search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Edappadi Palaniasamy"

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக சென்று சொல்ல முடியுமா? என மு.க.ஸ்டாலின் கேள்வு எழுப்பியுள்ளார். #SalemChennaiExpressway #MKStalin
    சென்னை:

    ஜனநாயக உரிமைகளை பறிக்கும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    விவசாய நிலங்களை அழித்து செயல்படுத்தப்படும் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த நிபுணர்குழுவை அமைக்க வேண்டும். இந்த திட்டம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும் போது, போராட்டங்களை சில அரசியல் கட்சிகள் தூண்டுவதாக பேட்டி கொடுக்கிறார். அவரால் 8 வழி சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் நேரடியாக சென்று சொல்ல முடியுமா?

    சட்டமன்றத்தில் தூத்துக்குடி என்ற வார்த்தையை பேச முடியவில்லை. இதனால் தூத்துக்குடி என்பதற்கு பதில் சாத்துக்குடி என்று கூறலாமா? என்று கேட்டேன். பொதுமக்கள் பிரச்சினை குறித்து பேசினால் அதை சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்.

    சட்டமன்றத்துக்கு செல்வதே வீணாக இருக்கிறது. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டி உள்ளதால் சட்டமன்றத்துக்கு செல்கிறோம். போராட்டங்களை மத்திய- மாநில அரசுகள் ஒடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தை கட்சி ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சமது மற்றும் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #SalemChennaiExpressway #MKStalin #EdapadiPalanisamy
    ×