search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry murder"

    புதுவை அருகே 30 வயது மதிப்புமிக்க வாலிபரை வெட்டி கொன்று சுடுகாட்டில் பிணம் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கனூர்:

    புதுவை திருக்கனூரை அடுத்துள்ளது சோரப்பட்டு கிராமம். இங்குள்ள காலனி அருகே சுடுகாடு உள்ளது.

    இன்று காலை ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது துர்நாற்றம் வீசியது. அந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தனர்.

    அங்குள்ள புதரில் வாலிபர் ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு 2 அல்லது 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.

    இதுபற்றி திருக்கனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, முருகானந்தம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

    இறந்து கிடந்தவருக்கு 30 வயது இருக்கும். தடிமனான உடல் வாகு கொண்டவர். சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். உள்ளாடை எதுவும் அணியவில்லை. லுங்கி விலகி நிர்வாண நிலையில் அவரது பிணம் கிடந்தது.

    கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயம் இருந்தது. அதில் இருந்து ரத்தம் வடிந்து உடல் முழுவதும் பரவி இருந்தது.

    அந்த வாலிபர் யார்? அவரை யார் கொன்றார்கள்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. அதிரடிப் படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் வெளியூர்காரராக இருக்கலாம் என கருதப்படுகிறது. வேறு எங்கோ வைத்து அவரை கொலை செய்து பிணத்தை சுடுகாட்டுக்கு கொண்டு வந்து புதரில் போட்டுள்ளனர்.

    அவர் யார்? என்பது குறித்து அக்கம் பக்கத்து கிராமங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதால் பெண் சம்பந்தமான பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    சம்பவ இடத்தை போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    புதுவையில் கணவன், மனைவியை கொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #PuducherryMurder
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்த வக்கீல் பாலகிருஷ்ணன் (வயது 72). இவரது மனைவி ஹேமலதா (65).

    இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் வசித்து இருக்கும் நிலையில், கணவன் - மனைவி மட்டும் தனியாக புதுவை வீட்டில் வசித்து வந்தனர். பாலகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் சம்பந்தி ஆவார்.

    நேற்று முன்தினம் யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கணவன் - மனைவி இருவரையும் கொலை செய்து விட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இது பற்றி உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    மேலும் கொலையை கண்டு பிடிக்க அதிரடிப் படையின் உதவியும் நாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சந்தோஷ் மற்றும் போலீசார் தனியாக விசாரித்தார்கள்.

    பாலகிருஷ்ணன் வீட்டுக்கு யார்- யார் அடிக்கடி வந்து செல்வார்கள் என்ற விவரங்களையும், வீட்டில் வேலை பார்ப்பவர்களின் விவரங்களையும் சேகரித்தனர். அதன்படி விசாரணை நடைபெற்றது.

    பாலகிருஷ்ணன் சொந்தமாக கார் வைத்துள்ளார். இந்த காரை தேனீ.ஜெயக்குமாரின் டிரைவர்தான் ஓட்டுவது வழக்கம்.

    தேனீ.ஜெயக்குமாரின் டிரைவர் வர முடியாத நேரத்தில் கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது காசிம் என்பவர் டிரைவராக வருவார்.

    கடந்த 4 மாதமாக தொடர்ந்து முகமது காசிம் தான் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதிரடிப்படை போலீசார் முதலில் தேனீ.ஜெயக் குமாரின் டிரைவரை அழைத்து விசாரித்தனர்.

    அடுத்ததாக முகமது காசிமை விசாரிப்பதற்காக அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். அவருடைய செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    எனவே, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய செல்போன் கடந்த 2 நாட்களில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் நடமாடி உள்ளது என்பதை செல்போன் நிறுவனம் மூலம் திரட்டினார்கள்.

    நேற்று முன்தினம் மதியம் நீண்ட நேரமாக கொலை நடந்த பகுதியில் அந்த செல்போன் நடமாட்டம் இருந்தது தெரிந்தது.

    எனவே, போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர் யார்- யாருடன் இந்த 2 நாட்களும் போனில் பேசினார் என்றும் விசாரித்தனர்.

    அப்போது கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. எனவே, அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எனவே, அவருடைய நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்தனர்.

    இதற்கிடையே முகமது காசிம் வேரு ஒரு காரில் டிரைவர் பணிக்காக சென்னை சென்று இருப்பது தெரிய வந்தது. எனவே, அவர் வருகைக்காக போலீசார் ரகசியமாக காத்து இருந்தனர்.

    அவர் காரில் சென்னையில் இருந்து திரும்பி வந்தார். உடனே டிரைவர் முகமது காசிமை சுற்றி வளைத்த போலீசார் அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.

    முதலில் கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். போலீசார் விசாரணையின் யுக்தியை மாற்றி கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தனர்.

    அப்போது நான்தான் கொலை செய்தேன் என்று முகமது காசிம் ஒத்துக் கொண்டார். அவரது நண்பர் முகமது இலியாசுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    முகமது இலியாஸ் கோட்டக்குப்பத்தில் கோழிக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

    பாலகிருஷ்ணன் வீட்டுக்கு டிரைவராக வந்த முகமது காசிம் அந்த வீட்டில் உள்ள வசதியான நிலையை பார்த்து ஏராளமான பணம் - நகைகள் இருக்கும் என்று கருதி உள்ளார்.

    எனவே, அவற்றை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இது சம்பந்தமாக நண்பர் முகமது இலியாசிடம் கூறினார். அவரும் இந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.

    அதன்படி நேற்றுமுன் தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் அவர்கள் இருவரும் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தனர். அருகில் காலி மனையில் உள்ள மா மரம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றனர்.

    முகமது காசிம் ஏற்கனவே அறிமுகம் ஆன நபர் என்பதால் நாய் அவரை பார்த்து குரைக்கவில்லை. இதனால் 2 பேரும் உள்ளே சென்றனர்.

    பாலகிருஷ்ணன் வீட்டில் உள்ள படுக்கை கிழிந்து இருந்தது. இதை தைப்பதற்கு ஆள் வேண்டும் என்று ஏற்கனவே பாலகிருஷ்ணன் முகமது காசிமிடம் கூறி இருந்தார்.

    எனவே, முகமது இலியாசை படுக்கையை தைப்பதற்காக வந்த தொழிலாளி என்று பாலகிருஷ்ணனிடம் அறிமுகப்படுத்தினார்.

    எனவே, இருவரையும் படுக்கை அறைக்குள் அனுமதித்தனர். அங்கு கணவன் - மனைவி இருவரும் சென்று படுக்கையை எப்படி தைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர்.

    இந்த நேரத்தில் முகமது காசிம் படுக்கை கதவை திடீரென பூட்டினார். பின்னர் கணவன் -மனைவி இருவரையும் அந்த 2 பேரும் அடித்து உதைத்து நகை- பணம் எங்கே இருக்கிறது? என்று கேட்டனர்.

    அதற்கு நகை- பணம் எதுவும் பெரிய அளவில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் கோபம் அடைந்த அவர்கள் கணவன் - மனைவி இருவரையும் சித்ரவதை செய்தனர்.

    பின்னர் அவர்களை கழுத்தை இறுக்கியும், காலால் கழுத்து மற்றும் மார்பில் மிதித்தும் கொலை செய்தனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோ, அலமாரி அனைத்திலும் பணம்- நகை இருக்கிறதா? என தேடினார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் அதிக நகை - பணம் எதுவும் கிடைக்கவில்லை.

    ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள சிங்கப்பூர் பணம், சில ஆயிரம் இந்திய ரூபாய் நோட்டுகள், சில வெள்ளி பொருட்கள் ஆகியவை மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது.

    அதன் பிறகு ஹேமலதா கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, வளையல், கம்மல் ஆகியவற்றையும் எடுத்து கொண்டனர்.

    11.30 மணிக்கு உள்ளே வந்த அவர்கள் மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருந்து வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள்.

    இடையில் சமையல் அறைக்கு சென்று டீ தயாரித்து குடித்தனர். அறைக்குள்ளேயே ஆங்காங்கே சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தினார்கள்.

    பின்னர் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றனர். இரவு இருவரும் புதுவையில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்தனர். கொள்ளையடித்த பொருட்களை ஒரு இடத்தில் மறைத்து வைத்தனர்.

    மறுநாள் காலை (நேற்று) இருவரும் வழக்கம் போல் தங்கள் பணிக்கு சென்றனர். ஆனால், போலீசார் துப்பு துலக்கி இருவரையும் கைது செய்து விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கொலை நடந்த தகவல் தெரிந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதனால் போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள். #PuducherryMurder
    ×