search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgiris robbery"

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே நகை கடையில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். அப்பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதை தொடர்ந்து மறுநாள் நடுஹட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அவ்வழியாக நடந்து சென்ற போது வழிமறித்த 2 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியதுடன் வெங்கடேசிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து அடகு கடை உரிமையாளர் சகாதேவன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் குந்தாபாலம் பஸ்நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரை போலீசார் பிடித்து அவர்களிடம் விசாரனை நடத்தினார்கள்.

    விசாரனையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியை சேர்ந்த ராஜா (எ) ராஜரத்தினம்(34), மற்றொருவன் ராஜபாளையத்தை சேர்ந்த சுரேஷ் குமார்(29) என்பதும் இவர்கள் இருவரும் சேர்ந்து எடக்காடு பகுதியில் சகாதேவனின் நகை அடகு கடையில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததையும், வெங்கடேசை வழிமறித்து கத்தியை காட்டி செல்போன் பறித்து சென்றதும் தெரியவந்தது.

    தொடர்ந்து குற்ற போலீசார் நடத்திய விசாரனையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தில் நடந்த கொலை வழக்கு, அவினாசி பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றது உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது. இதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை மஞ்சூர் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளதால் இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி.சண்முகபிரியா பரிந்துரை செய்ததை தொடர்ந்து ராஜா என்கின்ற ராஜரத்தினத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதையடுத்து ராஜ என்கின்ற ராஜரத்தினம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் மற்றொரு நபரான சுரேஷ்குமாரையும் குண்டர் சட்டத்தில் கைது செய் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
    ×