search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Chief Minister Kejriwal"

    அதிகமாக கரைபுரண்டு ஓடும் யமுனை ஆற்று நீர் டெல்லி நகருக்குள் புகும் அபாயம் இருப்பதால் அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். #Yamunariver
    புதுடெல்லி:

    நாட்டில் முக்கிய நதிகளில் ஒன்றான யமுனை ஆறு இமயமலையில் உற்பத்தியாகி அரியானா டெல்லி மாநிலங்கள் வழியாக ஓடி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை நதியுடன் கலக்கிறது.

    யமுனை நதியில் மழை காலங்களில் அதிக அளவில் வெள்ளம் வருவது உண்டு. தற்போது இமயமலை பகுதியிலும் இதன் நீர்பிடிப்பு பகுதியான வட மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் யமுனை ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் வந்து கொண்டு இருக்கிறது. யமுனை ஆற்றின் குறுக்கே அரியானா மாநிலத்தில் ஹதினிகுண்ட் என்ற இடத்தில் அணை உள்ளது.

    இந்த அணை ஏற்கனவே நிரம்பி அபாய கட்டத்தை தாண்டி இருந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக யமுனை ஆற்றில் ஏற்கனவே வெள்ளம் அதிகமாக வந்தது. டெல்லியில் பழைய ரெயில்வே பாலம் அகலமான பகுதி ஆகும். இங்கு 204.92 மீட்டர் அகலத்துக்கு தண்ணீர் சென்றாலே ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக அர்த்தம்.

    ஆனால், நேற்று இரவு 9 மணியளவில் 205.36 மீட்டர் அகலத்துக்கு தண்ணீர் சென்றது. இதனால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.


    இந்த நிலையில் ஹதினி குண்ட் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் அணையில் இருந்து 4 லட்சத்து 92 ஆயிரத்து 351 கன அடி தண்ணீர் நேற்று இரவு 9 மணி அளவில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று இரவு டெல்லியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே அபாய கட்டத்தை தாண்டி யமுனை ஆற்றில் வெள்ளம் செல்லும் நிலையில் இப்போது மேலும் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் யமுனை ஆற்று நீர் டெல்லி நகருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, வெள்ளத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில், ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், டெல்லி நகர வளர்ச்சி அதிகாரிகள், வெள்ள கட்டுப்பாட்டுத்துறை, நீர்ப்பாசன அதிகாரிகள் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    அதில், வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று ஆலோசிக்கப்பட்டது. மீட்பு குழுவினரை தயாராக வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    யமுனை ஆற்றின் அருகில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் உணவு, சுகாதார உதவிகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    தேவையான இடங்களில் மோட்டார் படகுகளை தயார் நிலையில் வைத்து உடனடி மீட்பு பணிகளை செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. #Yamunariverdangermark #Yamunariver
    ×