search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kolkotta knight riders"

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.#IPL2019 #KKRvKXIP
    கொல்கத்தா:

    8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது. பஞ்சாப் அணியில் 4 மாற்றமாக நிகோலஸ் பூரன், சாம் குர்ரன், அங்கித் ராஜ்பூத், முஜீப் ரகுமான் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டேவிட் மில்லர், ஹர்டஸ் வில்ஜோன், வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார்.

    இதன்படி கொல்கத்தாவின் இன்னிங்சை சுனில் நரினும், கிறிஸ் லின்னும் அதிரடியாக ஆரம்பித்தனர். புதுமுக வீரரான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் முதல் ஓவரில் சுனில் நரின் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்களை திரட்டினார். அந்த ஓவரில் கிறிஸ் லின்னும் ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம் ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி, ஐ.பி.எல்.-ல் அறிமுக ஓவரிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய (25 ரன்) பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். கிறிஸ் லின் 10 ரன்னிலும், சுனில் நரின் 24 ரன்னிலும் வெளியேறினர்.



    இதன் பின்னர் ராபின் உத்தப்பாவும், நிதிஷ் ராணாவும் இணைந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். 10-வது ஓவருக்கு பிறகு ராணா அடுத்தடுத்து சில சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக உயர்ந்தது. தொடர்ந்து 2-வது அரைசதத்தை கடந்த நிதிஷ் ராணா 63 ரன்களில் (34 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார்.

    அதைத் தொடர்ந்து வந்த ‘அதிரடி புயல்’ ஆந்த்ரே ரஸ்செல் 3 ரன்னில் முகமது ஷமியின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அந்த சமயத்தில் குறிப்பிட்ட உள்வட்டத்திற்குள் 4 பீல்டர்கள் நிற்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் 3 பீல்டர் மட்டுமே நின்றதால் அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக மறுவாழ்வு பெற்ற ரஸ்செல், அதன் பிறகு பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சராக்கினார். குறிப்பாக முகமது ஷமியின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை விரட்டியடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் எகிறியதுடன் 200 ரன்களை தாண்டியது. ஆந்த்ரே ரஸ்செல் 48 ரன்களில் (17 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் நேர்த்தியாக ஆடி 24-வது அரைசதத்தை எட்டிய ராபின் உத்தப்பா 67 ரன்களுடன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.
     


    20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. ஈடன்கார்டனில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். கடைசி 4 ஓவர்களில் மட்டும் அந்த அணி 65 ரன்களை சேகரித்தது. பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, வில்ஜோன், ஆண்ட்ரூ டை தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. லோகேஷ் ராகுல் ஒரு ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 20 ரன்னிலும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), சர்ப்ராஸ் கான் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்திற்கு உள்ளானது.

    அடுத்து வந்த மயங்க் அகர்வால் (58 ரன்), டேவிட் மில்லர் (59 ரன், நாட்-அவுட்), மன்தீப் சிங் (33 ரன், நாட்-அவுட்) உள்ளிட்டோர் கடுமையாக போராடிய போதிலும் அது அந்த அணியின் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

    20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

    ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து இருந்தது. அதே சமயம் 2-வது லீக்கில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.
    ×