search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumari alcohol sold"

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.

    திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய சந்திப்புகளில் ரோந்து சுற்றி வந்தனர்.

    ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அவர்கள் பெரியவிளை பகுதியில் வந்த போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 42) என்பதும் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுபோல இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபிதங்கம் மற்றும் போலீசார் நுள்ளிவிளை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு அனுமதியின்றி மதுவிற்ற பேபி (68) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் இரும்புலி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு அனுமதியின்றி மது விற்ற செல்லத்துரை (50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுபோல கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் மற்றும் போலீசார் வடலிவிளை பகுதியில் ரோந்து சென்ற போது அங்கும் அனுமதியின்றி மது விற்றதாக சசிகுமார் (43) என்பவரை கைது செய்தனர்.

    இதுபோல் தக்கலை, மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, கொற்றியோடு உள்பட மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்றதாக மொத்தம் 19 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 100 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    ×