரோடு யாத்திரைச் செல்வார். கருப்பந்துறை ஆசிரமத்திலும் வந்து நாள் கணக்கில் தவமேற்றுவார்.

    ஒருநாள், நந்தவன ஆசிரமத்துக்கு சென்று போகர் மாயா சித்தரிடம், ‘எனக்கு இந்த இடத்தைத் தாருங்கள்' என ஒரு குறிப்பிட்ட இடத்தில் கோடு போட்டு காண்பித்தார் அமாவாசை சித்தர். முக்காலும் உணர்ந்தப் போகர் மாயா சித்தரும் ‘சரி’ என்று கூறி விட்டார்.

    போகர் மாயா சித்தர், மகேந்திரகிரி மலைக்கு சென்று அடர்ந்தக் காட்டுக்குள் தியானம் செய்துக் கொண்டிருந்தார். அவர் மனதுக்குள் செய்தி ஒன்று கிடைத்தது. உடனே அவர் அவசரம் அவசரமாக மலையை விட்டுக் கிளம்பினார். வல்லநாட்டில் தியானம் மேற்கொண்டிருந்த வல்லநாட்டுச் சித்தருக்கும் அந்தச் செய்தி கிடைத்தது. அவரும் நெல்லை நோக்கிக் கிளம்பினார்.

    அமாவாசை சித்தர் ஜீவ சமாதி அடையப்போகிறார் என்பதே அவர்களின் மனதில் தோன்றியச் செய்தி.

    அவர்களின் மனம் சொன்னது போலவே அமாவாசை சித்தர் சமாதி அடைந்தார். அமாவாசை சித்தர் கேட்டுக்கொண்டபடி, போகர் மாயா சித்தர் தன்னிடம் அவர் காட்டிய இடத்தில் சமாதி அமைத்தார்.


    வல்லநாட்டு சித்தர், மாயா சித்தர், அமாவாசை சித்தர்,

    அவரது சமாதி மீது ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்க பயன்படுத்திய ஸ்ரீசக்கரத்தை, வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளும், ஸ்ரீபோகர் மாயா சித்தரும் பிரதிஷ்டை செய்தனர்.

    சித்தர் ஒருவர் அடங்கி இருக்கும் இடமே சிறப்பு. அதிலும் அவருக்கு இரண்டு சித்தர்கள் சமாதி வைத்திருக்கிறார்கள் என்பது அதை விடச் சிறப்பு. சமாதி மேலே ஆறுமுகநயினாரின் ஆலயத்தைத் திறக்க உதவிய சக்கரமும் பொருத்தப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. அதனால் தான் பக்தர்கள் இங்கு வந்து வணங்குவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

    இரண்டு சித்தர்கள்

    மாயா சித்தர், மிகவும் விசேஷமானவர். இவரது காலடிப் படாத இடமே மகேந்திர கிரி மலையில் இல்லை எனக் கூறலாம். இந்த மலையில் சிவன் பாதம், தாயார் பாதம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளது. மனிதர்கள் செல்ல முடியாத, தேவர்கள் மட்டுமே வாழும் தேவபூமியும் இங்குண்டு. அவ்விடங்களில் எல்லாம் அமர்ந்து தியானம் செய்வார், மாயா சித்தர்.

    மகேந்திரகிரி மலையில் தியானம் செய்வது சாதாரணமான விஷயம் அல்ல. அங்கு செல்ல வேண்டும் என்றால், 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதை மிகச் சுலபமாகக் கையாளுபவர் மாயா சித்தர்.

    அதுபோலவே வல்லநாடு சித்தரும். தனது உடலை எட்டு துண்டாகப் பிரித்து நவக் கண்ட யோகம் செய்யக் கூடியவர். ஒரே நேரத்தில் பல இடத்தில் இருப்பவர். இவர் வெண்குஷ்டம் போன்றத் தீராத நோய்களைத் தீர்க்க வல்லவர். பொதிகை மலையில் வெள்ளை யானையை வரவழைத்து பக்தர்களுக்கு காட்டியவர். செண்பகாதேவி அருவி அருகே உள்ள கசாயக் குகையில் அமர்ந்து தவம் புரிபவர். ஒருசமயம் சதுரகிரி மலையில் ஒற்றைக் கொம்பன் என்னும் மதம் பிடித்த யானையைத் தனது கண்ணசைவால் கட்டுக்குள் கொண்டு வந்தவர்.

    இவரது சித்தர் பீடம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் உள்ளது. அங்குள்ளத் தியான மடத்தில் ஒற்றைக் கொம்பன் யானை சிரசு பத்திரமாக வைத்து விளக்கு போட்டு வணங்கப்பட்டு வருகிறது. இவரை வள்ளலாரின் வழித்தோன்றல் எனவும் கூறுவர். இவர் பீடத்துக்கு வந்து சென்றாலே நமது முன்வினை, பாவம் எல்லாம் தொலைந்து விடும் என்பது ஐதீகம்.

    அமைவிடம்

    நெல்லை டவுணில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில், கருப்பந்துறையில் உள்ள நந்த வனத்தில் அமாவாசை சித்தரைத் தரிசனம் செய்யலாம். இங்கு வரும் பக்தர்களுக்கு புற்று நோய் உள்படத் தீராத நோய்கள் தீருகிறது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அமாவாசை சித்தரை வணங்குவதால் பில்லி சூனியம் நீங்கும். திருமணத் தடை அகலும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். 
    வடபகுதியில் இருந்து புண்ணிய யாத்திரையாக கீழப்பாவூர் வந்தவர் தான் சிவலோக பண்டாரம். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், தென்காசி- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளது பாவூர்சத்திரம். இவ்வூரில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் தான் கீழப்பாவூர் காணப்படுகிறது. இந்த ஊர் முற்காலத்தில் ‘சத்திரிய சிகாமணி நல்லூர்’ என வழங்கப்பட்டு வந்ததாக கல்வெட்டுகள் பறைசாற்றுகிறது. நரசிம்ம அவதாரக் கோலத்தை இவ்வூரில்தான் பகவான் காட்டினார் என்றும், அதனால் இவ்வூர் ‘தென்னகத்து அகோபிலம்' என்றும் சொல்லப்படுகிறது.

    இங்கு தற்போதுள்ள நூலகத்தின் பின்புறம் வழியாக குருக்கள் மடம் பகுதிக்கு சென்றால், அங்கே சிவலோக பண்டாரம் ஜீவ சமாதி கோவில் உள்ளது.

    இந்த ஆலயத்தினைப் பற்றி ஆரம்ப காலத்தில் யாரும் அறியாமலேயே இருந்தனர். பிற்காலத்தில் இடிந்து கிடந்த கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தை அவரது வாரிசு தாரர்கள் சீரமைக்க முயற்சி செய்தனர். இதற்காக தேவ பிரசன்னம் பார்த்த போது, பல அற்புத தகவல்கள் கிடைத்தன. அவை அனைத்தும் சிவலோக பண்டாரத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.

    சுமார் 240 முதல் 400 வருடங்களுக்கு முன்னதாக ஜீவ சமாதி கட்டப்பட்டிருக்கலாம் என தேவ பிரசன்னம் துலங்கியது. இனி இங்கு ஜீவ சமாதியான சிவலோக பண்டாரத்தின் வாழ்க்கை வரலாறு குறித்து காணலாம்.

    வடபகுதியில் இருந்து புண்ணிய யாத்திரையாக கீழப்பாவூர் வந்தவர் தான் சிவலோக பண்டாரம். இவர் சிற்றாறு செழிப்பாக்கும் கீழப்பாவூரைக் கண்டார். மனம் பூரித்தார். அருமையான மரம் செடிகளுக்கு இடையே நீர்வளமும், நிலவளமும், மக்கள் வளமும் கொண்ட அவ்வூர் அவருக்கு மன அமைதியைத் தந்தது. இனி இங்கேயே அமர்ந்திருப்பது என முடிவு செய்தார். அங்கு அவர் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார்.

    தனியாக இருந்து இறைவனை வழிபட்டு வந்த அவரிடம், சில காலத்தில் பல சீடர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கும் உபதேசம் செய்து, அங்கு வரும் மக்களுக்கும் அருள்பாலித்து வந்தார். அங்கிருக்கும் போதே பல மூலிகைகளை அறிந்து அவற்றை கொண்டு மக்கள் நோயை தீர்த்து வந்தார். எனவே இவரை ஆன்மிகவாதியாக மட்டும் மக்கள் வணங்காமல், நல்லதொரு மருத்துவராகவும் எண்ணி வணங்கி வந்தனர். இவரின் அற்புத பிரசாதம் கஞ்சியாகும். இந்த கஞ்சியை காய்த்து ஏழைகளுக்கு வழங்கி வந்தார். அதையும் ஓலைப்பட்டையில் தான் வழங்குவார். இதைக் குடித்து தீராத நோய்கள் எல்லாம் நீங்கி சென்றவர்கள் பலர்.

    சிவலோக பண்டாரத்தின் அற்புத சக்தி பரவியதால், நாளுக்கு நாள் இவரை காண வரும் பக்தர்களும் அதிகரித்தனர். இவர் தன்னுடைய தவவலிமை பேணி பாதுகாத்து வந்தார். இதற்காக பல வேளைகளில் இவர், மேற்கு தொடர்ச்சி மலையிலும் யாத்திரை செய்வார். அதோடு மட்டுமல்லாமல் பல புண்ணிய சேத்திரங்களுக்கும் சென்று வந்தார். அவர் வெளியே செல்லும் நேரங்களில் சீடர்கள் அந்தப் பகுதி மக்களுக்கு அருள் வழங்கி வந்தனர். எனவே தான் சிவலோக பண்டாரம் அமர்ந்த இடம் ‘குருக்கள் மடம்’ என்று அழைக்கப்பட்டது.


    சிவலோக பண்டாரம்

    திருநெல்வேலி நகரில் உள்ள நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனித்தேரோட்ட நிகழ்ச்சி தான் மணி மகுடமான நிகழ்வு. இச்சமயத்தில் தேர் ஆடி அசைந்து வருவதை காண கண்கோடி வேண்டும். எனவே தான் இத்திருவிழாவில் சிவலோக பண்டாரம் கலந்து கொண்டார். சந்நியாசி கோலத்தில் இருந்த அவர், பொதுமக்களோடு மக்களாக கலந்து மிகுந்த ஆர்வம் கொண்டு தேரின் முன் சென்றார். தேரை இழுக்க முடிவு செய்து கயிறைப் பிடித்தார். அப்போது அங்கு வந்த சிலர், இவரைச் சாதாரணப் பண்டாரம் என நினைத்து, ‘வேறுபக்கம் போய் தேரை இழுங்கள்' என விரட்டி விட்டனர்.

    இதனால் கோபமடைந்த சிவலோக பண்டாரம் அங்கிருந்து அகன்று விட்டார். அவர் சென்ற பின் பலரும் தேரை இழுக்க, தேர் கொஞ்சம் கூட அசையாமல் நின்றது. தேரின் சக்கரத்தில் ஏதாவது சிக்கிக் கொண்டிருக்கிறதா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை. தேர் நகராமல் நிலைகொண்டு நின்றதற்கான காரணம் யாருக்கும் விளங்கவில்லை. பல மணிநேரம் தேர் அங்கேயே நின்று விட்டது. என்ன செய்வது ஏது செய்வது என அனைவரும் திக்குமுக்காடினர்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘தேர் இழுக்க வந்த சந்நியாசி ஒருவரை எல்லோரும் விரட்டி விட்டனர். அவரைக் கூட்டி வந்து தேரை இழுங்கள். அப்போது தான் தேர் நகரும்' என கூறினார்.

    உடனே அவரைத் தேடி கீழப்பாவூர் ஓடி வந்தனர். அவர் புன் முறுவலோடு நெல்லை சென்று தேரின் கயிறைப் பிடித்து கொடுக்கத் தேர் நகன்றது. தவ வலிமை மிகுந்த தன் பக்தனின் புகழைப் பரப்புவதற்காக, நெல்லையப்பரே அந்தத் தேரை நகர விடாமல் செய்துவிட்டதாக அந்தப் பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.

    நெல்லையப்பர் தேர் சம்பவத்திற்குப் பிறகு, சிவலோக பண்டாரத்தின் புகழ் எட்டு திக்கும் பரவிற்று. நோய் கொண்டவர்கள் வந்து அவரைச் சந்தித்து நோய் நீங்கிச் சென்றனர். பேய் பிடித்தவர்கள் அவரை வணங்கி நற்கதி அடைந்தனர். இவர்களுக்கு எல்லாம் ஒரே மருந்து, பட்டை கஞ்சி தான். விழாக் காலங்களில் மிகப்பெரிய அளவில் கஞ்சியை அன்னதானமாக வழங்குவார். எவ்வளவு பேர் வந்தாலும், பனை ஓலைப் பட்டையில் தான் கஞ்சி வழங்கப்படுமாம்.

    குருக்கள் மடத்தில் இருக்கும் சமயம் தவிர, சிவலோக பண்டாரம் கீழப்பாவூர் நரசிம்மப்பெருமாள் கோவிலுக்குச் செல்வார். அங்குள்ளத் தெப்பக்குளத்தில் நீராடுவது, தண்ணீரிலேயே தனது ஆடையை படுக்கையாக விரித்து, அதில் படுத்திருப்பது போன்ற சித்து வேலைகளையும் செய்திருக்கிறார். காலங்கள் கடந்தது. ஒரு கால கட்டத்தில் சிவலோக பண்டாரம் சமாதி நிலை அடைந்தார். அவருக்கு குருக்கள் மடத்திலேயே சமாதி வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மிகவும் பிரமாதமாக வழிபாடு நடந்த அந்த இடம் பிற்காலத்தில் அப்படியே மங்கி போய் விட்டது. எனவே குருக்கள் மடத்தில் பூஜை போன்ற காரியங்கள் எதுவும் நடைபெறவில்லை.

    இதற்கிடையில் கீழப்பாவூர் கிராமத்தில் அமைந்துள்ளப் பிற கோவில்களைப் புதுப்பிக்கும் சமயம், தேவப் பிரசன்னம் பார்த்தனர். அவ்வூருக்கு சந்நியாசி சாபம் உள்ளதாகக் கூறினர். யார் அந்த சந்நியாசி என ஆராய்ந்தப் போது சிவலோக பண்டாரமாக இருக்கலாமென்று அவ்வூரின் மூத்தக் குடிமக்கள் கூறினர். எனவே அவரது கோவிலைப் புதுப்பிக்கும் வேலையைத் தொடங்கினர்.

    கோவிலைப் புதுப்பிக்கும் சமயம், கல் மண்டபம் கட்டப்பட வேண்டியக் காரணத்தினால், ஆறு அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. தோண்டும் சமயம், சிவலோக பண்டாரம் விக்கிரகம் அமைக்கப்பட்டிருந்ததற்கு நேர் கீழாக, அவரது அங்கங்கள் (எலும்புகள்) கிடைத்தது. அதை யெல்லாம் அப்படியே பாதுகாப்பாக எடுத்து வைத்தனர். அதன் பின் கட்டிடம் கட்டும் சமயம், அவை மீண்டும் அவ்விடத்திலேயே உரிய மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ளது.


    சிவலோக பண்டாரம் ஜீவசமாதி ஆலயம்

    இந்த ஆலயம் குழந்தைப் பேறுக்கு மிகவும் முக்கியத் தலமாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு வந்து இவரை வணங்கி குழந்தை வரம் பெற்று செல்கிறார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் ஆல மரமாகும். இவ்விடத்தில் மாவிலங்கு மரம் என்னும் மகாலிங்க மரம் ஒரு காலத்தில் இருந்துள்ளது. இம்மரத்தின் பட்டைகளை அவித்து சாறு எடுத்து, கால் மூட்டினில் ஊற்றி வந்தால் மூட்டு வலி குணமடையுமாம். இம்மரம் வில்வத்திற்கு இணையானது. வில்வ இலையைப் போன்றே அர்ச்சனைக்கும் பயன்படக் கூடியது. இந்த மரம் தற்போது காணப்படவில்லை. எனவே புதிதாக ஒரு மரம் வைத்து வளர்த்து வருகின்றனர். இதுவும் நோய் தீர்க்கும் அரிய பொக்கிஷமே.

    இக்கோவில் மூலஸ்தானம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகிய இரு அறைகள் கொண்டதாகும். மூலஸ்தானத்தில் சிவலோக பண்டாரம் கற்சிலை வடிவாகக் காட்சித் தருகிறார். அவருடன் விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிவலோக பண்டாரத்தின் கோபத்தைத் தணிக்கவே விநாயகர் இங்கு அருள்புரிகிறார்.

    பொதுவாகக் கோவில்களில் விசேஷங்கள் நடைபெறும் போது, அதில் கலந்து கொள்பவர்கள் யாரும் எந்தக் காரணத்திற்காகவும் கோபம் கொள்வது இல்லை. ஆனால் சித்ரா பவுர்ணமி அன்று இவருக்கு நடைபெறும் பூஜை சமயத்தில், அங்குள்ள யாராவது ஒருவர் மற்றவர் மீது சினம் கொள்வது வழக்கமாக உள்ளது. அதனைக் காணும் அக்கோவிலைச் சார்ந்தவர்கள் சினம் கொண்டவர் வடிவில் இன்றும் சிவலோக பண்டாரம் பிரசன்னமாகிறார் என்று கூறுவதுண்டு.

    இக்கோவிலின் அருகே இவர் வணங்கிய இரு சிவலிங்கங்கள், நந்திதேவர், ஆஞ்சநேயர், ஐந்து துவாரப் பாலகர்கள், ஏழு நாகர்கள் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

    சித்திரை மாதத்தில் பவுர்ணமி தினத்தன்று, அவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பெருமளவில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

    சாபம் பெற்ற ஊர்

    சிவலோக பண்டாரம் மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு பனை ஓலை பட்டையில் கஞ்சி வழங்கப்படும். அதனை வாங்கி உண்ணும் பக்தர்கள், ஓலை பட்டைகளை கீழே போட்டு விடுவார்கள். அது காற்றில் பறந்து சென்று, மடத்திற்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மக்கள் வசிக்கும் தெருக்களில் வந்து விழுந்தது. இதனால் கோபமடைந்த அத்தெருவில் வாழ்ந்தவர்கள் சிவலோக பண்டாரத்திடம் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் அந்தத் தெரு மக்களின் எதிர்ப்பு வலுத்தது. இதனால் அந்தத் தெருவில் வாழ்ந்தவர்கள் கூட்டமாகத் திரண்டனர். பண்டாரத்தின் ஓலைக் குடிசை மற்றும் மடத்தின் கூரைகளைப் பிரித்துப்போட்டனர். அதோடு அவற்றுக்கு தீயிட்டும் கொளுத்தினர். உடனே சிவலோக பண்டாரம் அவர்களை நோக்கிச் சாபமிட்டார் என்றும், அவ்வேளையில் அவர்களின் தெரு தீப்பற்றி எரிந்து அழிந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இன்று வரை அத்தெரு வளர்ச்சி அடையாது ‘வெட்டுப்பட்டான் முடுக்கு’ என்ற பெயரில் வெறும் மண் பாதையாகவே காணப்படுகிறது. தற்சமயம் வீடு கட்டுவதற்கு வாணம் தோண்டும்போது, அக்கால வீடுகளின் அடித் தளம் அங்கே காணப்படுவதும் உண்டு.

    இக்கோவிலின் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. புதுபொலிவுடன் காணும் இக்கோவிலை வணங்க பல இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். 
    கொம்மடிக்கோட்டையில் அருள் செய்து வந்த வாலை குருசாமிக்கும், காசியானந்தருக்கும், அவர்களின் சக்தியைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆலயம் அமைத்தனர்.
    கொம்மடிக்கோட்டையில் அருள் செய்து வந்த வாலை குருசாமிக்கும், காசியானந்தருக்கும், அவர்களின் சக்தியைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆலயம் அமைத்தனர். இந்த ஆலயம் ஆரம்பத்தில் மண்சுவரால் சுற்றுச் சுவர் எழுப்பி, பனை ஓலையால் கூரை வேயப்பட்டதாக இருந்தது. சித்தர்கள் அருள் கடாட்சத்தால் பல நன்மைகளைப் பெற்ற பக்தர்களால், நாளடைவில் ஆலயம் வளர்ச்சியடைந்தது.

    இந்த ஆலயத்தில் தனியாக குறி சொல்பவர் என்று யாரும் கிடையாது. தனக்கு வேண்டியதைக் கேட்டு வரும் பக்தர்களுக்கு, அங்கு வரும் பக்தர்கள் வாயிலாகவே சில வார்த்தைகள் கேட்கும். அதனையே தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு செயல்பட்டால், நன்மைகள் விளைவதாக கூறப்படுகிறது. அப்படித்தான் ஒரு முறை ஒருவர் மூலமாக வாலாம்பிகை அன்னை, ஆலயத்தின் வளர்ச்சியை உணர்த்தினார்.

    ‘இவ்விடம் வளரும் திருச்செந்தூராக விளங்கும். கருங்கல்லிலே கற்பக் கிரகம் கட்டப்படும். தொடர்ந்து பல மண்டபங்கள் எழுப்பப்படும். கொடிமரம் உருவாகும். வருடத்துக்கு இரண்டுமுறை கொடி ஏறும். கோபுர வாசல் முன்பே, தெப்பம் தோன்றும்’ என்றார். அந்த அருள் வாக்கு பலித்தது. தற்போது அன்னை கூறியபடியே இக்கோவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    ஞானியார்கள் விரும்புவது அன்பு, நீதி, தர்மம் நேர்மை மட்டுமே.. இது மகான்களின் தியான பூமி. உணர்வு பூர்வமாக வழிபட்டால், மகான் களின் ஆசி உண்டு. இங்கு வந்து வணங்கி நின்றால் அனைத்து செயலும் வடிவம் பெறும். குருவின் தரிசனமும், ஸ்ரீவாலாம்பிகையின் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைப்பது அற்புதத்திலும் அற் புதம்.

    அன்பர்களுக்கெல்லாம் இருபெரும் ஞானிகளை குருவாக தந்து, அவர்கள் அருகிலே தானும் அமர்ந்து அருள்பாலிப்பது ஸ்ரீ வாலையின் லீலா வினோதம். எனவேதான் இந்த ஆலயத்தில் பக்தியோடு பூஜிப்பவர்களுக்கு கேட்டவரமும், தியானம் செய்பவர்களுக்கு ஞானமும் கைகூடுகிறது. அமைதியாய் வந்து அன்னை சன்னிதானத்திலும், குரு சிஷ்யர்கள் பீடம் முன்பும் அமர்ந்து வணங்கி நின்றால் வேண்டும் வரம் கிடக்கிறது. சாதி மதம் கடந்து இவ்வாலயத்தில் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    இந்த நவீன யுகத்தில் பல அற்புதங்கள் இந்த பீடத்தில் நடை பெறுகிறது என்பதற்கு பல சாட்சிகள் உள்ளன. அதில் ஒன்று பட்டமரம் தளிர்ந்த வரலாறு.

    கோவிலின் தல விருட்சம் மஞ்சணத்தி மரம். இந்த மஞ்சணத்தி மரத்தின் அடியில்தான் வாலை குருசாமியும், காசியானந்தரும் வாலையம்பிகைக்கு பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இம்மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி காட்சி தரு கிறார். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை கோவிலின் பழமையை பறைசாற்றும் விதமாக இந்த மரம் விளங்கியது. திடீரென ஒரு நாள் மஞ்சணத்தி மரம் பட்டுப்போனது.

    பக்தர்கள் அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர். என்ன செய்வது? எனத் தெரியாமல் தவித்தனர். ‘புதிய மஞ்சணத்தி மரக்கன்றை நட்டு வளர்க்கலாம்’ என்று ஊர் மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், ‘பட்டமரம் துளிர்க்கும்’ என்ற உத்தரவு கிடைத்தது. அதன்படியே பட்டுப்போன மஞ்சணத்தி மரத்தின் நடுவில் தளிர் விட்டது. அந்த புதிய தளிர் செடிதான் வளர்ந்து, தற்போது தல விருட்சமாக காணப்படுகிறது. பழைய மரம் கோவில் வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புதிய மரத்தடியில் உச்சிஷ்ட கணபதி அருளாசி தருகிறார்.

    பக்தர் ஒருவர் சுவாமிக்கு பொருள் கொடுப்பதாக நினைத்து, அதை தனது வீட்டின் பீரோவில் வைத்து விட்டார். சில நாட்களில் அதை முற்றிலுமாக மறந்து விட்டார். ஒரு நாள் அவர் கோவில் சன்னிதானத்தில் நின்று வணங்கிய போது ‘எனக்குரிய பொருள் உன் வீட்டு பீரோலில் உள்ளது' என சுவாமி உணர்த்தினார். அதன் பிறகே அவருக்கு நினைவு வந்தது. உடனே சென்று அந்த பொருளை எடுத்து வந்து கோவிலில் ஒப் படைத்தார். இதுபோலவே பல நிகழ்வுகள் பக்தர்கள் வாழ்வில் நடந்தேறி இருக்கிறது.

    சித்தர் பெருமக்களை நம்பி வருவோருக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. இன்றும் பலர் இந்த ஆலயத்திற்கு வந்து, தொழில் தொடங்குவது, அரசு வேலை தேடுவது போன்ற காரியங்களுக்கு குரு - சிஷ்யர்களின் உத்தரவை வேண்டி நிற் கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் எப்போது சென்றாலும் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கிறது. அன்னதானம் சாப்பிடும் போது பக்தர்கள் தங்களுக்கு என்ன பிரார்த்தனை உள்ளதோ அதை வேண்டி சாப்பிட அது உடனே கைகூடுகிறது.

    ஆலய அமைப்பு

    முதலில் கொம்மடிக்கோட்டை அரசு பள்ளியில் இருந்து நேர் எதிரே உள்ள சாலையில் செல்லும்போது அங்கே பாலா சேத்திரம் உள்ளது. நுழைவு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால், இடது புறம் அகத்திய பெருமான் அருளாசி தருகிறார். எதிரே ஆலய முகப்பு நம்மை வரவேற்கிறது.

    வலது புறம் திரும்பினால் கல் மண்டபம் பிரமாண்டமாக காட்சியளிக்க, உள்ளே குருவும் சிஷ்யரும் ஒரு கருவறையில் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார்கள். வாலை குருசாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்திகேஸ்வரப் பெருமான் காட்சியளிக்கிறார்.


    பட்டுப்போன மஞ்சணத்தி மரம், தற்போதுள்ள தல விருட்சம்

    குரு - சீடர் சன்னிதிக்கு வலப்புறம் சந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சன்னிதி உள்ளது. ‘மனோன்மணி’ என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. ‘மன இருளை அழித்து ஞான நிலைக்கு அழைத்துச் செல்பவள்’ என்பது இதன் பொருள். பின்புறம், சுற்றுப் பிரகாரத்தில் கன்னி விநாயகரும், பாலமுருகனும், சண்டிகேஸ்வரரும், இடப்புறத்தில் தெற்குநோக்கி நடராஜர் - சிவகாமி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.

    தனிச்சன்னிதியில் தனி விமானத்துடன் பாலாம்பிகை வீற்றிருக்கிறார். அதற்கு வலப்புறம் வராகி அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் வட கிழக்கு மூலையில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்கிறார். ஆலயத்தின் பின்புறம் திருமாத்திரை தயாரிக்கும் கூடம் உள்ளது. மூலிகையை அம்மியில் அரைத்து மாத்திரைகள் உருவாக்கப்படுகிறது. இந்த திருமாத்திரையை 41 நாள் சாப்பிட்டு வந்தால், தீராத வியாதிகள் கூட நீங்கும் என்பது நம்பிக்கை.

    வருடம்தோறும் சித்திரை, ஆவணி மாதங்களில் 11 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெறுகின்றது. ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரசேகரர் - மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருமணம் தடை ஏற்படு பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தடை நீங்கி செல் கிறார்கள். இரவு சீர் கொண்டு செல்லுதல், அம்மி மிதித்தல், தேங்காய் உருட்டுதல், நலுங்கு வைத்தல் போன்ற சடங்குகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி, பவனி வருகிறார்கள்.

    அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும், மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. பவுர்ணமி அன்று மாலை வாலாம்பிகை அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருள்வார். அப்போது லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெறும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும், ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. மாதம் இரு பிரதோஷமும், உச்சிஷ்ட கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியும் சிறப்பாக நடைபெறுகிறது.

    வாலைகுருசாமிக்கும், காசியானந்தா சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றிபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். நாகருக்கு மஞ்சள் பொடி சாத்தி வர கடன் தொல்லை விலகுகிறது.

    சித்தர்கள் அனைவரும் குரு முகமாக தீட்சை பெற்றே, வாலை அம்மனை அடைந்தனர். அதேபோல, வாலைகுருசாமி, அவரது சீடர் காசியானந்தர் இருவரையும் முழுமையாக வணங்கிய பின்னரே, வாலையம்மனை வழிபட வேண்டும். அப்போதுதான் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    சிறுவர்கள் மீது விழுந்த பனைமரம்

    சுமார் 70 வருடங்களுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு சம்பவம் ஆலயத்திற்கு மேலும் புகழ் சேர்க்கிறது.

    வாலை குருசாமியின் வருஷாபிஷேக பூஜையின் இரண்டாவது நாள், அங்கிருந்த பனைமரத்தின் அடியில் ஆறு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய சூறைக் காற்றில், பனைமரத்தின் மட்டைக் கிளைகளுடன் கூடிய மேல்பகுதி ஒடிந்து விழுந்தது. மரத்தினடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது அந்த மட்டை கிளை விழுந்து, அவர்களை மூடி விட்டது. அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ‘என்ன ஆயிற்றோ’ என்ற அச்சத்துடன், அனைவரும் ஓடி வந்து மட்டைகளை அப்புறப் படுத்த, அதன் அடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்களும் சிறு காயம் கூட இல்லாமல் சிரித்தபடியே வெளியே வந்தனர். இந்த சிறுவர்களின் ஒருவர் 84 வயது பெரியவராக, அந்த சம்பவத்திற்கு சாட்சியம் கூறியபடி இன்றும் அந்த ஊரில் வலம் வருகிறார்.

    அமைவிடம்

    திசையன்விளையில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் இருந்தும், சாத்தான்குளம் மற்றும் உடன்குடியில் இருந்தும் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கொம்மடிக்கோட்டை. உடன்குடி, சாத்தான்குளத்தில் இருந்து பஸ்வசதிகள் உள்ளன. 
    இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர் திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆதித் திருமுறையை அடித்தளமாக வைத்து திருகயிலாய பரம்பரை என உருவாகியது தான் திருவாவடுதுறை. இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர் திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம். இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நெல்லையில் உள்ள திருவாவடுதுறைக் கிளை மடத்தோடு, நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்.

    வேலப்ப தேசிகர் தமது அருளாட்சி காலத்தில் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக் கோவிலுக்கு அடிக்கடிச் சென்று, அத்தல இறைவனை மனதார வணங்கி அங்கே முகாமிட்டு தங்குவார். அப்போது ஆலயத்திற்கு வருகைதரும் அனைத்து மக்களுக்கும் உடலில் ஏற்படும் நோய்களை தீர்த்ததுடன், மனதால் ஏற்படும் நோய்களையும் நீக்கிவைப்பார்.

    இந்தப் பகுதியை ஆண்டுக்கொண்டிருந்த பூலித்தேவன், வேலப்ப தேசிகரை குருவாக ஏற்றுக்கொண்டார். எப்போதுமே வேலப்ப தேசிகரை வணங்கிய பின்பே, தனது தினசரி காரியங்களை கவனிப்பார். அவரின் ஆலோசனைப்படி செயல்பட்டு வந்தார்.

    ஒருசமயம் பூலித்தேவருக்கு குன்ம வலி ஏற்பட்டது. இந்த வலியை சுவாமி தனது தவவலிமையால் போக்கினார். எனவே, சுவாமியின் ஆன்மிக பணிக்கு பூலித்தேவன் பல நிலங்களை வழங்கினார். அந்த நிலங்களில் மடம் அமைத்து, சுவாமி அருளாட்சி நடத்தினார்.

    காலங்கள் கடந்தது. சித்தர் பெருமக்களுக்கு தன் உடலை துறந்து மறு உடலுக்கு செல்வதில்தான் எத்தனை அலாதி பிரியம் உண்டு. இதுபோலவே வேலப்ப சுவாமி சமாதி கொள்ளத் தீர்மானித்தார். தனது சீடன் பூலித்தேவனிடம் கூறி ‘சங்கரன் கோவில் மேலவீதியில் எனக்கு பூமிக்குள் தவமிருக்க ஏற்பாடு செய்’ என்றார். அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

    புரட்டாசி மாதம் மூலநட்சத்திரத்தில் அவர் மடத்தில், பூமிக்கு உள்ளே எழுப்பப்பட்ட குழிக்குள் உயிரோடு சென்று சமாதி நிலை அடைந்தார். அதன் மேலே சமாதி எழுப்பப்பட்டது.

    இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு வசித்த செல்வந்தர்கள் சமாதியை எப்படியும் இங்கிருந்து அகற்றி விடவேண்டும் என்று துடியாய் துடித்தனர். ‘மக்கள் குடியிருக்கும் இடத்தில் சமாதியா? கட்ட விடமாட்டோம்' என்று திரண்டு நின்றனர்.

    பூலித்தேவன் விடவில்லை. தனது உறவினர்களையும், காவலர்களையும் கூட்டி வந்து சுவாமி சமாதியைக் காப்பாற்றினார். செல்வந்தர்களோ, எங்கள் உயிரே போனாலும் பின்வாங்க மாட்டோம் என்று எதிர்த்து நின்றனர். ஆகவே, கலகம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

    இருபக்கமும் சரி சமமாக மோதும் நிலை. ஒரு பக்கம் பூலித்தேவன் பட்டாளம். மறுபக்கம் செல்வந்தர்கள் பட்டாளம். என்ன நடக்க போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இவர்களை யார் சமாதானம் செய்வார்கள் என்பதும் புரியாத நிலை. அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

    அடக்க ஸ்தலத்தில் இருந்த சுவாமி ஸ்ரீ வேலப்ப தேசிகர், திடீரென்று பூமிக்கு மேலே வந்து நின்றார்.

    இருதரப்பினரும் அதிர்ந்தனர். ‘நான் எங்கே சமாதி ஆகி இருக்கிறேன்..? உயிரோடு தான் இருக்கிறேன். நான் சமாதி ஆனால் தானே பிரச்சினை’ என்று கூறினார்.

    இருதரப்பினரும் அதிர்ந்தனர். ஆகா.. இதுவரை சுவாமிகள் அடக்கம் ஆக வில்லை. ஐம்புலன்களையும் அடக்கி தவநிலையில்தான் இருந்துள்ளார் என ஆனந்தம் அடைந்தனர். அதன் பிறகு அனை வரும் சமாதானமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

    தற்போது கூட வேலப்ப தேசிகர் ஜீவசமாதியாக உள்ளார் என்று யாரும் நம்பவில்லை. சுவாமி உயிரோடு அமர்ந்து தியானத்தில் இருந்தப்படியே அருளாசி தருகிறார் என்றே நம்புகிறார்கள்.

    வேலப்ப தேசிக சுவாமிகள் சமாதி அடைந்தபிறகு, பூலித்தேவனுக்கு ஒரு சூழ்நிலையில் உதவினார். அது பூலித்தேவன் வரலாற்றில் நடந்த பிரமிப்பான ஒரு நிகழ்வு.

    1767-ல் பிரிட்டிஷ் தளபதி டொனர்டு பெரும்படை திரட்டி வந்து, நெற்கட்டான் செவல் கோட்டையை தகர்த்தான். மாவீரன் பூலித்தேவனைக் கைது செய்து பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சங்கரநயினார் திருக்கோவிலின் வாசலுக்கு வந்த பூலித்தேவன், ‘இறைவனை வழிபட வேண்டும். எனக்கு அனுமதி தாருங்கள்' எனக் கேட்டார்.



    அதன் படி இறைவனை வழிபட பூலித்தேவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன், திடீரென்று ஏற்பட்ட புகையால் காணாமல் போய் விட்டார். அதன்பின் ஆங்கிலேயரால் அவரை பிடிக்கவே முடியவில்லை. இந்த உலகுக்கும் அவர் தென்படாமல் மாயமாக மறைந்து விட்டார்.

    எப்படி இது நடந்தது?. இது நடக்க யார் காரணம்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு வேலப்ப தேசிகர் மூலமாகவே விடை கிடைத்தது.

    பூலித்தேவனை கைது செய்து, ஆங்கிலேயர்கள் இழுத்து வந்தபோது, ஸ்ரீ வேலப்பதேசிகர் கோவில் முன்பு கொண்டு வந்தனர். அங்கே ஒரு நிமிடம் பூலித்தேவன் நின்று, தனது குருவை நோக்கி மனதுருக வேண்டினார். ‘நான் மானத்தோடு வானம் செல்லுதற்கான வரத்தைத் தந்தருளுங்கள்’ என்றார்.

    உடனே சூட்சும உடலோடு வெளிவந்த வேலப்பதேசிகர், பூலித்தேவனுக்கு மட்டுமே தென்பட்டார்.

    ‘சீடனே வா என்னோடு’ என்று முன்னால் சென்றார். பின்னால் நடந்தான் மாவீரன். ஆலய வாசலில் நின்று சாமி கும்பிட அனுமதி பெற்றார். வெள்ளையரும் அனுமதி கொடுத்தார்கள். உள்ளே போன குருவின் பின்னே இவரும் சென்றார். குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றவுடன் தானே அவரது விலங்கு சுக்கு நூறாக உடைந்தது.

    சுவாமி சன்னிதி அருகே நாற்சதுர மந்திர வேலியிட்டு, அதனுள் அவரை நிறுத்தி வைத்தார் குரு. ‘பூலித்தேவா! இனி நீ யார் கண்ணிலேயும் படமாட்டாய்! உடலோடு சொர்க்கம் சேர்வாய்’ என்று தியானத்திலே மூழ்கினார் அருவ நிலையில் இருந்த வேலப்பர்.

    குரு மொழிக்கு ஏது மறு மொழி...?. அப்படியே நடந்தது. பூலித்தேவன் சொர்க்கத்துக்கே சென்று விட்டார்.

    வெள்ளையர் பட்டாளம் ஆலயம் முழுதும் சல்லடை போட்டு சலித்தது. பீரங்கியும், துப்பாக்கியும் பிரணவத்தை வெல்ல முடியுமா என்ன?. ஆங்கிலேயர்கள் தோற்றுப் போனார்கள்.

    ஆனாலும் மற்றவர்கள் பயப்படவேண்டும் என்று ஏதோ ஒரு பிணத்தை களத்து மேட்டில் வைத்து தீயிட்டு, இதுதான் பூலித்தேவன் என்று அவரது வழக்கை ஆங்கிலேய நிர்வாகம் முடித்து விட்டது என்பது இப்பகுதி மக்கள் தற்போதும் பேசும் ஒரு வரலாறு ஆகும்.

    பிரம்மரிஷி விசுவாமித்திரர் கூட, திரிசங்குக்கு நிரந்தர சொர்க்கத்தை தர முடியவில்லை. திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானமாக விளங்கிய வேலப்ப தேசிகர், பூலித்தேவனை சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த கலியுகத்தில் இது எவ்வளவு பெரிய விந்தையான செயல்.

    சங்கரன்கோவிலில் தற்போதும் சங்கர நாராயணர் கோவில் உள்ளே பூலித்தேவன் அறை என்று ஒன்று உள்ளது. இதுதான் பூலித்தேவன் காணாமல் போன இடம். அதற்கான அறிவிப்பு பலகையுடன் அந்த அறை நமக்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பல அற்புதங்களை பழங்காலத்தில் நிகழ்த்திய வேலப்பர் தேசிகர், தற்போதும் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அருளாசியை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். இங்கு விளக்கு போட்டு தேசிகரை வணங்கி வருகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பெரும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் என பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து விளக்கு ஏற்றி வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது.

    ஒருவர் தன் வாழ்வில் பிறவி எடுப்பதே தன்னுடைய கர்ம வினையை போக்கத்தான். வேலப்ப தேசிகரின் சமாதிக்கு வந்து வணங்கி நின்றால், அவர்களுடைய கர்ம வினை போக்கப்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    வேலப்ப தேசிக மூர்த்திகள் ஜீவ சமாதி நிலையிலிருந்து தம்மை வணங்க வரும் அனைவருக்கும் திருவருளும் குருவருளும் வழங்கி அருள்கிறார்கள். இவ்விடத்தில் நாள்தோறும் வழிபாடும், வியாழக்கிழமை தோறும் வார வழிபாடும் நடை பெறுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மூலநட்சத்திரம் அன்று குருபூஜையும் நடைபெறும். குருபூஜையில் சாதுக்கள் உள்பட பக்தர்கள் பலரும் கலந்துகொள்வார்கள். அன்றைக்கு அன்னதானம் மிக பிரமாண்டமாக நடைபெறும்.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ரத வீதியில் சங்கரநாராயணர் கோவிலுக்கு பின்புறத்தில் வேலப்ப தேசிகர் சுவாமிகளின் சித்தர் பீடம் உள்ளது. திரு நெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து நேரடி ரெயில் வசதியும் உள்ளது.

    நோய் தீர்க்கும் ஸ்ரீசக்கரம்

    ஆதிசங்கரர் பல ஆலயங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தவர். அவரை பின்பற்றியே வேலப்ப தேசிகர், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம் ஒன்றைப் பதித்து அருளினார். எனவே இவரை ஆதிசங்கரரின் மறு அவதாரம் என பக்தர்கள் போற்றுகிறார்கள். ஸ்ரீ சக்கரம் முன்பு அமர்ந்து வழிபடுவோர் பில்லி, சூனியம், சித்தப்பிரமை போன்றவை நீங்கப் பெறுகிறார்கள்.

    பொதுவாக ஸ்ரீ சக்கரம் கோவிலில் மூல ஸ்தானத்துக்கு அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் மேல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படுவது தான் வழக்கம். ஆனால் சங்கரன்கோவிலில் மட்டும் மூலஸ்தானத்தில் வெளியே தரைப்பகுதியில் ஸ்ரீசக்கரத்தினை, வேலப்ப தேசிக சுவாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    இந்த ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தால், தன் உடலில் உள்ள எதிர்மறை சக்தி அனைத்தையும் நம்முடைய மூலாதர சக்கரம் வழியாக ஸ்ரீசக்கரம் பெற்றுக்கொள்ளும். சங்கரன்கோவிலில் உள்ள பல பெருமைகளில், வேலப்ப தேசிகர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரமும் ஒன்று. எனவே இந்த சக்கரத்தினை தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். 
    ×