search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother and father"

    மாணவர்கள் தங்களது தாய்-தந்தையை மதிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கவர்னர் அறிவுரை வழங்கினார். #BanwarilalPurohit
    பெரம்பூர்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பில், சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.

    இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு வைத்து, பள்ளி ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகள் மத்தியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-


    இயற்கை தாய் நமக்கு நிலம், நீர் என பல்வேறு வளங்களை வழங்கி உள்ளார். நமது பாரம்பரியம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகவே இயற்கையை நாம் பேணி காக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டியதுடன், இயற்கை சார்ந்த பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இயற்கைக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நோக்கங்களோடு சுற்றுச்சுழல் தினம் கொண்டாடப்படுகிறது.

    மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின் விளக்கு போன்ற மின்சாதன பொருட்கள் அணைக்கப்பட்டு உள்ளதா? என சரி பார்த்து விட்டு வெளியே செல்ல வேண்டும். மின்சார சேமிப்பு, மிக முக்கியம்.

    உலக வெப்பமயமாதல் அதிகரிக்கும் சூழலை பார்க்கிறோம். அதனை கட்டுப்படுத்திடவேண்டும். எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    மாணவர்கள், சாதாரணமான வாழ்வையே மேற்கொள்ளவேண்டும். தங்களது தாய், தந்தையை மதிக்கவேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும்.

    கவர்னர் மாளிகையில் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. அதனை இலவசமாக பெற்று, அதை பயன்படுத்தி மரம் வளர்க்கலாம். நாம் அனைவரும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றால் எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டும். இயற்கையை காக்கவேண்டியது நமது கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளார் பிரதீப்யாதவ், தலைமை கல்வி அதிகாரி மனோகரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். #TNGovernor #BanwarilalPurohit
    ×