search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Move"

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வனத்துறையினர் வைத்துள்ளனர்.
    • மலையின் உச்சியில் பதுங்கி இருந்தால் அதனுடைய நடமாட்டம் தெரியாமல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    காங்கயம்

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலையடிவார பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. மேலும் ஆட்டுபட்டி அருகே இரும்பு சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களையும் சிறுத்தை தூக்கிச்சென்றது. இதுவரை சுமார் 6 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 2 நாய்கள் ஆகியவற்றை சிறுத்தை வேட்டையாடி உள்ளது.

    இதனால் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை மனிதர்களை தாக்குவதற்குள் வனத்துறையினர் விரைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என ஊதியூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதி மற்றும் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை குறித்த தகவலோ, கால்தடங்களோ, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளிலோ சிறுத்தை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆடுகளும் மாயமாகவில்லை.20 நாட்களாக போக்கு காட்டி வரும் சிறுத்தை எங்கு இருக்கிறது என தெரியாமல் உள்ளது. மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் தினசரி வந்து போகும் இடங்கள், தண்ணீர் குடிக்க வரும் இடங்கள், கூண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தையின் கால்தடங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

    மேலும் வன விலங்குகள் வேட்டையாடப்பட்ட அறிகுறிகளும் கிடைக்க வில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சிறுத்தை வேறுபகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது மலையின் உச்சியில் பதுங்கி இருந்தால் அதனுடைய நடமாட்டம் தெரியாமல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பின்னர் சிறுத்தையின் தகவல் குறித்து உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.


    ×