search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Rangasamy"

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • இடஒதுக்கீடு, சமூகரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறைகள் ரத்தாகும். இது சமூகநீதிக்கு எதிரானது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

    புதுவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர், அரசு மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து தனியார் மருத்துவ கல்லூரியின் மருத்துவ படிப்புகளிலும் தேசிய மருத்துவ ஆணையமே பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது கலந்தாய்வு என்ற புதிய முறையால் புதுவை மாநிலத்திற்கென ஜிப்மரில் கிடைக்கும் இடஒதுக்கீடு ரத்தாகும். புதுவை மாநில அரசு மாணவர்களுக்காக பிராந்தியவாரியாக அளித்துவரும் இடஒதுக்கீடு, சமூகரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறைகள் ரத்தாகும். இது சமூகநீதிக்கு எதிரானது.

    தற்போதுள்ள நடை முறையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். புதுவை மாநில மாணவர்களின் உரிமையை காக்க முதல்-அமைச்சர் முன்வர வேண்டும். உடனடியாக மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • புதுவையில் திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    பிஆர்.சிவா(சுயே): சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? பழைய காப்பீடு திட்டத்தின் கீழ் மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வருமான சான்றிதழ் அடிப்படையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வருமா?

    முதலமைச்சர் ரங்கசாமி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுவையில் ரூ.20 கோடியே 25 லட்சத்தில் 34 ஆயிரத்து 327 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் 2 ஆயிரத்து 417 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுவையில் எந்த நோயாளிகளும் பயனடைவதில்லை.

    இந்த திட்டம் முறையாக புதுவையில் செயல்படுத்தவில்லை. இதனால் பலர் உரிய காலத்தில் நிதி கிடைக்காமல் இறந்துள்ளனர் என சரமாரியாக ஒரே நேரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.

    இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உறுப்பினர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கும்படி கூறினார்.

    எதிர்கட்சித்தலைவர் சிவா:-பிரதமர் மிகுந்த நல்லெண்ணத்தோடு கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதுவையில் அதிகாரிகள் முறையாக இதை செயல்படுத்தவில்லை. இதற்கான காப்பீடு அட்டையை மருத்துவமனைகளில் காண்பிக்கும் போது தூக்கி வீசி விடுகின்றனர். புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

    கல்யாணசுந்தரம் (பா.ஜனதா): தவறு செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கின்றனர்.

    வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா): நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை களைய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் ரங்கசாமி: திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம். அனைவருக்குமான சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • ரங்கசாமி சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார்.
    • திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு திலாசுப்பேட்டை அருகில் கோவில் எழுப்பி உள்ளார்.

    இங்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை செய்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடந்த சனிக்கிழமை பூஜை முடித்து அன்னதானம் செய்ய சென்ற முதலமைச்சரை அங்கே அமர்ந்திருந்த ஒரு முதியவர் கைகூப்பி வணங்கினார்.

    மேலும் தன் கையில் இருந்த ஒரு மருந்து சீட்டை காண்பித்து 'மருந்து வாங்க காசு இல்லை' என்றும் கூறினார். உடனடியாக முதல்-அமைச்சர் தனது சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார். அவர் யார் என்பது குறித்து அங்கு இருந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளியான அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2 கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிலில் அன்னதானம் நடைபெறுவது கேள்விப்பட்டு வந்ததாகவும் தெரியவந்தது.

    அவருக்கு அன்னதானம் வழங்கி காவலர்கள் பஸ்சில் ஏற்றி அனுப்பினர். முதலமைச்சர் திருவண்ணாமலை நோயாளிக்கு எவ்வளவு தொகை கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. புதுவை முதலமைச்சரிடம் தமிழக நோயாளி பண உதவி பெறும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது விரைவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும்.
    • புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

    புதுச்சேரி:

    புதுவை கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது.

    புதுவை கோர்ட்டு வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வக்கீல்களுக்கு 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் வரவேற்றார். மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவுக்கு கவர்னர் தமிழிசை முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவையில் சிறிய பள்ளிக்கூடத்தில் சட்டக்கல்லூரி இயங்கி வந்தது. அதில் படித்தவர்கள் இன்று சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர். தற்போது சட்டக்கல்லூரி பெரிய வளாகத்தில் காலாப்பட்டில் இயங்கி வருகிறது. சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்ட நிலத்தை தேர்வு செய்தபோது, மரங்கள் அடர்ந்து காடுகள் இருந்த பகுதியை தேர்வு செய்தோம். இங்கு விரைந்து பணிகளை முடித்து கோர்ட்டு வளாகத்தை உருவாக்கினோம். இன்று பிற மாநிலத்தினர் வியக்கும் வகையில் கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது. இங்கு வக்கீல்கள் அறைகள் கட்ட ரூ.13 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.

    மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதை திறந்து வைக்கவும் அனைவரும் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    வக்கீல்கள், நீதிபதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்கும். கோர்ட்டு வளாகத்தில் சிறிய மருத்துவ சிகிச்சை மையம் அமைத்துத்தரப்படும்.

    இளம் வக்கீல்கள் உதவித்தொகை உயர்த்தித்தரப்படும். புதுவை மக்கள் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தீர்க்கப்படுகிறது. வக்கீல்கள் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம். நிர்வாகம், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

    அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். புதுவை மாநில தகுதி பெற தேவையான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ பேசும் போது புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்கப்படும் என்றார்.

    விழாவில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ராமன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, புதுவை மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., நேரு எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ்வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் நன்றி கூறினார்.

    ×