search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewels seized"

    நெல்லை டவுண் நகைக்கடையில் கொள்ளையடித்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது33). இவர் நெல்லை டவுன் மேல ரதவீதியில் போலீஸ் நிலையம் அருகே ஒரு நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது தந்தை லட்சுமணன். ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு ஆவார்.

    சம்பவத்தன்று மணிகண்டனும், நகைக்கடை ஊழியர்களும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நள்ளிரவு அங்கு வந்த கொள்ளையன் கதவை உடைத்து உள்ளே புகுந்தான். அங்கு ஷோகேஸ் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த தங்க செயின், நெக்லஸ், வளையல்கள் உள்பட 2 கிலோ எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டான்.

    கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடை உரிமையாளர் மணிகண்டன் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேந்திர குமார் ரத்தோட் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி கமி‌ஷனர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய் கோல்டன்சிங், காசிப்பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஷோகேசை உடைத்ததில் கொள்ளையனின் கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு கிடந்த கண்ணாடி துண்டுகளில் ரத்தம் சிதறி இருந்தது. அதை போலீசார் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.

    கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கொள்ளை குறித்த தகவல் கிடைக்கவில்லை.

    பின்னர் அந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளை சம்பவத்திற்கு முன்பு 10 நாட்களாக பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் இரவில் நகைக்கடைக்கு வந்து நகைகளை நோட்டம் பார்ப்பது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை பற்றிய விபரங்களை சேகரித்தனர். அப்போது அவர் நெல்லையை அடுத்த அருகன்குளத்தை சேர்ந்த கணேசன் (35) என்பது கண்டு பிடிக்கப்பட்டது. கணேசன் மீது ஏற்கனவே தாழையூத்து போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது.

    கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவானார். மேலும் ஒரு தனியார் நகைக்கடையில் அவர் நகைகளை அடகு வைத்திருந்தார். மேற்கண்ட விவரங்களை தனிப்படை போலீசார் சேகரித்தனர். இதையடுத்து கணேசனை மடக்கி பிடிக்க திட்டமிட்டிருந்தனர்.

    இன்று காலை ஊருக்கு வந்த கணேசனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தார்கள். மற்ற நகைகள் எங்கு உள்ளன? இந்த கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நகைக்கடையில் கொள்ளையடித்த வாலிபரை தீவிரமாக துப்பு துலக்கி ஒரு வாரத்தில் மடக்கி பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    ×