search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakshetra Crisis"

    • தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட எந்த ஒரு அடையாளத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்று கலாஷேத்ரா மாணவிகள் 7 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    • மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கலாஷேத்ரா சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் உத்தரவாதம் அளித்தார்.

    சென்னை:

    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மேலும் 3 பேர் மாணவிகளுக்கும், 4 மாணவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், கலாஷேத்ராவில் நடந்துள்ள பாலியல் தொல்லை குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவியர் மீது நடவடிக்கை எடுக்க கலாஷேத்ராவுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களையோ, சாட்சிகளையோ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மிரட்டவோ, தொடர்பு கொள்ளவோ கூடாது. இந்த வழக்கு தொடர்ந்துள்ள தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட எந்த ஒரு அடையாளத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்று கலாஷேத்ரா மாணவிகள் 7 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர்கள் கேட்டுள்ள இடைக்கால மனுக்கள் மீது நீதிபதி உத்தரவிட தொடங்கினார். அப்போது, தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கையை ஏற்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், வழக்கு தொடர்ந்த 7 மாணவிகள் யார் என்று வெளியில் தெரிந்தால்தான், அவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க முடியும் என்று கூறினார். ஆனால், இதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

    இதன்பின்னர், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கேட்ட இடைக்கால மனுவை நீதிபதி விசாரணைக்கு எடுத்த போது, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று கலாஷேத்ரா சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் உத்தரவாதம் அளித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

    பின்னர், விசாரணை குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக்கூடாது, மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோர் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனு மீது வருகிற 24-ந்தேதி முடிவு செய்து உத்தரவு அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்காக இந்த வழக்கை 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அதற்குள் விசாரணை குழுவை ஐகோர்ட்டு அமைப்பது குறித்து கலாஷேத்ரா தன் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    ×