search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddhar"

    முருகப்பெருமானை பிள்ளையாகப் பெற்று, தன் சொத்துகளை எல்லாம் உதறி முருகனுக்காக தொண்டாற்றியவர் சிவகாமி பரதேசி அம்மையார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முருகப்பெருமானை பிள்ளையாகப் பெற்று, தன் சொத்துகளை எல்லாம் உதறி முருகனுக்காக தொண்டாற்றியவர் சிவகாமி பரதேசி அம்மையார். அவர் ஒரு சமயம் திருச்செந்தூர் முருகன் கோவில் தேரை வடம் பிடித்து இழுக்க முயற்சித்த போது, அங்கிருந்தவர்கள் தடுத்தனர். எனவே ‘தேர் நகரக்கூடாது’ என்று தன் தனயனான முருகப்பெருமானிடம் வேண்டுகோள் விடுத்து விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்துகொண்டார்.

    சிவகாமி பரதேசி அம்மையார், தேர் வடத்தை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஒரு அடி கூட தேர் நகரவில்லை. அனைவரும் போராடிப் பார்த்தனர்; எந்த பலனும் கிடைக்கவில்லை. விழா நடத்துபவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக முருகனின் அடியவர்கள் சிலரிடம் சென்று, ‘தேர் நகராததற்கு என்ன காரணம்?’ என்று கேட்டனர்.

    அவர்கள், சிவகாமி பரதேசி அம்மையாரைப் பற்றியும், அவரை ஒருவர் நிந்தித்தது பற்றியும் கூறினர். மேலும் அந்த அம்மையார், முருகப்பெருமானின் அன்னையாகும் வரம் பெற்றவர் என்றும் எடுத்துரைத்தனர். இதனால் பதறிப்போன விழாக்குழுவினர், உடனடியாக ஓடிச் சென்று கடற்கரையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த சிவகாமி பரதேசி அம்மையாரை அழைத்து வந்தனர். அவர் தேர் வடத்தைப் பிடித்து இழுத்த பிறகே, தேர் அங்கிருந்து நகர்ந்தது.

    இதனால் அவரது புகழ் எட்டுத்திக்கும் பரவியது.

    பண்பொழி வந்த சிவகாமி பரதேசி அம்மையார், அங்கு புது தேரை உருவாக்கினார். வண்டாடும் பொட்டலில் அன்னதான சத்திரம் கட்டினார். அதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளை பராமரிக்க பசு மண்டபம் அமைத்தார். ராகு- கேது வணங்கிய உச்சிஷ்ட கணபதியை பிரதிஷ்டை செய்தார். அதன் மீது மண்டபம் கட்டி வழிபாட்டுக்கு கொண்டு வந்தார். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவை, திருமலைக் கோவிலிலும், வண்டாடும் பொட்டலிலும் பத்து தினங்கள் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

    ஒரு நாள் முருகப்பெருமான், சிவகாமி பரதேசி அம்மையார் கனவில் தோன்றி, ‘தாயே! நாளைக்கு தாங்கள் வில்வண்டியில் புளியரைக்குப் புறப்படுங்கள். அவ்வூரில் உள்ள மிகப்பெரிய வயல்வெளியில் வண்டியை நிறுத்திவிட்டு, காளைகளை அவிழ்த்து விடுங்கள். அந்த காளைகள் ஓரிடத்தில் நின்று மண்ணை கால்களால் கிளறும். அந்த இடத்தில் எனக்கு பாத்தியப்பட்ட சொத்து பட்டயம் இருக்கிறது’ என்று கூறி மறைந்தார்.

    அந்த கனவிற்குப் பிறகு சிவகாமி பரதேசி அம்மையாருக்கு தூக்கம் வரவில்லை. விடிய விடிய விழுத்திருந்தார். மறுநாள் காலை விடிந்ததும் விடியாமலும் வில்வண்டியை கட்டிக்கொண்டார். தன் கணவரையும், இன்னும் சிலரையும் அழைத்துக் கொண்டு புளியரைக்கு சென்றார். அங்கு வயல்வெளியில் வண்டியை நிறுத்தி, காளைகளை அவிழ்த்து விட்டார். அது வெறிபிடித்தது போல் ஓடி, ஓரிடத்தில் நின்று மண்ணைக் கிளறியது.

    சிவகாமி பரதேசி அம்மையாரின் சமாதி

    சிவகாமி பரதேசி அம்மையார் கட்டளைப்படி, உடன் வந்தவர்கள் அந்த இடத்தைத் தோண்டினார்கள். அங்கே 10 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கல் ஒன்று கிடைத்தது. அதில் வேலும் மயிலும் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கல்லில் முருகப்பெருமானுக்கு உரிய 160 ஏக்கர் அளவிலான நன்செய் நிலம் மற்றும் தோப்பு துரவுகளுக்கான விவரப் பட்டியல் இருந்தது.

    அந்தச் சொத்துகளை எல்லாம், ராயர் ஒருவர் பயன்படுத்தி வந்தார். ஆனால் திருமலை முருகன் கோவிலுக்கு அவர் எந்த திருப்பணிக்கும் உதவவில்லை.

    தன் மகனுக்கான சொத்துகளை எப்படி மீட்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார், சிவகாமி பரதேசி அம்மையார்.

    சிந்தனையின் ஊடே உறங்கியும் போனார். அப்போது மீண்டும் அவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நீங்கள் நாளை காலை பக்தர்களை திரட்டிக்கொண்டு புளியரைக்குச் செல்லுங்கள். அங்கு நமக்கு சொந்தமான நிலங்களில் ஏர் பிடித்து உழுங்கள். நான் உங்களுக்கு துணையாக வருவேன்’ என்றார்.

    மகனின் ஆணை கிடைத்ததும், மறுநாள் அதிகாலையிலேயே பக்தர்கள் பலரை அழைத்துக் கொண்டு, புளியரைச் சென்று முருகனுக்கு உரிய வயல்வெளியில் ஏர் பிடித்து உழுதார்.

    இதையறிந்த ராயர், தனது ஆட்களை திரட்டிக் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தான். பின் காளைகளை அவிழ்த்து விட்டு, பக்தர்களை விரட்ட முயன்றான்.

    அப்போது காளைகள் அனைத்தும் ஆவேசம் கொண்டது போல், ராயரையும், அவர் திரட்டி வந்த ஆட்களையும் விரட்டின. இதையடுத்து அவர்கள் பயந்து ஓடி ஒளிந்தனர். பிரச்சினை முடிந்தது என்று பரதேசி அம்மையார் நினைத்தார். ஆனால் ராயர் விடுவதாக இல்லை. நீதிமன்றத்தை நாடினார். ஆனால் முருகப்பெருமானின் அருளால் நீதிமன்றத்திலும், சிவகாமி பரதேசி அம்மையாருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

    இதையடுத்தும் பல காலம் முருகப்பெருமானுக்கு திருப்பணியாற்றி வந்தார், சிவகாமி பரதேசி அம்மையார். இவர் சமாதி நிலை அடைந்த காலம் மிக விசேஷமானது. முருகப்பெருமான் பிறந்த நன்நாளாம் வைகாசி விசாகத்தன்று, தன் மகனான திருமலை முருகனின் திருவடிகளில் கலந்தார். திருமலைக்குக் கீழாக, முருகன் சன்னிதிக்கு நேராக, வண்டாடும் பொட்டலில் சிவகாமி பரதேசியம்மையாரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இங்கு வைகாசி விசாகத்தன்று குருபூஜை நடக்கிறது.

    பக்தர்கள் பிரதிஷ்டை செய்த சிவகாமி பரதேசி அம்மையார் சிலை

    வண்டாடும் பொட்டலில் தான் தனக்கு சமாதி அமைக்கவேண்டும் என பரதேசிஅம்மையார் உயிரோடு இருக்கும் போதே முடிவு செய்துவிட்டார். திருமலை குமரனின் மூல இடத்தில் புளியமர அடியில் அவர் வீற்றிருப்பது போலவே, தான் சமாதி ஆகும் இடத்திலும் ஒரு புளிய மரத்தினை உருவாக்கினார். அதற்கான கருங்கல் மண்டபம் கட்டி வைத்து விட்டார்.

    அம்மையார் திருப்பணி செய்த 626 படிகளில் ஏறிச் செல்ல, வயதானவர்கள் திணறி வந்தார்கள். எனவே கீழே இருந்தே முருகனை தரிசித்து வந்தனர். இவர்கள் பிரச்சினை தீர 2010-ல் ரூ.5½ கோடி செலவில் இரு வாகனங்கள் சென்று வருகின்ற அளவுக்கு மலை சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பணி முடிந்து வாகனங்கள் மலை உச்சி வரை செல்கின்றன.

    இந்த திருப்பணி செய்தவர்கள், சிவகாமி பரதேசி அம்மையாரின் சிலை ஒன்றையும் உருவாக்கினர். அந்த சிலை வண்டாடும் பொட்டலில், பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    இவ்விடம் வந்தாலே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கிறது. மேலும் பெண் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இவ்விடத்தில் வந்து அம்மையை வணங்கி நின்றால், 100 சித்தர் பீடத்துக்கு சென்று தரிசித்த பலன் கிடைப்பதாக ஐதீகம். நாள் பட்ட நோய்கள் எல்லாம் நீங்குகிறது. கஷ்டங்கள் எல்லாம் மறைகிறது. நீண்ட நாள் வழக்கு தீருகிறது. இழந்த பொருள் மீண்டும் கிடைக்கிறது. வீடு கட்டும் யோகம் உருவாகுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக முருகப்பெருமானை போன்ற அழகான குழந்தைப்பேறு கிடைக்கிறது.

    சிவகாமி பரதேசி அம்மையை வணங்கி விட்டு, அருகில் உள்ள ராகு-கேது வழிபட்ட விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் கோவில் அடிவாரத்தில் உள்ள வல்லப விநாயகரை வணங்கி முருகன் பாதத்தினையும், அதன் அருகே பாறையில் புடைப்பு சிற்பமாக கூப்பிட்ட கையோடு அருள்புரியும் சங்கிலி மாடனையும் வணங்கி மலை மீது ஏறலாம்.

    அமைவிடம்

    நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் வண்டாடும் பொட்டல் உள்ளது. செங்கோட்டையில் 5 கிலோமீட்டரில் வண்டாடும் பொட்டலை அடையலாம். தென்காசி, செங்கோட்டைக்கு ரெயில் வசதி உண்டு. செங்கோட்டையில் அச்சன் கோவில் செல்லும் வழியில் பண்பொழி என்னும் இடத்தில் அம்மை சமாதியும், முருகன் கோவிலும் உள்ளது.
    திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள்.
    திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அழகுடன் காட்சியளிக்கும் அற்புதமான இடம்தான் ‘பண்பொழி’. இங்குள்ள திருமலை குமரன், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலைவன். பெரும்பாலுமே தெய்வத்தினை தனது தந்தையாக, தாயாக போற்றி வணங்குவது தான் வழக்கம். ஆனால் திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள். பண்பொழி மலை அடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டலில் அடங்கி அருள்தரும் அற்புத பெண் சித்தரான இவரின் அற்புதங்கள் மிகச்சிறப்பானவை. பெண் சாது ஒருவர் அடங்கிய இடத்தில் அருள் தேடினால், அங்கு பல நூறு மடங்கு அருள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

    திருமலை குமரன் திருக்கோவில் சிறப்பாகவும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு சிவகாமி பரதேசியம்மையார் தான் காரணம் என்றால் மிகையல்ல. பண்பொழி திருமலை முருகனை பற்றி பேசும் போதெல்லாம், சிவகாமி பரதேசியம்மையாரை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. செல்வச் செழிப்பாக பிறந்து வளர்ந்து, அனைத்தையும் துறந்து, முருகப்பெருமானுக்காக பரதேசி வேடம் பூண்டு, அருளாட்சி புரிந்தவர் அந்த பெண் சித்தர்.

    பண்பொழி என்பது மிகவும் விசேஷமான ஊர். இவ்வூரில் தான் அருணகிரிநாதருக்கு பண் (பாடலை) பொழிய ஆசி வழங்கினார், முருகன். எனவே இத்தலம் ‘பண்பொழி’ எனப் பெயர் பெற்றது. இந்நகருக்கு அருகாமையில் உள்ள பெரும் ஊர் ‘அச்சன் புதூர்’. இவ்வூரில் பெரும் நிலக்கிழராக வாழ்ந்து வந்தவர் கங்கை முத்து தேவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பெரும் நிலக்கிழாரான சிவகாமி அம்மையாரை மணந்தார். மேற்குதொடர்ச்சி மலையில் பல நூறு ஏக்கர் நிலங்களை தன்னகத்தே கொண்டவர்கள் இவர்கள். தங்களின் சொத்தை பராமரிக்க பல வேலையாட்களை வைத்திருந்தனர்.

    எல்லா செல்வமும் அவர்களிடம் இருந்தும், குழந்தைச் செல்வம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் மன அமைதி இன்றி தவித்தனர். இதையடுத்து அவர்கள் இறை சேவையில் இறங்கினர். பாத யாத்திரிகர்களுக்கு திருப்பணி செய்தனர். அச்சன்புதூர் அருகில் பல கல் மண்ட பங்களை அமைத்து, அதில் வழிபோக்கர்கள் தங்கி செல்ல வழிவகுத்தனர். தெய்வ பக்தி, அடியார் களை அன்புடன் உபசரிப்பது முதலான அறச் செயல்களை கணவரின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக செய்து வந்தார் சிவகாமி பரதேசியம் மையார்.

    நெடுவயல் கிராமத்திலும் அடியார்கள் தங்கி செல்வதற்காக, கல் மண்டபத்தைக் கட்டிவைத்தார்கள். அந்த மண்டபத்தில் தான் ‘வாலர் மஸ்தான்’ எனும் இஸ்லாமியத் துறவி ஒருவர் வந்து தங்கினார். அவர் தவ வலிமையில் சிறந்தவர். சித்து விளையாட்டுகளிலும் வல்லவர். தன் இடத்தைத் தேடி வந்த அந்தத் துறவிக்கு, அன்போடு பணிவிடை செய்து அன்னமிட்டு உபசரித்து வந்தார், சிவகாமி பரதேசிம்மையார்.

    இந்த செயல் உறவுக்காரர்களுக்கு பிடிக்க வில்லை. ‘குழந்தை குட்டி இல்லை. இருக்கிற சொத்துகளை இப்படி வாரி இறைத்தால், இறுதியில் பிச்சைதான் எடுக்கவேண்டும். இருக்கும் சொத்து களை நமக்காவது கொடுத்தால், நம் பிள்ளைக் குட்டிகளாவது நல்லா இருக்கும். அதையும் செய்யாமல் இப்படி பணத்தை வர்றவனுக்கும், போறவனுக்கும் வாரிக் கொடுக்கிறார்களே' என அங்கலாய்த்தனர்.

    அதோடு நில்லாமல், சிவகாமி பரேதசியம் மையார் மீது வீண் பழி சுமத்தி வீட்டோடு உட்கார வைத்து விடவும் முடிவு செய்தனர். அதன்படி சிவகாமி பரதேசியம்மையாரின் கற்பு நெறி வாழ்க்கைக்கு களங்கம் கற்பித்தனர். இதைப் பொறுக்க முடியாத அம்மையார், ‘நான் கற்புநிலை தவறாதவள், களங்கமற்றவள் என்றால், நான் தெருவின் மேலக்கோடியில் திரும்பும் முன், என்னை பழித்து பேசியவரின் வீட்டில் இடி விழட்டும்' என்று சாபமிட்டார். அதன் பின் அங்கிருந்து அவர் கிளம்பினார்.

    அவர் சாபமிட்ட காலம் கோடைகாலம். சுட்டெரிக்கும் வெயில் காலை 9 மணிக்கே வந்து தெருக்களை வறுத்தெடுத்தது. ஆனாலும் அம்மை யின் சபதம் ஏற்று, வருண பகவான் வெகுண்டு எழுந்தான். திடீரென்று மின்னலும், இடியும் தோன்றியது. மறு நொடியே அம்மையாரை பற்றி தவறாக பேசியவர் வீட்டில் இடி விழுந்தது. எனவே அவரைப் பற்றி புறம் பேசியவர்கள், அவரது சக்தியைக் கண்டு அமைதி அடைந்தனர். பலரும் அவரை வணங்கத் தொடங்கினர்.

    ஆனால் சிவகாமி பரதேசியம்மையின் மனமோ அமைதி இன்றி தவித்தது. ‘தனக்கு குழந்தை இல்லாதது தானே பெரும் குறை. இது பற்றி மஸ்தானிடம் கேட்போம்' என கல் மடத்துக்கு கணவருடன் சென்றார்.

    மஸ்தான், ‘தாயே! நீயோ தெய்வப்பிறவி. உனக் கென்று குழந்தைபேறு ஏது? உனக்கு தென்திருமலை அடிவாரத்தில் அகத்தியருக்கே தமிழ் போதித்த முருகக் கடவுளே மகனாய் கிடைப்பான்' என அருளினார்.

    ‘ஐயா! என் குழந்தை எங்கே இருப்பான்? எனக்கு எப்படி கிடைப்பான்?' என சிவகாமி அம்மையார் கேட்டார்.

    ‘கவலைப்படாதே.. பண்பொழி மலை அடிவாரத் தில், நீ செல்லும் இடத்தில் ஒரு பொட்டல் காடு உண்டு. அதன் மேலே வண்டு ஆடிக்கொண் டிருக்கும். அங்குதான் முருகன், குழந்தையாய் உன் கையில் கிடைப்பார்’ என அருளினார்.

    தம்பதியினர் அங்கிருந்து கிளம்பினர். தங்களோடு சிறு குழந்தையில் இருந்து உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த சங்கிலிமாடன் என்பவரையும் உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினர்.

    ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது. அவ்விடம் பெரும் பொட்டல்காடாக இருந்தது. அதில் கரும் வண்டு ஒன்று ரீங்காரமிட்டு வட்டமிட்டது. அதன் அருகே உள்ள குளக்கரையில் முருகன், குழந்தையாக கிடந்தார். அவரின் அழுகுரல் கேட்டு அருகே ஓடிச்சென்று அந்த குழந்தையை தழுவி தன் மார்போடு அணைத்து ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்வை,

    ‘மகனே யென்றம்மை தானும்
    மார்பொடு சேயைச் சேர்த்து
    முகத்தோடு முகத்தை வைத்து
    முத்தமிட்டணைத்துக் கொண்டு
    மகனே யென்றழைத்தபோது
    மார்க்கண்டன் ஒடுங்கி நெஞ்சம்
    பகவனை சேர்ந்த ணந்த
    பான்மைபோல் இருந்த தைய’

    என அச்சன்புதூர் கவிஞர் சுப்பையா, தனது ‘சிவகாமி அம் மையார் கவிதை வரலாறு' நூலில் நெஞ்சம் நெகிழ குறிப்பிடுகிறார்.

    கோவில் திருக்குளம்

    குழந்தையாக இருந்த முருகப்பெருமான், திருமலை முருகனாய் சிவகாமி அம்மைக்கு காட்சி தந்து, அதன் பின் திரு மலையில் மறைந்தார். முருகன் வண்டாடிய பொட்டலில் கிடை த்த காரணத்தினால், இவ்வூரு க்கு ‘வண்டாடும் பொட்டல்’ என பெயர் விளங்கியது.

    முருகன் மறைந்த திருமலை என்னும் பைம்பொழில் சிறப்பு பெற்ற மலை. அக்காலத்தில் முள்செடிகளும் மூங்கில் புதர்களும் நிறைந்த காட்டுப் பகுதியாக கிடந்தது. அது போதாதென்று கொடிய காட்டு விலங்குகளும் அங்குச் சுற்றித் திரிந்தன. எனவே பகல் நேரத்தில் கூட அங்கே செல்ல மக்கள் அச்சப்பட்டனர். ஆனால் சிவகாமி பரதேசியம்மையார், எதையுமே லட்சியம் செய்யாமல் மலை மீது ஏறினார். மலைக்கு மேல் அருள்பாலித்த திருமலைக்குமார சுவாமியை தரிசித்தார்.

    சிறப்பு மிக்க அந்த தெய்வத்தையே, மகனாக பெற்றதை எண்ணி மகிழ்ந்த சிவகாமி பரதேசியம் மையார், அந்த ஆலயத்திற்கு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்காக வண்டாடும் பொட்டலில் மடம் அமைத்தார். திருப்பணி தொடங்கியவுடன் பரதேசியம்மையாரின் வடிவமும் மாறியது. காவி உடுத்தினார். கழுத்தில் ருத்ராட்சம் தரித்தார். கரங்களில் வேலாயுதமும் கமண்டலமும் கொண்டு, நெற்றியில் திருநீறும் குங்குமமும் அணிந்து திருமலை குமரனுக்கு சேவையைத் தொடங்கினார்.

    யாத்திரியர்களுக்குத் தினமும் உணவு வழங்கினார். கோடை காலத்தில் நீர் மோர், பானகம் வழங்கினார். தான் தொடங்கிவைத்த திருப்பணிகள் நிலையாக நடைபெற, ஏராளமான நன்செய் நிலங்களையும் மானியமாக்கி வைத்தார். மலையின் மேலே உள்ள வசந்த மண்டபம் திருப்பணி தொடங்கியது. ஏறத்தாழ 500 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையில் பணியை தொடங்கினார். இதற்காக முருகன் அடிமைகளை அழைத்தார். தற்போது போல அப்போது படிகளும் கிடையாது. வாகனங்கள் ஏறிச்செல்ல வழியும் கிடையாது. செல்லும் வழியில் கால் வைக்க மட்டுமே பாறையில் சிறு சிறு குழி இருக்கும். அதன் வழியாகத்தான் பாறைகளை தூக்கிச் செல்ல வேண்டும்.

    சிவகாமி பரதேசி அம்மையார் நினைத்திருந்தால் திருமலையை குடைந்து கூட, முருகப்பெருமான் ஆலயத்தை அமைத்திருக்க முடியும். ஆனால் ‘இது தன் புதல்வன் மலை. இம்மலைக்கு பங்கம் எதுவும் ஏற்படக்கூடாது’ என்பதற்காக, வேறு இடங்களில் இருந்து கற்களைக் கொண்டு வந்தார்.

    மலை உச்சிக்கு தன்னோடு வேலை செய்யும் ஊழியர்களோடு, அம்மையாரும் தலைச்சுமையாக கற்களை தூக்கிச் சென்றார். நடந்து கூட செல்லமுடியாத இடத்தில் பாறைகளை முதுகில் தூக்கி கொண்டு, மேலே கொண்டு சென்றவர் களிடம் இருந்து நழுவி விழும் பாறைகளை தனது தலையால் தடுத்து, பின் தூக்கிச் சென்றும் திருப்பணி செய்தார். அதற்கு அவரது தெய்வ சக்தி ஒத்துழைத்தது. சில நேரங்களில் பாறைகளை கயிறு கட்டி இழுத்த போது, தனது தலைமுடியை சேர்த்துக்கட்டி பாறை களை மேலே இழுத்துச் சென்றுள்ளார். இப்படித்தான், திருமலையில் வசந்த மண்டபம் உள்பட பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

    அதோடு மட்டுமல்லாமல் கோவில் தெப்பக்குளத்தை முழுவதுமாக தூர்வாரி, அதை செம்மைப்படுத்தும் பணியையும் மிக கச்சிதமாக செய்து முடித்தார். தற் போதும் கோயில் மலை உச்சியில் அழ காகக் காட்சி தரும் அந்த தெப்பக்குளம், சிவகாமி பரதேசி அம்மையார் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது.

    அம்மையார் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையிலும், திருச்செந்தூர் செல்வது வழக்கம். அங்கு முருகப் பெருமானை தரிசித்து விட்டு நடைபயண மாகவே பண்பொழிக்கு திரும்ப வந்துவிடுவார்.

    ஒரு நாள் செந்தூரில் ஆடிவரும் முருகப் பெருமானின் தேரை பார்த்தார். அவன் அழகு முகத்தைக் கண்டு ஓடோடி அருகில் சென்றார். தேரின் வடத்தினை பிடித்து இழுத்தார்.

    ‘யார் இது.. பெண் பரதேசி. தூரப்போ' என தடுத்தார் ஒருவர். கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அம்மையார்.

    ‘என் மகன் தேரை நான் வடம்பிடித்து இழுக்கக் கூடாதா? ‘முருகா! நீ என் மகன் தான் என்றால், இந்தத் தேர் நகரக்கூடாது' என ஆணையிட்டு விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டார்.

    தேர் நகர்ந்ததா?

    திருமலைக்கு முருகன் வந்த கதை


    திருமலையை ‘பிரணவத்தின் மலை’ என்றும் கூறுவார்கள். பிரணவத்தின் வடிவான ‘ஓம்’ என்ற வடிவில் இம்மலை இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. ‘அகத்தியம்’ என்னும் முதல் தமிழ் இலக்கண நூலை அருளியவர் அகத்தியர். அவருக்கும் தமிழ் போதித்தவர் முருகப்பெருமான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தான், ஓம் வடிவில் அமைந்த பண்பொழி திரு லையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து அகத்தியர் வணங்கினார் என்று கூறுகிறார்கள். மேலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அகத்தியர் அமைத்தார்.

    இந்த பூஞ்சுனையில் ஞாயிறு, திங்கள், அக்கினி ஆகிய மூவர் பெயராலும் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். இக்குழியில் எப்போதும் நீர் நின்று கொண்டிருக்கும். இந்த குழியில் நீர் குறைந்து விடுமானால் உடனே மழை பொழிந்து குழியும், சுனையும் நிறைந்து விடும் என்பது ஐதீகம். இச்சுனையில் நாள்தோறும் குவளைப்பூ ஒன்று பூக்கும். அப் பூவினைக் கொண்டு, சப்த கன்னியர்கள் முருகனை வழிப்பட்டு வந்திருக்கிறார்கள்.

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பூவன் பட்டர் என்பவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் அருகில் உள்ள மூங்கில் காட்டு புதரில் புதையுண்டு கிடக்கிறேன். நான் இருக்கும் இடத்தை எறும்புகள் கூட்டம் கூட்டமாக வந்து அடையாளம் காட்டும். என்னை எடுத்து வந்து திருமலையில் பிரதிஷ்டை செய். நான் அனைத்து மக்களுக்கும் காக்கும் தெய்வமாக இருப்பேன்’ என்று கூறினார்.

    அதன்படி மறுநாள் பூவன் பட்டர் மூங்கில் காட்டுக்குள் சென்றார். அங்கு எறும்புகள் அடையாளம் காட்டும் இடத்தில் முருகனை கண்டெடுத்து திருமலையில் பிரதிஷ்டை செய்தார். அது முதல் திருமலை குமரன் காக்கும் தெய்வமாக இருந்து அருள் வழங்கி வருகிறார். 
    திருநெல்வேலி நவ்வலடியில் கடல் தண்ணீரை தனது கையசைவில் விரட்டிய சித்தர், வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.
    திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலூகாவில் அமைந்துள்ள கடற்கரை நகரம் ‘நவ்வலடி’. கடற்கரை சாலையில் உவரிக்கும், வித்தியாபதி நகருக்கும் இடையே அமைந்துள்ள அழகான ஊர். இவ்வூரில் தான் கடல் தண்ணீரை தனது கையசைவில் விரட்டிய சித்தர், வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

    திசையன்விளை அடுத்த இடையன்குடி அருகே உள்ள சிற்றூர் பொத்தகாலன் விளை. இவ்வூரில் நாடாழ்வாருக்கும் - கோசலா பிராட்டியாருக்கும் கி.பி. 1848-ம் ஆண்டு மகனாய் பிறந்தவர் வேலாயுத சுவாமிகள். சிறு வயது முதலே சிவன் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். அவரது வாய் எப்போதும் சிவ நாமத்தையே உச்சரித்தபடி இருக்கும்.

    தானாகவே ஞானம் பெற்று வல்லமை மிக்கவராக வாழ்ந்த காரணத்தினால், ஊர்க்காரர்கள் அவரை ‘வல்லமையுள்ள வேலாயுதம்’ என்று அழைத்தனர். ஒரு கட்டத்தில் அந்த ஊரில் வேறு ஒரு மதம் பரவியது. ஊர் மக்கள் அனைவரும் பிற மதத்தை தழுவிய காரணத்தால், தனது தாயாருடன் அந்த ஊரை விட்டு வெளியேறினார் வேலாயுதம் சுவாமிகள்.

    குட்டம் என்னும் ஊருக்கு வந்தார். அங்கு சில காலம் வாசம் செய்தார். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய அங்கிருந்து கிளம்பினார். இப்போது அவர் வந்தது ராதாபுரம் அருகே உயத்தனூர் என்னும் கிராமம். அவ்வூரைச் சேர்ந்த குக்கிராமம் தான் வட்ட விளை. இதன் ஆதி பெயர் பூந்தோட்டம். பெயருக்கு ஏற்றாற்போல, பூத்துக் குலுங்கும் தோட்டங்கள் நிறைந்த ஊராகவே அது விளங்கியது.

    இவ்வூரில் உள்ள நாராயணசாமி கோவிலில் வடநாட்டை சேர்ந்த சுவாமி ஒருவர் தங்கி பணிவிடை செய்து வந்தார். வேலாயுத சுவாமியை கண்ட அவர், ‘வா... வா.. வேலாயுதம். உன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ! இங்கிருந்து மக்களுக்கு சேைவ புரிய வேண்டும்' என தனக்குதெரிந்த சில வித்தைகளை சுவாமிக்கு கற்றுக் கொடுத்தார். சிறிது காலத்திலேயே சுவாமி பல அற்புதங்களை அறிந்து கொண்டார். அதன் மூலம் மக்களுக்கு உதவ ஆரம்பித்தார். எனவே வடநாட்டு சுவாமி, வேலாயுதம் சுவாமியிடம் கோவில் பொறுப்பை கொடுத்து விட்டு தவம் செய்ய புறப்பட்டார்.

    இதையடுத்து வேலாயுத சுவாமிகள், தினந்தோறும் நாராயண சுவாமியையும், பத்ரகாளியம்மனையும் வணங்கி பணிவிடை செய்து வந்தார். பத்ரகாளியின் முன்பு அமர்ந்து கடும் தவம் புரிந்தார். அதன் பயனாக அம்மையுடன் பேசும் வல்லமையை பெற்றார். அன்னை மேலும் பல சக்திகளை அவருக்கு அளித்தார். இதன் மூலம் அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் தர ஆரம்பித்தார். தன் தாயாரையும் தன்னுடன் வைத்து பேணி பாதுகாத்து வந்தார்.

    வேலாயுத சுவாமிகள் சுற்றியுள்ள ஊர்களான குட்டம், பொத்தக்காலன்விளை, ஆனைக்குடி ஆகிய ஊருக்கு செல்லும் போதெல்லாம், நவ்வலடிக்கும் சென்று வருவார். நவ்வலடி அந்த சமயத்தில் சிற்றூர். இங்கு கொடிக்கால் தொழில் நடந்து கொண்டிருந்தது. சிறு சிறு தோட்டங்களும், தண்ணீர் பாய்க்கும் கிணறுகளும் கொண்ட அந்த ஊரில் ஏராளமான வெற்றிலை பயிரிடும் விவசாயிகள் வாழ்ந்து வந்தனர். இவ்வூரில் உள்ள வெற்றிலை வியாபாரிகள், தாங்கள் பயிரிட்ட வெற்றிலையை விற்பதற்காக, அவற்றை தலைசுமையாக தூக்கிக்கொண்டு ராதாபுரம் செல்வார்கள்.

    அப்போது, வட்டவிளையில் வேலாயுத சுவாமியிடம் தரிசனம் ஆசி பெற்றுவிட்டு தான் வியாபாரத்தை தொடங்குவார்கள். சுவாமியின் ஆசியால், வெற்றிலை விற்பனை நல்லபடியாக நடந்தது. இதனால் அவர்களுக்கு வேலாயுத சுவாமிகளின் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் உதயத்தூரை சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சுவாமியின் அருள் கிடைத்தது. உதயத்தூர் சாதாரண ஊர் அல்ல. ஆதிசைவம் தோன்றிய இடம் என்று கூறப்படுகிறது. இவ்வூரை பூர்வீகமாக கொண்ட எட்டுவீட்டு பிள்ளைமார்கள், புத்திக்கூர்மையானவர்கள். அவர்கள் கேரளாவுக்கு சென்று அங்குள்ள அரசவையில் அமைச்சராக பணியாற்றியவர்கள். அஷ்ட கர்ம வித்தைகள் என்னும் கேரள மலையாள மாந்திரீகத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர். பலருக்கும் அதைக் கற்றும் தந்தனர். இதனால் கேரளத்தில் பேரும்புகழுடன் வாழ்ந்தனர்.

    இவர்களின் ஒருவர் தான் சங்கரன் பிள்ளை. மந்திரக் கலைகளில் நிகரற்று விளங்கியவர். ஆனாலும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். மற்றவர்களுக்கு மந்திர சக்தி மூலம் நல்லது கெட்டது செய்து வந்தாலும் கூட, தன் வாழ்க்கை சாத்தியமில்லாமல் தான் இருந்தது. அவரது துணைவியார் அனந்தம்மாளுக்கு வரிசையாக ஐந்து ஆண் பிள்ளைகள் பிறந்தனர். அனைவரும் சிறிது காலத்திலேயே இறந்து விட்டனர்.

    வட்டவிளையில் உள்ள நாராயண சுவாமி


    இதனால் மனமுடைந்த அனந்தம்மாள், வலுமூர்த்தி வேலாயுத சுவாமிகளைப் பற்றி அறிந்து அவரிடம் போய் நின்றார். அவரைப் பார்த்ததுமே அனந்தம்மாளின் கண்களில் கண்ணீர் கொட்டியது.

    அதைக் கண்ட வேலாயுத சுவாமிகள், ‘ஏனம்மா அழுகிறாய்?. என்ன வேணும் சொல்லு?' எனக் கேட்டு அவரைத் தேற்றினார்.

    அனந்தம்மாள் குழந்தைகள் தங்காத துயரத்தைச் சொல்லி கண்ணீர் விட்டார்.

    வேலாயுத சுவாமிகள், “தாயே உன் கணவர் பாவத்தொழில் செய்து வருகிறார். அவர் செய்யும் மாந்திரீகத்தால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அவரை என்னிடம் அழைத்து வா. ‘இனிமேல் மாந்திரீகம் எதுவும் செய்யமாட்டேன்’ என்று என் பிரம்பின் மேல் உன் கணவர் சத்தியம் செய்து தரவேண்டும். மாந்திரீகம் செய்ய அவர் பயன்படுத்தும் ஏடுகளை எனது முன்னால் எரிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் உனக்கு குழந்தைகள் தங்கும்” என்றார்.

    ‘சரி.. சாமி..' என அனந்தம்மாள் கிளம்பினார். கேரளா சென்று தன் கணவரிடம் விவரத்தைக் கூறினார்.

    முதலில் மறுத்த சங்கரன் பிள்ளை, பிறகு ‘சரி..’ என்று தலையசைத்தார். அதற்கும் காரணம் இருந்தது. ‘அந்த சாமியார் என்ன.. என்னை விட சக்தி படைத்தவரா? அதையும் தான் பார்த்து விடுவோமே’ என்ற எண்ணம் சங்கரன் பிள்ளை மனதில் இருந்தது.

    மனைவியுடன் வட்டவிளை வந்த சங்கரன் பிள்ளை, நாராயண சுவாமி கோவில் முன்பு இருந்த வேலாயுத சுவாமியைப் பார்த்தவுடன் அவரது மனதில் இருந்த எண்ணம் மறைந்து போயிற்று. ஏனெனில் வேலாயுத சுவாமிகள் அவ்வளவு எளிமையாக இருந்தார். தீர்க்கமான கண்கள், யாரையும் வசீகரிக்கக் கூடிய தோற்றம், இனிமையான குரல் அனைத்து சங்கரன் பிள்ளையைக் கவர்ந்தது.

    மறுநிமிடம் அவரை அறியாமலேயே சுவாமி முன்பு மண்டியிட்டார். சுவாமியின் பிரம்பின் மீது கை வைத்து, ‘இனிமேல் மாந்திரீகம் செய்ய மாட்டேன்' என சத்தியம் செய்து, மாந்திரீக ஏட்டை எரித்து சாம்பலாக்கினார்.

    சங்கரன் பிள்ளைக்கு திருநாமமிட்டார் சுவாமி.

    ‘எப்பா.. ஐந்து பிள்ளைகள் போச்சுன்னு கவலை படாதே. உனக்கு ஆறு பிள்ளைகள் பிறப்பார்கள். பல நகர் தாண்டி தலைநகர் செல்வார்கள். கொடி கட்டி வாழ்வார்கள்’ என்று வாக்களித்தார்.

    காலங்கள் கடந்தது.

    சங்கரன் பிள்ளை- அனந்தம்மாள் தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு நாராயணன், பிச்சையா, கருப்பசாமி, பரமசிவம், சுந்தரம், கல்யாண சுந்தரம் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.

    நவ்வலடியில் உள்ள வேலாயுத சுவாமி பீடம்

    குழந்தைகள் அனைவரும் வளர்ந்ததும், பிழைப்பை தேடி தலைநகர் சென்னைக்கு சென்றனர். அவர்களின் கடுமையான உழைப்பால், மிகப்பெரிய செல்வந்தர்கள் ஆனார்கள். சென்னையில் மிகவும் பிரபலமான மூன்று தியேட்டர்களின் அதிபர்களாக மாறினார்கள்.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு வேலாயுத சுவாமிகளின் புகழ் பரவத் தொடங்கியது.

    தினமும் நாராயண சுவாமி கோவில் முன்பு, வேலாயுத சுவாமிகள் பிரம்போடு அமர்ந்து விடுவார். அவரை தேடி வரும் மக்களுக்கு நாமம் கொடுப்பார். நோய்வாய் பட்டவர்களுக்கு குணம் அளிப்பார். வழி தவறி செல்பவர்களுக்கு ஞானம் உபதேசிப்பார்.

    தனது வயதான தாயாரை கண்ணின் இமைபோல காத்து வந்தார். ஒரு காலகட்டத்தில் அன்னையார் தவறி விட்டார். அவரை வட்டவிளையில் உள்ள ஒரு விளையில் அடக்கம் செய்து, கல்லறை கட்டினார். பின் தாயாரையும் வணங்க ஆரம்பித்தார். சுவாமி வணங்கிய தாயார் கல்லறையுடன் சேர்ந்த விளை, தற்போதும் ‘சுவாமி விளை’ என அழைக்கப்படுகிறது.

    வட்டவிளையைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் முன்னோர்கள் பிழைப்புக்காக மலையாள நாடு சென்றனர். அங்கு வேலை கிடைக்காமல் தவித்தனர். துன்பங்களின் காரணமாக, வேறு வழியின்றி ஒரு மந்திரவாதியிடம் பணியில் சேர்ந்தனர். அந்த மந்திரவாதி தீமைகளை மட்டுமே செய்பவன். தீய சக்திகளைப் பயன்படுத்தி, அந்தப் பகுதி மக்களை துன்புறுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

    ஒரு கட்டத்தில் மந்திரவாதி செய்யும் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாத தங்கவேலின் முன்னோர்கள், அனைவரும் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். மந்திரவாதிக்கு தெரிந்தால் அழித்து விடுவான் என்பதால் இரவு வேளையில் கிளம்பி விட்டனர். இதை அறிந்து கொண்ட மந்திரவாதி, தன் ரகசியம் தெரிந்தவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்களை அழிப்பதற்காக 21 வாதைகளை (பேய்களை) அனுப்பிவைத்தான்.

    மந்திரவாதியிடம் கற்ற சில வித்தைகளைக் கொண்டு, பேய்களை கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனாலும் அவர்களில் இருவரை பேய்கள் பலி வாங்கியது. மற்றவர்கள் வட்டவிளைக்கு தப்பி வந்தனர். அங்கு நாராயணசாமி கோவிலில் இருந்த வேலாயுத சுவாமியின் காலடியில் போய் விழுந்தனர்.

    அவரிடம் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பற்றி எடுத்துரைத்தனர். அதற்குள் 21 வாதைகளும் அங்கு வந்து விட்டன. அவர்கள் மீது அவை ஆவேசமாக வந்தபோது, வேலாயுத சுவாமிகள், கையில் பிரம்புடன் வீறு கொண்டு எழுந்தார்.

    அந்த வாதைகள் சுவாமியிடம் அடிபணிந்ததா?
    திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெரியநாயகம் பிள்ளை - பொன்னம்மாள் தம்பதிகளுக்கு ஆறுமுக சுவாமி மகனாக பிறந்தார்.
    திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெரியநாயகம் பிள்ளை- பொன்னம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லை. மகப்பேறு வேண்டி பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடினர். இறுதியில் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகப்பெருமானைத் துதித்து நின்றனர். முருகனின் அருளால், அவர்களுக்கு கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பவுர்ணமியில், சுவாதி நட்சத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆறுமுகம் என பெயர் வைத்தனர்.

    இளம் வயதில் நன்றாக கல்வி கற்ற ஆறுமுகம், அதன் பயனாக சீவநல்லூரில் கிராம அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார். அவரது நிர்வாகப் பணியால், சீவநல்லூருக்கு பல நன்மைகளைச் செய்தார். இவருக்கு புளியரையைச் சேர்ந்த ஆரியவடிவு என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தனர்.

    இல்லறத்தினையும், அரசுப் பணியையும் இருகண்களாக தொடர்ந்தார். இந்த தம்பதியருக்கு பொன்னம்மாள், உலகம்மாள் என இரு குழந்தைகளும் பிறந்தன. இந்த நேரத்தில்தான் நாம் இந்த உலகில் பிறந்தது, குழந்தைகளை வளர்ப்பதற்கும், வரி வசூலிக்கவும் மட்டுமா? என ஆறுமுகம் மனதில் கேள்வி பிறந்தது.

    கயிலாசம் என்பவர் ஆறுமுகத்திடம் தண்டல்காரராகப் பணியாற்றியவர். இட்ட வேலையை முகம் கோணாது செய்யும் சிவ பக்தர். ஒரு நாள் மாலை நேரம். இருவரும் சீவநல்லூரில் இருந்து செங்கோட்டைக்கு கிளம்பினர். சற்று தொலைவு வந்ததும், ‘ஐயா! வயிறு சரியில்லை. அதோ அந்தத் தோப்புக்குள் சென்று விட்டு வந்துவிடுகிறேன்’ என கிளம்பினார் கயிலாசம்.

    நீண்ட நேரம் அவரை எதிர்பார்த்திருந்தார் ஆறுமுகம். ஆனால் அவர் வரவில்லை. எனவே தோப்புக்குள் சென்றார். அங்கே ஒரு பள்ளத்தில் கயிலாசம் பத்மாசனம் இட்டு, அந்தரத்தில் மிதந்தபடி தவமேற்றிக் கொண்டிருந்தார். முதலில் அதிர்ந்த ஆறுமுகம், அதன் பின் அவர் அருகில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். இறுதியில் தவத்தில் இருந்து எழுந்த கயிலாசத்தை வணங்கி நின்றார்.

    அதிர்ந்தே போய்விட்டார் கயிலாசம். ‘சுவாமி! என்னை வணங்காதீர்கள்’ என்றார்.

    ஆனால் ஆறுமுகம், ‘சுவாமி! எனக்கு தாங்கள் உபதேசிக்க வேண்டும்’ என்று வேண்டினார். அவரது தீர்க்கமாக வேண்டுதலை மறுக்க முடியாத கயிலாசம், ஆறுமுகத்தின் காதில் ரகசியமாக சிலவற்றை ஓதினார்.

    அன்று முதல் ஆறுமுகத்தின் வாழ்க்கை முறையே மாறிப் போய் விட்டது. அப்போது அவருக்கு வயது 35. பந்தம் பாசம் அனைத்தையும் தூக்கி எறிந்தார். கால் போன போக்கில் நடந்தார். குற்றால மலைக்கு சென்றார். மலை மீது நடந்து செண்பகாதேவி அருவிக்கு சென்றார். அனைத்தையும் துறந்த துறவிகள் கூடும் இடமான குகையில் ஆறுமுகமும் தங்கினார்.

    அன்று சித்ரா பவுர்ணமி. அன்னையின் அருளைப் பெற தவத்தில் ஈடுபட்டனர், அங்கிருந்த துறவிகள். இதனால் குகைக்கு உள்ளே செல்ல ஆறுமுக சுவாமிக்கு இடமில்லை. எனவே குகை வாயிலில் அமர்ந்து தவம் புரிந்தார். நள்ளிரவு.. சலசலத்து ஓடும் அருவி நீர் சப்தம்.. அருவி தூறல் ஆறுமுக சுவாமியின் மீது விழுந்தது. அதை உணரும் நிலையில் அவர் இல்லை. அப்போது ஒரு புலி அவர் மீது பாய்ந்தது. அப்படியே தன் வாயில் கவ்வி இழுத்துச் சென்றது.

    ஆறுமுக சுவாமி தன்னுணர்வு வந்து எழுந்த போது, அவர் பரதேசி புடை என்னும் குகையில் இருந்தார். ‘என்ன நடந்தது?’ என்று ஆறுமுக சுவாமி உணரும் முன்பாக, அங்கே அன்னை அவருக்கு திருக்காட்சி கொடுத்தாள். அடுத்த கணமே அவருள் ஞானத்தின் பேரொளி எழுந்தது.

    அதன் பின் ஆறுமுக சுவாமி, வீட்டுக்கு திரும்பினார். அவரது செயல், நடவடிக்கை எல்லாமே வீட்டில் இருந்தவர்களுக்கு புதிராகவே இருந்தது.

    சகோதரர்கள் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று அறை ஒன்றில் கால் விலங்கிட்டு அடைத்தனர். சித்த புருஷரான ஆறுமுக சுவாமிகளின் மனம் நோக ஆரம்பித்தது. தவ வலிமையால் கால் விலங்குகளை அறுத்தெறிய செய்தார். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்தனர்.

    இவர் நமது குடும்பத்துக்காக வாழ்பவர் அல்ல. இந்த உலகம் வளம்பெறுவதற்காக பிறந்த மகான் என்பதை குடும்பத்தார் உணர்ந்தனர்.

    ஆறுமுக சுவாமிகளின் மகத்துவம் எங்கும் பரவியது. பல்வேறு ஊர்களில் இருந்தும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் ஓடிவந்தனர். கடைவீதியில் நடந்துவரும் போது, வியாபாரிகள் கடையை விட்டு கீழே இறங்கி கைகட்டி நிற்பார்கள். சுவாமிகள் ஏதாவது ஒரு கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து யாருக்காவது கொடுப்பார். அன்று அந்தக் கடையில் வியாபாரம் அமோகம்தான்!. எனவே ‘சுவாமிகள் இன்று நமது கடைக்கு வர மாட்டாரா?’ என வியாபாரிகள் காத்துக் கிடந்தனர்.

    பெரும்பாலும் யாரிடமும் சுவாமிகள் பேசுவதில்லை. பேசினாலும் மழலைச் சொல்லில் தான் பேசுவார். கந்தல் துணிதான் கட்டியிருப்பார். எப்போதும் பாம்புகளுடன்தான் விளையாடுவார். ‘டேய் சங்கரா’ என்று அழைப்பார். எங்கிருந்தெல்லாமோ பாம்புகள் வந்து, அவர் மேனியில் ஊர்ந்து விளையாடும். யாரேனும் வந்தால், ‘டேய் பாவிகள் வந்தாச்சு, கிளம்புங்க!’ என்பாராம். அவை மறைந்துவிடும்.

    ஆறுமுக சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் போதெல்லாம், பல நாட்கள் அங்கேயே தங்கி விடுவார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையின் அடிவார ஊருக்கு சுவாமிகள் சென்றுள்ளார். அங்குள்ள மக்கள் சுவாமிகளை வணங்கி நின்றனர். ‘சுவாமி மூன்று வருடங்களாக மழை பொய்த்து விட்டது. நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்' என வேண்டி நின்றனர். சிறிது நேரம் யோசித்த சுவாமிகள் அங்குள்ள சுனைக்குச் சென்றார். அங்கிருந்த சேற்றை எடுத்து உடல் முழுதும் பூசிக்கொண்டார். பாறையில் அமர்ந்து தியானம் செய்தார். சுட்டெரித்தது வெயில். பாறையும் தகதகவென கொதித்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த மேகக் கூட்டம், சுவாமிகளின் உடலில் பூசிய சேறு கரைந்து ஓடும் வரை மழையாய் கொட்டித் தீர்த்தது. பொதுமக்கள் மகிழ்ந்து சுவாமியை கொண்டாடினர்.

    மதுரையில் செல்வந்தர் ஒருவரின் மகனுக்கு திருமணம். அன்றிரவு அவன் பாம்பு தீண்டி இறந்தான். மிகுந்த துக்கத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று உடலை சிதையில் வைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த சுவாமிகளிடம், அன்பர் ஒருவர் இந்த விஷயத்தை கூறினார். மறுநிமிடம் சுவாமிகள், சடலத்தின் மீது எச்சிலை உமிழ்ந்து, ‘சீ போ.. எழுந்திரு’ என்று சொல்லி விட்டுச் சென்றார். சிதையில் இருந்து அவரது மகன் எழுந்தான். அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர். சுவாமியை தேடினர். ஆனால் அவரை எங்கும் காணமுடியவில்லை. அதன்பிறகு செங்கோட்டைக்கு வந்து சுவாமிகளை வணங்கி, மூட்டை நிறைய நாணயங்களை சமர்ப்பித்தார் மதுரை செல்வந்தர்.



    சுவாமிகளோ, ‘நீ ஆட்கொல்லியுடன் அல்லவா வந்திருக்கிறாய். நில்லாதே போ’ என்றார்.

    இதனால் செல்வந்தருக்கு வருத்தம் உண்டானது. தன்னுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். உடனே சுவாமிகள், ‘சரி.. நீயே இந்த நாணயங்களை தெருக்களில் எறிந்துவிட்டுப் போ’ என்றார். செல்வந்தரும் மறு பேச்சின்றி அப்படியே செய்தாராம். தெருக்களில் எறிந்த காசுகள் ஏழை மக்களுக்கு போய் சேர்ந்தது.

    சுவாமிகள் நூறு வயதை எட்டியதும் (கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பவுர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலையை அடைந்தார்.

    அவருடைய சமாதி தங்கள் இடத்தில் அமைய வேண்டும் என்று பலரும் போட்டியிட்டனர். இறுதியில் திருவுளச்சீட்டு போட்டு பார்த்தனர். குண்டாற்றங்கரைத் தோப்பு என்று முடிவானது. அதன் படி சுவாமிகளின் சமாதி அமைக்கப்பட்டு, சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. தற்போது இந்த கோவில் பச்சைபசேல் என வயற்காட்டுக்கு நடுவே, குண்டாற்றங்கரையில் உள்ளது. சுவாமிகள் சமாதியாகி 134 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இவரை நாடி வரும் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.

    தற்போதும் பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து வேண்டிய வரத்தினை பெற்று செல்கிறார்கள். குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டி இங்கு வந்து அன்னதானத்தில் கலந்துகொள்கிறார்கள். நாள் பட்ட நோய்கள் தீரவும் சுவாமி அருளுகிறார். நாகதோஷம் இருப்பவர்களும், இந்த ஒடுக்கத்தில் ஆறுமுக சுவாமியை வணங்கி நலம் பெறுகிறார்கள்.
     
    மூதாட்டிக்கு அருளிய சித்தர் :

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டி ஒருவர், சுவாமிகளை வணங்கி தன் வறுமை குறித்து கூறினார். உடனே அவர் ‘நீ கடைக்குச் சென்று பொருள் வாங்கு. பொருட்களுக்குத் தேவையான பணம் உன் வீட்டில் இருக்கும்’ என்றார்.

    அதன்படியே வாங்கிய பொருளுக்கு வீட்டில் நாலணா இருந்தது. தொடர்ந்து மூதாட்டி வாழ்க்கை சராசரியாக போய்க் கொண்டிருந்தது. ஆசை யாரை விட்டது. மூதாட்டி சுவாமிகளிடம் சென்று, ‘சுவாமி இப்படி தினந்தோறும் நாலணா தருவதற்கு பதில், ஒரு மாதத்துக்குத் தேவையானதை மொத்தமாக அருளுங்களேன’ என்றாள்.

    மவுனமாக எழுந்து சென்ற சுவாமிகள், சிறிது மண்ணை அள்ளினார். அது தங்கமாக மாறி மின்னியது. அதை எடுத்து வந்து மூதாட்டியிடம் காட்டினார் ‘பார்த்தாயா! அவ்வளவும் தங்கம். இது போதுமா?’ என்றார்.

    மூதாட்டி பேசாமல் நின்றாள். பிறகு சுவாமிகள், ‘இது ஆட்கொல்லி. இதை நீ வைத்திருந்தால் உன் உறவினர்களே உன்னைக் கொன்றுவிடுவார்கள். பேசாமல் கிடைப்பதை வைத்து நிம்மதியாக வாழு’ என கூறினார். அவர் அறிவுரையில் எவ்வளவு அர்த்தம் உள்ளது என்பதை மூதாட்டி மட்டுமல்ல, அங்கு இருந்த அனைவரும் உணர்ந்தனர்.

    பிடிசோற்றால் குழந்தைப் பேறு :
     
    ஆறுமுக சுவாமியிடம் குழந்தைப் பேறு கேட்டு வருபவர்கள் பலர். சுவாமி தான் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு பிடியை அவர்களுக்குக் கொடுப்பார். அதை சாப்பிட்டவர்கள் குழந்தைப் பேறு பெற்றனர். ஒரு பெண் மட்டும் அறுவறுப்பு காரணமாக, பிடிசோற்றை எடுத்துக்கொண்டு போய் கழுநீர்ப் பானையில் போட்டார். இவருக்கு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. எனவே மீண்டும் சுவாமியிடம் வந்து குழந்தைப் பேறு வேண்டி நின்றார்.

    அப்போது சுவாமிகள், ‘அதற்கு ஏன் இங்கு வந்தாய்? உன் வீட்டு கழுநீர் பானையிடம் கேள்’ என்றாராம். அந்த பெண் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, மீண்டும் பிடி சோற்றை வாங்கி குழந்தைப் பேறு பெற்றார்.

    இரண்டு மணி நேரம் விழுந்த நீர் :

    சேத்தூர் ஜமீனைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்ய விரும்பினர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார் ஆறுமுக சுவாமி. ஜமீன்தார் உடனிருக்க அபிஷேகம் தொடங்கியது. 107 குடம் நீரால் அபிஷேகம் செய்து, 108-வது குடத்து நீரை அபிஷேகம் செய்யத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் அந்தக் குடத்தில் இருந்து தண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. குடத்தைக் கையில் பிடித்தவர்களுக்கு கை வலி ஏற்பட்டு சுவாமிகளிடம் கெஞ்சினர். சுவாமிகள் ‘தண்ணீர் போதும்’ என்றவுடன் குடத்தில் இருந்து வரும் நீர் நின்றது.

    அமைவிடம் :

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் செங்கோட்டை நுழைவு வாயில் இடது புறம் உள்ள குறுகிய ரோட்டில் சென்றால், இந்த ஆலயத்தை தரிசிக்கலாம். செங்கோட்டைக்கு கேரளா மற்றும் தமிழகத்தில் பல பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு. தென்காசி- புனலூர் ரெயில்பாதையில் செங்கோட்டை ரெயில் நிலையம் உள்ளது. அங்கிருந்தும் ஆட்டோவில் கோவிலை அடையலாம். 
    குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், இருக்கிறது சங்கராஸ்ரமம். இங்குதான் ‘ஐந்தருவி சித்தர்’ என்றழைக்கப்படும் சங்கரானந்தர் சுவாமி அடங்கியுள்ளார்.
    திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், அருவிக்கரைக்கு சற்று முன் திருப்பத்தில் வலதுப்புறத்தில் இருக்கிறது சங்கராஸ்ரமம். இங்குதான் ‘ஐந்தருவி சித்தர்’ என்றழைக்கப்படும் சங்கரானந்தர் சுவாமி அடங்கியுள்ளார். இந்த ஆசிரமத்தில் தியான மண்டபம், கலந்துரையாடல் கூடம் ஆகியவை உள்ளன.

    முன்னுள்ள கட்டிடத்தின் நடு வழியே சென்றால் சங்கரானந்தரின் சமாதி காணப்படுகிறது. கண்ணாடி அறைக்குள், நவீனமான முறையில் அமைந்துள்ளது சமாதி. அதில் சிவலிங்கமோ அல்லது வேறு சின்னங்களோ ஏதுமில்லை. இங்கு சிவலிங்க வழிபாடோ, மணி அடித்து, தூப தீபம் காட்டி வழிபடுவதோ கிடையாது. சமாதி பின்புறம் சலசலவென ஓடும் ஐந்தருவித் தண்ணீர் கூட, ஏதோ ஆன்மிக மந்திரத்தை நமக்கு போதிப்பது போலவே ஒலிக்கிறது.

    ஐந்தருவி சித்தர் வாழ்ந்து அருளாசி வழங்கிய குடிலும், அமர்ந்து தவம் செய்த திண்ணையும் பக்தர்கள் வணங்க ஏதுவாக அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சரி.. யார் இந்த ஐந்தருவி சித்தர்?

    எடுப்பான தோற்றம்! உயரமும் கனமும் ஒரே சீராக அமைந்த தேகம். நரைத்த தலை முடியைப் பின்னால் கோதி விட்டுக்கொண்டு தாடியைத் தடவிக் கொண்டே நடந்து வருகிற அழகு. நீளமாக வெள்ளை வேட்டியை உடுத்திக் கொண்டு அதிலேயே ஒரு பகுதியை மாராப்புப் போலப் போட்டுக் கொள்ளும் யுக்தி. கையில் ‘டாணா’ கம்புடன் உலாத்திக்கொண்டே இருப்பார். நடந்து வருகிறவர்களுக்கும் போகிறவர்களுக்கும் ‘சித்த மார்க்கத்’தைப் போதித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள் அவரை சந்தித்தவர்கள். ஐந்தருவி சித்தருக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகள் தெரியுமாம்.

    ஆசிரமத்தில் விபூதி இல்லை; குங்குமம் இல்லை; தேங்காய் உடைப்பது இல்லை; ஊதுபத்தி இல்லை; உருவ வழிபாடு இல்லை; சாதிப் பிரிவு இல்லை; ஏழை பணக்காரர் இல்லை; ஆண் பெண் வேறுபாடும் இல்லை; இங்கு உபதேசம் பெற்ற எல்லாரும் சித்தர்கள்; ஒரே குலம்; ஒரே குடும்பம்; ஒரே உணர்வு, இதுதான் இந்த ஆசிரமத்தின் அடிப்படை சித்தாந்தம்.

    ஐந்தருவி ஆசிரமத்திற்குச் செல்பவர்கள், சித்தரிடம் என்ன கேட்பார்கள்? அவர் தன்னை நாடி வந்தவர்களுக்கு என்ன கொடுப்பார்? எதிர்காலம் பற்றிச் சொல்வாரோ? சித்திகள் ஏதாவது உண்டா? என்று கேட்டால், அதற்கு கிடைக்கும் பதில் ‘எதுவுமே இல்லை’ என்பது தான்.

    அதே நேரத்தில் அவரோடு பேசுவதில் ஒரு இன்பம்; அவரோடு இருப்பதில் ஒரு மகிழ்ச்சி; ஐந்தருவி ரோட்டில் அவரோடு நடந்து போவதில் ஒரு திருப்தி; ஆசிரமத்திலுள்ள மரங்களையெல்லாம் வந்தவர்களுக்குச் சுற்றிக் காட்டுவதில் சித்தருக்கு ஒரு ஆனந்தம். எங்கெங்கு தேடியும் கிடைக்காத மகிழ்ச்சியும் திருப்தியும் இந்த ஆசிரமத்தில் கிடைக்கும். சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட இங்கு வரும் அடியவர்களின் கூட்டத்திற்கு அதுவே காரணம் என்கிறார்கள்.

    இவ்வளவு ரம்மியமான ஐந்தருவி இடத்துக்கு சங்கரானந்தர் வந்த வரலாறு தான் என்ன?

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் படித்துறை. சித்த சமாஜத்தை நிறுவிய சிவானந்த பரமஹம்ஸர் தனக்கான சீடனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதே நேரம், வடக்கே தோன்றி ஞானத்தேடலுடன் தனக்கான குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். பவானிக் கரையில் குருவும் சீடரும் சந்தித்தனர். குரு சிவானந்த பரமஹம்ஸர் தான், அந்த இளைஞனுக்கு சங்கரானந்தர் என பெயர் சூட்டினார். பின், ‘சிறிது காலம் வடதேச யாத்திரை போய் வா’ என்று ஆசி வழங்கி சீடனை வழியனுப்பினார்.

    சங்கரானந்தரும் இமயத்தை நோக்கிச் சென்று, சாரலில் நனைந்தார். காசியின் வீதிகளில் அலைந்தார். அவருக்கு ஞான அனுபவம் கைகூடியது. மீண்டும் குருவின் ஆசிரமத்தில் சிலகாலம் தங்கினார். பின் தென்னகத்தை நோக்கி யாத்திரை கிளம்பினார்.

    பல இடங்களில் சுற்றிவிட்டு, குற்றாலம் அருகில் உள்ள வல்லம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். இளவயதில் வெள்ளாடையோடு வந்த சங்கரானந்தரை, சிறுவன் ஒருவன் கல்லால் தாக்கினான். இதில் காயமடைந்த சங்கரானந்தரை, அங்குவந்த சிவசுப்பிரமணிய மூப்பனார் தனது வீட்டுக்கு அழைத்து சென்று மருந்திட்டார். பிறகு சங்கரானந்தரின் ஞான மார்க்கத்தைப் புரிந்து, அவரோடு சுற்றித் திரிய ஆரம்பித்தார். தொடர்ந்து பலரும் இவரை காணவந்தனர்.


    ஐந்தருவி சித்தர், ஐந்தருவி சித்தரின் சமாதி

    ஆனால் தனிமையை விரும்பிய சங்கரானந்தர், ஐந்தருவி காட்டில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். பின்னர் மீண்டும் இமயமலை சென்று தங்கினார். அங்கே அவருக்கு பிரபுக்களுடனும், மன்னர்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. சில வருடங்களுக்குப் பின் தன் குருவைத் தேடி வந்தார். அப்போது சிவானந்த பரமஹம்ஸர், ‘வடநாட்டில் பிரபுக்களிடமும் மன்னர்களிடமும் சித்த நெறியைப் பரப்புவதில் பலன் இல்லை. தென்னாட்டுக்குப் போ. ஆன்மிக நெறி வளர்வதற்கேற்ற உரம், ஏழைகளிடமும் தான் உள்ளது. அவர்களுக்கும் ஞானம் கிடைத்தாக வேண்டும்’ என்றார்.

    குருவின் சொல்படி மீண்டும் தென்னகம் வந்தார், சங்கரானந்தர். அன்பர்கள் உதவியுடன் ஐந்தருவிக் கரையில் தற்போதுள்ள இடத்தை வாங்கி ஆசிரமம் அமைத்தார். இவ்விடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள் வழங்கிய காரணத்தினால் ‘ஐந்தருவி சுவாமி' என்று அழைக்கப்பட்டார்.

    அற்புதங்கள் பலவற்றை ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்தவர் சங்கரானந்தர். பழம்பெரும் திரைப்பட இயக்குனரான பீம்சிங், ஒரு முறை பக்கவாத நோயால் அவதிப்பட்டார். அப்போது ஐந்தருவி சித்தரின் ஆற்றலாலும், மருந்தாலும் ஆச்சரியப்படும் விதத்தில் பீம்சிங் குணமடைந்தார். மகிழ்ச்சியடைந்த அவர், ஒரு பெருந்தொகையைக் கொடுத்து ஐந்தருவி ஆசிரமத்தில் தியான மண்டபம் கட்ட ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

    ஐந்தருவிச் சித்தர் சிறந்த மருத்துவர். பாம்புக் கடிக்கு உடனடி வைத்தியம் செய்வார். மூலிகை கொடுப்பார், நோய்கள் சரியாகிவிடும். இங்கு வருபவர்களுக்கு மூலிகை கஷாயம் கொடுப்பது ஐந்தருவி சித்தரின் வழக்கம். அதனால் வந்தவர்களுக்கு புத்துணர்ச்சி பொங்கி விடும். சித்தருக்கு புத்தகங்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். அவர் சொல்லச்சொல்ல நிறைய தத்துவ விளக்கங்களை தமிழ்நடையில் வி. ஜனார்த்தனம் என்பவர் தொகுத்துள்ளார்.

    30.8.1974 அன்று ஐந்தருவி சித்தர் சமாதி நிலை அடைந்தார். இதையறிந்ததும் குற்றாலம் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள அவரது அடியவர்கள் ஐந்தருவி ஆசிரமத்தில் குவிந்தனர். ஆனால் சித்தரின் இறப்பை எண்ணி யாரும் கதறவில்லை. முகத்தில் தெரிந்த வருத்தம், வெடித்து வாய்வழியாக வெளியேறவில்லை. அது தான் இருக்கும் காலத்தில் ஐந்தருவி சித்தர், தன் அடியவர்களுக்கு சொல்லித்தந்த பாடம். அனைவரும் கூடி நிற்க சித்தரை சமாதி வைத்தனர். தற்போதும் கூட இவ்விடத்தில் சித்தரின் அருள் உள்ளது. இங்கு சென்றாலே நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. இழந்ததை பெற்றது போல தோன்றுகிறது.

    சங்கரானந்தர் தங்கியிருந்த அறையில் அவர் பயன்படுத்திய கட்டில் உள்ளது. கட்டிலுக்குக் கீழே ஒரு பாதாள அறை. அதற்குள் சென்றுதான் அவர் தியானம் புரிவாராம்.

    சித்த வித்தை பயில தன்னை நாடி வருபவர்களுக்கு சங்கரானந்தர் மூன்று நிபந்தனைகளை மட்டுமே முன் வைத்துள்ளார்.

    * மீன், முட்டை, இறைச்சி போன்ற புலால் உணவுகள் உண்ணக்கூடாது.

    * பீடி, சிகரெட், கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை உபயோகிக்கக் கூடாது.

    * மது, கள், சாராயம் போன்ற பானங்களை அருந்தக் கூடாது.

    இதைக் கடைப்பிடிப்பவரே சித்தவித்யார்த்தி என்பது ஐந்தருவி சித்தரின் கண்டிப்பான கட்டளை. அதை அவரது சிஷ்யர்கள் தற்போதும் கூட கடைப்பிடித்து வருகிறார்கள்.

    அமைவிடம்

    தென்காசி அல்லது செங்கோட்டைக்கு பேருந்துகள், ரெயில்கள் உண்டு. இங்கிருந்து பேருந்தில் குற்றாலம் சென்று ஐந்தருவிக்குச் செல்லலாம். சீசன் இருக்கும் மாதங்களில் மட்டுமே நகரப் பேருந்துகள் இருக்கும். மற்ற நாட்களில் ஆட்டோ மூலமே செல்ல முடியும். 
    மானூரில் ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் ஜோதி மயமாக காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது.
    திருவளரும் கீரனூரில் பிறந்த கருவூர் சித்தர், தனது முன்வினை பயனால் தவம் செய்து எண் வகை சித்திகளும், சிவத்தல யாத்திரை பேறும் பெற்றிருந்தார். அதோடு அவர் எந்த சிவத்தலத்திலும் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் தோன்றி காட்சியளிக்கும் பேறும் பெற்று விளங்கினார். ஆனால் கருவூர் சித்தர் ஒவ்வொரு சிவத்தலமாக சென்று இறைவனை நேரில் அழைத்து நேரில் கண்டு வழிபட்டு வந்தார்.

    ஒரு நாள் கருவூர் சித்தர் பெருமை வாய்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து சுவாமி நெல்லையப்பரை அழைத்தார். அப்போது சுவாமி நெல்லையப்பரிடம் இருந்து பதில் வராததால் கோபம் அடைந்த சித்தர், ஈசன் இங்கு இல்லை. இவ்விடத்தில் எருக்கும் குறுக்கும் எழுக என சாபமிட்டு அருகில் உள்ள சிவத்தலமான மானூர் (மானையம்பதி) செல்ல முற்பட்டார்.

    இதனை அறிந்த நெல்லையப்பர் ஒரு சிவத்தொண்டராக வந்து சித்தரை தடுத்து அழைத்தார். சித்தர், அந்த சிவத்தொண்டரை பார்த்து, நீ யாரென்று கேட்க, தான் தொண்டருக்கெல்லாம் தொண்டர் என்று கூறி பணிந்தார். சற்றே கோபம் தணிந்த சித்தர், இறைவனை மானூர் வந்து தனக்கு காட்சியளித்து சாப விமோசனம் பெறச் சொல் என்று சிவத்தொண்டரிடம் கூறிவிட்டு மானூருக்கு புறப்பட்டார். தற்போது அந்த இடத்தில் தொண்டர் நயினார் கோவில் உள்ளது.

    எனவே மறுநாள் காலை சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும் மானூர் செல்லும் பொருட்டு, ராமையன்பட்டி வந்து, அங்கு சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி மானூர் வருகின்றனர். இதற்கிடையே சித்தருக்கு இறைவன் காட்சி கொடுக்க போவதை அறிந்த மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், குங்குலிய நாயனார், சண்டிகேசுவரர், தாமிரபரணி அம்மன் ஆகியோர் சேர்ந்து தாங்களும் அந்த திருக்காட்சியை காண விரும்பி இறைவனோடு மானூர் வருகிறார்கள்.

    மானூரில் கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி மயமாக காட்சி தந்து அருளுகிறார். இதனால் சினம் தணிந்த கருவூர் சித்தரை அழைத்துக் கொண்டு இறைவன் உள்ளிட்ட யாவரும் நெல்லை நோக்கி வரும் வழியில் ராமையன்பட்டி வந்ததும் சந்திரசேகரரும், பவானி அம்மனும் மீண்டும் நெல்லையப்பர், காந்திமதி அம்மனாக மாறியதோடு குதிரையில் நெல்லை வருகிறார்கள்.

    இறைவன் தொண்டராக வந்து சித்தரை தடுத்த இடம் வந்ததும், ஈசன் இங்கு உளன். எருக்கும், குறுக்கும் அறுக என்று சாப விமோசனம் வழங்குகிறார் கருவூர் சித்தர். மேலும் ஆண்டுதோறும் வரும் ஆவணி மூலத்திருநாளன்று அடியேனுக்கு இறைவன் காட்சி கொடுக்க வேண்டும் என்றும், அக்காட்சியை கண்டு வழிபடுவோருக்கு முக்தி கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும் இறைவனை கருவூர் சித்தர் வேண்டுகிறார். நெல்லையப்பரும் அவ்வாறே அருள்கிறார். இதுவே ஆவணி மூலத்திருவிழாவின் வரலாறு ஆகும்.

    நெல்லையப்பர் கோவில் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆவணி மூலத்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) காலை நெல்லையில் இருந்து கருவூர் சித்தர் மானூர் வந்தடைகிறார். சுவாமி சந்திரசேகரர், பவானி அம்மன், மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், சண்டிகேசுவரர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி அம்மன் ஆகிய மூர்த்திகளின் வீதிஉலா நிகழ்ச்சி நெல்லையில் நடக்கிறது.

    அதன் பின்னர் மேற்கண்ட மூர்த்திகள், மானூர் புறப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை மானூர் வந்து சேர்கிறார்கள். அங்கு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி வடிவாக காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியே ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு மானூரில் ராட்டினங்கள், மிட்டாய் கடைகள், வளையல், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. 
    தென்காசி அருகே உள்ள மாறந்தையில் தங்கியிருந்து பல அற்புதங்களைச் செய்து வந்த, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தரைப் பற்றி பார்த்து வருகிறோம்.
    தென்காசி அருகே உள்ள மாறந்தையில் தங்கியிருந்து பல அற்புதங்களைச் செய்து வந்த, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தரைப் பற்றி பார்த்து வருகிறோம். அவருக்கு கழுத்தில் ஏற்பட்ட நோயைப் பற்றியும், அந்த நோய் தீர பலரும் அவரை மருத்துவரிடம் அழைத்தும் வராது பற்றியும் பார்த்தோம். எதற்காக அவர் மருத்துவரிடம் செல்லவில்லை... அறிந்து கொள்வோம் வாருங்கள்...

    மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தருக்கு ஏற்பட்ட நோய் தீர, அவரை சீடர்கள் பலரும் மருத்துவரிடம் செல்ல அழைத்தனர். அதற்கு சித்தர் சிரித்தபடியே, ‘பிறவி கடன் இது. நான் அனுபவித்தே தீரவேண்டும். அதுவும் இந்த ஜென்மத்திலேயே இந்த வலியை தாங்கியாக வேண்டும்' என நோயின் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டார். இறுதியில் அவரது தவ வலிமையின் மூலமாகவே, அவரது கண்ட மாலை நோய் குணமானது.

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ளது முறப்பநாடு. இங்கு குமாரசுவாமி பிள்ளை என்ற புலவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஸ்ரீசெட்டி சித்தரின் பாட்டுத் திறனில் அலாதிப் பிரியம். சித்தரின் பாடும் திறன் பற்றி, ஒரு முறை முறப்பநாட்டில் உள்ள திருவாவடுதுறை கிளை மடத்து தம்பிரான் சுவாமியிடம் புலவர் கூறினார். தம்பிரானும் ஆவலுடன், ஸ்ரீசெட்டி சித்தரைச் சந்தித்து பேசினார்.

    திருமுருககிருபானந்த வாரியார் திருநெல்வேலி வந்தால், ஸ்ரீசெட்டி சித்தரை சந்திக்காமல் செல்ல மாட்டார். மேலும் தான் பேசும் அனைத்து கூட்டங்களிலும் சித்தரைப் பற்றி புகழ்ந்து கூறுவார். காலங்கள் செல்லச் செல்ல சுவாமிகளின் புகழ் உலகெங்கும் பரவியது. அதே நேரத்தில் பக்தர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், சித்தர் தன்னுடைய உடலை விட்டு இறைவனடி சேர நாள் குறித்து வைத்திருந்தார்.

    மாறந்தையில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து வர, தன்னோடு இருந்த சீடர்களிடம் கூறினார். ஸ்ரீசெட்டி சித்தர் அழைத்ததால், மாறந்தையைச் சேர்ந்த பலரும் தங்களது வேலைகளை அப்படியே போட்டு விட்டு ஓடோடி வந்தனர். சித்தர் அவர்களை நோக்கி, ‘இன்றோடு என் சரீரம் முடியப் போகிறது. எனவே தான் உங்களை அழைத்தேன்' எனக் கூறி அனைவருக்கும் விபூதி வழங்கினார். அனைவரும் கதறி அழுதனர்.

    ‘பொழுது சாயும் வேளை வரை பொறுங்கள்' என கூறிய சித்தர், அப்படியே படுத்துவிட்டார்.

    சித்தரின் தலைப்பாகம் மட்டும் சிறிது சாய்ந்த வண்ணம், சரீரம் பத்மாசனத்தில் இருந்த நிலையில் உயிர் உடம்பை விட்டுப் பிரிந்து இருந்தது. அவரது ஜீவன் சிவனுடன் ஐக்கியமாகி விட்டது. வைத்தியர்கள் சித்தரின் கை நாடியை பிடித்துப் பார்த்தபோது எல்லாம் முடிந்து விட்டது. சித்தரின் திருமேனியை நாற்காலியில் வைத்து, சிவநாமத்தைச் சொல்லிக் கொண்டே புதூர் மடத்தை விட்டு ஊர்வலமாக கிளம்பினர்.

    மாறந்தை ஊரின் மேற்கோடியில் உள்ள காளி கோவிலுக்கு அருகில் இருக்கும் நந்தவனத்தில் சித்தரை வைத்தனர். இரவோடு இரவாக சுவாமிகளின் திருமேனியைச் சமாதியில் எழுந்தருளச் செய்தனர். ஸ்ரீசெட்டி சித்தர் சமாதி, 1918-ம் வருடம் அக்டோபர் மாதம் 5-ந் தேதி ஹஸ்த நட்சத்திரத்தில் நடந்தது. சித்தர் ஜீவ சமாதி அடைந்த பின்னர், மண்டல பூஜையும் நடத்தி சிவலிங்க பிரதிஷ்டை செய்தனர். சமாதி இடத்தில் கற்கோவில் கட்டினர். நந்தவனத்தில் புதிய கிணறு வெட்டப்பட்டது.

    ஸ்ரீசெட்டி சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட பல அற்புதங்களை நிகழ்த்தினார். அது தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    தூத்துக்குடியில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் குழு ஒன்று, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் சமாதிக்கு வந்தது. அங்கு அவர்கள் தியானம் செய்து விட்டு அருகில் இருந்த பக்தர்களிடம் ‘ஸ்ரீசெட்டி சித்தர், இதுவரை உங்களுக்கு காட்சி அளித்திருக்க மாட்டார். இனி உங்களுக்கு சர்ப்பமாக காட்சியளிப்பார்' என்று கூறிச் சென்றனர். அதே போல் மூன்று நாள் மூலஸ்தானத்தில் சர்ப்பம் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

    ஸ்ரீசெட்டி சித்தர் சன்னிதி


    தனக்கு குருபூஜை எப்படி நடக்க வேண்டும் என்பதை ஸ்ரீசெட்டி சித்தரே ஒவ்வொரு ஆண்டும் தீர்மானிப்பார். குரு பூஜைக்கு முன்பாக பக்தர்கள் கனவில் தோன்றி, திரைப்படம் போல தனது ஆலயத்தில் நடைபெற உள்ள பூஜையை காட்டியருள்வார். அதன்படியே கமிட்டியுடன் பக்தர்கள் கலந்து பேசி, குரு பூஜையை செய்து முடிப்பார்கள். சித்தர் சமாதியை வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் பிரச்சினைகள் நீங்கும். பேய், காத்து கருப்பு போன்றவைகள் அகலும். கெட்ட கனவுகள் வருவது நின்று போகும்.

    ஒரு முறை ஆலங்குளத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், மது போதையில் சித்தரின் ஜீவ சமாதி இடத்தில் படுத்திருந்தார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘மது அருந்தாதே. உனக்கு மதுவின் நினைப்பு வரும்போதெல்லாம், உன்னுடைய குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிரு’ என்றார். சித்தர் சொன்னபடியே நடந்ததால், அந்த பக்தர் மது போதையில் இருந்து மீண்டார்.

    கொல்லிமலை சித்தர் என்ற பெயரில் போலி சாமியார் ஒருவர் கோவிலுக்கு வந்தார். அனைவரும் அவர் தோற்றத்தைக் கண்டு கோவிலில் தங்க அனுமதித்தனர். ஆனால் பக்தர்கள் கனவில் சுவாமி தோன்றி, ‘அவன் போலி. அவனை தங்க வைக்காதீர்கள்' என கூறினார். மறுநாள் பக்தர்கள் அவரை கவனித்த போது அவரின் போலித்தனம் தெரிந்தது. அவர் மக்களை ஏமாற்றி பணம் பறித்தார். குடிப்பழக்கம் கொண்டவர் எனவும் தெரியவந்தது. மக்கள் அவரை திரும்பி அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீ செட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்த இடமானது, புதன் கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டது என்று சொல்லப்படுகிறது. எனவே இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், கல்வி கேள்விகளில் சிறப்புடன் விளங்குவர். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஞான தேடல் உள்ளவர்களுக்கு ஞானத்தை அளிக்கும், ஞானதபோவனமாக விளங்குகிறது, மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர் ஆலயம். எவ்வித தோஷம், பிரச்சினைகள் இருந்தாலும் சித்தரின் சன்னிதியை அடைந்தால் நிச்சயம் சரியாகி விடும். பக்தர்களின் தேவைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தக்க இடத்திற்கு அனுப்பியோ சுவாமிகள் சரிசெய்கிறார். ஜாதி மத பேதம் பார்க்காதவர், எவ்வுயிருக்கும் தீங்கு செய்ய நினையாதவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் சித்தருக்கு மிகவும் பிடித்த அடியார்கள் ஆவர். அவர்களை சித்தர் ஒரு குழந்தையை போல பாதுகாக்கிறார்.

    சுடர் விட்டு எரிந்த விளக்கு


    ஸ்ரீசெட்டி சித்தர் காலமான பிறகு சுமார் 21 ஆண்டுகள், சரியான பராமரிப்பு இன்றி அவரது ஜீவ சமாதி புதர் மண்டிக் கிடந்தது. வருடந்தோறும் குருபூஜையை மட்டும் விடாமல் மக்கள் செய்து வந்தனர். அதன்பின் பல அற்புதங்கள் நிகழ்ந்த காரணத்தினால் கோவில் தினசரி பூஜைக்கு வந்தது.

    ஆரம்ப கால கட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த இரு நண்பர்கள் கோவிலைத் திறந்து பூஜை செய்ய ஆர்வம் காட்டினர். அவர்கள் இலுப்பெண்ணையில் தீபம் ஏற்றுவார்கள். காலையில் ஏற்றினால் மாலையில் அணைந்து விடும். அதற்குள் எண்ணெய் ஊற்ற வேண்டும். எனவே தினமும் காலை மாலை பூஜை செய்து எண்ணெய் ஊற்றி வந்தனர்.

    இந்நிலையில் இருவரும் சதுரகிரி மலைக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கி விட்டனர். அங்கு அவர்கள் இருக்கும் போதெல்லாம் ஊர் நினைப்புதான். ‘எப்படி விளக்கு எரிகிறதோ, அணையாமல் எரிய வேண்டுமே’ என மனதுக்குள் வேண்டி நின்றனர். ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது, விளக்கு அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. ஆச்சரியப்பட்டவர்கள், ஸ்ரீசெட்டி சுவாமியின் அருளை எண்ணி வியந்து நின்றனர். இதை கேள்விபட்ட பலரும் சித்தரை தரிசிக்க கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். 
    மேலூர் அருகே உள்ள 18 சித்தர்கள் கோவில் திருவிழாவுக்கு வாழைப்பழ தார்களை பக்தர்கள் பாரம்பரிய வழக்கப்படி தலைச்சுமையாக கொண்டு சென்றனர்.
    கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து அளிப்பார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்களே சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    அதனால் தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள் கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சாமி தரிசனம் செய்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாங்குளம் மீனாட்சிபுரத்தில் மலை அடிவாரத்தில் 18 சித்தர்கள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இங்கு பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    அதாவது, கோவிலில் இருந்து மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை வழியாக பாதயாத்திரையாக மேலூருக்கு வந்து சித்தர்களுக்கு படைத்து வழிபட வாழைப்பழ தார்களை வாங்கிச்செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் மேலூருக்கு பாதயாத்திரையாக வந்து வாழைப்பழ தார்களை வாங்கி தலைச்சுமையாக கல்லம்பட்டி, அரிட்டாபட்டி, செட்டியார்பட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    இந்த வாழைப்பழங்கள் சித்தர்களுக்கு இன்று நடைபெறும் திருவிழாவில் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழ பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் திரளாக கலந்துகொள்கிறார்கள். 
    திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ள மாறந்தை என்ற கிராமத்தில் அடங்கி உலகெல்லாம் அருள் வழங்குபவர் தான் ஸ்ரீசெட்டி சுவாமிகள்.
    திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் 14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மாறந்தை என்ற கிராமம். இங்கு அடங்கி உலகெல்லாம் அருள் வழங்குபவர் தான் ஸ்ரீசெட்டி சுவாமிகள். வயல்வெளியில் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு மற்றொரு தாய் பால் கொடுத்த காரணத்தினால் இவ்வூர் ‘மாற்றான் தாய் நல்லூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் ‘மாறந்தை’ என மருவியது.

    ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிபுதூரில் 1878-ல் பிறந்தவர் தவத்திரு செட்டி சுவாமி என்ற சற்குருநாத சுவாமிகள். இவர் தந்தையின் பெயர் முத்தையா செட்டியார். இவரின் நான்கு புதல்வர்களில் ஒருவர் தான் கருப்பன். தந்தையாரின் ஜவுளி கடையில் திருநீறு அணிந்து பக்தி பரவசமாகவே வேலை செய்வார்.

    பக்தியில் மிகவும் லயித்து விடக்கூடாது என இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தெய்வத்தின் மீது ஈடுபாடுடன் இருந்த கருப்பன், வியாபரத்தின் மீதும் குடும்பத்தின் மீதும் பற்று இல்லாமலேயே விளங்கினார். எனவே யாருமில்லாத சமயத்தில் கடையில் ஜவுளிகளை நஷ்டத்துக்கு விற்று விட்டார். இதையறிந்த சகோதரர்கள் கோபமடைந்தனர். அவரை கண்டித்தனர்.

    கருப்பன் தனது மனைவி குழந்தையுடன் வடக்குநோக்கி கிளம்பினார். பல இடங்களில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். ஆங்காங்கே மகான்களை கண்டு தரிசனம் செய்தார். இறுதியில் ராமேஸ்வரம் வந்தடைந்தார். அங்கு சமாதி கொண்ட தாயுமான சுவாமிகள் பீடத்தில் அமர்ந்து, சிறிது காலம் தியானம் செய்தார். தொடர்ந்து திருச்செந்தூர் நோக்கி பயணமானார். அங்கே மூலவருக்கு பின்னால் குகைக்குள் அமைந்்துள்ள பஞ்சலிங்கத்தை தினமும் தவறாமல் பூஜித்தார். நாழிக்கிணறு அருகே பூவரசு மரத்தடியில் வட்டக் கல்லில் துறவு கோலத்துடன் மேற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்க ஆரம்பித்தார்.

    இவரின் காதில் பெருந்துளையிட்ட தோற்றத்தினை கண்டு, அனைவரும் இவரை ‘ஸ்ரீசெட்டி சுவாமி’ என்று அழைத்தனர். அந்த பெயரே பிற்காலத்தில் அவருக்கு விளங்க ஆரம்பித்து விட்டது. பலர் இவருக்கு பழங்களை பரிசளித்தனர். அதை வாங்கி தானும் புசித்து விட்டு மீதியை, அங்கு வரும் ஏழைகளுக்கும் வழங்கினார்.

    எப்போதும் புன்சிரிப்புடன் பட்டினத்தார், தாயுமானவர் பாடலையும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலான பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பார். கண்களை மூடிக்கொண்டு ஆடாமல் அசையாமல் பத்மாசனமிட்டுச் சின்முத்திரை தாங்கி, சண்முகநாதனை நோக்கித் தவமேற்றுவார்.

    அவர் திருச்செந்தூரில் இருப்பதை அறிந்து, குடும்பத்தார் அவரை அழைத்தனர். எதையும் கண்டுகொள்ளாமல் அவர் கற்சிலைபோல் தவமேற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவர்கள் அவரை விடவில்லை. எப்படியும் தங்களது வீட்டுக்கு கூட்டிச்சென்று விடவேண்டும் என முயற்சி செய்தனர்.

    குடும்பத்தார் கண்ணில் தென்படாத வகையில் கோவிலுக்குள் சென்று அமர்ந்து கொண்டார், ஸ்ரீசெட்டி சுவாமிகள். ஆனாலும் உறவினர்கள் கோவிலுக்குள் சென்று அவரை வலுக்கட்டாயமாக பிடித்து வில்லு வண்டியில் ஏற்றிச் சென்றனர். வண்டி குறிப்பிட்ட தூரத்தில் சென்றபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என இறங்கியவர் மாயமாக மறைந்து விட்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பட்டப்பகலில் காணாமல் போன அவர் சித்தராகி விட்டார் என புரிந்த உறவினர்கள், ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பி விட்டனர். அதே வேளையில் சுவாமி தென்திருப்பேரை அருகே ஒரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

    அதன் பின் அவ்வூரில் அமர்ந்து செந்தூர்முருகனை நோக்கி தவமேற்றினார். அதைக் கண்ட முருக பக்தர் அருணாசலம் என்பவர், சித்தருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தார். தென்திருப்பேரையில் இருந்தாலும், திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க தினமும் சென்று வந்தார்.

    தென்திருப்பேரை ரவுண்டனாவில் கீழே படுத்துக் கிடந்தால் கூட, அப்படியே உயிரற்ற கட்டையாக தவம் செய்வார். ஒருநாள் சாலையோரம் அவர் படுத்துக்கிடப்பதை கவனிக்காமல் பாரத்துடன் வந்த மாட்டு வண்டி ஒன்று அவர் மீது ஏறிவிட்டது. வண்டிக்காரர் பதறியடித்துக் கொண்டு வந்து பார்த்தார். அப்போதும் தியானம் கலையாமல் அப்படியே இருந்தார் ஸ்ரீசெட்டி சுவாமிகள். இதனைக் கண்ட வண்டிக்காரர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். சித்தரைப் பற்றி அக்கம் பக்கத்தில் கூறினார்.

    தென்திருப்பேரை அருணாசலம், சித்தருக்காக உணவு சமைத்து எடுத்து வருவார். அதை சிரித்துக் கொண்டே தான் வைத்திருக்கும் தகரப்போணியில் போடச்சொல்வார். அவர் சாப்பிட்ட பின் மீதியை அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு கொடுப்பார். ஊர் மக்கள் பலர் இவருக்கு உணவு கொடுக்க ஆசைப்படுவர். அனைவரிடமும் சிரித்த முகத்துடன் உணவை பெற்றுக்கொள்வார். நாய்குட்டி சுவாமிகள், சேரகுளம் பண்ணையார், அனவரதநல்லூர் தேவாரம் சுந்தரபிள்ளை, தென் திருப்பேரை கிருஷ்ண அய்யங்கார், ராயர் சமுதாயத்தினர் உள்பட பலர் ஸ்ரீசெட்டி சித்தருக்கு பணிவிடை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

    1915-ம் ஆண்டு சுவாமிகள் ஆழ்வார்திருநகரியை விட்டு திருநெல்வேலிக்கு வந்தார். தனக்குத் தேவை என்று தோன்றினால் கையிலுள்ள தகரப் போணியைப் பிச்சா பாத்திரமாகக் கொண்டு வீடுகளில் பிச்சை எடுப்பார். மாலை நேரத்தில் காந்திமதியம்பாளைத் தரிசித்துவிட்டு அங்குள்ள பொற்றாமரை குளக்கரையில் ஏகாந்தமாக படுத்துக்கிடப்பார். செட்டிச் சுவாமியைச் சூழ்ந்திருக்கும் சிவபக்தர்களுக்கு நல்வழிகள் கூறியும், பட்டினத்தார், தாயுமானவர் அருட்பாடல்களைச் சொல்லி அதற்குப் பொருளும் கூறுவார்.



    இவ்வேளையில் மாறந்தையைச் சேர்ந்த காசிநாத முதலியார், சுவாமியை சந்தித்துள்ளார். அவரின் ஆன்மிக செயலுக்கு அடிமையாகி, சித்தரின் சீடராகி விட்டார். பின்னர் தன்னோடு மாறந்தைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் மறுநாள் வருவதாக சுவாமி வாக்களித்தார்.

    இதற்கிடையில் சுவாமி வரும் தகவலை முதலியார் மாறந்தையில் பலரிடம் கூறினார். அவ்வூரை சேர்ந்த சுப்பிரமணிய ஆசாரி என்பவர், புதூர் சென்ற போது அங்கு பாடிக்கொண்டிருந்த ஸ்ரீசெட்டி சித்தரைக் கண்டார். ‘ஆகா.. இவர் முதலியார் கூறிய சுவாமிகள் போல அல்லவா உள்ளார்' என நினைத்து அவரை மாறந்தைக்கு அழைத்துள்ளார். அப்போதும் சுவாமிகள், ‘நாளை வருகிறேன்' என்று கூறியிருக்கிறார்.

    அந்த தகவலையும் அவர் ஊரில் போய் கூறினார். ஊரே.. சுவாமியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

    மறுநாள் அதிகாலை ஆசாரி வீட்டு முன்பு, கையில் தகரப்போணியை வைத்துக்கொண்டு, இடிப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டிய வண்ணம் செட்டி சுவாமிகள் நின்றார். அவரை வணங்கி வரவேற்றனர். ஆசாரி மனைவி கொடுத்த கஞ்சியை தனது தகரப்போணியில் வாங்கி, அதில் பாதியை குடித்து விட்டு, மீதியை அப்படியே வைத்துக்கொண்டார்.

    இதையறிந்த ஊர் பெரியவர்கள் ஓடோடி வந்தார்கள். காசி நாத முதலியார் தனது இல்லத்திற்கு அழைத்து, தக்க ஆசனத்தில் அமர வேண்டினார். சுவாமியோ தரையில் அமர்ந்து கொண்டார். வீட்டு ஓரத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். பின் எதுவுமே பேசாமல் ஆலங்குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். வெண்கல பொட்டலில் பாழடைந்த மண்டபத்திலும், அத்தியூத்து என்னுமிடத்திலும் அமர்ந்து தியானிக்க ஆரம்பித்தார். ரோடு ரோடாக அலைந்த காரணத்தினால் இவரை ‘ரோட்டு சாமியார்' எனவும் அழைக்க ஆரம்பித்தனர்.

    மாறந்தைக்கு சுவாமி வரும் வேளையை எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருப்பார்கள். சில வேளையில் பட்டை ஓலையை எடுத்துக்கொண்டு சுவாமி ஊருக்குள் வருவார். பாகுபாடின்றி அனைத்து தெருக்களிலும் பிச்சை எடுப்பார். சிலர் ‘சைவ அம்சம் கொண்ட எங்கள் இடத்தில் மட்டும் பிச்சை எடுங்கள்’ எனக் கூறினர். அவர்களுக்கு சுவாமியிடம் இருந்து புன்சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

    ஸ்ரீசெட்டி சித்தரின் புகழை கேள்வி பட்டு திருநெல்வேலியில் இருந்து இரண்டு நண்பர்கள் சுவாமிக்கு பழம் வாங்கி கொண்டு வந்தனர். இருவரும் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அதில் தாழ்த்தப்பட்டவர், ‘தான் யார் என்று கூறினால் பழத்தினை சுவாமி வாங்குவாரோ.. வாங்க மாட்டாரோ.. எனவே அவரிடம் நாம் யார் என்று கூறக்கூடாது' என அமைதியாக இருந்தார். சுவாமியை சந்தித்த போது, ‘யப்பா, உங்கள் ஜாதியை எல்லாம் நான் கேட்டேனா.. எல்லாருமே இந்த பூமியில் ஒன்றுதானப்பா.. ஜாதியை இறைவன் வைக்கவில்லை. நீங்கள் தான் வைத்துக்கொண்டீர்கள்' என கூறி சிரித்தார்.

    அவர் தந்த பழத்தினை சாப்பிட்டு விட்டு, மீதியை கொண்டு போய் உங்கள் குழந்தையிடம் கொடுங்கள்' என அனுப்பி வைத்தார்.

    ஆகா.. நாம் மனதில் நினைத்தது சுவாமிக்கு புரிந்து விட்டதே. என அதிர்ந்தவர்கள், சுவாமியின் அருள் வேண்டி நின்றனர்.

    ஜாதி சமயத்துக்கு அப்பாற்பட்டு சுவாமியை காண பக்தர்கள் புதூர் மடத்துக்கு வருவதை வாடிக்கையாக கொண்டனர்.

    காலங்கள் கடந்தது. சுவாமியின் கழுத்தை சுற்றி கண்ட மாலை என்னும் நோய் தாக்கியது. இந்த நோயை தீர்க்க அந்த காலத்தில் மருந்தே கிடையாது. இதனால் சுவாமிகள் ரணம் அடைந்தார். பலரும் ‘நோய் தீர்க்க மருத்துவரிடம் செல்வோம்’ என்று ஆலோசனை கூறினர். ஆனால் சுவாமி கேட்கவில்லை.
    பச்சை குத்திக்கொண்ட பக்தர்

    மாறந்தையை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர், தனது வீட்டின் வாசலில் சுவாமி பாடிக்கொண்டிருந்ததை கண்டு கோபமுற்றார். சுவாமியை நோக்கி சொல்ல கூசும் வார்த்தைகளால் ஏசினார். சுவாமி.. ‘கவலைப் படாதே.. நீயும் என்னைப் போலத்தான் ஆக போகிறாய்’ என கூறி சிரித்தார்.

    கோபமடைந்த சங்கரலிங்கம், சுவாமியை அடிக்க கம்பு எடுக்க வீட்டுக்குள் ஓடினார். வெளியே வந்து பார்த்த போது சுவாமியை காணவில்லை. பல இடத்தில் தேடியும் இவர் கண்ணில் படவில்லை. ஆனால் அவரை தேடிசென்ற இடத்தில் எல்லாம் ‘சுவாமியை இப்போதுதான் பார்த்தேன்’. ‘இங்குதானே அமர்ந்திருந்தார்’ என மற்றவர்கள் பேசினர்.

    அந்த சிறு கிராமத்தில் தனது கண்ணில் மட்டும் சுவாமி படவில்லை என்றால், அவர் சாதாரண மனிதரா? என யோசிக்க ஆரம்பித்து விட்டார் சங்கரலிங்கம். ஆகா.. இவர் மகான் அல்லவா.. என அறிந்து அதன் பின் அவரிடம் சீடராகி விட்டார். சாமி.. சமாதி அடைந்த பிறகு தன்னுடைய கையில் ‘செட்டி சுவாமியின் சீடர்’ என பச்சையே குத்திக்கொண்டார். 
    திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்பரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது.
    அப்பரானந்த சுவாமிகளுக்கு இறையருள் கிடைத்ததையும், சொக்கம்பட்டி ஜமீன் அவரின் பக்தராக மாறியதையும், அப்பரானந்த சித்தர் சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்து அரியணையில் அமர்ந்தபோது, எட்டயபுரம் ஜமீனின் தலைமைப் புலவரான கடிகை முத்து புலவர் வந்து, ‘யார் இந்த பரதேசி?. இவனுக்கு ஏன் இந்த மரியாதை’ என்று கிண்டலாக கேட்டார்.

    கடிகை முத்து புலவரின் கடுமையான சொல், அப்பரானந்த சித்தர் மீது பாய்ந்தவுடன் நிலைகுலைந்து போனார் சொக்கம்பட்டி ஜமீன்தார்.

    ‘இவர் எனக்கு ஞானகுரு. என் பிறவித் துயர் தீர்க்கும் மெய்க்குரு' என பதறியபடி கூறினார்.

    அதற்கும் எகத்தாளமான சிரிப்பை உதிர்த்தார் கடிகை முத்து புலவர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடிகை முத்து புலவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதற்கிடையில் அப்பரானந்த சித்தர் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரின் வாதங்களையும் சிரித்தபடியே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

    நாட்கள் கடந்தன.

    எட்டயபுரம் வந்த கடிகை முத்து புலவருக்கு கன்னத்தில் புற்று நோய் உருவாகி விட்டது. இதனால் அன்னம், தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்தார். வலியால் துடித்தார். சங்கரன்கோவில், திருச்செந்தூர் என ஒவ்வொரு தலங்களாகச் சென்று, இறைவனைப் பாடி சுகம் அளிக்கும்படி வேண்டினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

    ஒரு முறை திருச்செந்தூரில் வழிபட்ட கடிகை முத்து புலவர், இரவு நேரத்தில் ஆலயம் முன்பாக உள்ள கடற்கரையில் படுத்து கண் அயர்ந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ‘என்னுடைய சீடனை நீ பழித்து விட்டாய். நெட்டூர் போ.. அவன் கையால் உணவு வாங்கி சாப்பிடு. எல்லாம் சரியாகிவிடும்’ என்றார்.

    அதிர்ந்து போன புலவர், விடிந்தும் விடியாததுமாக நெட்டூர் வந்து சேர்ந்தார். அங்கு தியானத்தில் இருந்த அப்பரானந்த சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

    இப்போதும் சிரித்தபடியே கடிகை முத்து புலவரைப் பார்த்தார் அப்பரானந்த சித்தர். பிறகு தான் தவப்பிச்சையாக பெற்று வைத்திருந்த அன்னத்தை புலவரின் கன்னத்தில் தேய்த்தார். தான் தவப் பிச்சை எடுத்து வரும் உணவை மூன்று நாட்கள் சாப்பிடும்படி கூறினார். புலவரும் அப்படியே செய்தார்.

    என்ன ஆச்சரியம்.. புலவரின் நோய் பூரணமாக தீர்ந்து போனது. ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், கடிகை முத்து புலவர்.

    அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘அப்பரானந்த ஆனந்த மாலை' என்ற பாடல் தொகுப்பைப் பாடி, நன்றியுடன் சித்தர் வசம் அதைச் சமர்ப்பித்தார். அதன்பிறகு எட்டயபுரம் புறப்பட்டுச் சென்றார்.

    ஒரு முறை சித்தரை தரிசிக்க வந்த சொக்கம்பட்டி ஜமீன்தார், ‘சுவாமி! நான் திருச்செந்தூர் செல்கிறேன். என்னுடன் பல்லக்கில் எழுந்தருள வேண்டும்' என்றார்.

    அதற்கு சித்தர், ‘எனக்கு சிவிகை வேண்டாம். உனக்கு முன் நான் திருச்செந்தூர் வந்து சேர்ந்து விடுவேன்' என்று கூறிவிட்டு, அங்கிருந்த மருதமரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டார்.

    இதையடுத்து ஜமீன்தார் திருசெந்தூர் புறப்பட்டார். வழியில் அவருக்கு கடுமையான நீர் தாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது சேவகனின் முன்பு தோன்றிய அப்பரானந்த சித்தர், ‘தென் கீழ்த்திசையில் போய் பார் தண்ணீர் கிடைக்கும்' என்றார். அது போலவே தண்ணீர் இருந்தது.

    ஜமீன்தாருக்கு முன்பாகவே திருச்செந்தூர் ஆலயம் வந்த அப்பரானந்த சித்தர், சேவகன் வடிவில் ஆலய நிர்வாகத்தினரிடம் ‘சொக்கம்பட்டி ஜமீன்தார் நாளை வருவான்' எனக் கூறி மறைந்தார்.

    மறுநாள் ஜமீன்தாரை வரவேற்க ஆலய குருக்கள் காத்திருந்தனர். ஆச்சரியமுற்ற ஜமீன்தார், சுவாமி நேற்று இரவே இங்கு வந்து விட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, அங்கேயே தங்கினார் ஜமீன்தார்.

    இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்பரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது. நேராக முருகப்பெருமான் சன்னிதிக்குச் சென்ற சித்தர், ‘குருவே, நான் சித்தி அடைவது எப்போது?' எனக் கேட்டார்.

    அப்போது அங்கு ஒரு குரல் கேட்டது. பேசியது முருகப்பெருமான் தான். ‘அப்பரானந்தா! இன்னும் 24 மாத காலங்களுக்கு உனக்கு பணி உள்ளது. பெற்றோரின் கடன் முடித்த பிறகே உனக்கு சித்தி கிடைக்கும், நீ.. வணங்கும் வேல் அருகிலேயே உனக்கு சமாதி வைப்பார்கள். அதன் பின் கர்ப்பக்கிரகத்தில் தற்போது நீ வேல் வைத்து வணங்கிய இடத்தில், என்னை பிரதிஷ்டை செய்வார்கள். என்னை வணங்கும் பக்தர்கள் அனைவரும் உன்னையும் வணங்குவார்கள்' என கூறி அருளினார்.



    இறைவனை தரிசித்து விட்டு வெளியே வந்தார் சித்தர். அனைத்தையும் வெளியே இருந்து கவனித்துக் கொண்டிருந்த சொக்கம்பட்டி ஜமீன்தாரின் சேவகன், ஆச்சரியத்துடன் இதுபற்றி ஜமீன்தாரிடம் கூறினான். அவருக்கு, முருகப்பெருமானுடன் பேசும் ஆற்றல் பெற்றவர் சித்தர் என்பதில் எல்லையில்லாத மகிழ்ச்சி.

    உடனடியாக சித்தரைப் போய் சந்தித்த ஜமீன்தார், ‘சுவாமி! நான் குழந்தை பேறு இல்லாமல் தவிக்கிறேனே. இதற்கு அருள்புரியமாட்டீர்களா' என்று வேண்டினார்.

    ‘உனக்கு மகன் பிறப்பான். அதற்காக நீ.. செந்தூரில் உள்ள சரவணப் பொய்கையைச் சீர் செய்யவேண்டும்' என்றார் சித்தர். மறுநிமிடமே சரவணப்பொய்கையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார் ஜமீன்தார்.

    பின்னர் சொக்கம்பட்டி திரும்பும்போது, தனது தாகம் தீர்த்த சுனையைத் தேடினார். ஆனால் அந்த சுனை அங்கே இல்லை. எல்லாம் சித்தரின் செயல் என்று நினைத்தபடி அரண்மனை வந்து சேர்ந்தார். அப்பரானந்த சித்தர் கூறியபடியே ஜமீன்தாருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    காலங்கள் கடந்தன. முருகப்பெருமான் சொன்னபடியே தனது தாய் தந்தைக்கு இறுதி மரியாதை செய்து விட்டு, நெட்டூரில் தவப்பிச்சை அன்னத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் அப்பரானந்த சித்தர். வேலுக்கும் தவறாமல் பூஜை செய்தார்.

    இந்த நிலையில் இருளகற்றி அம்மையின் இறுதி காலத்தை சித்தர் உணர்ந்தார். அவரை தவம் செய்யும்படி சித்தர் பணித்தார். இருளகற்றியம்மை தவம் இருந்தார். அவரது உயிர் ஒளியில் கலந்தது. அவரது ஒடுக்கத்தை தான் அடங்கப்போகிற இடத்திற்கு அருகில் தன் கையாலேயே அமைத்தார். சித்தரின் தமக்கை முத்தம்மையும் அந்த ஆலய வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டார்.

    அது ஒரு ஆனி மாதம் வியாக்கிழமை பூச நட்சத்திரம். அப்பரானந்த சித்தர், சொக்கம்பட்டி ஜமீன் மற்றும் பக்தர்களை அழைத் திருந்தார். பின் அவர்களை நோக்கி, ‘எனது இறுதி காலம் வந்து விட்டது. இருளகற்றிக்கு வடக்கில் என்னை அடக்கம் செய்யுங்கள். நான் ஒடுங்கியப் பின் இறைவனுக்கும் வேற்படைக்கும் உண்மையான அன்போடு பணி செய்யுங்கள். இந்த இடத்தில் நற்பணி செய்ேவாருக்கு எல்லா அறப் பயன்களும், பொருளும், இன்பமும் கிட்டும். அவர்கள் அனைவரும் முக்தியும் அடைவார்கள்’ என்று அருளினார்.

    மேலும் ‘இந்தச் சன்னிதியில் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்யுங்கள். எல்லா தேவர்களும் துதி செய்ய அவர் இங்கு வந்து கோவில் கொள்வார்’ என்றார்.

    அனைவரும் சூழ்ந்து நிற்க, அப்பரானந்தர் சிற்றாற்றில் நீராடினார். புலித் தோலை ஆசனமாக விரித்து வடக்கு நோக்கி பத்மா சனத்தில் அமர்ந்தார். சின்முத்திரைக் காட்டி அருட் சமாதி நிலையில் ஒன்றினார். எல்லாரும் அதிசயிக்குமாறு மேலேழுந்த ஒரு சோதி வான் நோக்கிச் சென்றது.

    அதன்பின் அப்பரானந்த சித்தர் அருளியபடியே ஆலயம் அமைக்கப்பட்டது. கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்தார்கள். தற்போது இந்த ஆலயம் சுப்பிரமணிய சுவாமி, அப்பரானந்த சுவாமிகள் ஆலயம் என்றே போற்றப்படுகிறது.

    அப்பரானந்த சுவாமிகளின் குருபூஜை ஆனி மாத பவுர்ணமியில் நிகழ்த்தப்படுகிறது. இக்கோவிலில் திருச்செந்தூரில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும்.

    ஆனி திருவிழா தான் இக்கோவிலில் மணிமகுட திரு விழாவாகும். இவ்விழாவில் அன்ன பிச்சை வழங்கப்படும். இதற்காக அன்னம் குவிக்கப்பட்டு, சுவாமி மற்றும் அவரின் குருநாதரின் பாதக்குறடுகள், கைத் தண்டுகள் படையலில் வைத்து பூஜை செய்யப்படும். இச்சமயம் அப்பரானந்த சுவாமி களும் இவரது குருநாதர் குழந்தை முத்தானந்தா சுவாமிகளும் இங்கே வந்து அருளி நிற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அன்ன பிச்சையை சாதுக்கள் பக்தர்களுக்கு வழங் குவார்கள். அதை உண்ணும் மக்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. குறிப்பாக குழந்தை வரம். தடைபட்ட திருமணம் நடந்தேறுகிறது. கடன் தீர்ந்து தொழில் பெருகுகிறது. நாள் பட்ட நோய் தீருகிறது.

    தினமும் இக்கோவிலின் நடை காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    சித்தர் அருளிய 11 கடமைகள்

    தன்னை வணங்க வரும் பக்தர்களிடம், அப்பரானந்த சித்தர் 11 கடமைகளை கடைப்பிடிக்கும்படி கூறிவந்தார். ஞானத்தின் தொடக்கமான அந்த கடமைகளில், ‘சிவனது மலரடிகளில் மலர் தூவி வழிபட்ட பின்பே உண்ணுதல். பசுந்தழைகளை பசு உண்ணக் கொடுத்தல், கதிரவனை வணங்குதல், உண்ணும் போது பிறருக்கு கொடுத்து உண்ணுதல், இனியச் சொற்களையே எல்லோரிடத்திலும் பேசுதல், நமசிவாய என்ற ஐந்தெழுத்தை இடைவிடாது ஓதுதல், நன்மை பெருகும் காலத்திலும் நிலைத்த வாய்மையைப் போற்றுதல், தொண்டு செய்வோர்களையும் இறைவனையும் வாழ்த்துதல், தாய் தந்தையர், குரு, தெய்வங்களைப் பேணும் அன்பு, எல்லா உயிரையும் தன்னுயிர் என எண்ணுதல், ஞான குரு உபதேசத்தினைக் கேட்பது’ போன்றவை அந்த கடமைகளாகும். இக்கடமையை நிறைவேற்றும் போது அறிவு நிறையும், வீட்டின் இன்பத்துக்கும் குறை ஏற்படாது என்பது சித்தரின் வாக்கு.

    அமைவிடம்

    திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது ஆலங்குளம். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் அழகிய பாண்டிய புரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை, சோழச்சேரி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிலும் நெட்டூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. 
    திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது.
    திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது. இவ்வூர் முற்காலத்தில் ‘ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்’ என அழைக்கப்பட்டது. இங்கு அப்பரானந்தா சுவாமிகள் வந்து தவம் புரிந்த பின் ‘நிஷ்டைபுரி’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி நிட்டைபுரி என மாறி, இறுதியில் ‘நெட்டூர்’ என பெயர் பெற்றது.

    இவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும்?. அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.

    யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்?. இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்?

    தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பட்டினமருதூரில், சகல கலைகளிலும் வல்லவரான மகாராஜப் புலவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி மதுரவல்லி. ஆதிமூலப் புலவர், ஆறுமுகப் புலவர், அருணாசலப் புலவர், கந்தசாமிப் புலவர், நல்ல குமாருப் புலவர், சங்கிலி வீரப் புலவர், முத்தம்மாள், அய்யம்பெருமாள் புலவர் ஆகிய எட்டுபேர் இவர்களின் குலத்தோன்றல்கள். இவர்களில் அய்யம்பெருமாள் தான் பிற்காலத்தில் அப்பரானந்தா சுவாமிகளானார்.

    குழந்தைகளுக்கு பக்தி, உண்மை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தனர் பெற்றோர். முதல் ஆறு பேருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. முத்தம்மையை ஸ்ரீரெங்க பூபாலசமுத்திரத்தைச் சேர்ந்த வேலுமயில் பண்டிதருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். தம்பி அய்யம்பெருமாள் மீது பாசம் கொண்ட முத்தம்மாள், அவரையும் தன்னுடன் அழைத்து வந்தார். இதனால் அக்காள் வீட்டில் பாதி நாளையும் தனது சொந்த ஊரில் மீதி நாளையும் கழித்து வந்தார் அய்யம்பெருமாள்.

    சுரண்டைப் பகுதியில் வாழ்ந்தவர், குழந்தை முக்தானந்த தேசிகர். அவர் திருக்குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டுப் பட்டினமருதூர் வந்து சேர்ந்தார். அங்கு விளையாடுகின்ற சிறுவர் கூட்டத்தில் அய்யம்பெருமாளைக் கண்டார். தமக்குத் தொண்டு செய்வதற்கேற்றச் சீடன் என்று நினைத்தார். அய்யம்பெருமாளை அழைத்து, ‘உன்னை நீ அறிவாயாக' என்று கூறி திருநீறு வழங்கி உபதேசம் செய்தார். அன்று முதல் குழந்தை முக்தானந்த தேசிகரை குருவாக ஏற்று, அவர்வழி நடந்தார் அய்யம்பெருமாள். குருவுடன் பல சிவ தலங்களுக்குச் சென்றார். இறுதியில் இருவரும் மதுரையில் தங்கினர்.

    இந்த நிலையில் அய்யம்பெருமாளைக் காணாமல், அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர். குல தெய்வத்திடம் வந்து முறையிட்டனர். ‘உன் மகன், பரிசுத்தமான தேசிகனோடு மதுரையில் உள்ளான்' என வாக்கு கிடைத்தது.

    மறுநாளே மதுரைக்கு ஓடோடிச் சென்றார், மகாராஜப் புலவர். அங்கே குருவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் அய்யம்பெருமாள்.

    மகாராஜப் புலவரைக் கண்ட குழந்தை முக்தானந்த தேசிகர், ‘இவன் உன்னுடைய மகனல்ல.. ஞானி' எனக் கூறி அய்யம்பெருமாளை, தந்தையோடு அனுப்பிவைத்தார்.

    தந்தையும், மகனும் பட்டின மருதூர் திரும்பினர். அது முதல் அய்யம்பெருமாள் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து விடுவார். அவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகி விடும் என பெற்றோர் நினைத்தனர். இதற்காக களக்காட்டில் மாதவப் பண்டிதரின் மகள் இருளகற்றி அம்மையைத் திருமணம் செய்ய பேசி முடித்தனர். மணவறையில் தாலிக் கட்டும் சமயம், அய்யம்பெருமாள் மாயமாய் மறைந்து விட்டார். அனைவரும் அதிர்ந்தனர்.

    பெண்ணின் பெற்றோர், ‘இவன் பேய் போல.. இவன் எப்படி நம் பெண்ணை வைத்து காப்பாற்றுவான்' என வருந்தினர்.

    அப்போது அய்யம்பெருமாளின் சகோதரி முத்தம்மை, ‘தம்பி! உன்னை நானும், உன் அன்பர்களும் அறிவோம். மற்றவர்கள் அறியமாட்டார்கள். தயவு செய்து மணவறையில் காட்சிக் கொடு' என வேண்டினார். அதன்பின் அவர் மணவறையில் தோன்றி இருளகற்றியை மணம் செய்து கொண்டார்.

    தம்பதியர் பட்டினமருதூருக்கு வந்து சேர்ந்தனர்.

    சில நாட்களிலேயே, தன்னுடைய தவத்திற்கு இல்லறம் தடையாக இருப்பதை அய்யம்பெருமாள் உணர்ந்தார். எனவே முத்தம்மையின் இல்லம் தேடி வந்தார். அங்கு சிற்றாற்றங்கரையில் தவமேற்றினார். இருளகற்றி அம்மையும் அங்கேயே வந்து விட்டார். சுவாமிகள் முச்சந்தியில் அமர்ந்து நிஷ்டையில் தவமேற்றினார்.


    சித்தரை தனது அரியணையில் அமரவைத்து ஜமீன்தார் வணங்கி நின்ற காட்சி

    நாட்கள் கடந்து பல மாதமாகியும் தவம் முடிந்தப்பாடில்லை. அவரைச் சுற்றிக் கரையான் புற்று உருவானது. மழை, வெயில் தாக்கி விடக்கூடாது என முத்தம்மாளும், இருளகற்றியும் தங்களது முந்தானைச் சேலையால் கரையான் புற்றை மூடி பாதுகாத்தனர். அய்யம்பெருமாளின் உடல் முழுவதும் கரையான் புற்றில் மறைந்து விட்டது. தமக்கையும், மனைவியும் உறக்கம் இல்லாமல், 20 நாட்கள் பக்தியோடு முப் புடாதி அம்மனை நோக்கி நோன்பிருந்தனர்.

    அய்யம்பெருமாளின் தவத்தை கலைக்கும் பொறுப்பை அன்னையானவள், விநாயகப்பெருமானிடம் ஒப்படைத்தார். விநாயகர் யானை உருவம் கொண்டு தன் துதிக்கையால் புற்றை பெயர்த்து எடுத்து, சித்ரா நதியில் தூக்கி வீசினார். நீரில் புற்று மண் முழுவதும் கரைந்தது. அய்யம்பெருமாளின் உடல் குளர்ச்சி உண்டாயிற்று. இதனால் அவர் தவம் நீங்கி கரையேறினார். அவருக்கு ஆடை கொடுத்த தமக்கைக்கும், மனைவிக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கினார்.

    அய்யம்பெருமாளிள் இந்த நீண்ட நிஷ்டையான தவத்தால்தான், இந்த ஊர் ‘நிஷ்டையூர்’ என்று வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்த சம்பவத்துக்கு பின் முப்புடாதி அம்மனை வழிபடுவதை வழக்கமாக்கினார் அய்யம்பெருமாள். ஒரு நாள் அன்னை, ‘நீ.. இல்லறத்தில் சிறப்புற வாழ வேண்டும்' என வாழ்த்தி, அழகிய வேல் ஒன்றைக் கொடுத்தார். அந்த வேலை, பக்தியுடன் நெட்டூரில் வைத்து வணங்கினார். அதன்பின் இல்லறத்தில் மனநிறைவுடன் ஈடுபட்டார். அதன் பயனாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்.

    பின்னர் அய்யம்பெருமாளின் மனைவியும் துறவறம் ஏற்றுக்கொண்டார். கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து, இறை பணி செய்ய ஆரம்பித்தனர்.

    சாதுகளுக்கு தவமேற்ற நல்ல இடம் வேண்டுமே.. எனவே நெட்டூரில் பூந்தோட்டத்தில் தவமேற்றினார். இவரைப் பற்றி அறியாத மேல்தட்டு மக்கள் இவரை நோக்கி கல் எறிந்தனர். ஆனால் அவர்கள் எறிந்த கல் ஒன்றுகூட அப்பரானந்தர் மீது படவில்லை. இதனால் பயந்து போன அவர்கள், அங்கிருந்து ஓடினர். பலர் மனம் திருந்தி, அவருக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் கொடுத்த பொன், பொருட்களை, சைவ சமய வளர்ச்சிக்கு சித்தர் பயன்படுத்தினார்.

    அப்பரானந்த சித்தர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார். தவத்தில் இருக்கும் போது அகத்திக் கீரை, சோறு ஆகியவற்றைப் பிசைந்து மக்களுக்கு தருவார். இதனால் நோய் தீர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வூரில் இருந்த வெற்றிலை கொடிகால் பயிரிடும் தொழிலாளிகள், சித்தரின் தவ உணவுக்கு பொருள் அளிப்பார்கள். இதனால் அவர்களின் கொடிகால் அமோக விளைச்சல் அடைந்தது.

    சித்தர் தவமிருக்க தனிமையை நாடிச் செல்லும் போதெல்லாம், இருளகற்றி அம்மை தினமும் முருகனின் வேலுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    ஒரு முறை ஆலங்குளம் அருகே உள்ள ஒக்க நின்றான் பொத்தையில், அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அவரது தவம் பல மாதங்களைக் கடந்தது. உயிர்க் காற்றையே உணவாக கொண்டு தவமியற்றிக்கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் சொக்கம்பட்டி ஜமீன்தார் வடகரைப்பாண்டியன், அந்தப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை திகைக்கச் செய்தது. அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருக்க, அவர் முன்பாக இரண்டு நாகங்கள் படமெடுத்து காவல் காத்துக் கொண்டிருந்தன.

    ஜமீன்தார், சித்தரின் முன்பாக விழுந்து வணங்கினார். சுவாமிகள் தவம் கலைந்தது. ஆனால் கோபமடையவில்லை. தன்னோடு அரண்மனை வரவேண்டும் எனப் பணித்தார், ஜமீன்தார்.

    அதற்கு சித்தர், ‘நீ இப்போது இங்கிருந்து செல். நான் 7 நாளில் அங்கே வருகிறேன்' என்று அருளினார். அது போலவே அரண் மனைக்குச் சென்றார். இந்தக் கால கட்டத்தில் ஜமீனின் சில பகுதிகளை ஜமீன்தார் இழந்திருந்தார். அதுகுறித்து சித்தரிடம் ஜமீன்தார் கேட்க, மூன்று விரலைக் காட்டினார். முருகன் அருளால் மூன்று மாதத்தில் அவருக்கு இழந்தப் பகுதி கிடைத்தது.

    இதையடுத்து ஜமீன்தாருக்கு சித்தரின் மேல் அதீத பற்று ஏற்பட்டது. அவர் அடிக்கடி சித்தரை சந்திப்பதும், அவரை அரண் மனைக்கு அழைத்து உபசரிப்பதும் வாடிக்கையாகிப் போனது.

    ஒரு முறை சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்திருந்தார் சித்தர்.

    அவரை தான் அமரும் அரியணையில் அமரச் செய்து அழகு பார்த்தார், ஜமீன்தார். அந்தச் சமயத்தில் எட்டையபுரம் ஜமீனின் தலைமை புலவர் கடிகை முத்து புலவர் அங்கு வந்தார்.

    அவர் ‘யார் இந்தப் பரதேசி.. இவனுக்கு ஏன் இந்த மதிப்பு மரியாதை' என கிண்டல் செய்தார்.

    அவரை மவுனமாக, புன்சிரிப்புடன் பார்த்தார் அப்பரானந்தா சித்தர்.

    அந்த மவுனச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.

    குருவுக்கு மரியாதை

    தனது குருநாதரான குழந்தை முக்தானந்த சுவாமிகள் பரிபூரணம் அடையப் போவதாக அய்யம்பெருமாளின் மனதுக்கு பட்டது. இருளகற்றியிடம் முறைப்படி வேலுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன் குரு அடங்கவுள்ள அம்பாசமுத்திரம் மன்னார் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

    ‘அய்யம்பெருமாள்! நீ என்னைக் காட்டிலும் பெருமை அடைந்து விட்டாய். உன்னை உலகம் ‘அப்பரானந்தா’ எனப் போற்றும். நீ மிகுந்த சித்தி அடைந்திருக்கிறாய். நான் வீடு பேறு அடையும் சமயத்தில் அதை அறிந்து நீ வந்தமையால் மகிழ்கின்றேன்’ என்ற குழந்தை முக்தானந்த சுவாமிகள், சிறிது நேரத்தில் சமாதி நிலை அடைந்தார். குருவுக்கு வேண்டியக் காரியங்களை நிறைவேற்றினார் அப்பரானந்தர்.

    குருநாதரின் பாதக்குறடு, கைத்தண்டு முதலியவற்றை தன்னோடு எடுத்துக் கொண்டு, பாவநாசம், திருக்குற்றாலம் சென்று அவருக்காகச் சிறப்பு பூஜைகள் செய்தார். நெட்டூர் முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்தார். சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் குருவின் நினைவாக, அவரது பொருட்களுக்கு பூஜை நடத்தினார். 
    இளம் துறவியான பரதேசி சித்தருக்கு, முருகப்பெருமான் அருள் சக்தியை வழங்கினார். பரதேசி சித்தர், ஒருவருக்கு விபூதி பிரசாதம் கொடுத்தால் தீராத நோய் கூட தீர்ந்து விடும்.
    திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். வள்ளியை மணமுடித்து முருகப்பெருமான் இங்கு அமர்ந்தக் காரணத்தினால், இந்த ஊர் ‘வள்ளியூர்’ என்றானதாக பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. இவ்வூரில் குடவரைக் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் மிக அதிகம். இந்த முருகப்பெருமானுக்கு திருப்பணிகள் செய்து, கோவில் வெளிச் சுற்று பிரகாரத்திலேயே சமாதி அடைந்த இரண்டு சித்தர்களின் அருள், இந்த ஆலயத்திற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நான்குநேரி அருகே உள்ள செண்பகராமபுதூரில் பிறந்தவர் வேலாண்டி சுவாமிகள். சிறு வயது முதலே முருகப்பெருமான் மீது அதிகப் பற்று கொண்டவர். அதுவும் வள்ளியூர் முருகன் மீது அலாதி பிரியம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அந்த காலத்தில் இவர் கோவிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோவில் வெளியில் நின்றே முருகப்பெருமானைத் தரிசிப்பார்.

    தன்னுடைய 13 வயதில் வள்ளியூர் முருகப்பெருமான் ஆலயத்தில் நடந்த கார்த்திகை தெப்பத் திருவிழாவுக்கு வேலாண்டி சுவாமிகள் வந்தார். அதன் பின் கோவில் வாசலிலேயே தங்கி விட்டார். பெற்றோர்கள் அவரை ஊருக்கு அழைத்தும், செல்ல மறுத்து விட்டார். முருகனுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். வேலாண்டி சுவாமிகள் தினமும் சரவணப் பொய்கையில் நீராடுவார். முருகனைச் சுற்றிக் கிரிவலம் வருவார். வடக்கு மற்றும் கீழ்வாசல் வெளியே நின்று முருகனை வணங்குவார். அதன் பின் கீழ்வாசலிலேயே நிரந்தரமாக தங்கி பரதேசிக் கோலம் பூண்டார். மக்களிடம் யாசகம் செய்து அதைக் கொண்டு முருகன் கோவிலில் திருப்பணி செய்தார்.

    அந்தக் காலத்தில் சாதிப் பெயரைக் கூறி அழைப்பது சர்வ சாதாரணமாக வழக்கில் இருந்தது. எனவே மக்கள் அவரைப் பரதேசி என்று அழைத்தனர். வேலாண்டி சுவாமிக்கு அந்த பரதேசி என்ற பெயரே நிலைத்தது. மனிதர்களுக் குத்தான் சாதி, மதம் எல்லாம். இறைவன் அதற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு மனித மனங்களும், பக்தியும் தான் முக்கியம்.

    இளம் துறவியான பரதேசி சித்தருக்கு, முருகப்பெருமான் அருள் சக்தியை வழங்கினார். பரதேசி சித்தர், ஒருவருக்கு விபூதி பிரசாதம் கொடுத்தால் தீராத நோய் கூட தீர்ந்து விடும். நோய் தீர்ந்த மக்கள் நெல், வாழை போன்ற விளை பொருட்களை அவருக்குக் காணிக்கையாக வழங்கினர். கருப்பட்டி, காசு என அவர் முன் கொண்டு வந்து கொட்டினர். பொருட்களைப் பணமாக்கி கோவிலுக்கு விளைநிலங்களை வாங்கினார். அழகப்பபுரம், கீக்குளம், பரதேசிபத்து, சாமியார் பத்து, தாழக்கடி, தெரிசனம் தோப்பு ஆகியக் கிராமங்களில் கோவிலுக்காக சுவாமிகள் வாங்கிய நிலங்கள் உள்ளன. கீக்குளத்தில் வீடு கட்டி பகலில் விவசாயம் செய்தார். அதில் கிடைக்கும் பொருளை கொண்டு மாலையில் முருகன் ஆலயத்தில் பணிவிடை செய்து வாழ்ந்தார்.

    தான் பரதேசியாய் இருந்தாலும், சுவாமிகள் மாமன்னர் போன்று முருகனுக்கு தங்க அங்கித் தயார் செய்தார். அவருக்கு அதை அணிவித்து மகிழ்ந்தார். ஆலயத்துக்குள்ளே வராமல் அவர் கீழ் வாசலில் அமர்ந்திருப்பார். அப்போது அவரை மக்கள் வணங்கி, குழந்தைப்பேறு, வியாபாரம், தொழில்விருத்தி, நோய் நிவாரணம் ஆகியவைப் பெற்றனர். வாசலில் அமர்ந்தே தனது மனக்கண்ணால் கோவிலுக்குள் நடக்கும் அத்தனைத் திருவிழாக்களையும் காணுவார்.

    ஒருநாள்.. மூலஸ்தானத்தில் தீப்பற்றி எரிகிறது என பரதேசி சித்தர் கூறவே, அனைவரும் ‘அது எப்படி மூலஸ்தானத்தில் தீப்பிடிக்கும்’ என ஆச்சரியத்துடன் கேட்டனர். உள்ளே சென்று பார்த்தால், சித்தர் சொன்னது போலவே தீ பிடிப்பதைக் கண்டனர்.

    இந்த நிகழ்வுதான் பக்தர்கள் மத்தியில் அவருக்கு இருந்த சக்தியை உணர்த்தியது. அனைவரும் அவரை மகா சித்தர் என்று போற்றினர். அதன் பிறகு பரதேசி சித்தரின் திருப்பணிக்கு கூடுதலாக காணிக்கை சேர ஆரம்பித்தது.

    பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வடக்கு வாசல் அருகில் பக்தி மணம் பரப்ப ஒரு மடம் ஏற்படுத்தினார். அதன் பின் கோவிலைச் சுற்றி வர கிரிவலப்பாதையை உருவாக்கினார். கோவிலுக்கு தென்புறம் காணிக்கை வாங்கிப் பாதுகாக்க காணிக்கை மடமும் அமைத்துக் கொண்டார். எல்லா வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழாக் காலங்களிலும் காணிக்கை மடத்தில் வடக்கு பார்த்து தியானத்தில் அமர்ந்து இருப்பார். அப்போது அவருக்கு முருகப்பெருமானின் திருமணக்கோல காட்சி மனக்கண்ணில் கிடைத்துக்கொண்டே இருக்குமாம்.

    பரதேசி சுவாமிகள் தனது இறுதி காலத்தை அறிந்தார். குறிப்பிட்ட காலத்தில் தான் சமாதி நிலை அடைவதாகவும், தன்னை சரவணப் பொய்கையின் தென் கிழக்கு மூலையில் சமாதி வைக்கவும் மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் படி பக்தர்கள் இவருக்கு சமாதி கோவில் அமைத்தனர். அதன் பிறகு அவரது அருட்கடாட்சம் வள்ளியூரை சுற்றி மலர ஆரம்பித்தது. இந்தத் துறவியின் அருள் தொடர்வதை அனுபவித்த மக்கள் அவர் சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்தனர்.

    சமீபத்தில் ஆன்மிக அன்பர்கள் பிரசன்னம் பார்த்தபோது, பரதேசி சித்தரின் அருள் இந்தப் பகுதியில் நிலைத்திருப்பதாகவும், மாலை நேரத்தில் ஆலயத்தில் நடமாட்டம் அல்லாமல், கோவிலைச் சுற்றிய 9 மைல் தூரத்திற்கு அவர் இருப்பதாகவும் தெரியவந்தது.



    பரதேசி சித்தர் பீட மகிமை வெளிப்பட இன்னொரு காரணம், தினமும் முருகன் கோவில் மயில் ஒன்று, இவரது பீடத்திற்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்வதைச் சொல்கிறார்கள். இந்த மடத்திற்கு வருபவர்கள், தங்களது பெயரைக் குறிப்பிடாமல், தங்களின் வேண்டுதலை மட்டும் ஒரு காகிதத்தில் எழுதி ஜீவ சமாதி பீடம் அல்லது காணிக்கை மடத்தில் சமர்ப்பித்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

    சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து ெரயில்களும் வள்ளியூரில் நின்று செல்கின்றன. ெரயில் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந் துள்ளது. வள்ளியூர் பஸ் நிலையத்தில் இறங் கினால் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

    வேலாண்டி தம்பிரான்

    பரதேசி சுவாமிகள் முருகப்பெருமானின் அருளைப் பெற்றிருந்தாலும், அவர் உயிரோடு இருக்கும் வரை, மேல்தட்டு மக்கள் அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்கவே இல்லை. அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார் பரதேசி சித்தர். ஆனால் அவர் ஒரு அருளாசி கூறியிருந்தார்.

    அது யாதெனில், ‘வருங்காலத்தில் ஒருவன் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய வருவான். அவனிடம் எல்லாம் ‘உள்ளே வராதே..’ என்று யாரும் கூற முடியாது. அவன் திறமையானவனாக விளங்குவான்’ என்று கூறியிருந்தார்.

    அதுபோலவே பிற்காலத்தில் மிளகாய் சாமியார் என்கிற வேலாண்டி தம்பிரான் சுவாமிகள் அவதரித்தார்.

    கொல்லம் ஆண்டு 1035 (1859)-ல் சித்திரை மாதத்தில் அசுபதி நட்சத்திரத்தில் வேலாண்டித் தம்பிரான் பிறந்தார். இவரது தந்தை சிதம்பரத் தேவர். மகனை இறைப்பக்தியுடன் வளர்த்தார். இறை நாட்டம், தந்தையின் ஊக்குவிப்பு வேலாண்டி தம்பிரானை ஆன்மிகச் சுடராய் உயர்த்தியது. பரதேசி சித்தரை போலவே 13-வது வயதிலேயே உலக வாழ்வை வெறுத்து துறவற வாழ்வில் விருப்பம் கொண்டார்.

    பள்ளிப் படிப்பே அறியாத வேலாண்டி தம்பிரான் கல்விச் செல்வத்தில் சிறந்து விளங்கினார். சிறந்தக் கவியாகவும், ஞானியாகவும், யோகியாகவும் வாழ்ந்தார். பரதேசி சித்தர் தொடங்கி வைத்தப் பணியைத் தொடர்ந்து செய்தார். சுவாமிகள் 33 வருடங்கள் கோவில் தர்மக்கர்த்தாவாகப் பணியாற்றினார். அக்காலத்தில் திருக்கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்தார். திருத்தேர் உருவாக்கினார். சண்முகர் மற்றும் அம்மாளுக்கு வெள்ளி அங்கியை உருவாக்கினார். சண்முகருக்கு தனி பிரதிஷ்டை மடம் அமைத்தார். கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். இறைவன் பிரசாதமாகத் திருநீறு வைத்து வழங்க, பன்னீர் இலைகளுக்காகப் பன்னீர் மரங்களை உருவாக்கி அதை நன்கு வளர்த்தார்.

    அன்னமே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழைப்பழம், மிளகாய் வத்தல், மோர் ஆகியவற்றால் தனது பசியை போக்கிக் கொண்டார். எனவே இவரை ‘மிளகாய் வத்தல் சாமி’ என்று மக்கள் அழைத்தனர். இவர் கோபத்திலும் குணத்திலும் சிறந்தவராக விளங்கி வந்தார்.

    இவர் 1966-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 10-ம் நாள், இறைவன் திருவடி நிழலில் யோக சமாதி அடைந்தார். இவரது சமாதி வெளி சுற்று பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இவரை வழிபாடு செய்தால் நாள்பட்ட நோய்கள் நீங்கும். தீராத கடன் பிரச்சினை தீரும் என்கிறார்கள். 
    ×